எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, December 31, 2012

நீங்க நல்லாச் சாப்பிட ஒரு குறிப்பு!

புது வருஷத்துக்கு ஒரு புது டெசர்ட் பார்ப்போம்,  டெசர்ட்னதுமே அது பழங்களால் ஆனதுனு தெரிஞ்சிருக்குமே. முதல்லே இதுக்குத் தேவையான பொருட்களைப் பார்ப்போம்.

கேக் சாப்பிடறவங்க கடையில் விற்கும் ப்ளம் கேக் வாங்கிக்குங்க.  பெரிசா இருக்கட்டும். கடையிலே கேக் சாப்பிடமாட்டேனு சொல்றவங்க வீட்டிலேயே மில்க் மெயிடினால் செய்யப்பட்ட கேக்கை வாங்கிக்கலாம்.  இல்லைனா ஹாட்சன் மஹாதேவன் கடையிலே எக்லெஸ் கேக் கிடைக்கும் அதை வாங்கிக்குங்க.  இது முக்கியமா வேணும் சரியா?

அடுத்து ஜெல்லி க்ரிஸ்டல் பவுடர் வாங்கி அதிலே சொல்லி இருக்கும் முறையில் ஜெல்லியைத் தயார் செய்து, ஒரு பவுலில் ஊற்றி, அதிலே பாதாம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட் பருப்புகளைக் கலந்துக் குளிர வைக்கவும்.  ஜெல்லி கெட்டியாக ஆனதும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

இப்போது பழங்கள் எல்லாவகையும் வகைக்கு

ஆப்பிள் நடுத்தரம் ஒன்று, ஒரு மாதுளை, ஆரஞ்சு இரண்டு, கொய்யாப் பழம் நடுத்தரம் ஒன்று,  வாழைப்பழம் கனிந்ததாக பெரிதாக இருந்தால் ஆறு, இல்லை எனில் பத்து, பேரிச்சம்பழம் கொட்டை நீக்கியது 50 கிராம், பச்சை திராக்ஷை 50 கிராம், பன்னீர் திராக்ஷை 50 கிராம், முந்திரிப்பருப்பும் கிஸ்மிஸும் தேவை எனில் சேர்க்கலாம்.  சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை.

பால் சுண்டக் காய்ச்சியது அரை லிட்டர், கஸ்டர்ட் பவுடர் வெனிலா வாசனையில் இரண்டு டேபிள் ஸ்பூன், வெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், சர்க்கரை இரண்டு டேபிள் ஸ்பூன்.

வெனிலா ஐஸ் க்ரீம்  குடும்ப பாக்கிங்கில் உள்ளது.(தேவையானால்)

பழங்களை நன்கு கழுவி நறுக்கி ஒன்றாகக் கலந்து ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வைக்கவும்.

சுண்டக்காய்ச்சிய பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கலந்து கொண்டு அடுப்பில் வைத்துக் கிளறவும் கெட்டிப்படும்போது வெண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கிளறிக் கீழே இறக்கி ஆற வைக்கவும்.  மிக்சியில் போட்டு அடித்து வைத்துக்கொள்ளவும்.



இப்போது கலக்கும் முறை :

முதலில் ஒரு பெரிய பவுலில் கேக்கை வைக்கவும்,  அதன் மேல் ஜெல்லியைப் பரவலாகக் கொட்டவும்,  பின்னர் அதன் மேல் பழங்களைப் போடவும்.  அதன் பின்னர் அதன் மேல் அடித்து வைத்த கஸ்டர்டைச் சேர்க்கவும்.  விருப்பமுள்ளவர்கள் இதை அப்படியே ஃபோர்க்கால் எடுத்துத் தட்டில் எல்லாவற்றோடு சேர்த்துப் போட்டுக்கொண்டு வெனிலா ஐஸ்க்ரீமோடு சேர்த்துச் சாப்பிடலாம்.  சேமியா பாயசம் இருந்தாலும் அதோடு சாப்பிடலாம். ரொம்பவே ரிச்சானது!

நாங்க ராஜஸ்தான், குஜராத்திலே இருந்தப்போ இது அடிக்கடி பண்ணுவேன். எல்லாப் பழங்களும் இல்லாட்டியும் இருக்கிற பழங்களை வைத்துச் செய்வோம்.  கேக் நான் வீட்டிலேயே செய்துடுவேன்.  அதனால் அதிகம் செலவாகாது. மேலும் அங்கே பழங்கள் எல்லாவிதமானவையும் கிடைக்கும் என்பதோடு சுவை, ருசி, விலை எல்லாமும் ஏற்கும்படியாக இருக்கும்.

Saturday, December 29, 2012

வாழ்க்கையே ரசம் தான்!

எங்க வீட்டில் தினம் தினம் ரசம் இருக்கும். பொதுவாக நான் சாம்பார் பொடி எனத் தனியாக அரைப்பதில்லை.  அரைப்பதே ரசப்பொடிதான்.  சாம்பார் செய்வதெனில் செய்யும் அன்று வறுத்து அரைத்துச் செய்வதே வழக்கம்.  பொடி போட்ட சாம்பார் இன்றும் எனக்கு அவ்வளவு சரியாக வராது. :))))
இதற்குத் தேவையான சாமான்கள்:


கால்கிலோ மிளகாய் வற்றல்
50 கிராம் விரலி மஞ்சள்
முக்கால்  கிலோ தனியா
200 கிராம் மிளகு(அவ்வளவு காரம் வேண்டாமெனில் 100 கிராம் போதும்)
துவரம்பருப்பு 200
கடலைப்பருப்பு ஒரு கைப்பிடி
வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன்

ஒரு சிலர் கடுகு, கருகப்பிலை, உளுந்து, சீரகம் போன்றவற்றைச் சேர்க்கின்றனர்.  ஆனால் நான் போடுவது மேலே உள்ள அளவில் தான்.  பொதுவாகவே சாம்பார் பொடி அரைத்தாலும் சரி, ரசப்பொடி அரைத்தாலும் சரி துவரம்பருப்பு கூடுதலாகவும், கடலைப்பருப்பு கம்மியாகவும் போட்டால் ரசம் நல்ல தெளிவாக நீர்க்க வரும்.

மேலே சொன்ன சாமான்களை நன்கு வெயிலில் காய வைத்துக் கொண்டு மாவு மெஷினில் மிளகாய் அரைக்கும் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.  இதுவே சாம்பாருக்கும், பொடிதான் எனில் துவரம்பருப்பில் பாதி அளவுக்கு கடலைப்பருப்புப் போட்டு விட்டு மிளகு நூறு கிராமுக்கும் குறைத்துச் சேர்க்கவும்.  வெந்தயம் ஐம்பது கிராம் போடலாம்.

இந்த ஒரே பொடிதான் ரசம், சாம்பார் எனில் தனியாக ஒரு கிண்ணம் தனியா, அரைக்கிண்ணம் து.பருப்பு கால் கிண்ணம் மிளகு வெறும் வாணலியில் வறுத்து மஞ்சள் தூள் சேர்த்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.  மேலே இரண்டாவதாய்ச் சொன்ன சாம்பார் பொடியிலேயே ரசம் வைப்பதெனில் இந்தப் பொடியில் ஒரு அரை ஸ்பூன் பாதி கொதிக்கையிலே ரசத்தில் சேர்த்துக் கொண்டு கருகப்பிலை ஆர்க்கோடு இரண்டாகக் கிள்ளிச் சேர்க்கவும். மேலும் ரசத்துக்குப் பருப்பைப் போட்டு அடி வண்டல் இருக்கும்படி செய்வதை விட, பருப்பை நன்கு நீர் விட்டுக் கரைத்து அந்தப் பருப்பு நீரை விட்டாலே ரசம் தெளிவாக வரும்.

மைசூர் ரசம்(தஞ்சை மாவட்ட முறை) எங்க மாமியார் வீட்டில் தினம் தினம் சாம்பார்த்திருநாள் தான்.  ரசம் என்பது எப்போதோ தான்.  அவங்களைக் கட்டாயமாக தினம் ரசம் செய்ய வைத்த பெருமை என்னைச் சேரும்.  நமக்கு சாம்பார் என்றாலே அலர்ஜி! ரசம் ஒண்ணுதான் ஒழுங்காய்ச் சாப்பிடும் ஐடம். இவங்க சாம்பார் சாதம் சாப்பிடறதைப் பார்த்து எனக்கு மயக்கமே வந்துடுச்சுனா பாருங்க! அலுக்கவே அலுக்காது! சரி, சரி, இப்போ மைசூர் ரசம் எங்க மாமியாரோட செய்முறைப்படி பார்க்கலாமா?  இந்த மைசூர் ரசம் மாதிரியும் இல்லாமல், சாம்பாராகவும் இல்லாமல் இரண்டுங்கெட்டானாக இருக்கும்.  இது வைக்கிற அன்னிக்கு சாம்பார் வைக்க மாட்டாங்க.  ஏனெனில் து பருப்பு இதுக்கு நிறைய வேண்டும்.

நாலு பேருக்கு மைசூர் ரசம் வைக்க:

புளி ஒரு  பெரிய எலுமிச்சை அளவு நீரில் ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும்.  தக்காளி இரண்டிலிருந்து மூன்று வரை, உப்பு, மஞ்சள் தூள்

து பருப்பு குறைந்தது ஐம்பது கிராமுக்குக் கொஞ்சம் கூட  பருப்பை நன்கு வேக வைத்துக் குழைய வைத்துக்கொள்ளவும்.

தாளிக்க நெய் ஒரு டீஸ்பூன், கடுகு, கருகப்பிலை, கொத்துமல்லி

வறுத்து அரைக்க

மி.வத்தல் நான்கிலிருந்து ஆறு வரை
தனியா இரண்டு டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு மூன்று டீஸ்பூன்
வெந்தயம், இரண்டு டீஸ்பூன்,
தேங்காய்

மேலே சொன்ன பொருட்களை எண்ணெயில் நன்கு வறுத்துக் கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.  புளி ஜலத்தில் தக்காளியைப் போட்டு உப்புச் சேர்த்து மஞ்சள் தூளும் சேர்த்துக் கொண்டு கொதிக்க விடவும்.  புளி வாசனை போகக் கொதித்த பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்துக் குழைய வேக வைத்த பருப்பையும் அப்படியே சேர்க்கவும்.  தேவையான அளவு நீரை விட்டு விளாவவும்.  கவனிக்கவும்.  அதிக நீரை விட்டு நீர்க்க விளாவக் கூடாது.  பின்னர் ரசம் கொதித்து வந்ததும், அடுப்பை அணைத்துக் கீழே இறக்கிக் கடுகு, கருகப்பிலை, தேவையானால் ஒரு மி.,வத்தல் நெய்யில் தாளிக்கவும்.  பச்சைக்கொத்துமல்லி சேர்க்கவும். பொரித்த அப்பளத்தோடு சாப்பிடவும்.



Friday, December 14, 2012

உங்கள் மிக்சர் தயார்!

மீனாக்ஷி கேட்ட ரசப்பொடியை எழுதறதுக்கு முன்னாடி தீபாவளி பக்ஷணங்களை முடிச்சுப்போமா!   இப்போ மிக்சர் பண்ணலாம்.  பலருக்குப் பிடிக்கும்;  சிலருக்குப் பிடிக்காது.  எனக்கு சாதத்தோடு தொட்டுக்கப்பிடிக்கும்.  தனியாச் சாப்பிட்ட வயித்துக்கு ஒத்துக்காது எப்போவுமே.  :)))) எல்லாம் பண்ணுவேனே தவிர ஸ்வீட் மட்டும் தான் அளவோடு எடுத்துப்பேன்.  மத்தது எல்லாம் கொஞ்சம் பயம் தான்.  சின்ன வயசிலே இருந்து சாப்பிட்டுப் பழக்கமே இல்லை என்பதால் ஆசையும் வராதோ, பிழைச்சேன்.

மிக்சரில் போடும் பொருட்கள் ஓமப்பொடி, காராபூந்தி, சின்னச் சின்ன சேவ், அவல், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, உ.கி. சிப்ஸ், மைதா மாவில் செய்த சின்னச் சின்ன பிஸ்கட்டுகள்.  இப்போல்லாம் பிரிட்டானியாவின் குட்டி பிஸ்கட்டுகளைப்போட்டுடறாங்க.  இன்னும் சிலர் கார்ன் ப்ளேக்ஸ் போடறாங்க.  இதெல்லாம் அவங்க அவங்க விருப்பம்.  ஜீரக மிட்டாய்களைச் சேர்ப்பதும் உண்டு. இனி செய்முறையைப் பார்ப்போமா!

முதலில் ஓமப்பொடி:  கடலை மாவு இரண்டு கிண்ணம். அரைக்கிண்ணம் அரிசி மாவு.  உப்பு, பெருங்காயம்.  நெய் விழுது.  பிசைய நீர்.

அரிசிமாவு, கடலை மாவு, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.  நெய் விழுதைச் சூடு பண்ணி மாவில் விட்டுக் கலக்கவும்.  நன்கு கலக்க வேண்டும்.  மாவு கைக்குக் கரகரப்பாக வரும்படி கலக்கவும். நீர் விட்டுப் பிசையவும். பின்னர்   மெலிதாக உள்ள ஓமப்பொடி அச்சில் போட்டுப் பிழியவும்.

அடுத்துக் காராபூந்தி.  மாவு அளவு மேற்சொன்னதே எடுத்துக்கொள்ள வேண்டும்.  மற்ற எல்லாமும் மேலே சொன்னாப்போல் தான்.  ஆனால் மாவைப் பிசைய வேண்டாம்.  நீர் விட்டுத் தோசை மாவு பதத்துக்குக் கலக்கவும்.  கரண்டியால் எடுத்து விடும் பதம் இருக்க வேண்டும்.  பின்னர் பூந்திக் கரண்டியை எடுத்துக் கொண்டு மாவை அதில் விட்டுத் தேய்க்கவும்.  உருண்டையாக விழ வேண்டும்.  சில சமயம் வேகமாய் விட்டாலோ, தேய்த்தாலோ பத்தையாகப்போயிடும்.  ஆகவே கவனமாய்த் தேய்க்க வேண்டும்.  இப்படி எல்லா மாவையும் செய்து கொள்ளவும்.

அடுத்து சேவு:  மாவு அளவு மேலே சொன்ன மாதிரி எடுத்துக் கொண்டு ஓமப் பொடிக்குப் பிசைகிறாப்போல் பிசைந்து கொண்டு சேவுத்தட்டில் எண்ணெய்க்கு நேரே பிடித்துக்கொண்டு கையால் தேய்க்க வேண்டும்.  காய்ந்த எண்ணெய் என்றால் தட்டின் அடிப்பாகம் வழியாகச் சூடு தாக்கும்.  ஆகவே கவனமாய்த் தேய்க்க வேண்டும்.


ஓமப்பொடி, காராபூந்தி, சேவ் கலவையை நன்கு கலந்து கொள்ளவும்.  ஏற்கெனவே காய்ந்திருக்கும் எண்ணெயில் இப்போது மற்றச் சாமான்களைப் போட்டுப் பொரிக்க வேண்டும்.  அதற்கு முன்னால் மைதா மாவில் பிஸ்கட் செய்து கொள்வோம்.

மைதா மாவு ஒரு கிண்ணம்.  உப்பு சிறிதளவு, இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, நெய் விழுது அல்லது வெண்ணெய்.  எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.  மாவு கரகரப்பாக இருக்கும் வரை கலக்கவும்.  பின்னர் நீர் விட்டுச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும்.  பிசைந்த மாவு அரை மணி நேரம் ஊறட்டும்.  பின்னர் அதை மெலிதான சப்பாத்திகளாக இட்டுக் கொண்டு கத்தி அல்லது நுனியில் டிசைன் உள்ள ஸ்பூனால் டைமண்ட் வடிவத்துக்குக் கத்திரிக்கவும்.  கத்திரித்தவைகளை காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும்.  நன்கு சிவப்பாக வரும்போது எடுத்து வடிகட்டித் தட்டில் போட்டு ஓமப்பொடிக் கலவையோடு சேர்க்கவும்.


உருளைக்கிழங்கு சிப்ஸ்:   மேற்சொன்ன அளவுக்கு அரை கிலோ உ.கி. இருக்கலாம்.  கொஞ்சம் குறைந்தாலும் பரவாயில்லை.  உருளைக்கிழங்கை நன்கு கழுவி விரல் நீளத்துக்கு மெலிதாக சிப்ஸ் கட்டரால் நறுக்கவும்.  மீண்டும் நீரில் போட்டு நன்கு கழுவி விட்டுப் பின்னர் காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.   ஓமப்பொடிக்கலவையோடு சேர்க்கவும்.

அவல் கால் கிலோ, பொட்டுக்கடலை கால் கிலோ, வேர்க்கடலை கால் கிலோ எடுத்துக் கொண்டு காய்ந்த எண்ணெயில் போட்டு வறுக்கவும்.  வேர்க்கடலை வெடிக்க ஆரம்பிக்கும்போது எடுக்க வேண்டும்.  பொட்டுக்கடலை சிவப்பாக வரும்பொது எடுக்க வேண்டும்.  அவல் பொரிய ஆரம்பிக்கையில் எடுக்கவும்.  எல்லாவற்றையும் ஒன்றாய்க் கலக்கவும்.


காலி வாணலி அல்லது கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யை விட்டுக் கொண்டு, கருகப்பிலை, பெருங்காயத் தூள், மிளகாய்த்தூள், மிச்சம் உப்பைப் போட்டுக் கலக்கவும். இந்தக் கலவையோடு மிக்சர் கலவையை நன்கு கலக்கவும்.  இப்போது உங்கள் மிக்சர் தயார்.



Saturday, December 8, 2012

ஓடு, ஓடாய் ஒரு பக்கோடா!

சரி, இப்போ நாம ஓட்டு பக்கோடா செய்யலாமா?"

" என்னது?  ஓட்டிலே பக்கோடாவா?  யார் திங்கறது?"

"ஹிஹிஹி, நீங்க தான் திங்கணும்."

"அதெல்லாம் முடியாது."

"பயப்படாதீங்க.  ஓட்டு பக்கோடான்னா ரிப்பன் பக்கோடா."

 "என்ன ரிப்பனில் பக்கோடாவா?"

"க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., கொஞ்சம் பொறுமை தேவை. தஞ்சை ஜில்லாவில் நாடாத் தேன்குழல்னு சொல்வாங்க.  அதையே தென் மாவட்டங்களில் ரிப்பன் பக்கோடானும், மதுரையிலே ஓட்டு பக்கோடானும் சொல்வாங்க. "

"அப்பாடி, பிழைச்சேன். சரி, சரி, சீக்கிரமாப் பண்ணித்தாங்க."

