எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, December 1, 2016

உணவே மருந்து! கருணைக் கிழங்கு!

கருணைக்கிழங்கு க்கான பட முடிவு

இந்தக் கிழங்கு இரு வகைப்படும். இப்போச் சொல்லப் போவது மேலே இருக்கும் உருண்டையான சின்னக் கிழங்குகள் பற்றியே. இதைப் பிடி கருணை என்பார்கள். கொஞ்சம் காரல் இருப்பதால் காரும் கருணை என்றும் சொல்வார்கள். இதை வேக விடுவதற்கு அரிசி கழுவிய நீரைப் பயன்படுத்தலாம். இந்தக் கருணைக்கிழங்கு மூல நோய் உள்ளவர்களுக்கு அருமருந்தாகும். அதோடு உடல் குண்டாகி மூட்டு வலி உள்ளவர்கள் சாப்பிட்டாலும் எடை குறையும். ஜீரண சக்தியை அதிகப்படுத்தி ஜீரண மண்டல உறுப்புகளை நன்கு செயல்பட வைக்கும்.  உடல் உஷ்ணம், நாள்பட்ட காய்ச்சல் சரியாகும். மூலச் சூடு, எரிச்சல் நீங்குவதோடு மலச்சிக்கலையும் நீக்கும்.  உடல்வலி மற்றும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் போன்றவற்றிற்கு நல்ல தீர்வைக் கொடுக்கும்.

இந்தக் கிழங்கு உருண்டையாகவும் இருக்கும். நீள் உருண்டை வடிவிலும் கிடைக்கும். இதை நன்கு குழைய வேக வைத்துவிட்டால் அதிகம் காராது. புளி சேர்த்துச் சமைக்க வேண்டும். கருணைக்கிழங்கில் குழம்பும் வைப்பார்கள்.  கருணைக்கிழங்கில் லேகியமும் தயாரிக்கப்படுகிறது. மசியல் செய்தும் சாப்பிடலாம். கருணைக்கிழங்கு மசியலை இரு வகையில் தயாரிக்கலாம். முதல் வகை புளி சேர்த்துச் செய்வது. இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

நான்கு பேருக்குத் தேவையானது கருணைக்கிழங்கு அரைக் கிலோ

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவு

துவரம்பருப்பு ஒரு கரண்டி அளவுக்கு எடுத்துக் குழைய வேக வைக்கவும்.

உப்பு தேவையான அளவு

வறுத்துப் பொடிக்க

மி.வத்தல் காரம் இல்லாதது மூன்று

ஒரு மேஜைக்கரண்டி கொத்துமல்லி விதை

ஒரு டீ ஸ்பூன் உளுத்தம்பருப்பு,

இரண்டு டீஸ்பூன் கடலைப்பருப்பு

வெந்தயம் அரை டீஸ்பூன், மிளகு அரை டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு அல்லது ஒரு டீஸ்பூன் பெருங்காயப் பவுடர்

நல்லெண்ணெயில் மேற்சொன்னவற்றை வறுத்துப் பொடிக்கவும்.

தாளிக்க

கடுகு,
உபருப்பு,
பச்சை மிளகாய்
கருகப்பிலை
மஞ்சள் தூள்
கொத்துமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்

முதலில் கருணைக்கிழங்கை அரிசி களைந்த நீரில் நன்கு குழைய வேக வைக்கவும். வேக வைத்த கிழங்கை ஒரு கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ளவும். அதில் புளிக்கரைசலையும், வெந்த துவரம்பருப்பையும் சேர்த்து மஞ்சள் தூள், உப்புச் சேர்த்துத் தனியாக வைக்கவும்.

ஒரு கடாயில் அல்லது உருளியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டுக் கடுகு, உபருப்பு, பச்சை மிளகாய், கருகப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும். தேவையானால் ஒரு மிவத்தலும் தாளிக்கலாம். அவரவர் காரத்துக்கு ஏற்றவாறு செய்யவும். பின்னர் கலந்து வைத்திருக்கும் கலவையைத் தாளிதத்தில் கொட்டவும். புளி வாசனை போகக் கொதித்ததும் வறுத்துப் பொடித்திருக்கும் பொடியைத் தூவவும். தேவையான அளவு பொடியைத் தூவியதும் ஒரு கொதி விட்டுக் கீழே இறக்கிப் பச்சைக் கொத்துமல்லி சேர்க்கவும். சாதத்தோடு சேர்த்துச் சாப்பிடலாம். 

