எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, September 10, 2012

மைசூர்ப் பாகு சாப்பிடறீங்களா?

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேல் ஆச்சு, மைசூர்ப்பாகு செய்தோ, சாப்பிட்டோ. ரங்க்ஸுக்கு ஷுகர் னு தெரிஞ்சதில் இருந்தே யாரானும் கொண்டு வர ஸ்வீட்டைக் கூடச் சாப்பிட மனசு வரதில்லை. வீட்டிலும் யாரானும் வந்தால் கேசரி மட்டும் செய்துடறேன்.  மற்ற ஸ்வீட்னா செய்ய யோசனையா இருக்கும்.  இரண்டு நாளாத் திடீர்னு மைசூர்ப்பாகு மேலே புத்தி போயிருக்கு.  மரபு விக்கிக்கு எழுதிப் போட்டதை இங்கே காப்பி, பேஸ்ட் பண்ணறேன்.முதன் முதலில் மைசூர் அரண்மனைச் சமையல் அறையிலேயே செய்யப் பட்டுள்ளது. மசூர் பருப்பு என அழைக்கப் படும் சிவந்த நிறப் பருப்பை வறுத்து, ஊற வைத்து, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்தே செய்யப் பட்டுள்ளது. கிட்டத் தட்ட முந்நூறு அல்லது அதற்கும் குறைந்த ஆண்டுகளிலேயே கண்டுபிடிக்கப் பட்டது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மசூர் பருப்பை இயந்திரத்தில் அரைத்துச் செய்யப் பட்டது. அதன் பின்னர் மேலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டதும் மசூர் பருப்பு மாவு மிஷினில் அரைக்கப் பட்டுச் செய்யப் பட்டது. மசூர் பருப்பிலிருந்து செய்ததாலேயே இதன் பெயர் மசூர் பாகு என்று அழைக்கப் பட்டு காலப் போக்கில் மைசூர் பாகு என மாறியதாய்த் தெரிகிறது. ஒரு விதத்தில் இதன் மூலம் மைசூர் அரண்மனை என்பதாலும் இந்தப் பெயர் பொருந்தி விட்டது. கடலைப்பருப்பில் செய்வது என்ற கால கட்டத்திற்கு எப்போது மாறியது எனப் புரியவில்லை. அந்த ஆராய்ச்சியும் செய்துடலாம்.

தற்சமயம் மைசூர் பாகு கடலைப்பருப்பை மிஷினில் மாவாக அரைத்துச் செய்யப் படுகிறது. மைசூர் பாகுக்குத் தேவையான பொருட்கள்:
 • கடலை மாவு ஒரு கிண்ணம்
 • மூன்றுகிண்ணம் சர்க்கரை
 • மூன்று கிண்ணம் நல்ல நெய்

அடி கனமான வாணலி அல்லது உருளி. பாகு வைக்க அரை கிண்ணம் நீர்.

முதலில் வாணலியில் ஒரு கிண்ணம் நெய்யை ஊற்றி கடலை மாவை அதில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும். கடலை மாவை காய்ந்த நெய்யில் ஊற்றினால் மேலே பொங்கி வரும். அதுவே சரியான பதம்.