இது காரம் போட்ட தேன்குழல்.  அதனால் மிளகாய்த்தூள் வேண்டும் அல்லது சிவப்பு மிளகாய் வற்றலை ஊற வைச்சு அரைச்சுக்கணும்.  இப்போ முதல்லே மாவு தயாரிப்புப் பார்க்கலாம்.  இதுக்குக் கொஞ்சம் வித்தியாசமா மாவு தயாரிக்கணும்.

ஊறவைத்துக் களைந்து காய வைத்த அரிசி நான்கு கிண்ணம், துபருப்பு ஒரு கிண்ணம், கடலைப்பருப்பு ஒரு கிண்ணம், உளுத்தம்பருப்பு அரைக்கிண்ணம்.  எல்லாவற்றையும் சேர்த்தும் அரைக்கலாம்.  ஊறவைச்ச அரிசியைப் போடாமல் ஊற வைக்காத வறட்டு அரிசியிலும் மேற்சொன்ன சாமான்களைப் போட்டுச் செய்யலாம்.  மாவு தயார் ஆனதும் தேவையான மாவை எடுத்துக்கவும்.

இரண்டு கிண்ணம் மாவு, நெய் விழுது  இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள் அல்லது கட்டிப்பெருங்காயத்தை நீரில் ஊறவைத்து அந்த நீரை விட்டுக்கலாம்.  மிளகாய்த்தூள் அல்லது அரைத்த மிளகாய் விழுது இரண்டு டீஸ்பூன்.  பிசையத் தேவையான நீர்.   பொரித்து எடுக்க சமையல் எண்ணெய்.

எப்போவும் சொல்றாப்போல் முதலில் மாவில் நெய்விழுதைப் போட்டுக் கொண்டு  உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய் விழுதைப் போட்டு நன்கு கலக்கவும்.  எடுத்த எடுப்பில் நீர் விட்டுப் பிசைய வேண்டாம்.  மாவோடு உப்பு, காரம் நன்கு கலக்கவேண்டும்.  பின்னர் நீர் விட்டுப் பிசையவும்.  சப்பாத்தி மாவு பதத்துக்கு மாவு வந்ததும்,  அடுப்பில்  கடாயை வைத்து எண்ணெயை ஊற்றிக் காய வைக்கவும்.  நாடாத் தேன்குழலின் அச்சு இருவிதமாக இருக்கும். ஒன்று ப்ளெயினாக இருக்கும்.  இன்னொன்று முள் முள்ளாக இருக்கும்.  இரண்டில் எது வேண்டுமோ அதைப் போட்டுக் கொண்டு மாவைக் குழலில் அடைத்து எண்ணெயில் பிழியவும்.  பரவலாகப் பிழியவும்.  சுவையான ரிப்பன் பக்கோடா ரெடி.

Saturday, December 1, 2012

ஓமத்தைப் பொடி செய்துவிட்டால் ஓமப்பொடியா?

அடுத்து ஓமப்பொடி தயாரிப்பு முறையைப் பார்க்கலாமா?  இதுக்குத் தேவையான பொருட்கள்

கடலை மாவு இரண்டு கிண்ணம், அரிசி மாவு ஒரு கிண்ணம், நெய் விழுது ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு, தேவையான அளவு, ஓமம் சுத்தம் செய்து ஊற வைத்து அரைத்த விழுது அல்லது மிக்சியில் செய்த பொடி ஒரு டேபிள் ஸ்பூன் வரை அவரவர் ருசிக்கு ஏற்ப. பெருங்காயம் தேவையில்லை.  மிளகாய்த்தூள் கொஞ்சம் சேர்த்து, ஓமத்தை முழுதாகப் போட்டுச் செய்கையில் பெருங்காயம் சேர்க்கலாம்.(கொஞ்சமாக), பிசையத் தேவையான நீர்.

அரிசிமாவு & கடலைமாவில் நெய்யை விழுதாகப் போட்டு உப்புச் சேர்த்து முன் சொன்னது போல் நன்கு கலக்கவும். கைக்குக் கரகரவென வருகையில் ஓம விழுது அல்லது பொடி செய்த ஓமத்தைச் சேர்க்கவும்.  நீர் விட்டு நன்கு பிசையவும்.  தேன் குழல் அச்சில் பொடிப் பொடியாக ஓமப்  பொடி பிழியும் அச்சில் பிசைந்த மாவைப் போட்டு பரவலாகப் பிழியவும்.  இது சீக்கிரம் வெந்துவிடும்.  ஆகவே உடனடியாக எடுக்க வேண்டும்.  இல்லை எனில் கறுத்து விடும்.  ஓமம் நிறையச் சேர்த்தால் குழந்தைகளுக்குத் தாராளமாய்க் கொடுக்கலாம்.  இதற்கும் தேவையான மாவை முன் கூட்டியே கலந்து கொள்ளாமல் கொஞ்சம் கொஞ்சமாகவே கலந்து கொள்ளவும்.  அப்போது தான் எல்லாம் ஒரே நிறமாக வரும்.

மிளகாய்ப் பொடி சேர்த்துச் செய்யும் ஓமப் பொடிக்கு மிளகாய்த் தூள் இரண்டு டீஸ்பூன் போட்டால், ஓம விழுது அல்லது பொடி செய்த ஓமத்தை இரண்டு டீஸ்பூன் போடலாம்.  இவை எதுவுமே போடாமல் கடலைமாவு, அரிசி மாவு ஒரு கிண்ணத்திற்குப் பதிலாக அரைக்கிண்ணம் சேர்த்து உப்பு, நெய் சேர்த்துப் பிசைந்து செய்யும் ஓமப் பொடியைத் தயிர்வடை, பேல்பூரி, அவல் உப்புமா போன்றவற்றில் மேலே தூவிக் கொள்ளலாம்.  சாட் வகையறாக்களிலும் தூவிக் கொள்ளலாம்.

Friday, November 16, 2012

குல்ஃபி வாங்கலையோ, குல்ஃபி!

இன்னிக்குக் குல்ஃபி ஐஸ் பத்தி ஜி+இல் ஒருத்தர் எழுதி இருந்தாரா!  உடனே நான் குல்ஃபி ஒரு காலத்தில் விழுந்து விழுந்து பண்ணினதும், குல்ஃபி மோட் எல்லாம் இப்போ எங்கே இருக்குனே தெரியாம இருக்கிறதும் நினைவில் வந்து சோகமாயிடுச்சு! சரி குல்ஃபி செய்யும் முறையையாவது பகிர்ந்துப்போமேனு தோணிச்சு.  அதான் வந்தேன்.

ஹிஹிஹி, ரொம்ப காஸ்ட்லியான ஐடம். நாங்க ராஜஸ்தான், குஜராத்திலே இருக்கிறச்சே பாலையோ, மோரையோ, தயிரையோ, வெண்ணெயையோ என்ன செய்யலாம்னு மண்டையைக் குழப்பிக்கணும். ஒன்றரை லிட்டர் பாலுக்கு அவ்வளவு ரிச்னெஸ் இருக்கும்.  ஒரிஜினல் பால்.  நமக்கு நேரே கறந்த பால்.   ஒரு சொட்டுத் தண்ணீர் கூட விடாத பால். இந்த மிச்சம் பாலை எல்லாம் சேர்த்துச் சேர்த்து நன்றாய்க் காய்ச்சிக் குறுக்கி வைச்சுப்பேன்.  தேவைப்படும்போது காரட் அல்வாவுக்கோ, அல்லது பால் கேக்குக்கோ அல்லது குல்ஃபிக்கோ பயன்படுத்திப்பேன். ஆகவே இதற்கு நான் உத்தேசமாத் தான் திட்டம் சொல்ல முடியும்.  (எவ்வளவு பெரிய பில்ட் அப் பண்ண வேண்டி இருக்கு!)

நல்ல சுத்தமான பாலாக மூன்று லிட்டர், பாதாம் பருப்பு ஐம்பது கிராம், பிஸ்தா ஐம்பது கிராம், முந்திரிப்பருப்பு ஐம்பது கிராம். ஏலக்காய், தேவை எனில் வனிலா எசென்ஸ் அல்லதுபாதாம்/பிஸ்தா எசென்ஸ் ஏதேனும் ஒன்று.  பாலில் ரிச்னெஸ் கம்மியாக இருந்தால் கஸ்டர்ட் பவுடர் வெனிலா ஃப்ளேவரில் வாங்கவும்.

மேலே தூவ பாதாம், பிஸ்தா, முந்திரியை நன்கு சீவி இரண்டு டேபிள் ஸ்பூன் வைச்சுக்கவும். இது தனி மேலே சொன்னது தனி.

நாளைக்குக் குல்ஃபி தயாராக இருக்கணும்னா இன்னிக்கே பாதாம், பிஸ்தா, முந்திரியை நீரில் ஊற வைச்சுக்கவும்.  மறுநாள் மூன்று லிட்டர் பாலையும் நன்கு காய்ச்சி அரை லிட்டராகக் குறுக்கவும்.  அல்லது குறைந்த பக்ஷமான முக்கால் லிட்டருக்குள் குறுக்கிக் கொள்ளவும்.  ஊற வைத்த பாதாம், பிஸ்தா, முந்திரியை நன்கு அரைத்துப் பாலில் கலக்கவும்.  சர்க்கரை சேர்க்கவும்.  எசென்ஸ் ஏதேனும் ஒன்று சேர்க்கவும். எசென்ஸ் சேர்த்தால் ஏலக்காய் வேண்டாம்.  ஆனால் ஏலக்காயே நன்றாக இருக்கும்.  பின்னர் கலந்த பாலை நன்கு ஆற வைத்து குல்ஃபி மோடில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரீசரில் வைக்கவும்.  அநேகமாய் இரண்டு மணி நேரத்தில் தயாராகி விடும்.  இல்லை எனில் உங்களுக்கு என்று தேவையோ அதற்கு முதல் நாளே செய்து வைத்துக் கொள்ளவும்.  பின்னர் வெளியே எடுத்து இரண்டு நிமிடத்தில் குல்ஃபிக்களை அப்படியே வெளியே எடுக்கலாம்.


கஸ்டர்ட் சேர்த்துச் செய்வது.  பாலைக் காய்ச்சிக் குறுக்கும் முன்னர் அரைக் கிண்ணம் பாலில் இரண்டு டேபிள் ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரைப் போட்டுக் கலக்கவும். பின்னர் ஒரு கிண்ணம் பாலைத் தனியாக அடுப்பில் வைத்து அதில் இந்தக் கஸ்டர்ட் கலவையைப் போட்டுக் கொஞ்சம் வெண்ணெயும் (ஒரு டேபிள் ஸ்பூன் போல)போட்டுக் கிளறவும்.  கெட்டியாக ஆகும்.  இதை மிக்சியில் போட்டு அடித்துக்கொள்ளவும். இப்போது கீழே இறக்கிக் குறுக்கி வைத்திருக்கும் பாலில், அரைத்த பருப்புக்களோடு கலக்கவும்.  பின்னர் குல்ஃபி மோடில் ஊற்றவும்.  இதற்கு வனிலா ஃப்ளேவர் இருப்பதால் ஏலக்காயோ, வேறு எசென்சோ சேர்க்க வேண்டாம்.  எனினும் ருசியில் மாறுபாடு இருக்கும்.

Thursday, November 15, 2012

அப்பாதுரைக்காக மசூர்ப் பருப்பும், து.பருப்பும்!

து. பருப்பு நிச்சயமாத் தெரிஞ்சிருக்கும்.  கீழே இருப்பது து.பருப்பு.  மேலே இருப்பது மசூர் தால் எனப்படும் மசூர்ப் பருப்பு.  துவரம் பருப்புப் போலவே ஆனால் நிறம் நல்ல ஆரஞ்சு நிறத்தில் சிறியதாக இருக்கும். இதையும் போட்டு சாம்பார் வைக்கிறார்கள்.  ஆர்மி ரேஷனில் துவரம்பருப்புக்கு மாற்றாகப் பயன்படுத்துவார்கள்.  உடம்புக்கு நல்லது என்பார்கள்.  நாங்க சப்பாத்திக்கு தாலாகச் சமைத்திருக்கிறோம். ஒண்ணும் வித்தியாசம் தெரியாது.

மைசூருக்குப் போக வேண்டாம், இங்கேயே சாப்பிடலாம்!


முதன் முதலில் மைசூர் அரண்மனைச் சமையல் அறையிலேயே செய்யப் பட்டுள்ளது. மசூர் பருப்பு என அழைக்கப் படும் சிவந்த நிறப் பருப்பை வறுத்து, ஊற வைத்து, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்தே செய்யப் பட்டுள்ளது. கிட்டத் தட்ட முந்நூறு அல்லது அதற்கும் குறைந்த ஆண்டுகளிலேயே கண்டுபிடிக்கப் பட்டது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மசூர் பருப்பை இயந்திரத்தில் அரைத்துச் செய்யப் பட்டது. அதன் பின்னர் மேலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டதும் மசூர் பருப்பு மாவு மிஷினில் அரைக்கப் பட்டுச் செய்யப் பட்டது. மசூர் பருப்பிலிருந்து செய்ததாலேயே இதன் பெயர் மசூர் பாகு என்று அழைக்கப் பட்டு காலப் போக்கில் மைசூர் பாகு என மாறியதாய்த் தெரிகிறது. ஒரு விதத்தில் இதன் மூலம் மைசூர் அரண்மனை என்பதாலும் இந்தப் பெயர் பொருந்தி விட்டது. கடலைப்பருப்பில் செய்வது என்ற கால கட்டத்திற்கு எப்போது மாறியது எனப் புரியவில்லை. அந்த ஆராய்ச்சியும் செய்துடலாம்.

தற்சமயம் மைசூர் பாகு கடலைப்பருப்பை மிஷினில் மாவாக அரைத்துச் செய்யப் படுகிறது. மைசூர் பாகுக்குத் தேவையான பொருட்கள்:
  • கடலை மாவு ஒரு கிண்ணம்
  • மூன்றுகிண்ணம் சர்க்கரை
  • மூன்று கிண்ணம் நல்ல நெய்

அடி கனமான வாணலி அல்லது உருளி. பாகு வைக்க அரை கிண்ணம் நீர்.

முதலில் வாணலியில் ஒரு கிண்ணம் நெய்யை ஊற்றி கடலை மாவை அதில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும். கடலை மாவை காய்ந்த நெய்யில் ஊற்றினால் மேலே பொங்கி வரும். அதுவே சரியான பதம்.

பின்னர் அந்த மாவை வேறு தட்டில் அல்லது பாத்திரத்தில் மாற்றிவிட்டு அதே வாணலியில் மூன்று கிண்ணம் சர்க்கரையோடு அரை கிண்ணம் நீர் சேர்த்து பாகு வைக்கவும். பாகு நன்றாகக் காய்ந்துக் கையால் உருட்டினால் மிளகு பதம் வரும்போது வறுத்து வைத்துள்ள மாவைக் கொட்டிக் கைவிடாமல் கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாய் நெய் சேர்க்கவேண்டும். நெய்யை திரும்பவும் நன்கு புகை வரும் அளவுக் காய வைத்து ஊற்றினால் மைசூர்பாகு மேலே வெண்மையாகவும், நடுவில் சிவந்தும், அடியில் வெண்மையாகவும், கூடு விட்டுக் கொண்டும் வரும். சுமாராக 200கிராம் கடலை மாவில் மைசூர்ப்பாகு பண்ண 3/4 கிலோ நெய்யாவது வேண்டும்.  எவ்வளவு நெய்யைக் கொட்டினாலும் அத்தனையையும் உள் வாங்கிக்கும். கோதுமை அல்வா போல் நெய்யைக் கக்காது. மைசூர் பாகு கெட்டிப் பட்டு உருளி அல்லது வாணலியில் ஒட்டாமல் சுருண்டு  மேலே பொங்கி வரும்போது நல்ல சதுரமான தாம்பாளத்தில் கொட்டிவிட்டுச் சூடாக இருக்கும்போதே வில்லைகள் போடவேண்டும். வில்லைகள் போடும் முன்னர் மேலே கொஞ்சம் சர்க்கரையைத் தூவலாம்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மை.பா என்றால் ஒரு கிண்ணம் கண்டென்ஸ்ட் பால் அல்லது இரண்டுலிட்டர் பாலைக் குறுக்கி அந்தக் குறுக்கப் பட்ட பால் ஒரு கிண்ணம். கடலைமாவு சேர்க்கும் முன்னர் சேர்க்கவேண்டும். பின்னர் மைசூர்பாகு நன்கு கெட்டிப் பட்டு சுருண்டு வரப் போகும் சமயம் தீயைக் குறைத்துவிட்டு/ அல்லது தீயிலிருந்து கீழே இறக்கிக் கைவிடாமல் கிளறவேண்டும். பின்னர் தட்டில் கொட்டி வில்லைகள் போடலாம். இம்முறையில் மிகவும் மிருதுவான மைசூர்பாகுகள் கிடைக்கும். பால் சேர்த்தால் பிடிக்காதவர்கள் கடலைமாவு மட்டுமே போட்டுச் சுருண்டு வரும் சமயம் கீழே இறக்கித் தீயில் வைக்காமலேயே கீழேயே கிளறவேண்டும். அந்தச் சூட்டிலேயே சுருண்டு வரும் பதம் வந்ததும் தட்டில் கொட்டி வில்லைகள் போடலாம். இம்முறையிலும் மைசூர் பாகு மிருதுவாய்க் கிடைக்கும்.

Tuesday, November 13, 2012

முள்ளாய்க் குத்தாத தேன்குழல்! :))

இப்போ முள்ளுத் தேன்குழலை எப்படிச் செய்யறதுனு பார்ப்போம்.  இது அரிசியை ஊற வைச்சு அரைச்ச மாவிலே ஒரு மாதிரியாகவும், வறட்டு அரிசியிலே ஒரு மாதிரியாகவும் செய்யணும்.  முதல்லே வறட்டு அரிசியிலே பார்ப்போம்.

அரிசி ஒரு கிலோ என்றால் ஒரு ஆழாக்கு கடலைப் பருப்பு, ஒரு ஆழாக்கு பாசிப் பருப்பு.  பருப்பு வகைகளை வெறும் வாணலியில் பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் அரிசியோடு கலந்து நன்கு நைசாகவே அரைக்கவும்.