11 comments:

 1. கருணைக்கிழங்கு மசியல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். (குழம்புக்குப் பதிலானது) இங்க கிடைக்காது. அதுனால, முன்பெல்லாம் சென்னையிலிருந்து இங்கு வரும்போது கொஞ்சம் வாங்கிவருவோம்.

  கருணைக்கிழங்கு மசியலைத் தவிர வேறு எதுவும் கருணைக்கிழங்கு உபயோகப்படுத்திச் செய்து நான் கேள்விப்பட்டதில்லை.

  ReplyDelete
  Replies
  1. என் மாமியார் கருணைக்கிழங்கு வெறும் குழம்பு என்று பருப்புப் போடாமல் பண்ணி இருப்பதாகச் சொல்லுவார்கள். ஆனால் நான் பார்த்தது இல்லை. கருணைக்கிழங்கை வேக வைத்து சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு மாதிரிக் கறி(கரேமுது) செய்யலாம். புளி சேர்க்க வேண்டும்.

   Delete
 2. கருணைக்கிழங்கு - எனக்கு ஆகாது....? sugar+

  ReplyDelete
  Replies
  1. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என்கின்றனர். பொதுவாக நம் நாட்டு மருத்துவத்தில் சாப்பிடச் சொல்கின்றனர். ஆங்கில மருத்துவம் தடை போடுகிறது.

   Delete
 3. நான் இருக்கும் இடத்திலும் கிடைக்காது.சென்னை வந்தால் வாங்கி வருவேன்.எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த மசியல்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், இதுவே எலுமிச்சை சேர்த்தும் பண்ணலாம். நேற்று அதுதான் வீட்டில் செய்தேன். :)

   Delete
 4. இதில் மசியல் மட்டுமே செய்து சாப்பிட்டிருக்கிறேன். ஒரே ஒரு முறை குழம்பு! ஆனால் வாங்குவதே இல்லை!

  ReplyDelete
  Replies
  1. உடலுக்கு நல்லது. மாதம் ஒரு முறையாவது சாப்பிடலாம்.

   Delete
 5. சாப்பிட்டதும், நாவில் அரிப்பது போன்ற உணர்வு வருவதால் அதிகம் சாப்பிடுவதில்லை.. புளி சேர்த்து சமைத்தால், இந்த மாதிரி வராதாம்மா?.

  ReplyDelete
 6. நல்ல குறிப்புகள். இங்கே சில சமயம் கிடைக்கும்.

  ReplyDelete
 7. புதிய கிழங்குகளில் காரல் இருக்கும்.சற்று நாளான கிழங்கானால் காரல் அவ்வளவாக இருக்காது.கிழங்கை வேக விடும்போது அவரை இலையைச் சேர்த்து வேக விடுவார்கள். கிராமத்துப் பழக்கம். புளி சற்றுத் தூக்கலாக இருந்தால் காராது. எலுமிச்சையும் அப்படியே. மசியல் , புளியிட்ட கறி பண்ணுவதுண்டு. இந்தக் கிழங்கை புழுங்கல் நெல்லுடன் சேர்த்துப் புழுக்குவார்கள். தேரழுந்தூரில் பார்த்தேன். மண் தரை சமையலறையில் ஒரு ஓரமாக மண்ணைப் பரப்பி அதில் கிழங்குகளைப் பொதிந்து வைத்திருந்து வேண்டும் போது எடுத்துச் சமைப்பார்கள். பழையகாலம். இருப்பினும் மாயவரம்,திருச்சி வாஸிகள் கேள்வியாவது பட்டிருப்பார்கள் . இஞ்சி முதல் அப்படியே. வெகுநாட்களிருக்கும். மூல உபத்திரவத்துக்கு கருணைக்கிழங்கு மிகவும் நல்லது. உங்களுக்குத் தெரியாததா? ருசியான மசியல். அன்புடன்

  ReplyDelete