இந்த அரைத்த மாவு இரண்டு கிண்ணம், வெண்ணெய் தேவையான அளவு, உப்பு, பெருங்காயம், பிசைய நீர்.  சிலர் வீடுகளில் எள் சேர்ப்பார்கள்.  அவங்க எள்ளையும் சேர்த்துக்கலாம். நான் எள் போட மாட்டேன்.  அரிசி மாவோடு உப்புச் சேர்த்துப் பெருங்காயம் , வெண்ணெயும் சேர்த்து முன்னர் தேன் குழலுக்குச் சொன்னாப் போலவே நன்கு கலக்கவும்.  கைகளால் கலந்து கொண்டு அது கரகரப்பாகக் கைக்கு வந்ததும் நீர் விட்டுப் பிசையவும்.  பின்னர் அடுப்பில் வாணலியில் சமையல் எண்ணெயை வைத்துத் தேன்குழலைப் பிழிந்து எடுக்கவும்.


இன்னொரு முறை:

ஊற வைத்த அரிசியில் அரைத்த மாவு இரண்டு கிண்ணம், கடலை மாவு அரைக் கிண்ணம், பொட்டுக்கடலை மாவு இரண்டு டேபிள் ஸ்பூன்.  கடலை மாவை பச்சை வாசனை போக வறுக்கவும்.  பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் வறுத்து மிக்சியில் பொடி செய்யவும்.  உப்புப் பெருங்காயத்தோடு இவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.  இதற்கு வெண்ணெய் கொஞ்சமாகப் போட்டால் போதும்.  அல்லது வாணலியில் சமையல் எண்ணெய் அரைக்கரண்டியை நன்கு காய வைத்து மாவில் ஊற்றவும்.  மாவு முழுதும் வெண்ணெய் அல்லது எண்ணெய் கலந்த பின்னர் நீர் ஊற்றிப் பிசையவும்.  பின்னர் தேன்குழல்களாகக் காய்ந்த எண்ணெயில் பிழியவும்.

வெளிநாடுகளில் அரிசி மாவு ரெடிமேடாகக் கிடைப்பதில் மேலே சொன்னாப் போல செய்யலாம். தைரியமாகச் செய்யலாம்.  அங்கே இருந்த இரண்டு தீபாவளிகளில் நான் அப்படித் தான் செய்தேன்.  நன்றாகவே வருகிறது.  அல்லது லாங் கிரெயின் அரிசி வாங்கி அதை ஊற வைத்து அரைத்து மாவாக்கியும் செய்து கொள்ளலாம்.  கடலைப்பருப்பை எல்லாம் வறுத்து அரைக்க முடியாது என்பதால் கடலைமாவு, பொட்டுக்கடலை மாவு போட்டுக் கொள்ளலாம்.  இந்த மாவிலேயே கொஞ்சம் காரப்பொடி, தேங்காய் பல் பல்லாகக் கீறிப் போட்டு, கடலைப்பருப்பு அல்லது வேர்க்கடலையை ஊற வைத்துச் சேர்த்துத் தட்டையாகவும் தட்டலாம். நல்ல கரகர தட்டைக்கு நான் காரன்டி. 

Monday, November 12, 2012

தேனான குழல்!

இடித்துச் சலித்த மாவு அல்லது ஊறவைத்துக் காய வைத்து மெஷினில் அரைத்த அரிசி மாவு.  இவற்றில் ஏதேனும் ஒன்று இரண்டு கிண்ணம், இரண்டு டேபிள் ஸ்பூன் உளுத்த மாவு, உப்பு, ஜீரகம், பெருங்காயம் தேவையானால், (நான் சேர்ப்பேன்.) வெண்ணெய், பிசைய நீர். பொரிக்க சமையல் எண்ணெய்.

மாவில் உளுத்தம் மாவு, உப்புச் சேர்த்து வெண்ணெயையும் ஜீரகத்தையும் போட்டு முதலில் நன்கு சீராகக் கலந்து கொள்ளவும்.  உடனே நீரை விட்டுப் பிசைய வேண்டாம்.  வெண்ணெயோடு மாவு எல்லாம் நன்கு கலந்து கைக்குக் கொஞ்சம் கரகரப்பாக மாவு வரும்.  அப்போது நீரை விட்டுப் பிசையவும்.  நன்கு குழைவாகப் பிசையவும்.  

கடாயில் எண்ணெயைக் காய வைக்கவும்.  எண்ணெயில் புகை வரும்போது அடுப்பைத் தணிக்கவும்.  இப்போது தேன்குழல் படியில் தேன்குழல் அச்சைப் போட்டு மாவால் நிரப்பிக் காயும் எண்ணெயில் பிழியவும்.  பரவலாகப் பிழிய வேண்டும்.  மொத்தமாகப் பிழிந்தால் நடுவில் இருப்பவை உள்ளே வேகாது.  நன்கு வெந்ததும் ஓசை அடங்கி வரும்.  அப்போது எடுத்து வடிதட்டில் போட்டு வடிகட்டவும்.  இம்மாதிரி எல்லா மாவையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பிசைந்து கொண்டு பிழிந்து எடுக்கவும்.  எல்லா மாவையும் மொத்தமாகப் பிசைய வேண்டாம்.  நேரம் ஆனால் தேன்குழல் நிறம் மாற ஆரம்பிக்கும்.  ஆகவே இரண்டு கிண்ணம் பிசைந்து கொண்டு அது முடிந்ததும் திரும்ப இரண்டு கிண்ணம் பிசையலாம்.


இன்னொரு முறை:  ஒருகிலோ பச்சரிசி, ஒரு ஆழாக்கு அல்லது கால் கிலோ உளுந்து.  இவை இரண்டையும் மெஷினில் கொடுத்து நல்ல நைசாக மாவாக்கிக் கொள்ளவும்.

இந்த மாவு இரண்டு கிண்ணம், வெண்ணெய், உப்பு, ஜீரகம், பெருங்காயம், பிசைய நீர்.  முன் போலவே மாவில் உப்பு, ஜீரகம், பெருங்காயம், வெண்ணெய் போட்டு நன்கு கலக்கவும்.  நன்கு கலந்து விட்டது என்பது தெரிந்ததும் நீரை விட்டுப் பிசையவும்.  இதற்கு நீர் கூடப் பிடிக்கும்.  வறட்டு அரிசி மாவு என்பதால் நீர் வாங்கும்.  நன்கு பிசைந்ததும், முன்போல் எண்ணெயைக் காய வைத்துத் தேன்குழல் அச்சில் போட்டுப் பிழியவும்.  இதுவும் வெள்ளை வெளேர் என நன்றாகவே வரும்.  படங்கள் நாளை போடுகிறேன்.

Sunday, November 11, 2012

தீபாவளிக்கு என்ன பக்ஷணம் பண்ணப் போறீங்க?

முன்பெல்லாம் ஒரு வாரமாவது தீபாவளி பக்ஷணம் பண்ணுவோம்.  அப்படியும் எங்க மாமியார் ரொம்பக் குறைச்சலாப் பண்ண வேண்டி இருக்குனு வருத்தப் படுவாங்க.  இப்போ அநேகமா எல்லாரும் ஆர்டர் கொடுக்கிறாங்க.  இல்லைனா கொஞ்சமாப் பண்ணறாங்க.  நான் தீபாவளிக்கு விநியோகம் பண்ணறதுக்குனு கொஞ்சமாக பக்ஷணங்கள் பண்ணுவது உண்டு.  தேன்குழல், ஓமப்பொடி கொஞ்சம் போலப் பண்ணிட்டு மிக்சரைக் கொஞ்சம் கூடப் பண்ணுவேன்.  தேன்குழல், ஓமப்பொடி பத்து அல்லது பனிரண்டுக்குள் தான் பண்ணுவேன்.  அதையே சாப்பிடணுமே!  ஸ்வீட் எப்படியும் இரண்டாவது இருக்கும்.  போன வருஷம் ஹூஸ்டனில் பையர் எதுவுமே பண்ணக் கூடாதுனு கண்டிப்பாய்ச் சொல்லி அப்புறம் எண்ணெய் வைக்கணும்னு சாஸ்திரம்னு சொன்னதும் உளுத்த மாவுத் தேங்குழல் மட்டும் கொஞ்சம் போலப் பண்ணச் சொன்னார். ஸ்வீட்டுக்குப் பாயசம் போதும்னு சொல்லிட்டார்.  நீ அடுப்படியிலே வெந்தது எல்லாம் போதும்னு அவரோட கட்சி.

இந்த வருஷமும் இங்கே அதிகம் பண்ணலை.  இன்னிக்குக் கொஞ்சமா உளுத்தமாவுத் தேன்குழலும், முள்ளுத் தேன்குழலும் பண்ணினேன்.  நாளைக்குக் கொஞ்சம் போல மைசூர்பாகு.  அவ்வளவு தான்.  இதையே மைசூர்பாகை நான் தான் சாப்பிட்டாகணும்.  ரங்க்ஸுக்குச் சாப்பிட முடியாது. :( ஆகையால் இப்போல்லாம் வீட்டில் ஸ்வீட்டே யாரானும் வந்தால் பண்ணறதோடு சரி.  இப்போ உளுத்த மாவுத் தேன்குழல் எப்படிப் பண்ணறதுனு பார்ப்போமா!  இதை இருவிதமாகப் பண்ணலாம்.  பாரம்பரிய முறை ஒண்ணு.  நாங்களாய்க் கண்டு பிடிச்ச முறை இன்னொண்ணு.  இந்த இன்னொரு முறையிலேயே இன்னிக்குப் பண்ணினேன்.

பாரம்பரிய முறையில் அரிசியை ஊற வைத்துக் களைந்து கொஞ்ச நேரம் நிழலில் உலர்த்திப் பின்னர் மெஷினில் மாவாக்கி/அல்லது இடித்து/(இடித்துப் பண்ணி இருக்கேன்) அல்லது மிக்சியில் அரைத்து, உளுத்தம்பருப்பைச் சிவக்க வறுத்து மாவாக்கி அதையும் போட்டுப் பண்ணுவாங்க.

இப்போப் பண்ணுவது ஒரு கிலோ அரிசிக்கு ஒரு ஆழாக்கு/200கிராம் உளுந்தை அதிலேயே போட்டு மிஷினில் அரைத்துக் கொண்டு வந்துவிடுகிறோம்.  அதிலே தேன் குழல் பண்ணினாலும் நன்றாக வருகிறது.  மாவு மீந்து போனாலும் கவலையில்லை.  இன்னொரு நாள் பண்ணிக்கலாம்.  அல்லது ரவா தோசை, கோதுமை தோசை, கேழ்வரகு தோசைகளுக்குப் போட்டுக்கலாம். இனி அடுத்த பதிவில் செய்முறை பார்க்கலாம்.  ஹிஹிஹி, இது கதையாக நீண்டு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச். :)))))))

Wednesday, October 31, 2012

தம், தம், ஆலூ தம், தம் தம்!

இப்போ அடுத்து நாம் தக்காளி ப்யூரி எனப்படும் தக்காளிச் சாறு அல்லது விழுதை வைத்துச் செய்யும் ஒரு  சமையல் குறிப்பைப் பார்ப்போம்.

தக்காளி ப்யூரி எடுக்கும் விதம்:  ஒரு கிலோவுக்குக் குறையாமல் தக்காளியை வாங்கி நன்கு கழுவிக் குக்கரில் அல்லது கொதிக்கும் வெந்நீரில் போட்டு நன்கு வேக விடவும்.  பின்னர் அந்தச் சாறில் இருந்து விதைகளை வடிகட்டிவிட்டு, விழுதைக் கெட்டியாகச் சேகரித்துக்கொண்டு குளிர்சாதனப் பெட்டியின் ஃப்ரீசரில் வைத்துக்கொண்டு உபயோகிக்கலாம்.  இதை உடனடியாக உபயோகிப்பதே பொதுவாக நல்லது.  அப்படி நீண்ட நாட்கள் வேண்டுமெனில் வினிகர் ஊற்றிக் கலக்கி ஃப்ரீசரில் வைத்துக்கொள்ள வேண்டும்.  இப்போது நாம் பார்க்கப் போவது ஆலு தம் என அழைக்கப் படும் ஒரு கூட்டு.  நான்கு பேருக்கான அளவு இங்கே சொல்கிறேன்.

சின்ன உருளைக்கிழங்கு அரைகிலோ வாங்கி வேக வைத்துத் தோலுரித்துக்கொள்ளவும்.  பின்னர் அதில் ஊசியால் சுற்றிலும் துளைகள் போடவும்.  துளைகள் போடுவதால் உ.கி. உடையக் கூடாது.  முழுசாகவே இருக்கணும்.  வெங்காயம் பெரிது ஒன்று அரைக்க. தக்காளி இரண்டு அரைக்க.பச்சைமிளகாய் 2, இஞ்சி ஒரு துண்டு, கொத்துமல்லி, (பூண்டு சேர்ப்பவர்கள் ஒன்றிரண்டு பூண்டுப் பற்களையும் சேர்த்துக்கொள்ளலாம்) இவற்றைத் தனியாகவும், வெங்காயம் தக்காளியைத் தனியாகவும் அரைத்துக்கொள்ளவும்.  மிளகாய்த் தூள் இரண்டு டீஸ்பூன், கொத்துமல்லித்தூள் இரண்டு டீஸ்பூன், சர்க்கரை ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை.  தக்காளி ப்யூரி ஒரு கிண்ணம் நிறைய.  வெண்ணெய் அல்லது க்ரீம் உங்கள் ருசிக்கு ஏற்றாற்போல் சாதாரணமாக இந்த அளவுக்கு அரைக்கிண்ணம் வெண்ணெய் தேவைப்படும். க்ரீம் எனில் சாப்பிடுகையில் மேலே ஊற்றிக்கொள்ளலாம்.  அதுவும் அரைக்கிண்ணம் இருக்கலாம்.  கரம் மசாலாப் பொடி இரண்டு டீஸ்பூன், உப்பு. தாளிக்க, வதக்க எண்ணெய், மேலே தூவப் பச்சைக்கொத்துமல்லி.

அரைக்கச் சொன்ன வெங்காயம், தக்காளியைத் தனியாக அரைக்கவும்.  பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்துமல்லியையும் நன்கு விழுதாக அரைக்கவும்.  இப்போது அடுப்பில் கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை வைத்துக் கொண்டு எண்ணெய் விடவும்.  எண்ணெய் காய்ந்ததும் முதலில் ஒரு டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்க்கவும்.  சர்க்கரை எண்ணெயில் கரையட்டும்.  இம்மாதிரி மசாலா சேர்த்துச் செய்யப் படும் சமையல்களில் கொஞ்சம் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்தால் மசாலாவின் தாக்கம் குறைவதோடு வயிற்றிலும் வேதனை செய்யாது.  சர்க்கரை கரைந்ததும், வெங்காயம் தக்காளி விழுதைப் போட்டு வதக்கவும்.  நன்கு வதக்கி எண்ணெய் பிரிந்து வருகையில் பச்சைமிளகாய், இஞ்சி விழுதைப் போட்டுச் சிறிது வதக்கவும்.  பின்னர் உருளைக்கிழங்குகளைச் சேர்த்து மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, மஞ்சள் பொடி போட்டுக் கொஞ்ச நேரம் வதக்கவும்.  பின்னர் தக்காளி ப்யூரியை விடவும். ரொம்ப கெட்டியாக இருந்தால் அரைக்கிண்ணம் நீரைச் சேர்க்கவும்.  தேவையான உப்பைப் போடவும்.  நன்கு கொதிக்க விடவும். சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கும் முன்னர் கரம் மசாலாப் பொடியைப் போட்டுவிட்டுப் பச்சைக் கொத்துமல்லியைத் தூவவும்.  சூடாக இருக்கையிலேயே வெண்ணெயைச் சேர்க்கவும். அல்லது க்ரீமை மேலே ஊற்றி அலங்கரிக்கவும்.  உருளைக்கிழங்கில் துளைகள் போடுவதால் கொதிக்கையில் காரம், மசாலா ருசி உள்ளே போய் இறங்கிக் கொள்ளும்.  ஃபுல்கா ரொட்டி, சப்பாத்தி, பராட்டா போன்றவற்றோடு சாப்பிடலாம்.  நான் செய்யற அன்னிக்குப் படம் எடுத்துப் போடறேன்.

Monday, October 29, 2012

தக்காளி சமையல்கள்--பகுதி4

மீனாக்ஷி கேட்ட தக்காளி சாதம் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.  தக்காளி சாதம் நான் இரு முறைகளில் செய்வேன்.  ஒரு முறை சாதாரணமானது.  பல வருடங்களுக்கு முன்னர் தற்செயலாக சட்னிக்காக வெங்காயம், இஞ்சி, ப.மி போட்டு வதக்கிய தக்காளியில் மிஞ்சின  சாதத்தைக் கலந்தேன்.  அதை என்னோட ஒன்றரை வயதுப் பெண் சாப்பிட்டுவிட்டு அன்றிலிருந்து எல்லோ கலர் மம்மம் என்று கேட்க ஆரம்பித்தாள்.  சாதத்தைக் கண்டாலே ஓடும் பெண்ணரசி இதைக் கேட்கவே வீட்டிலே கிலோ கிலோவாகத் தக்காளி வாங்க ஆரம்பிச்சோம்.  அப்புறமா கொஞ்சம் கொஞ்சமாக அதைப் புனர் நிர்மாணமும் செய்ய ஆரம்பித்தேன்.

வெங்காயம், தக்காளி வதக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி போட்டு நன்கு வதக்கி அதிலும் சாதத்தைப் போட்டுக் கலந்து கொடுத்தேன்.  அந்த டேஸ்டும் ஓகே ஆனது.  அப்புறமாகக் கொஞ்சம் காய்கள் சேர்த்துக் கொடுத்துப் பார்த்தேன்.  ஓகே. இப்போது எல்லாம் தக்காளி சாதம் செய்வது எப்படி எனில் முதல் முறை

தக்காளி நன்கு பழுத்தது 3 அல்லது நான்கு, வெங்காயம் பெரியது ஒன்றுபொடிப்பொடியாக நறுக்கவும். உப்புச் சேர்த்து  வேக வைத்த  பச்சைப் பட்டாணி  தாளிக்க கடுகு, ஜீரகம், சோம்பு, எண்ணெய் வதக்க, தாளிக்க, மேலே தூவப் பச்சைக் கொத்துமல்லி.  மஞ்சள் பொடி, சாம்பார் பொடி ஒரு டேபிள் ஸ்பூன், கரம் மசாலாப் பொடி ஒரு டீஸ்பூன், உதிர் உதிராக வடித்த சாதம் இரண்டு கிண்ணங்கள்.

சாதம் வேக வைக்கும்போதே பட்டாணியையும் உப்புச் சேர்த்து ஒரு தனித்தட்டில் வேக வைத்துக்கொள்ளவும்.  பின்னர் வாணலி அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, ஜீரகம், சோம்பு தாளிக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.  வெங்காயம் நன்கு வதங்கியதும் வேக வைத்த பட்டாணி, தக்காளியைச் சேர்க்கவும்.  மஞ்சள் தூள், சாம்பார்பொடி சேர்க்கவும்.  நன்கு தக்காளி வேகும் வரை வதக்கவும்.  பின்பு ஏற்கெனவே வடித்து ஆற வைத்திருக்கும் சாதத்தில் சேர்த்துக் கலந்து, ஒரு டீஸ்பூன் கரம் மசாலாப் பொடியையும் போட்டுக்கலக்கவும்.  பின்னர் பச்சைக் கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

இன்னொரு முறை:

மேலே சொன்ன சாமான்கள் தக்காளி 4 எடுத்து அதன் சாறைத் தனியாக வைத்துக்கொள்ளவும்.  ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் இதையும் அரைத்துப் பால் எடுக்கவும்.  பட்டாணி ஊற வைத்தது ஒரு டேபிள் ஸ்பூன், அரிசி(பிரியாணி அரிசியாக இருந்தால் நல்லது) ஒரு கிண்ணம், உப்பு தேவையான அளவு, தாளிக்க சோம்பு, ஏலக்காய்(பெரியது), கிராம்பு ஒன்று, லவங்கப்பட்டை ஒரு துண்டு, தேஜ்பத்தா என்னும் மசாலா இலை ஒன்று. வெங்காயம் பொடியாக நறுக்கியது தனியாக வைக்கவும், பச்சைக்கொத்துமல்லி இதையும் தனியாக வைக்கவும். இஞ்சி, பச்சைமிளகாய் அரைத்த விழுது ஒரு டீஸ்பூன், மிளகாய்ப் பொடி அரை டீஸ்பூன், தனியாப் பொடி ஒரு டீஸ்பூன், மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை. வெண்ணெய் அல்லது நெய் ஒரு டேபிள் ஸ்பூன்


இப்போது கடாய் அல்லது வாணலி அல்லது ப்ரஷர் பானில் வெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றிக் கொண்டு(பிடிக்கலைனா சமையல் எண்ணெய் ஏதேனும்) சோம்பு, ஏலக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, தேஜ்பத்தா போட்டுக் கொண்டு அரிசியை நன்கு களைந்து நீர் இல்லாமல் வடிகட்டி அந்த எண்ணெயில் போட்டு வறுக்கவும்.  மிளகாய்த் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பமி விழுது சேர்த்துக் கொண்டு எண்ணெய்/நெய்/வெண்ணெய் அரிசி முழுதும் கலக்குமாறு வறுக்க வேண்டும்.  பின்னர் பிரஷர் பானில் அல்லது குக்கரில் சாதம் வைப்பது போல் உப்புச் சேர்த்து நீர் விடுவதற்குப் பதிலாகத் தக்காளிச் சாறும், தேங்காய்ப் பாலும் சேர்த்து ஊற வைத்த பட்டாணியையும் சேர்த்து வைக்கவும்.  சாதாரணமாக அரிசி ஒரு கிண்ணத்திற்கு இரண்டு கிண்ணம் நீர் வைப்போம்.  அது போல ஒரு கிண்ணம் தக்காளிச் சாறும் ஒருகிண்ணம் தேங்காய்ப் பாலும் இருந்தால் நல்லது.  அப்படிச் சாறு வகைகள் கொஞ்சமாக இருந்தால் தேவையான நீர் சேர்க்கவும்.  குக்கரில் நீங்கள் சாதாரணமாக சாதம் வடிப்பது போல் பொல பொலவென வைத்து எடுக்கவும்.  குக்கர் பிடிக்கவில்லை எனில் சாறுகளை வாணலியில் வறுத்த அரிசியில் நேரே ஊற்றி வாணலியின் மேலே ஒரு தட்டில் நீர் வைத்து மூடி வேக வைத்தும் எடுக்கலாம். இதற்கு அடிக்கடி கிளறிக் கொடுக்க வேண்டும்.  பின்னர் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைக் கொத்துமல்லி சேர்த்து வெங்காயப் பச்சடியோடு பரிமாறவும். 

Sunday, October 28, 2012

தக்காளி சமையல்கள் பகுதி 3

தக்காளி தோசை:  ஹிஹி, இது நம்மளோட சொந்தக் கண்டு பிடிப்பு.  வித்தியாசமா முயன்று பார்த்து எல்லாரையும் பரிசோதனைக் கூட எலிகளாக நினைப்பது நமக்கு வழக்கம்.  ஆகவே பல வருடங்கள் முன்னாடி,  கணினி எல்லாம் வரதுக்கும் முன்னாலே  புராண காலத்திலே ஒரு சமயம் ராஜஸ்தானிலே இருந்தப்போ கிலோ ஒரு ரூபாய்னு சில பல கிலோ தக்காளிகளை ரங்க்ஸ் வாங்கிட்டு வந்துட்டார்.  பெண்ணுக்கு ஜூஸ் போட்டுக் கொடுனு உபசாரம் வேறே.  சாதாரணமாக் குடிக்கிற பொண்ணு அத்தனை தக்காளிகளை ஒருசேரப் பார்த்த அதிர்ச்சியில் ஜூஸே வேணாம்னு ஓட ஆரம்பிச்சா.  வாங்கிட்டு வந்த தக்காளியை என்ன செய்யறதுனு தெரியாம முழிச்சேன்.  தக்காளி சாதம் பண்ணலாம்.(அப்போல்லாம் ரங்க்ஸுக்குப் பிடிக்காது.)  இப்போப் பண்ணச் சொல்றார். :P :P கேட்டால் நான் மாத்திட்டேனாம் அவரை.  அநியாயமா இல்லை?  சரி, சரி, இந்தக் கதையைத் தனியா ஒரு நாள் வைச்சுப்போம்.  இப்போ தோசைக்குப் போவோமா?

கால்கிலோ பச்சரிசி, இரண்டு டேபிள் ஸ்பூன் துபருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து.  களைந்து கல்லரித்துச் சேர்த்து நனைத்து ஊற வைக்கவும்.

கால் கிலோ தக்காளி, தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன், வெங்காயம் பெரியது பொடியாக நறுக்கியது ஒன்று. கருகப்பிலை, கொத்துமல்லி. பச்சை மிளகாய் நான்கு, இஞ்சி ஒரு துண்டு, மிளகு அரை டீஸ்பூன், ஜீரகம் ஒரு டீஸ்பூன். உப்பு தேவையான அளவு. பெருங்காயம் தேவையானால் கொஞ்சம் போல்.

ஊற வைத்த அரிசி, பருப்பு வகைகளைப் பச்சைமிளகாய், இஞ்சி, மிளகு, ஜீரகம் சேர்த்து உப்புப் போட்டு அரைக்கவும்.  கெட்டியாக இருக்கட்டும்.  கொஞ்சம் கொர கொரவென அரைபட்டதும் தக்காளியைச் சேர்த்து அரைக்கவும். தக்காளி நன்கு அரைபட வேண்டுமெனில் முதலிலேயே போட்டுக்கொள்ளவும்.  பின்னர் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொஞ்சம் அரைத்துக் கொண்டு, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து ஒரே சுற்று சுற்றிவிட்டு எடுத்துவிடவும்.  பின்னர் கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துத் தோசைக்கல்லில் மெல்லிய தோசைகளாக வார்த்துத் தேங்காய், கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்த சட்டினியோடு பரிமாறவும்.

Friday, October 26, 2012

தக்காளி சமையல்கள் பகுதி 2

இப்போ தக்காளிக் காயில் கூட்டு செய்யக் கத்துப்போம்.  இரு விதமாகக் கூட்டுச் செய்யலாம்.  ஒண்ணு பொரிச்ச கூட்டு.  இன்னொண்ணு வறுத்து அரைத்த கூட்டு.


தக்காளிக்காய் கால் கிலோ, பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், குழைய வேக வைக்கவும். தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், ஜீரகம் ஒரு டீஸ்பூன், மஞ்சள் பொடி, உப்பு, சாம்பார் பொடி அல்லது மி.வத்தல் 2. தாளிக்க பெருங்காயம், கருகப்பிலை, கடுகு, உ.பருப்பு, தாளிதம் செய்ய எண்ணெய்.

தக்காளிக்காயை நான்கு துண்டங்களாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.  தேங்காய் துருவலோடு ஜீரகம் ஒரு மி.வத்தல் சேர்த்து அரைக்கவும்.  மி.வத்தல் சேர்க்கவில்லை எனில் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்க்கவும்.  தக்காளிக்காய் வெந்ததும், அரைத்த விழுது, வெந்த பாசிப்பருப்பைச் சேர்க்கவும்.  ஒரு கொதி விடவும்.  கீழே இறக்கி வைத்துக் கடுகு, உபருப்பு, மி.வத்தல் ஒன்று, பெருங்காயம் சேர்த்துத் தாளித்துப் பச்சைக் கொத்துமல்லி போடவும்.


வறுத்து அரைத்த கூட்டு:

தக்காளிக்காய் கால் கிலோ, துவரம்பருப்பு வேக வைத்தது ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு, மஞ்சள் பொடி.

வறுத்து அரைக்க:  மி.வத்தல் இரண்டு, கொத்துமல்லி விதை ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன், உ.பருப்பு ஒரு டீஸ்பூன், மிளகு அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் குவியலாக , பெருங்காயம் .

தாளிக்க:  கடுகு, உ.பருப்பு. கருகப்பிலை, கொத்துமல்லி, தாளிதம் செய்யவும் வறுக்கவும் தேவையான எண்ணெய்.

வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்துக் கொண்டு தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும்.

தக்காளிக்காயை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.  வெந்ததும், வெந்த து.பருப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்க விடவும்.  தேவையானால் ஒரு டீஸ்பூன் வெல்லத்தூள் சேர்க்கலாம். பின்னர் கீழே இறக்கிக் கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை தாளித்துப் பின் பச்சைக் கொத்துமல்லி தூவவும்.

Wednesday, October 24, 2012

சுண்டலோ சுண்டல் 1

எல்லார் வீட்டிலேயும் நவராத்திரி முடிஞ்சிருக்கும்.  சுண்டல்கலெக்‌ஷன் ஆச்சா?  இங்கே சுண்டல் போணியான அளவுக்குக் கலெக்‌ஷன் இல்லை. :)))) போனால் போகுதுனு பார்த்தா சில நாட்கள் எங்க சுண்டல் எங்களுக்கே கிடைக்காமலும் போச்சு.  அதனால் என்ன!  நவராத்திரி இல்லாட்டியும் கூடச் சுண்டல் செய்து சாப்பிடக் கூடாதா என்ன!  சுண்டல் செய்வோம்; சாப்பிடுவோம்.  சரியா!  முதல்லே பயறுச் சுண்டல்.  இதை நான் எப்போச் செய்தாலும் சாப்பிடறவங்க பலமான பாராட்டுக்களைக் கொடுப்பாங்க.  அப்படி ஒண்ணும் புதுசாச் செய்யறதில்லை.  வழக்கமான செய்முறை தான்.  நான்கு பேருக்கான அளவிலேயே சொல்லறேன்.  கால் கிலோ ஊற வைத்தால் இரட்டிப்பாகும்.

பயறு கால் கிலோ எடுத்துக் கொண்டு களைந்து கல் அரிக்கவும்.  பயறு வகைகளே சில சமயம் கல் போல இருக்கும்.  ஊறவே ஊறாது.  ஆகவே ஊற வைக்கும் முன்னரே களைந்து அவற்றை நீக்குதல் நல்லது.  பின்னர் பயறை ஊற வைக்கவும்.  நாளைக்குச் செய்ய இன்று காலையில் ஊற வைத்தல் நல்லது.  ஊற வைத்த பயறை நாலைந்து முறை கழுவிக் களைந்து நீரை மாற்றினால் ஊறிய வாசமும், வழுவழுப்பும் வராது.  இது சுண்டலுக்கு ஊற வைக்கும் அனைத்துப் பருப்பு வகைகளுக்கும் பொருந்தும்.  இரவில் அதிகம் கழுவி நீர் மாற்ற முடியாது என்பதால் காலை எழுந்ததும் நன்கு கழுவி நீரை மாற்றிவிடவும்.  இதனால் ஒரு மாதிரியான வாசம் வருவதை முற்றிலும் தவிர்க்கலாம்.

கால் கிலோ பயறு ஊறவைத்ததை உப்புச் சேர்த்து வாணலியில் வேகவிடவும். பருப்புக் கைகளால் அழுத்தினால் நன்கு வெந்திருக்க வேண்டும்.  வெந்த பருப்பை வடிதட்டில் போட்டு அதிகப்படி நீரை வடிக்கவும்.  பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு, (நல்லெண்ணெயே நன்றாக இருக்கும்) கடுகு, பெருங்காயம், கருகப்பிலை, மி.வத்தல் இரண்டு தாளிக்கவும்.  வெந்த பருப்பைப்போட்டு ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடியையும் சேர்க்கவும்.  நன்கு கிளறவும்.  சாம்பார் பொடி வாசனை போகக் கிளறிக் கீழே இறக்குகையில் தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும்.  எல்லாச் சுண்டலுக்குமே தேங்காய்த் துருவலே நன்றாகச் சேர்ந்து வரும்.  (பச்சைப்பட்டாணிச் சுண்டல் தவிர்த்து) பின்னர் தேவையானால் பச்சைக்கொத்துமல்லி சேர்த்துப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பரிமாறலாம். இந்த வெங்காயம் சேர்ப்பதை ந்வராத்திரி நாட்களில் செய்யும் நிவேதனத்தில் தவிர்க்க வேண்டும்.


பச்சைப் பட்டாணிச் சுண்டல்: பச்சைப்பட்டாணி கால் கிலோ, ப.மிளகாய் இரண்டு, இஞ்சி ஒரு துண்டு, கருகப்பிலை, தேங்காய் கீறியது எனில் ஒரு டேபிள் ஸ்பூன், துருவல் எனில் ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது ஒன்றரை டேபிள் ஸ்பூன், மாங்காய் துருவல் அல்லது கீறியது ஒரு டேபிள் ஸ்பூன், சாம்பார் பொடி இரண்டு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயம், கடுகு, தாளிக்க எண்ணெய், வெங்காயம் விருப்பம் போல்.

பட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்தால் போதும். நன்றாக ஊறிவிடும். காலையில் எழுந்ததும் இரண்டு மூன்று முறை நன்கு கழுவி நீரை மாற்றி வைக்கவும்.  பின்னர் குக்கரில் கொஞ்சம் போல நீரில் உப்புச் சேர்த்துப் பட்டாணியை வேக வைக்கவும்.  அதிக நேரம் வைத்து விட்டால் குழைந்துவிடும்.  ஆகவே இரண்டு விசில் கொடுத்தால் போதுமானது.  பின்னர் இருக்கும் கொஞ்சம் நீரையும் வடித்து வைத்துக்கொள்ளவும்.  வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு தாளித்துப் பெருங்காயம் சேர்த்துக் கொண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கருகப்பிலை சேர்க்கவும்.  பின்னர் வெந்த பட்டாணியைச் சேர்த்துக் கொண்டு, சாம்பார் பொடியையும் சேர்க்கவும்.  கிளறும்போது தேங்காய்க் கீறலையும், மாங்காய்க் கீறலையும் சேர்க்கவும்.  கை விடாமல் ஐந்து நிமிஷம் கிளறவும்.  சாம்பார் பொடி வாசனை போனதும் கீழே இறக்கிப் பச்சைக்கொத்துமல்லி சேர்க்கவும்.  இதற்கு வெங்காயம் சேர்க்கும் நாட்களில் வெங்காயமும் போடலாம்.  கடுகு, பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை சேர்த்ததும் வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து நன்கு வதக்கிப் பின்னர் வெந்த பட்டாணியைச் சேர்க்கவேண்டும்.  அல்லது மேலே சொன்னது போல் பச்சை வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொண்டும் சேர்த்துக் கொள்ளலாம்.

Friday, October 19, 2012

அல்வாக் கொடுத்துட்டேன்.

எல்லாருக்கும் அல்வாக் கொடுக்க மாட்டேன்னு வருத்தம்? :))))) இதோ வந்துட்டேன், இருங்க.  அன்னிக்கு அலுவலகம் போயும் வேலை செய்யவே மனசில்லை.  அதோட ரொம்ப நெருக்கமானவங்க வேறே நாளைக்குத் திருமண ஆண்டு நிறைவு.  இன்னிக்கு ஏன் வந்தேனு கேட்டாங்க.  இதான் சாக்குனு மத்தியானமா வீட்டுக்குக் கிளம்பிட்டேன்.  ரயில்வே வொர்க்கர்ஸுக்குனு ஷிஃப்டுக்கு விடும் லோகல் தான் அந்த நேரத்திலே அப்போல்லாம் வரும்.  இருந்தாலும் பொது ஜனங்களும் ஏறிப்போம்.  அந்த லோகலில் ஏறி அம்பத்தூர் வந்து சேர்ந்தேன்.  வீட்டிலே அம்மாவுக்கு இன்னும் முடியலைனு சொன்னாங்க.  கொஞ்சம் கஷ்டமா இருந்தது.  என்றாலும் அம்மாவை மெல்ல எழுந்து உட்காரச் சொல்லி அல்வா செய்யறதுக்குச் சொல்லிக் கொடுக்கச் சொன்னேன்.  நின்னுண்டு கிளறணும்;  அதோட அரைச்சுப் பால் எடுக்கணுமே;  மாசமா இருக்கியே; மசக்கை வேறே படுத்தல்னு அம்மாவுக்கு யோசனை.

எதைப் பத்தியும் யோசிக்காம அல்வாக் கிளற இறங்கிட்டேன்.  முதல்லே கல்லுரலில் (அப்போல்லாம் சுமீத் மிக்சி கிடையாது. வேறே ஏதோ மிக்சியும்  யாரோ ஒருத்தர் ரெண்டுபேர் கிட்டேத் தான் இருந்தது.  அபூர்வம்!) அரைத்துப் பால் எடுத்து வைத்தேன். பால் கொஞ்ச நேரம் தெளிய விட்டுட்டு அல்வாக் கிளற ஆரம்பித்தேன்.  செய்முறை கீழே.

கோதுமை அல்வா.  நல்ல சம்பா கோதுமை.  இது சீக்கிரம் வேகும் என்பதோடு அல்வாவும் கையில் ஒட்டாமல் கிண்ணென்று வரும்.  மாவு கோதுமையிலும் செய்யலாம்.  நிறையக் காணும்.  இதுவும் கிண்ணென்று வந்தாலும் வேக நேரம் எடுக்கும்.  மற்றபடி ருசியில் மாறுதல் தெரியாது. சம்பா கோதுமை கால் கிலோ முதல் நாளே ஊற வைக்கவும்.  மறுநாள் காலையிலேயே பால் எடுத்து வைத்தல் நல்லது.  கோதுமையை மிக்சியில் அரைத்தால் பிரச்னையாத் தான் இருக்கு.  ஆகவே கையால் அரைத்தாலே நல்லது.  அரைத்துப் பாலை வடிகட்டி வைக்கவும்.  பால் மேலே நீர் தெளிந்து வரும்.  அதைக் கொட்ட வேண்டாம்.  அந்த நீரிலே சர்க்கரைப் பாகு வைத்தால் அல்வா ஒட்டாமல் திரண்டு வரும்.

கால்கிலோ கோதுமைக்கு முக்கால் கிலோ சர்க்கரை போதும்.  எனக்குப் பத்தாது. ஒரு கிலோ போடுவேன். பாகு வைக்கப் பாலில் உள்ள தெளிந்த நீர்.  அதைத் தவிரவும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெந்நீர் போடவும். நிறையவே வெந்நீர் போடவும்.  நன்றாகக் கொதிக்கட்டும்.  ஏலக்காய், முந்திரிப்பருப்பு, அல்வாப் பவுடர், நெய் அரை கிலோ. நெய்யை எல்லாம் கக்கிவிடும்.  என்றாலும் நெய் விடாமல் கிளறவும் முடியாது.


சர்க்கரையை ஒரு வாயகன்ற பாத்திரம் அல்லது வெண்கல உருளியில் போட்டு பாலில் இருந்து எடுத்தத் தெளிந்த நீரை விட்டுப் பாகு வைக்கவும்.  தெளிந்த நீரை விடுவதால் மேலே நுரைத்துக்கொண்டு பொங்கிப் பொங்கி வரும்.  ஆகவே கவனமாகப் பாகு கீழே பொங்கி வழிந்து விடாமல் கிட்டவே இருந்து கிளறணும்.  நல்ல கெட்டிக் கம்பிப் பாகு வைக்கவும்.  கையால் உருட்டினால் மிளகு மாதிரி உருட்ட வர வேண்டும்.  அப்போது தெளிந்த பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொண்டே கிளற வேண்டும்.  நானெல்லாம் உதவிக்கு ஆளே இல்லாததால் ஒரு கையால் விட்டுக் கொண்டே மறு கையால் கிளறிப்பேன்.  இது அவரவர் செளகரியம்.  கிளறும்போதே கட்டி தட்ட ஆரம்பிக்கும்.  ஆகவே அடுப்பு கொஞ்ச நேரம் மெதுவாக எரிந்தால் நல்லது.

கிளறிக் கொண்டே பக்கத்தில் கொதிக்கும் வெந்நீரைக் கரண்டி கரண்டியாக எடுத்து எடுத்து அல்வா கிளறும்போது விட்டுக் கொண்டே கிளறவும்.  வெந்நீரை விட விட பால் உள்ளேயும் வெந்து கொண்டு விரைவில் கெட்டிப் படும்.  கெட்டிப் பட ஆரம்பித்ததும் நெய்யைச் சேர்க்கவும்.  இப்போதும் சிறிது நேரம் விடாமல் வெந்நீரை விடவும். நன்குதிரண்டு கரண்டியால் கிளறும் போது ஒரே பந்து போல் வர ஆரம்பிக்கும்.  நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விட வேண்டும்.  பந்து போல் வர ஆரம்பித்ததும் உடனே இறக்கி விட வேண்டாம்.  கிளறிக் கொண்டே இருக்கவேண்டும்.  சிறிது நேரத்தில் சுற்றிலும் நெய் கசிய ஆரம்பிக்கும்.  கசியும் நெய்யைத் தனியாக எடுக்கலாம்.  எடுத்து வேறொரு பாத்திரத்தில் விட்டு வைக்கவும்.  அரை கிலோ நெய்யில் குறைந்தது 200 நெய்யாவது இப்படியே வந்துவிடும்.  இப்போது கிளறினால் பந்து அப்படியே உருளும்.  அதிலிருந்து ஒரு சின்ன துண்டு எடுத்தால் கையில் ஒட்டாமல் வருவதோடு தாம்பாளத்தில் போட்டுப் பார்த்தால், "ணங்" என்று சப்தமும் வரும்.  இதுவே சரியான பதம்.  இப்போது ஏலப்பொடி சேர்த்துக் கிளறவும். வறுத்த முந்திரிப்பருப்பைத் தாம்பாளத்தில் கொட்டியதும் மேலே தூவி அலங்கரிக்கவும்.  அல்வாத் துண்டுகள் ட்ரான்ஸ்பரன்டாக இருந்தால் நீங்க அல்வா எக்ஸ்பெர்ட்.

Thursday, October 18, 2012

அல்வாக் கொடுக்கிறேன், வாங்க!

ஒரு வழியா மீனாக்ஷி கேட்ட கோதுமை அல்வாவைப் பத்தி எழுதப் போறேன். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன ஃப்ளாஷ் பாக்.  இந்த கோதுமை அல்வா செய்யறதிலே எங்க அம்மாவைப் போல் எக்ஸ்பெர்ட் (ஹிஹி, மீனாக்ஷி மன்னிக்க) நான் பார்த்ததில்லை.  பிறந்த வீட்டில் இருந்த வரைக்கும் சமையல் செய்கையில் கூடமாட ஒத்தாசை செய்தது உண்டு என்பதால் அல்வாவுக்கு கோதுமையை ஊற வைத்து அரைத்துக் கொடுத்ததும் உண்டு என்பதாலும் கல்யாணத்துக்கு முன்னாடியே ஓரளவுக்கு அல்வா கொடுக்க வரும்.  என்றாலும் தனியாகச் செய்தது இல்லை.

எங்க கல்யாணம் ஆகி முதல் வருஷ நிறைவு நாள்.  அப்போ நான் வேலைக்குப் போயிட்டு இருந்தேன்.  எங்க பொண்ணு வயித்திலே நான்கு மாசம்.  அம்மா என்னோட மசக்கைக்காக வந்திருந்தா.  அப்போத்தான் திருமண நாள் வந்தது. நாங்க இரண்டு பேருமே என் அம்மாவின் அல்வாவுக்குத் தீவிர ரசிகர்கள் என்பதால் அம்மாவிடம் கல்யாண ஆண்டு நிறைவுக்கு அல்வா வேணும்னு நான் கேட்க, என் கணவரும் ஆவலுடன் பதிலை எதிர்பார்க்க அம்மாவும் சரினு சொல்ல அல்வாவுக்கு என சம்பா கோதுமை வாங்கி ஊற வைச்சாச்சு.  மறுநாள் போக மறுநாள் எங்க கல்யாண நாள்.  காலம்பர வீட்டிலே விருந்து சமைச்சுச் சாப்பிட்டுவிட்டு (அதுக்குத் தனி மெனு, அவியல் அதிலே ஒரு ஐடம்). நாங்க ரெண்டு பேரும் பீச்சுக்குப் போயிட்டு அங்கே சிறிது நேரம் கழித்துவிட்டு மவுன்ட் ரோட் தேவி பாரடைஸில் அப்போ பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த ஹிந்திப் படம் பார்த்துட்டு சென்னை சென்ட்ரல் அருகே இருந்த ஹோட்டல் பிக்னிக்கின் ரூஃப் கார்டனில் ராத்திரி சாப்பிட ஐடியா.  திட்டம் என்னமோ பிரமாதமாக இருந்தது.  மறுநாள் காலம்பர எழுந்து அவசரம் அவசரமாக அலுவலகம் கிளம்பத் தயாராயிட்டிருந்தேன்.

இதிலே பத்துத் தரம் வாந்தி வேறே. அம்மாவோட முகம் என்னமோ காலம்பர இருந்தே சரியில்லைனு தோணித்து.  என்னனு கேட்க முடியாமல் வாந்தி எனக்கு.  மசக்கை வாந்தினு பேரே தவிர வாந்தி எடுத்து எடுத்து ரத்தம் வர ஆரம்பிச்சுடும். :))) அப்போ திடீர்னு சமைச்சுட்டு இருந்த அம்மா அப்படியே கீழே படுத்தார்.  என்ன ஆச்சு?  பதட்டத்தோடு போய்க் கேட்டால் அம்மாவுக்கு லூஸ் மோஷன் ராத்திரியில் இருந்தே.  எங்களைத் தொந்திரவு செய்ய வேண்டாம்னு சொல்லலையாம்.  சாப்பாடில் ஏதோ ஒத்துக்கலை போல.  திகைத்த நான் அவசரம் அவசரமாக மிச்சமிருந்த சமையலைக் கவனிச்சு அம்மாவை எதிரே இருக்கும் என்னோட உறவினரோட ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஏற்பாடு செய்துட்டு ஆரோரூட் கஞ்சி போட்டு வைச்சுட்டு, என்னோட அலுவலகம் கிளம்பினேன்.

கோதுமை ஊறிக் கொண்டிருந்தது. அது நினைவில் இல்லையா என்ன?  எல்லாம் இருந்தது.  என்ன செய்யலாம்னு மண்டைக்குடைச்சல்.  அதுக்குள்ளே நம்ம ரங்க்ஸ் உத்தரவே போட்டுட்டார்.  நீயே அல்வாக் கிளறிடு.
என்னது நானா?  நான் திகைக்க, ஏன் எல்லாம் வரும் பண்ணு! சர்வாதிகாரி ஆர்டர் போட்டாச்சு.  நான் அம்பத்தூரில் இருந்து தண்டையார்ப்பேட்டையில் இருக்கும் என்னோட அலுவலகம் கிளம்பிச் சென்றேன். 

Tuesday, October 16, 2012

தக்காளி சமையல்கள்!

இப்போத் தக்காளி சீசன் ஆரம்பிச்சிருக்கு.  தக்காளி இங்கே பத்து ரூபாய் விற்கிறது.  ஆகவே கொஞ்சம் போலத் தொக்கு செய்து வைத்துக்கொண்டால் நல்லதுனு ஒரு கிலோ வாங்கினோம்.  ஹிஹிஹி, மீனாக்ஷி, கோவிச்சுக்காதீங்க. அல்வாவுக்கே அல்வா கொடுக்கலை.  இந்த வாரத்துக்குள்ளாக அல்வா கண்டிப்பாய் வரும்.

தக்காளி ஒரு கிலோ, மிளகாய் வற்றல் 50 கிராம்.(காரம் தேவை இல்லை எனில் குறைத்துக்கொள்ளவும்.)  எண்ணிக்கையில் சொன்னால் சரியாக வராது என்பதாலஅளவு சொல்லி இருக்கேன்.  உங்கள் தேவைக்கேற்பக் கூட்டியோ குறைத்தோ போட்டுக்கொள்ளலாம்.  நல்லெண்ணெய் தான் இதற்குச் சரியாக இருக்கும்.  ஆகவே நல்லெண்ணெய் நூறு கிராம் தேவை.  உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம்,  வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன் வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்தது.  வெல்லம் தூளாக இரண்டு டேபிள் ஸ்பூன்.  கடுகு ஒரு டீஸ்பூன் தாளிக்க

நான் ஸ்டிக் கடாய் அல்லது இரும்புச் சட்டியில் ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு பெருங்காயம் பொரித்துக்கொள்ளவும்.  தனியாக வைத்துக்கொண்டு, மிளகாய் வற்றலைச் சிவப்பாக வறுத்து எடுக்கவும்.  பின்னர் தக்காளியை நன்கு அலம்பி நான்காக நறுக்கி அந்த மிச்ச எண்ணெயில் போட்டு வதக்கவும்.  தோல் பிரிந்து வரும் வரை சுருள வதக்கிய பின்னர் ஆற விடவும்.  ஆறியதும் மிக்சியின் பெரிய ஜாரில் போட்டு மி.வத்தல், தக்காளி வதக்கல், தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.

இப்போது அதே கடாயைக் கழுவிட்டு அல்லது வேறொரு கடாயில் மிச்சம் இருக்கும் எண்ணெயை ஊற்றவும்.  கடுகு போட்டுத் தாளிக்கவும்.  மஞ்சள் தூள் சேர்க்கவும்.  அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்க்கவும்.  கொஞ்சம் கொட கொடவென்றே இருக்கும்.  பயப்படாமல் விழுதை மேலே தெளித்துக்கொள்ளாமல் சேர்க்கவும்.  நிதானமாகத் தீயை வைத்து நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும்.  மெல்ல மெல்ல கெட்டிப்பட ஆரம்பிக்கும்.  நன்கு கெட்டியாகி எண்ணெய் பிரியும் சமயம் வெல்லத்தூளைச் சேர்க்கவும்.  சிறிது நேரம் கிளறியதும் அல்வா பதத்துக்கு உருட்ட வரும்.  அப்போது கீழே இறக்கி வெந்தயப் பொடியைச் சேர்த்து ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும்.

இதை தோசை, சப்பாத்தி, உப்புமா போன்றவற்றுக்குத் தொட்டுக்கொள்ளப் பயன்படுத்தலாம்.  மேலும் சாதத்தை நன்கு உதிராக வடித்து ஆற வைத்து இந்தத் தொக்கைப் போட்டுக் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டுக் கிளறி , மேலே வறுத்த கொத்துமல்லிப் பொடி ஒரு டீஸ்பூன் தூவிக் கொண்டு, கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை தாளித்தால் ஒரு நாள் வித்தியாசமான ஒரு சாதமும் கிடைக்கும்.  காரட் தயிர்ப்பச்சடி இதற்கு நன்றாக இருக்கும். 

Sunday, October 14, 2012

கடுகு, பாவக்காய்க் குழம்பு.

மீனாக்ஷி அல்வா கொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்காங்க.  அதையும் எழுதணும்.  அது தித்திப்பு.  அதுக்கு முன்னாடி ஒரு கசப்பு. :))) பாகற்காயில் செய்யும் இதை எங்க மாமியார் வீட்டில் கடுகு, பாவக்காய்க் குழம்புனு சொல்றாங்க.  ஆனால் ஊறுகாய்த் தயாரிப்பாளர்கள் இதைப் பாவக்காய்த் தொக்கு எனப் பெயரிட்டு விற்கின்றனர்.  முதல்லே நானும் என்னமோ, ஏதோ னு நினைச்சேன்.  அப்புறமாக் கொஞ்சம் போல உறவினர் வீட்டில் வாங்கி இருந்ததைச் சாப்பிட்டுப் பார்த்தால் ஹிஹி, பாவக்காய் அல்வா. :))) இப்போ செய்முறையைப் பார்க்கலாம்.

நல்ல பாகற்காய் கால் கிலோ,
பாகல்காயைப் பொடியாக நறுக்கிக் கொஞ்சம் தயிர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும்.  100 கிராம் புளி, கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.  அல்லது புளியை வறுத்து அரைக்கும் பொருட்களோடு சேர்த்து அரைத்துக்கொண்டாலும் நல்லது.  உப்பு தேவையான அளவு,  வெல்லம் தூளாக ஒரு டேபிள் ஸ்பூன்.

வறுத்து அரைக்க:

மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் அல்லது விரலி மஞ்சள் ஒரு அங்குலத் துண்டு. மிளகாய் வற்றல் பத்து முதல் பனிரண்டு வரை. ஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை, மிளகு இரண்டு டீஸ்பூன்(மிளகு கூடவே இருக்கலாம்.) உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன், கடலைப்பருப்பு(தேவையானால்) இரண்டு டீஸ்பூன், பெருங்காயம், பச்சைக்கடுகு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து மிக்சி ஜாரில் போட்டுப் பொடி செய்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

தாளிக்க: சீரகம், கடுகு, நல்லெண்ணெய், கருகப்பிலை.


வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நல்லெண்ணெயில் நன்கு வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.  கடாய் அல்லது கல்சட்டி(என்னோட விருப்பம் கல்சட்டியே) யில் நல்லெண்ணெயை ஊற்றிக் கொண்டு கடுகு, சீரகம், கருகப்பிலை தாளிக்கவும்.  நறுக்கி ஊற வைத்த பாகற்காய்த் துண்டங்களை எண்ணெயில் போட்டு நன்கு வதக்கவும்.  நன்கு சுருள வதங்கியவுடன், அரைத்து வைத்துள்ள விழுதைக் கொஞ்சம் போல நீர் சேர்த்து பாகற்காயில் கொட்டிக் கலக்கவும்.  உப்புச் சேர்க்கையில் புளிக்கு உள்ள உப்பை மட்டும் சேர்க்கவும்.  பாகற்காயில் ஏற்கெனவே உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கிறோம்.   நீர் அதிகமானாலும் பரவாயில்லை.  கொதித்துக் கெட்டியாகும்போது சேர்ந்து கொள்ளும்.  நன்கு சேர்ந்து நல்ல கெட்டியாக வரும்போது வெல்லத் தூளையும் பச்சைக்கடுகுப் பொடியையும் சேர்க்கவும்.  நன்கு கிளறவும்.  நன்கு கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கையில் கீழே இறக்கி ஆறினதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும்.  இது இரண்டு, மூன்று மாதங்கள் ஆனாலும் கெடாது.  படம் நாளை எடுத்துப் போடுகிறேன்.

Thursday, September 13, 2012

மிளகு குழம்பும், பருப்புத் துவையலும் சாப்பிடுங்க!

மிளகு குழம்பு செய்யலாமா இப்போ? இன்னிக்கு ஶ்ரீரங்கம் கோயில் அன்னதானத்திலே 16 விதமான சாப்பாடு வகைகள் போட்டிருந்தாங்க.  அதைப் பார்த்ததுமே/கேட்டதுமே மிளகு குழம்பே இன்னிக்குப் போதும்னு தோணித்து.  மிளகு குழம்பு ஏற்கெனவே பண்ணி வைச்சிருந்தேன். குளிர்சாதனப்பெட்டியிலே இருந்தது.  அதைக் காலம்பரவே வெளியே எடுத்து மறுபடியும் நல்லாக் கொதிக்க விட்டேன்.  கூடவே தொட்டுக்கப் பருப்புத் துவையல்.  இரண்டையும் பார்க்கலாம்.


முதல்லே மிளகு குழம்பு.  தேவையான பொருட்கள்:  ஒரு பெரிய எலுமிச்சை அளவுக்குப் புளியை நீரில் ஊறவைத்துக் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.  இதற்கு வறுத்து அரைக்க

மிளகாய் வற்றல் ஆறு அல்லது எட்டு(நான் மிளகே அதிகம் சேர்ப்பேன்;  அதோடு மிளகுக் காரத்தைத் தணிக்க என சீரகமோ, கொ.மல்லியோ சேர்ப்பதில்லை.  கொஞ்சம் மிளகு காரம் நாக்கில் தெரியணும்) பெருங்காயம், மிளகு ஒரு டேபிள் ஸ்பூன், இவ்வளவு காரம் வேண்டாம் என்பவர்கள் இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம்.  ஒரு டேபிள் ஸ்பூன் உ.பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் து.பருப்பு, கருகப்பிலை ஒரு டேபிள் ஸ்பூன்.  எல்லாப் பொருட்களையும் நல்லெண்ணெயில் நன்கு வறுத்துக்கொள்ளவும்  ஆற வைக்கவும்.  பின்னர் நன்கு நைசாக அரைத்துக்கொண்டு புளிக்கரைசலில் கலந்து கொள்ளவும்.

தாளிக்க: கடுகு, நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, தேவையான உப்பு குழம்பில் சேர்க்க.

கல்சட்டி அல்லது உருளியில் நல்லெண்ணெயைக் காய வைத்துக் கடுகு போடவும்.  வெடித்ததும், மஞ்சள் பொடி சேர்த்துவிட்டுக் கரைத்து வைத்துள்ள புளிக்கலவையை மெதுவாக ஊற்றவும்.  தேவையான உப்புச் சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும்.  குழம்பு கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கையில் கீழே இறக்கவும்.  சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் குழம்பைக் கலந்து சாப்பிடலாம்.  நன்கு கொதித்த குழம்பு ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது.

பருப்புத் துவையல்:  மி.வத்தல் 2 அல்லது மூன்று, மிளகு ஒரு டீஸ்பூன், பெருங்காயம், புளி ஒரு சின்ன சுண்டைக்காய் அளவு, உப்பு தேவையான அளவு, தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், துவரம்பருப்பு 2 டேபிள் ஸ்பூன்/அல்லது கடலைப்பருப்பு/அல்லது இரு பருப்பும் கலந்து அவரவர் விருப்பம் போல். நான் துவரம்பருப்பு மட்டுமே போடுவேன்.  வறுக்க நல்லெண்ணெய்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மி.வத்தல், பெருங்காயம், து.பருப்பு, மிளகு போன்றவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுக்கவும்.  பின்னர் கடைசியில் தேங்காய்த் துருவலையும் போட்டு வறுக்கவும்.  உப்பு, புளி சேர்த்துக் கொண்டு நைசாக மிக்சியில் அரைக்கவும். மிளகு குழம்போடு தொட்டுக்கொள்ள சைட் டிஷாக இது அருமையாக இருக்கும்.   ஜீரகம், மிளகு அரைத்துவிட்டுச் செய்யும் ரசத்தோடும் பருப்புத் துவையல் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். வாரம் ஒரு நாள் இப்படிச் சாப்பிடலாம்.  வயிறு லேசாகும்.

மைசூர்ப்பாகு, புளியோதரை எல்லாம் சாப்பிட்டீங்க இல்லை?  இப்போப்பத்தியம்! :)))))

Monday, September 10, 2012

மைசூர்ப் பாகு சாப்பிடறீங்களா?

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேல் ஆச்சு, மைசூர்ப்பாகு செய்தோ, சாப்பிட்டோ. ரங்க்ஸுக்கு ஷுகர் னு தெரிஞ்சதில் இருந்தே யாரானும் கொண்டு வர ஸ்வீட்டைக் கூடச் சாப்பிட மனசு வரதில்லை. வீட்டிலும் யாரானும் வந்தால் கேசரி மட்டும் செய்துடறேன்.  மற்ற ஸ்வீட்னா செய்ய யோசனையா இருக்கும்.  இரண்டு நாளாத் திடீர்னு மைசூர்ப்பாகு மேலே புத்தி போயிருக்கு.  மரபு விக்கிக்கு எழுதிப் போட்டதை இங்கே காப்பி, பேஸ்ட் பண்ணறேன்.



முதன் முதலில் மைசூர் அரண்மனைச் சமையல் அறையிலேயே செய்யப் பட்டுள்ளது. மசூர் பருப்பு என அழைக்கப் படும் சிவந்த நிறப் பருப்பை வறுத்து, ஊற வைத்து, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்தே செய்யப் பட்டுள்ளது. கிட்டத் தட்ட முந்நூறு அல்லது அதற்கும் குறைந்த ஆண்டுகளிலேயே கண்டுபிடிக்கப் பட்டது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மசூர் பருப்பை இயந்திரத்தில் அரைத்துச் செய்யப் பட்டது. அதன் பின்னர் மேலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டதும் மசூர் பருப்பு மாவு மிஷினில் அரைக்கப் பட்டுச் செய்யப் பட்டது. மசூர் பருப்பிலிருந்து செய்ததாலேயே இதன் பெயர் மசூர் பாகு என்று அழைக்கப் பட்டு காலப் போக்கில் மைசூர் பாகு என மாறியதாய்த் தெரிகிறது. ஒரு விதத்தில் இதன் மூலம் மைசூர் அரண்மனை என்பதாலும் இந்தப் பெயர் பொருந்தி விட்டது. கடலைப்பருப்பில் செய்வது என்ற கால கட்டத்திற்கு எப்போது மாறியது எனப் புரியவில்லை. அந்த ஆராய்ச்சியும் செய்துடலாம்.

தற்சமயம் மைசூர் பாகு கடலைப்பருப்பை மிஷினில் மாவாக அரைத்துச் செய்யப் படுகிறது. மைசூர் பாகுக்குத் தேவையான பொருட்கள்:
  • கடலை மாவு ஒரு கிண்ணம்
  • மூன்றுகிண்ணம் சர்க்கரை
  • மூன்று கிண்ணம் நல்ல நெய்

அடி கனமான வாணலி அல்லது உருளி. பாகு வைக்க அரை கிண்ணம் நீர்.

முதலில் வாணலியில் ஒரு கிண்ணம் நெய்யை ஊற்றி கடலை மாவை அதில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும். கடலை மாவை காய்ந்த நெய்யில் ஊற்றினால் மேலே பொங்கி வரும். அதுவே சரியான பதம்.

பின்னர் அந்த மாவை வேறு தட்டில் அல்லது பாத்திரத்தில் மாற்றிவிட்டு அதே வாணலியில் மூன்று கிண்ணம் சர்க்கரையோடு அரை கிண்ணம் நீர் சேர்த்து பாகு வைக்கவும். பாகு நன்றாகக் காய்ந்துக் கையால் உருட்டினால் மிளகு பதம் வரும்போது வறுத்து வைத்துள்ள மாவைக் கொட்டிக் கைவிடாமல் கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாய் நெய் சேர்க்கவேண்டும். எவ்வளவு நெய்யைக் கொட்டினாலும் அத்தனையையும் உள் வாங்கிக்கும். கோதுமை அல்வா போல் நெய்யைக் கக்காது. மைசூர் பாகு கெட்டிப் பட்டு உருளி அல்லது வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது நல்ல சதுரமான தாம்பாளத்தில் கொட்டிவிட்டுச் சூடாக இருக்கும்போதே வில்லைகள் போடவேண்டும். வில்லைகள் போடும் முன்னர் மேலே கொஞ்சம் சர்க்கரையைத் தூவலாம்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மை.பா என்றால் ஒரு கிண்ணம் கண்டென்ஸ்ட் பால் அல்லது இரண்டுலிட்டர் பாலைக் குறுக்கி அந்தக் குறுக்கப் பட்ட பால் ஒரு கிண்ணம். கடலைமாவு சேர்க்கும் முன்னர் சேர்க்கவேண்டும். பின்னர் மைசூர்பாகு நன்கு கெட்டிப் பட்டு சுருண்டு வரப் போகும் சமயம் தீயைக் குறைத்துவிட்டு/ அல்லது தீயிலிருந்து கீழே இறக்கிக் கைவிடாமல் கிளறவேண்டும். பின்னர் தட்டில் கொட்டி வில்லைகள் போடலாம். இம்முறையில் மிகவும் மிருதுவான மைசூர்பாகுகள் கிடைக்கும். பால் சேர்த்தால் பிடிக்காதவர்கள் கடலைமாவு மட்டுமே போட்டுச் சுருண்டு வரும் சமயம் கீழே இறக்கித் தீயில் வைக்காமலேயே கீழேயே கிளறவேண்டும். அந்தச் சூட்டிலேயே சுருண்டு வரும் பதம் வந்ததும் தட்டில் கொட்டி வில்லைகள் போடலாம். இம்முறையிலும் மைசூர் பாகு மிருதுவாய்க் கிடைக்கும்.

Friday, September 7, 2012

புளியோதரை சாப்பிட வாங்க!

வீடுகளில் செய்யும் புளிக்காய்ச்சல், இதை இரு முறைகளில் செய்யலாம்.  ஒன்று மிளகாய் மட்டுமே தாளித்துச் செய்வது. இன்னொன்று தாளிப்பில் மிளகாயைக் குறைத்துக் கொண்டு, வறுத்துப்பொடி செய்து சேர்ப்பது.  முதலில் மிளகாய் தாளிப்புப் புளிக்காய்ச்சல்.

தேவையான பொருட்கள்:  புளி 200 கிராம், மி.வத்தல் காரம் உள்ளதானால் 10 முதல் 12 வரை. வெந்தயம் ஒரு டீஸ்பூன் வறுத்துப் பொடி செய்தது.  உப்பு தேவையான அளவு, மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன். நல்லெண்ணெய், ஒரு சின்னக் கிண்ணம் அல்லது குறைந்த பக்ஷமாக நூறு எண்ணெய். தாளிக்கக் கடுகு, கடலைப்பருப்பு, கொண்டைக்கடலை என்றால் முன்னாடியே ஊற வைத்துக்கொள்ளவும்.  வேர்க்கடலை எனில் அப்படியே தாளிப்பில் போடலாம்.  கருகப்பிலை. பெருங்காயம்.

புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.  உருளி அல்லது கல்சட்டி அல்லது அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றிக் காய வைக்கவும்.  காய்ந்ததும் முதலில் மிளகாய் வற்றலை இரண்டாகக் கிள்ளிப் போடவும். மிளகாய் நன்கு கறுப்பாக ஆக வேண்டும்.  அதன் பின்னர் கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை அல்லது ஊறிய கொண்டைக்கடலையைப் போடவும்.  அனைத்தும் நன்கு வறுபட்டதும், கருகப்பிலை சேர்த்துக் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றவும்.  நன்கு  கொதிக்க வேண்டும்.  கொதித்து எண்ணெய் பிரிந்து வருகையில் வறுத்த வெந்தயப் பொடியைச் சேர்க்கவும்.  பின் கீழே இறக்கவும்.

இதை நேரிடையாகச் சாதத்தில் போட்டுக் கலந்து விடலாம்.  தனியாக சாதத்தில் தாளிப்பு தேவை இல்லை.

வறுத்துப் பொடி செய்து போடும் முறை: மேலே சொன்ன அளவுக்கு எல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  தாளிப்பில் இருந்து எல்லாவற்றுக்கும் அதே சாமான் தான், கூடுதலாகச் செய்ய வேண்டியது.  ஒரு டீஸ்பூன் எள், ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தயம் ஆகியவை வெறும் வாணலியில் வறுத்துப்பொடி செய்து கொள்ளவும்.  இதைத் தவிர தனியா ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் வறுக்கவேண்டும்.  அதோடு பெருங்காயத்தையும் வறுத்துக் கொண்டு மிளகாய் வற்றலில் நாலைந்தை மட்டும் தாளிப்புக்கு வைத்துக் கொண்டு மிச்சத்தை எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். மிளகாய், தனியாவையும் பெருங்காயத்தோடு சேர்த்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.  தேவைப் பட்டால் வெல்லத்தூள்  ஒரு டேபிள் ஸ்பூன். வெல்லம் பிடிக்காதவர்கள் போட வேண்டாம்.

புளியைக் கரைத்துக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வைக்கவும்.  பின்னர் கடாயில் மேலே சொன்னபடி  முதலில் மிளகாயைத் தாளிக்க வேண்டும்.  இம்முறையில் தாளித்த மிளகாய் நாலைந்து தான் இருக்கும்.  அவை கறுப்பாக ஆனபின்னர் மற்றவற்றைத் தாளித்துப்புளிக்கரைசலை ஊற்றவும்.  கொதிக்க வேண்டும்.  எண்ணெய் பிரிந்து வருகையில் வறுத்த பொடிகளைச் சேர்க்கவும்.  ஒரு கொதி விட்டதும் கீழே இறக்கவும்.  வெல்லம் சேர்ப்பதானால் பொடிகளைச் சேர்க்கும்போதே போட்டு விடலாம்.

அடுத்துப் பச்சைப் புளியஞ்சாதம் என்னும் திடீர்த் தயாரிப்பு.  வீட்டுக்குத் திடீரென யாரோ வந்துடறாங்க.  சாம்பார் , ரசம் ஒண்ணும் வேண்டாம்னு சொல்றாங்க.  புளியோதரைனா சாப்பிடறதாச் சொல்றாங்க. என்ன பண்ணலாம்னு யோசிப்போம் இல்லையா?

ஆழாக்கு அரிசியைக் களைந்து கொள்ளவும்.  தேவையான தண்ணீர் இரண்டு கிண்ணம் எனில் ஒரு கிண்ணம் தண்ணீர் மட்டும் சேர்த்துக் குக்கரிலோ அல்லது வேறு சாதம் வடிக்கும் முறையிலோ வேக வைக்கவும்.  அரை வேக்காடு வெந்திருக்கும்.  இப்போது எலுமிச்சை அளவுப் புளியை எடுத்துக் கரைத்து ஒரு கிண்ணம் வரும்படி எடுத்துக்கொள்ளவும்.  அரை வேக்காடு வெந்திருக்கும் சாதத்தில் இந்தப்புளிக்கரைசலை ஊற்றி, ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்க்கவும்.  அரிசியை நன்கு வேக விட வேண்டும்.  சாதம் உதிர் உதிராக ஆனதும் பாத்திரத்தில் இருந்து எடுத்து ஒரு தாம்பாளத்தில் பரத்திக் கொள்ளவும்.

 இரண்டு டீஸ்பூன் வறுத்த மிளகாய், கொத்துமல்லிப்பொடியுடன், கடுகு, வெந்தயம், எள் வறுத்த பொடியையும் ஒரு டீஸ்பூன் போட்டுக் கலக்கவும்.  பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் வைத்துக் கொண்டு கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, ஒன்றிரண்டு மிளகாய்(முதலில் போட்டுக் கறுப்பாக்கியது), கருகப்பிலை, தேவைப்பட்டால் மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்துத் தாளிதம் செய்து சாதத்தில் கலக்கவும்.  இது ஊற ஊற நன்றாக இருக்கும். புளிக்காய்ச்சலே செய்யாமல் செய்யும் விதம் இது.  திடீரென வீட்டில் சமாராதனை, வேறு நிவேதனம் கோயில்களில் கேட்டால் இம்முறையில் வெண்கலப்பானை அல்லது உருளி அல்லது ரைஸ் குக்கர் போன்றவற்றில் வைத்துச் செய்து விடலாம்.

மீனாக்ஷிக்காகப் புளிக்காய்ச்சல்! பெருமாள் கோயில் புளிக்காய்ச்சல்

முதல்லே கோயில் புளியோதரைக்குப் புளிக்காய்ச்சல் செய்யறதைப் பத்திப் பார்ப்போம்.  கோயில்னு இல்லை;  பொதுவாகவே நிவேதனம் செய்யும்  உணவுகளில் பாரம்பரியமாக வரும் மிளகுக் காரமே சேர்க்கப்படும்.  உதாரணமாக ஆஞ்சநேயருக்கான வடைமாலைக்கு உள்ள வடை, புளியோதரை போன்றவற்றில் மிளகாய் வத்தல், பச்சை மிளகாய் சேர்ப்பதில்லை.  தயிர்சாதம் என்றால் கூடப் பெருங்காயம் கூடப் போட மாட்டார்கள்.  பாலில் குழைய வேக வைத்து வெண்ணெய் சேர்த்து, சுக்குத் தட்டிப் போட்டு அல்லது இஞ்சி, கருகப்பிலை போட்டுக் கடுகு மட்டும் தாளித்திருப்பார்கள்.  ஆகவே இந்தக் கோயில் புளிக்காய்ச்சலுக்கும் மி.வத்தல் எல்லாம் வேண்டாம்.

நூறு கிராம் புளி, தேவையான உப்பு, மஞ்சள் பொடி, நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்.  மிளகு இரண்டு டீஸ்பூன் வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.  ஒரு டீஸ்பூன் வெந்தயம் வெறும் வாணலியில் வறுத்துத் தனியாகப் பொடி செய்து கொள்ளவும்.

தாளிக்க:  கடுகு, கடலைப்பருப்பு/கொண்டைக்கடலை(கறுப்பு)/வேர்க்கடலை, இவை ஏதானும் ஒன்று அல்லது கொஞ்சம் போல் கடலைப்பருப்புப் போட்டுவிட்டு, வேர்க்கடலை தோல் நீக்கி வறுத்துச் சேர்க்கலாம். கருகப்பிலை இரண்டு ஆர்க்கு.  தாளிக்க நல்லெண்ணெய்,  சாதத்தில் கலக்க ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்.

இப்போது புளியை நன்கு கரைத்துக் கொண்டு கெட்டியாக எடுத்துக்கொள்ளவும்.  உருளி அல்லது கல்சட்டி இருந்தால் நல்லது.  இல்லை எனில் நீங்கள் சமைக்கும் ஏதேனும் ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெயை ஊற்றவும்.  நல்லெண்ணெய் காய்ந்ததும்  மஞ்சள் தூளைச் சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றவும்.  உப்புச் சேர்க்கவும்.  புளிக்கரைசல் நன்கு கொதித்துக் கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.  பேஸ்ட் மாதிரி ஆனதும் கீழே இறக்கி வைக்கவும்.  இதை முதல் நாளே பண்ணி வைத்துக்கொள்ளலாம்.

மறு நாள் ஒரு ஆழாக்கு அல்லது 200கிராம் அரிசியைப் பொலபொலவென சாதம் ஆக்கிக் கொள்ளவும்.  சாதத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றிக் கலக்கவும். அரை  டீஸ்பூன் உப்புச் சேர்க்கவும்.  புளிப் பேஸ்டையும் சாதத்தில் தேவையான அளவு போடவும்.  இந்த அளவுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் பேஸ்ட் சரியாக இருக்கும்.  நன்கு கலந்ததும் மிளகுபொடி, வெந்தயப் பொடி சேர்க்கவும்.

இப்போது கடாயில் நல்லெண்ணெய் வைத்துக் காய்ந்ததும், கடுகு, க.பருப்பு, வேர்க்கடலை அல்லது முந்திரிப்பருப்புப் போட்டு வறுக்கவும்.  இறக்குகையில் கருகப்பிலையைச் சேர்க்கவும்.  தாளிதத்தைத் தயாராய் இருக்கும் சாதத்தில் கொட்டிக் கலக்கவும்.  அரை மணி நேரம் நன்றாய் ஊறியதும் சுவாமிக்கு நிவேதனம் செய்து விட்டுப் பரிமாறவும்.  பெருமாள் கோயில் புளியோதரை தயார்.

அடுத்தது புளிக்காய்ச்சல் வீடுகளில் தயாரிக்கும் இரு முறைகளும், பச்சைப் புளியஞ்சாதம் தயாரிப்பு முறையும்.  நாளை வரை காத்திருக்கவும்.

Thursday, September 6, 2012

சேவை செய்யறேன், வாங்க, சாப்பிடலாம்!

சேவை, இடியாப்பம் எல்லாம் ஒண்ணுதான்னு நினைக்கிறேன்.  கிட்டத்தட்ட 2 வருஷங்களுக்கு மேல் ஆச்சு சேவை செய்து.  இங்கே வந்து கொழுக்கட்டை மாவு மிஞ்சினால் அதிலே செய்து வைப்பதோடு சரி.  சேவைக்குனு அரைச்சுச் செய்யவே இல்லை.  ரங்க்ஸும் ரொம்ப நாளாக் கேட்டுட்டு இருந்தார். அவருக்கு சேவையே பிடிக்காது.  கேட்கிறாரேனு கொஞ்சம் ஆச்சரியமாத் தான் இருந்தது.  இன்னிக்கு என்னமோ தோசைக்கு மாவு இருந்தும் சேவை செய்யணும்னு தோணித்து.

தேவையான பொருட்கள்:  புழுங்கலரிசி ஒரு கிண்ணம் அல்லது 200கிராம், பச்சரிசி சம அளவு. இரண்டையும் நன்கு களைந்து குறைந்தது மூன்று, நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.  மிக்சியில் அரைப்பதை விட கிரைண்டர் தான் சரியாக இருக்கும்.  கிரைண்டரில் அரைக்கவும்.  கொஞ்சம் போல உப்புப் போட்டுக் கொள்ளவும்.  முழு உப்பும் போட வேண்டாம். ஒரு டீஸ்பூன் போதும்.  மாவை ரொம்ப நீர்க்க இல்லாமல், கெட்டியாகவும் இல்லாமல் கரைத்து வைக்கவும்.

இப்போ செய்முறை.  நான் இட்லி மாதிரி வார்த்துத் தான் சேவை செய்வேன். ஒவ்வொருத்தர் அரைத்த மாவைக் கிளறிக் கொட்டிக் கொண்டு பின்னர் உருண்டை பிடித்து மீண்டும் வேக வைத்து அல்லது கொதிக்கும் நீரில் போட்டுச் செய்வார்கள்.  எனக்கு அதெல்லாம் சரிப்படலை.  ஆகவே இட்லிப் பானையில் நீர் ஊற்றிக் கொதிக்க வைத்துக் கொண்டு, இட்லித் தட்டில் அரைத்த மாவை இட்லியாக ஊற்றவும்.  இட்லி வெந்துவிட்டதானு பார்க்கவும்.  சில சமயம் நடுவில் வேகாது.  ஆகவே நடுவில் விரலைக்கொடுத்தும் பார்க்கலாம், சூடு தாங்கினால் :))) இல்லைனால் ஒரு ஸ்பூனால்குத்திப் பாருங்க.  ஒட்டாமல் வரும்.  பார்த்தால் நமக்கே புரிந்து விடும்.  வெந்துவிட்டதா இல்லையானு.  வெந்த இட்லியைச் சேவை நாழியில் போட்டுப் பிழியவும்.  இதோ இது தான் சேவை நாழி.  எழுபதுகளில் 2 ரூபாய்க்கு சீதனமாக வாங்கித் தந்தாங்க.  பல வீடுகள் பார்த்திருக்கு. பல சேவை செய்முறைகளையும் பார்த்திருக்கு இந்த நாழி.

சேவைகளை இப்படி இட்லியாக வார்த்து மொத்தமாகப் பிழிந்து கொள்ளவும்.



இதை மீண்டும் ஒரு முறை வேக வைக்க வேண்டியதில்லை.  நல்ல கம்பி, கம்பியாக ஒட்டாமல் வரும்.  அரைத்த மாவு மொத்தத்தையும் இப்படி இட்லியாக வார்த்துச் சேவையாகச் செய்து கொள்ளவும்.  அடுத்துக் கலவை.

பல விதங்களில் கலக்கலாம்.  தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, புளி சேவை, வெல்லச் சேவை, தயிர்சேவை, உளுத்தம் சேவை இதெல்லாம் பாரம்பரியம்.  இப்போ உள்ள நாகரீகப்படி தக்காளி சேவை, காய்கறிகள் போட்டு வெஜிடபிள் சேவை, சூப் சேவைனும் பண்ணலாம்.  நான் அதெல்லாம் பண்ணறதில்லை.  எப்போவுமே பாரம்பரியம் தான்.

தேங்காய் சேவை:  தேங்காய் ஒரு மூடித் துருவல், இரண்டு ப.மி கருகப்பிலை, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை அல்லது முந்திரிப் பருப்பு. பெருங்காயம் உப்பு தேவையான அளவு, கொஞ்சம் நெய், இரண்டு டீஸ்பூன் இருக்கலாம், ஒரு டீஸ்பூன் சர்க்கரை.  தாளிக்க எண்ணெய்


வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை போன்றவற்றைப் போட்டு அவை நன்கு வெடித்து வந்ததும் ப.மி. கருகப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொண்டு தேங்காய் துருவலைப் போடவும்.  வறுத்தால் பிடிக்குமென்றால் சிறிது நேரம் வறுக்கலாம்.  இல்லை எனில் ஒரு கிளறுகிளறிவிட்டு இறக்கவும்.  வேக வைத்து எடுத்த சேவையில் தேங்காய்ச் சேவைக்குத் தேவையான சேவையைப் போட்டுக் கொண்டு, உப்பு, சர்க்கரை, நெய் சேர்த்துக் கிளறவும்.

புளி சேவை:  சேவையில் தேவையான அளவு எடுத்துக் கொண்டு புளிக்காய்ச்சலைப் போட்டு விட்டு நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் ஊற்றிக் கிளறி வைக்கவும்.

வெல்லச் சேவை:  வெல்லத் தூள்  நூறு கிராம்.  தேங்காய் தேவையான அளவு அல்லது ஒரு சின்ன மூடித் துருவல், ஏலக்காய்.  நெய் இரண்டு டீஸ்பூன்.

வாணலி அல்லது உருளியில் வெல்லத்தூளோடு தேங்காய் சேர்த்துக் கிளறவும்.  இரண்டும் நன்கு சேர்ந்து கொண்டு வருகையில் நெய்யைச் சேர்த்துச் சேவையைப் போட்டு நன்கு கலக்கவும்.  ஏலத்தூள் சேர்க்கவும்.





சேவை செய்யச் சொல்லும் ரங்கமணிகள்!

தினம் தினம் இட்லி, தோசை தானா?

ஏன், சப்பாத்தி, பூரி, உப்புமாவெல்லாமும் தான் செய்யறேன்.

ஹூம், அதெல்லாம் வேண்டாம், எனக்கு சேவை வேணும்

தினம் தினம் உங்களுக்குத் தானே சேவை செய்யறேன்.

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்(இப்போ அவர் முறை)  நான் கேட்கிறது அரிசியில் செய்த வெல்லச் சேவை, புளிசேவை, தேங்காய் சேவை வகையறா.

சரியாப் போச்சு போங்க. பார்க்கலாம்.  அரிசி அரைக்கணும். இட்லியா வார்க்கணும்.  சேவை நாழியிலே போட்டுப் பிழியணும். ம்ம்ம்ம்ம்ம்,,,, கொஞ்சம் போல முயற்சி செய்யறேன். ஓகேயா?

சேவை செய்முறையும் படமும் விரைவில்

Sunday, September 2, 2012

காலிஃப்ளவர் மஞ்சூரியன்

பெயரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம். :D இது வெஜிடேரியன் உணவு தான். சமீபத்தில் குழுமத்தில் ஒரு சிநேகிதி அறுசுவைத் தளத்து செய்முறையைப் பகிர்ந்து கொண்டார்.  அதிலே அஜினோமோட்டோ, முட்டை எல்லாம் போடச் சொல்லி இருந்தாங்க.  இது பாரம்பரிய முறை.  இதுக்கு அதெல்லாம் வேண்டாம்.  எல்லாம் நம்மிடம் இருக்கும் பொருட்களே போதும்.  பொதுவாகவே அஜினோமோட்டோ போட்ட உணவைச் சாப்பிடுவது அவ்வளவு நல்லதில்லை.  அஜினோமோட்டோ நம் நாட்டு உணவுப் பழக்கத்துக்கு ஏற்றதும் இல்லை.  ஆனாலும் ஒரு சிலர் தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்துவிட்டு வாங்கி விடுகின்றனர்.  அதில் உள்ள தீமைகளை அறிந்துகொண்டிருக்கும் சீனா, தன் தயாரிப்பான இந்த அஜினோமோட்டோவைப் பயன்படுத்துவதே இல்லை.  நம் நாட்டைச் சனியன் மாதிரிப் பிடித்துக் கொண்டு சாம்பார், ரசத்துக்குக் கூடப் போடச் சொல்லிப் பிடுங்கல்.  இதனால் உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்படக் கூடும்.  குழந்தைகளுக்கு நரம்பு பாதிப்பு உண்டாகும். ஆகவே கவனம் தேவை.

இப்போது பாரம்பரிய முறையில் காலிஃப்ளவர் மஞ்சூரியனைப் பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:  நல்ல காலிஃப்ளவராக ஒன்று.  ஒரு கிண்ணம் மைதா மாவு, வெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்,ஒரு சிட்டிகை உப்பு, சமையல் சோடா தேவை எனில் ஒரு சிட்டிகை.  பால் 200 கிராம்.  நீர் தேவைப்பட்டால் .  பொரிக்க  சமையல் எண்ணெய்.

அடுத்து கிரேவிக்கு.  அரைகிலோ தக்காளி. இது தனியாகக் குக்கரில் தக்காளியை வேக வைத்தோ அல்லது கொதிக்கும் வெந்நீரில் போட்டோ தோல் நீக்கி, விதை நீக்கித் தக்காளிச் சாறாக எடுத்துக்கொள்ளவும்.

மேற்சொன்ன அளவுக்கு 5 பச்சை மிளகாய்,  4 பல் பூண்டு,  ஒரு அங்குலம் இஞ்சி நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் இரண்டு எடுத்துப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கால் கிலோ தக்காளியுடன் வெங்காயத்தைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.  முன்னால் சொன்னதுக்கும் இதுக்கும் தனித்தனி செய்முறை.  ஆகையால் குழம்ப வேண்டாம். 

மிளகாய்த் தூள் ஒரு டேபிள் ஸ்பூன், தனியாத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சின்ன ஸ்பூன், கரம் மசாலாத் தூள் ஒரு டீஸ்பூன், சர்க்கரை ஒரு டீஸ்பூன்.  உப்பு தேவையான அளவு. ஜீரகம் வறுத்துப் பொடி செய்த தூள் ஒரு டீஸ்பூன். சமையல் எண்ணெய் கிரேவி செய்யத் தேவையான அளவு.

இப்போது காலிஃப்ளவரை நன்கு ஆய்ந்து குளிர்ந்த நீரில் கழுவிக் கொண்டு, பூச்சி, புழு நீக்கிக் கொள்ளவும்.  பூவாக நீளமாக வரும்படி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும்.  இதில் உப்பு,, மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டு, கொதிக்கும் வெந்நீரில் சிறிது நேரம், சுமார் அரைமணி போட்டு வைக்கவும்.  பின்னர் நீரை வடிகட்டிப் பூக்களைத் தனியாக வைக்கவும்.

வெண்ணெய், உப்பு, சோடா உப்பு சேர்த்துக் குழைத்து, கொஞ்சம் கொஞ்சமாக மைதாமாவை அதில் சேர்க்கவும்.  மாவும், வெண்ணெய்க் கலவையும் நன்கு கலந்த பின்னர் பாலை மெதுவாக அதில் விட்டுக் கலக்கவும்.  மாவு தோசை மாவு பதத்துக்கு வர வேண்டும்.  ரொம்பக் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் சேர்க்கலாம். கடாயில் எண்ணெயைக் காய வைத்துக் கொள்ளவும்.  வடிகட்டி வைத்த பூக்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு கரைத்த மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எண்ணையை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.  இவை தனியாக இருக்கட்டும்.

அடுத்து கிரேவி செய்முறை:  கடாயில் எண்ணெய் வைத்துக் கொள்ளவும்.  எண்ணெய் காய்ந்ததும் முதலில் ஒரு டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்க்கவும்.  மசாலா கலந்து செய்யும் உணவுகளுக்குக் கொஞ்சம் சர்க்கரையை முதலிலேயே சேர்த்தால் மசாலா மணம் தூக்கலாக இருப்பதோடு மசாலாவின் காரத்தையும், கடுமையையும் குறைக்கும்.  அல்லது இறக்கும் முன்னர் கொஞ்சம் வெல்லம் சேர்க்கலாம்.  சர்க்கரை கரைந்ததும்,முதலில் தக்காளி, வெங்காயக் கலவையைப் போட்டு நன்கு வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயம் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுதையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.  சிறிது நேரம் வதக்கியதும், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள் சேர்த்து இன்னும் கொஞ்ச நேரம் எல்லாம் கலக்கும் வரை வதக்கிக் கொள்ளவும்.  எண்ணெய் நன்கு பிரிந்துவந்ததும் நாம் ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள தக்காளி ப்யூரி எனப்படும் தக்காளிச் சாற்றை விடவும்.  உப்புப் போடவும்.  தேவை எனில் நீர் சேர்க்கலாம்.  கிரேவி நன்கு கொதித்து வரும் போது கரம் மசாலாப் பவுடரையும், வறுத்த ஜீரகத் தூளையும் சேர்த்துவிட்டு ஒரு கொதி விட்டு அடுப்பை அணைக்கவும்.

இப்போது பரிமாறும் முறை:  ஒரு சின்னக் கிண்ணம் அல்லது சைட் டிஷ்ஷுக்கான தட்டில் கொஞ்சம் பொரித்த காலிஃப்ளவர் துண்டங்களைப் போட்டுக் கொண்டு அதன் மேல்கிரேவியை ஊற்றவும்.  விருப்பமானால் பொடிப்பொடியாக நறுக்கிய பச்சைக் கொத்துமல்லி, பச்சை வெங்காயம் தூவிக் கொள்ளலாம்.  இதை அப்படியே விருந்தாளிகளுக்குக் கொடுத்து அசத்துங்கள்.  கொஞ்சம் நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமான செய்முறைதான்.  ஆனால் செய்யச் செய்யப் பழகிவிடும்.

Tuesday, August 28, 2012

மீனாக்ஷிக்காக அடை!

அடை செய்யறச்சே படம் எடுக்கிறேன்.  இப்போ செய்முறை மட்டும். நான் இரண்டு, மூன்று விதங்களில் அடை செய்வேன்.  முதல்லே  புழுங்கல் அரிசி சேர்த்துச் செய்யும் அடை.  இதுக்கும் தவலை வடை செய்முறைக்கும் அதிக வித்தியாசம் இருக்காது என்றாலும் இதுக்குப் பயத்தம் பருப்புப் போடறதில்லை.  இஞ்சி, ப.மிளகாய் நறுக்கிப் போட்டுக் கடுகு, உ.பருப்புத் தாளிதம் எல்லாம் இல்லை.

புழுங்கல் அரிசி ஒரு கிண்ணம்,  பச்சை அரிசி ஒரு கிண்ணம், துவரம்பருப்பு ஒரு கிண்ணம், கடலைப்பருப்பு அரைக்கிண்ணம், உ.பருப்பு  அரைக்கிண்ணம். மி. வத்தல் ஆறில் இருந்து எட்டு வரை, பச்சை மிளகாய் 2 அல்லது மூன்று, பெருங்காயம் கட்டி எனில் ஊற வைக்கவும். உப்பு. கருகப்பிலை, கொத்துமல்லி.

புழுங்கல் அரிசி, பச்சை அரிசியை ஒன்றாகப் போட்டுக் களைந்து ஊற வைக்கவும். பருப்பு வகைகளைத் தனியாக வேறொரு பாத்திரத்தில்  ஒன்றாகப் போட்டுக் களைந்து ஊற வைக்கவும்.  துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை நிறமாக இருப்பதோடு மொறு மொறுப்பாகவும் இருக்கும்.  கடலைப்பருப்புக் கூடப் போட்டால் அடை மெத்தென்று இருக்கும்.  உ.பருப்புக் கூடப் போனால் பொது பொதுவென வரும்.  அடை க்ரிஸ்ப்பாக வேண்டுமெனில் மேற்சொன்ன அளவின் படி போடலாம். குறைந்தது நான்கு மணி நேரமாவது ஊற வேண்டும்.  ஒரு சிலர் அடைக்கு ஊற வைக்க வேண்டாம், எண்ணெய் குடிக்கும் என்பார்கள்.  அப்படி எல்லாம் இல்லை.  எண்ணெயெல்லாம் குடிக்காது.  அடை மாவைக் கல்லில் ஊற்றிவிட்டு ஒரு முறை நன்றாக எண்ணெய் ஊற்றினாலே போதும். ஆகவே நன்கு ஊற வைக்கவும்.  பின்னர் மிக்சி ஜாரில் மி.வத்தல், ப.மி, பெருங்காயம், உப்புப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு முதலில் அரிசியைப் போட்டு அரைக்கவும்.  கிரைண்டர் எனில் மிக்சி ஜாரிலேயே மிளகாயை அரைத்துக் கொண்டு பின்னர் கிரைண்டர் பாத்திரத்தில் அரிசியைப் போடும்போது மிளகாய்க் கலவையைச் சேர்த்துப் போடவும்.  கிரைண்டரில் மிளகாய் சரியாக அரைபடாது.  ஆகவே வடை, அடைக்கெல்லாம் நான் மிக்சி ஜாரில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டே கிரைண்டரில் போடுவேன்.

அரிசி கொர கொரவென அரைபட்டதும், கிரைண்டரில் எனில் எல்லாப் பருப்புக்களையும் சேர்த்து அதிலேயே போடலாம்.  மிக்சி என்றால் கொஞ்சம் அரிசி மாவைத் தனியாக எடுத்துவிட்டுப் பாதி பருப்புக் கலவையைப் போட்டு அரைத்து எடுத்துக் கொண்டு, பின்னர் திரும்பவும் எடுத்து வைத்த அரிசி மாவொடு, மீதம் இருக்கும் பருப்புக் கலவையையும் சேர்த்துப் போட்டு அரைத்துப் பின்னர் இரு கலவையையும் ஒன்றாய்க் கலந்து கொள்ளவும்.  கருகப்பிலை, கொத்துமல்லி பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.  கொஞ்ச நேரமாவது மாவை வைக்க வேண்டும்.  அடைக்கு மேலே தூவ வெங்காயம், வாழைப்பூ, முட்டைக்கோஸ், கீரை வகைகள், முருங்கைக்கீரை, பறங்கிக் கொட்டை போன்றவை நன்றாக இருக்கும்.  இல்லாட்டி வெறும் தேங்காயைக் கீறிப் போட்டும் வார்க்கலாம்.  அல்லது எதுவுமே போடாமல் வெறும் அடையாகவும் வார்க்கலாம்.  அவரவர் விருப்பம்.

தோசைக்கல்லைக் காய வைத்துச் சூடானதும் எண்ணெயை ஊற்றித் தடவிக் கொண்டு அடை மாவை அதிகம் கரைக்காமல் தோசைக்கல்லில் நன்றாகப் பரப்ப வேண்டும்.  நடுவில் ஓட்டை போட்டுக் கொள்ளலாம். சுற்றியும் நான்கு புறங்களில் ஓட்டை போட்டுக் கொள்ளலாம்.  எண்ணெய் தாராளமாக இரண்டு முட்டை விட வேண்டும்.  ஒரு பக்கம் நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு வேக விடவும்.  எண்ணெய் தேவை எனில் விடலாம்.  நன்கு வெந்ததும் சூடான சாம்பார், வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு, அவியல், தேங்காய்ச் சட்னி, வெல்லம், வெண்ணெய் போன்ற எது உங்களுக்குப் பிடிக்குமோ அதோடு சாப்பிடலாம்.

அடுத்துப் பச்சரிசி போட்டுச் செய்யும் ஏகாதசி அடையைப் பார்ப்போம்.  இதற்குப் பச்சரிசி மட்டும் இரண்டு கிண்ணம் எடுத்துக் கொண்டு துவரம்பருப்பு மட்டும் ஒரு கிண்ணம் போட்டுக் கொள்ளவும்.  எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து களைந்து ஊற வைக்கவும்.  இது இரண்டு மணி நேரம் ஊறினால் போதும்.  நன்கு ஊறினாலும் தப்பில்லை.  பின்னர் ஆறு மி.வத்தல், பெருங்காயம், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றோடு சேர்த்து அரைக்கவும்.  கொஞ்சம் கொர கொரப்பாக அரைக்க வேண்டும்.  ரொம்பவே ஆசாரமானவர்கள் மி.வத்தல், ப.மி. , பெருங்காயம் போன்றவை ஏகாதசி அன்று சேர்க்க மாட்டார்கள்.  அப்போது மிளகு, உப்பு மட்டுமோ அல்லது இஞ்சி, உப்பு மட்டுமோ சேர்த்து அரைக்க வேண்டும்.  ஜீரகம் போட்டால் அடைக்கு நன்றாக இருப்பதில்லை.  கருகப்பிலை, கொத்துமல்லி போடலாம்.

வேறெதுவும் போடாமல் அடைமாவை நன்கு கலந்து கொண்டு தோசைக்கல்லில் ஊற்றிக் கொஞ்சம் கனமாகவே வார்க்க வேண்டும்.  இதுக்கு வெல்லம், வெண்ணெய் தவிரக் குழம்பு வகைகளோ, அவியலோ ஏகாதசி அன்று சேர்ப்பதில்லை.

அடுத்தது பச்சரிசி அடை தான்.  ஆனால் எல்லாப் பருப்பும் சேர்த்து.  பச்சரிசி இரண்டு கிண்ணம் என்றால் , அரைக்கிண்ணம் து.பருப்பு,  கால் கிண்ணம் கடலைப் பருப்பு, கால் கிண்ணம் உ.பருப்பு, கால் கிண்ணம் பாசிப் பருப்பு.  அரிசி, பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாய்க் கலந்து களைந்து ஊற வைக்க வேண்டும்.  இதை அதிக நேரம் ஊற வைப்பதில்லை.  ஒரு மணி நேரம் ஊறினால் போதும் என்பார்கள்.  (நான் ஊற வைப்பேன் என்பது வேறு விஷயம். :))))  பின்னர் மி.வத்தல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கருகப்பிலை, கொ.மல்லி போட்டுக் கொஞ்சம் கனமாகவே வார்க்க வேண்டும்.  நான் அரைக்கையிலேயே தேங்காயையும் போடுவேன்.  இதுக்குத் தேங்காய் போடாமல் அரைத்து எடுத்துப் பரங்கிக் கொட்டை, வாழைப்பூ, கீரை வகைகள் போட்டும் வார்க்கலாம்.

எல்லாரும் நல்லா அடை பண்ணிச் சாப்பிடுங்கப்பா.  என்னோட ஃபேவரிட் அடை தான். :))))))

Sunday, August 26, 2012

ஸ்ரீராமுக்காக மீள் பதிவு, பச்சைச் சட்னி, இனிப்புச் சட்னி! :))))

பச்சைச் சட்னி செய்யும் விதம்.

தேவையான பொருட்கள்: கொத்துமல்லி பெரியதாய் ஒரு கட்டு அல்லது நடுத்தரமாக இரண்டு கட்டு, பச்சை மிளகாய், (காரமானது நல்லது) பத்து அல்லது பனிரண்டு. இஞ்சி ஒரு துண்டு, பூண்டு(பிடித்தமானால், நான் பூண்டு சேர்ப்பதில்லை) இரண்டு டீஸ்பூன் பொட்டுக்கடலை, உப்பு. பெருங்காயம்(தேவை எனில்)


கொத்துமல்லிக்கீரை, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை நன்கு கழுவி நீரை வடிகட்டிவிட்டு மற்றச் சாமான்களோடு சேர்த்து அரைக்கவும். கொஞ்சம் நீர் விட்டு அரைக்கலாம். கெட்டிக் குழம்பு பத்த்தில் சட்னி இருக்கலாம்.

அடுத்து இனிப்புச் சட்னி: அவசரமாகப் பண்ண இது வசதி. பேரீச்சம்பழம் ஐம்பது கிராம், ஒரு சிறு உருண்டை புளி, உப்பு, மிளகாய்த் தூள் ஒரு டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் சர்க்கரை. எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும். இதுவும் கெட்டிக் குழம்பு பத்த்தில் இருக்கலாம்.

புளிச்சட்னி(இனிப்புச் சட்னி இரண்டாம் வகை) 100 கிராம் புளியை ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து கொட்டை, கோதுகள் போக வடிகட்டி வைக்கவும். இதற்கு ஒரு ஆழாக்கு அல்லது ஒன்றரை ஆழாக்கு வெல்லத்தூள் தேவைப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு. ஒரு டீஸ்பூன் சர்க்கரை(பிடித்தமானால்) ஜீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைச் சட்னியை இறக்குகையில் சேர்க்கவேண்டும். மேலும் இந்த ஜீரகப் பொடி ரசம், சாட், தயிர்வடை போன்றவற்றிலும் கலக்கத் தேவைப்படும். ஆகவே நூறு கிராம் ஜீரகத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

இப்போது கரைத்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு, மிளகாய்த்தூள், வெல்லத்தூள், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்துச் சட்னி கெட்டியாக ஆகும்போது வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்த்து அடுப்பில் இறந்து கீழே இறக்கவும். இது பல நாட்கள் பயன்படுத்தலாம். பயன்படுத்துகையில் ஒரு சின்னக் கிண்ணம் சட்னியை எடுத்துக்கொண்டு நீர் விட்டுத் தளர்த்திக்கொண்டால் ஆறு அல்லது ஏழு நபர்களுக்குப் பரிமாற முடியும்.


ஸ்ரீராம், என்னடா இதிலே கொடுத்திருக்கேனேனு நினைக்காதீங்க.  இதிலே தானே கேட்டிருந்தீங்க? அதோட இங்கே பேல்பூரி பதிவையும் படிங்க. அதையும் சொல்ல வசதியா இருக்கும்னு தான் இங்கேயே கொடுத்திருக்கேன். :))))))

Saturday, August 25, 2012

காலி ஃப்ளவர் பஜ்ஜி அல்லது பக்கோடா!

இங்கே காலிஃப்ளவர் கிடைக்கிறதில்லை.  சென்னையில் கிடைக்கும், நல்ல காலிஃப்ளவராக வாங்கிப் பூக்களாக உதிர்த்து எடுங்கள்.  குளிர்ந்த நீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துப் பூக்களை அதில் போட்டுப் பூச்சிகள் இருந்தால் எடுக்கவும்.  வெந்நீரில் போட்டால் பூக்கள் உள்ளே இருந்து வெளிவராமல் பூவினுள்ளேயே செத்துப் போகும்.  ஆகையால் எப்போதுமே குளிர்ந்த நீரில் தான் போட்டு வைக்க வேண்டும்.  இதை வடிகட்டிக் கொண்டு பூக்களில் பூச்சி இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு (பார்த்தாலே தெரியும்)  கொதிக்கும் வெந்நீரில் பத்து நிமிஷம் முதல் இருபது நிமிஷம் வரை போட்டு வைத்துப் பின் வடிகட்டிக் கொள்ளவும்.

கடலை மாவு  ஒரு கிண்ணம், அரிசி மாவு அரைக்கிண்ணம், மைதா மாவு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.  அல்லது உங்க வீட்டில் இட்லி மாவு, தோசை மாவு அரைத்தது இருந்தால் அதை இரண்டு பெரிய கரண்டியால் எடுத்துக் கொள்ளவும்.  ஒரு கிண்ணம் கடலை மாவை அதில் போட்டுக் கொண்டு கொஞ்சம் போல் உப்பு (இட்லிமாவில் உப்பு இருக்கும்) , மிளகாய்த் தூள் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயத் தூள் சேர்த்துக் கலக்கவும்.  இட்லி மாவு இல்லாதவர்கள் மேற்சொன்ன மூன்று மாவோடும் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டு நீர் விட்டுக் கெட்டியாக இட்லி மாவு பதத்துக்குக் கரைக்கவும்.

அடுப்பில் கடாயை ஏற்றிக் கொண்டு சமையல் எண்ணெயைக் காய விடவும்.  எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு பூவாகக் கடலைமாவுக் கலவையில் தோய்த்து எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.  சட்னி இல்லாமலும் சாப்பிடலாம்.  அல்லது சாஸ், புளிச் சட்னி, பச்சைச் சட்னி பிடித்தால் அதோடு சாப்பிடலாம். 

வெறும் அரிசி அடை(வித் முருங்கைக் கீரை) :))))

இது தென் மாவட்டங்களில் செய்யப் படும் ஒன்று.  அதிகம் மதுரை தாண்டிப் பார்க்க முடியாது.  இதற்குத் தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி ஒரு கிண்ணம் அல்லது கால் கிலோ, ஒரு மூடித் தேங்காய்த் துருவல், உப்பு.  ஒரு கட்டு முருங்கைக் கீரை நன்கு ஆய்ந்து அலசி நறுக்கிக் கொள்ளவும்.  பெருங்காயம் தேவையானால், கருகப்பிலை, கொ.மல்லி தேவையானால்.  எண்ணெய் அடை வார்க்க.  தேங்காய் போட்டு அரைப்பதால் அதிக எண்ணெய் தேவைப்படாது. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் நன்றாய் இருக்கும்.  பிடிக்காதவர்கள் சமையல் எண்ணெய் ஏதேனும் அவரவர் வழக்கம் போல்

புழுங்கலரிசியை நான்கு மணி நேரமாவது ஊற வைக்கவும்.  தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்துக் கொண்டு உப்புச் சேர்த்து, நறுக்கி வைத்த முருங்கைக் கீரையையும் சேர்த்துக் கொள்ளவும்.  நன்கு கலக்கி அரைமணி நேரம் வைக்கவும்.  பின்னர் தோசைக்கல்லில் மாவை லேசாக நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு அடை போல் கனமாக வார்க்கவும். தொட்டுக்கொள்ள ஏதேனும் சாம்பார் தான் நல்ல காம்பினேஷன் என்றாலும் தக்காளி, வெங்காயச் சட்னியும் நன்றாக இருக்கும்.


இதையே காரம் வேண்டும் என்பவர்கள் கொஞ்சம் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு சேர்த்து அரைத்துக் கொண்டும் முருங்கைக் கீரை போட்டுப் பண்ணலாம்.  இரண்டுமே நன்றாக இருக்கும்.  முந்தாநாள் செய்தேன்.  படம் எடுக்கணும்னோ, பதிவு போடணும்னோ தோணலை.  :))) இன்னிக்கு வேறொருத்தர் கேட்டதில் இதையும் போடலாம்னு தோணித்து. :)))

Monday, August 20, 2012

எம் எல் ஏ, பெசரட் வேணுமா?

எம் எல் ஏ, பெசரட் தோசை பத்திப் பார்க்கலாமா இப்போ!

நேத்திக்கு ஜி+ ல வா.தி. பெசரட் சாப்பிட்டேன்னு சொன்னாலும் சொன்னார்.  அப்போலேருந்து அதே நினைப்பு.  சாப்பிட முடியலைனாலும் எழுதியானும் வைச்சுக்கலாம்னு ஒரு எண்ணம்.  அதான் எல்லாரோடயும் பகிர்ந்து கொள்ளலாம்னு வந்தேன்.


இதுக்குத் தேவையான பொருட்கள்:  பச்சைப் பயறு ஒரு ஆழாக்கு.  பச்சரிசி அரை ஆழாக்கு. பச்சை மிளகாய்  4 இஞ்சி ஒரு துண்டு, மிளகு அரை டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், வெங்காயம் மூன்று பொடிப் பொடியாக நறுக்கியது. கருகப்பிலை, கொத்துமல்லி(தேவையானால்) உப்பு.  தோசை வார்க்க எண்ணெய், தோசைக்கல் அல்லது நான் ஸ்டிக் தவா.


  ஊறினால் நிறைய ஆகிடும்.  அதான் இது போதும்னு சொல்றேன்.  குறைஞ்சது ஆறு மணி நேரம் ஊறணும்.  .  இரண்டையும் சேர்த்தே கூட ஊற வைங்க.  இதுக்கு நான் இருவிதமாக சாமான்கள் போடுவேன். ஒண்ணு சோம்பு, கிராம்பு, மிளகு, சீரகம் ஊற வைத்து அரைக்கும்போது சேர்க்கிறது.  இன்னொண்ணிலே சோம்பும் கிராம்பும் போடாமல் மிளகு, சீரகம் ஊற வைத்துப் பச்சை மிளகாய், இஞ்சியோடு சேர்த்து அரைக்கிறது.  இப்போ நாம் பச்சைமிளகாய் நான்கோடு இஞ்சி ஒரு துண்டையும், அரை டீஸ்பூன், மிளகு, ஒரு டீ ஸ்பூன் சீரகத்தோடு சேர்த்து உப்பும் போட்டுக் கொண்டு பாசிப்பருப்பையும் அரிசி ஊற வைத்ததையும் அரைக்க வேண்டும்.  ஒரு சிலர் நறுக்கிய வெங்காயத்தில் பாதியையும் அரைக்கையிலேயே சேர்க்கிறார்கள்.  அது நம்ம இஷ்டம்.

நறுக்கிய வெங்காயத்தைக் கொஞ்சம் வதக்கி வைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு நன்கு தடவி விட்டு மாவை ஊற்றவும்.  மேலே வதக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.  திருப்பிப் போடாமல் அப்படியே மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.  பின்னர் தொட்டுக்கொள்ளக் கொத்துமல்லிச் சட்னியோடு சாப்பிடலாம்.  இது ஒரு வகை.

இன்னொன்று தான் எம் எல்.ஏ பெசரட்.  அதுக்குக் கோதுமை ரவையில் உப்புமா செய்து கொள்ள வேண்டும்.  உப்புமா செய்யும் முறை தேவையில்லைனு நினைக்கிறேன்.  :))))) இந்த உப்புமாவை அந்தத் தோசையின் மேலே ஒரு கரண்டி வைத்து அப்படியே மூடிக் கொடுக்க வேண்டும்.  ஒரு தோசை முழுசாகச் சாப்பிட்டால் நீங்க சாப்பாட்டு ராமர் அல்லது ராமி.   நான் செய்யறச்சே படம் போடறேன்.

Thursday, July 5, 2012

அரவணைப் பாயசம்

ஐயப்பன் பூஜைக்கு அரவணைப் பாயசம் செய்யறது உண்டு.  இன்னிக்கு லக்ஷ்மியோட பதிவிலே நெய்ப்பாயசம்னு பார்த்ததும் அது நினைவில் வந்தது. இதற்குத் தேவையான பொருட்கள்:

நல்ல பச்சரிசியாக ஒரு கிண்ணம் சுமார் 200 கிராம். நெய் அரைகிலோவில் இருந்து ஒரு கிலோ வரையிலும் தாராளமாய்த் தேவை.  வெல்லம் ஒரு கிலோ. தேங்காய் ஒன்று. உடைத்துப் பல்லுப் பல்லாகக் கீறிக்கொள்ளவும்.  ஏலக்காய்ப் பொடி. 

வெண்கலப் பானை அல்லது திருச்சூர் உருளியில் அரிசியை நன்கு கழுவிக் களைந்து கொண்டு சாதமாகக் குழைத்துக் கொள்ளவும்.  ஒரு கிலோ நெய்யில் அரைகிலோ நெய்யை அந்தச் சாதத்தில் விட்டு நன்கு மசிக்கவும்.  தனியே எடுத்து வைக்கவும்.  அதே உருளியில் ஒருகிலோ வெல்லத்தைத் தூள் செய்து போட்டு நீர் சேர்த்துப் பாகு வைக்கவும். பாகு நன்கு காய்ந்து வரும்போது நெய்யில் கலந்த சாதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும்.  நன்கு கிளறவும்.  வெல்லப் பாகும் சாதமும் சேர்ந்து வந்து கொதித்ததும், அடுப்பை அணைக்கவும்.  மிச்சம் நெய்யை ஒரு கடாயில் ஊற்றித் தேங்காய்க் கீறி வைத்திருப்பதை நெய்யில் வறுத்துக் கொட்டவும்.  ஏலப் பொடி சேர்க்கவும். 

சூடாகவும் சாப்பிடலாம்.  ஆறினாலும் சாப்பிடலாம். நன்றாக இருக்கும்.