பின்னர் அந்த மாவை வேறு தட்டில் அல்லது பாத்திரத்தில் மாற்றிவிட்டு அதே வாணலியில் மூன்று கிண்ணம் சர்க்கரையோடு அரை கிண்ணம் நீர் சேர்த்து பாகு வைக்கவும். பாகு நன்றாகக் காய்ந்துக் கையால் உருட்டினால் மிளகு பதம் வரும்போது வறுத்து வைத்துள்ள மாவைக் கொட்டிக் கைவிடாமல் கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாய் நெய் சேர்க்கவேண்டும். எவ்வளவு நெய்யைக் கொட்டினாலும் அத்தனையையும் உள் வாங்கிக்கும். கோதுமை அல்வா போல் நெய்யைக் கக்காது. மைசூர் பாகு கெட்டிப் பட்டு உருளி அல்லது வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது நல்ல சதுரமான தாம்பாளத்தில் கொட்டிவிட்டுச் சூடாக இருக்கும்போதே வில்லைகள் போடவேண்டும். வில்லைகள் போடும் முன்னர் மேலே கொஞ்சம் சர்க்கரையைத் தூவலாம்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மை.பா என்றால் ஒரு கிண்ணம் கண்டென்ஸ்ட் பால் அல்லது இரண்டுலிட்டர் பாலைக் குறுக்கி அந்தக் குறுக்கப் பட்ட பால் ஒரு கிண்ணம். கடலைமாவு சேர்க்கும் முன்னர் சேர்க்கவேண்டும். பின்னர் மைசூர்பாகு நன்கு கெட்டிப் பட்டு சுருண்டு வரப் போகும் சமயம் தீயைக் குறைத்துவிட்டு/ அல்லது தீயிலிருந்து கீழே இறக்கிக் கைவிடாமல் கிளறவேண்டும். பின்னர் தட்டில் கொட்டி வில்லைகள் போடலாம். இம்முறையில் மிகவும் மிருதுவான மைசூர்பாகுகள் கிடைக்கும். பால் சேர்த்தால் பிடிக்காதவர்கள் கடலைமாவு மட்டுமே போட்டுச் சுருண்டு வரும் சமயம் கீழே இறக்கித் தீயில் வைக்காமலேயே கீழேயே கிளறவேண்டும். அந்தச் சூட்டிலேயே சுருண்டு வரும் பதம் வந்ததும் தட்டில் கொட்டி வில்லைகள் போடலாம். இம்முறையிலும் மைசூர் பாகு மிருதுவாய்க் கிடைக்கும்.

19 comments:

 1. மைசூர் பாகுக்கு விவரங்கள் அருமை. எங்கள் வீட்டில் நான்தான் ஸ்பெஷலிஸ்ட்டாக்கும்! உக்கும்! (கனைப்புங்க..) ஆனால் இறக்கும் டைம் வரும்போதுதான் இல்லாத சந்தேகங்கள் எல்லாம் வந்து விடும். ஒன்றுக்கு மூன்று சர்க்கரை, மூன்று நெய் என்று செய்து வந்தாலும் கூட ஒன்றுக்கு இரண்டு சர்க்கரை மட்டுமே சமயத்தில் சேர்ப்பதுண்டு. டோம்பத் தித்திப்பாய் இல்லாமல் இருக்க!

  ReplyDelete
 2. வாங்க ஸ்ரீராம், எங்க மாமியார் வீட்டிலேயும் நீங்க சொல்றாப்போல் ஒண்ணுக்கு ரெண்டு தான் போடறாங்க. ஆனால் எனக்கு சர்க்கரைக்கே தித்திப்பு பத்தாதுனு சொல்ற ரகம். :)))) அதுக்காகக் காப்பியிலே சர்க்கரையைப் போட்டால் பிடிக்காது. டீயிலேயும் சர்க்கரை அதிகம் இல்ல. பால் வெறும் பால் தான் சர்க்கரை போடாமல், சர்க்கரை போட்டால் பாலின் ருசி தெரியாது. மற்றப் பானங்கள் எது குடிச்சாலும் நோ சர்க்கரை. ஆனால் ஸ்வீட் மட்டும் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்வீட்ட்ட்ட்ட்ட்டா இருக்கணும். :))))

  ReplyDelete
 3. ரொம்ப என்பது எழுத்துப் பிழையாகி விட்டதை இப்போதுதான் கவனிக்கிறேன். மழை வருவது போல இருப்பதாலும் வெளிச்சமின்மையும் கீ போர்ட் இருட்டில் இருப்பதாலும் இந்நிலை... (ம்ஹூம் சாக்குகள்!)

  ReplyDelete
 4. மசூர்பாகு பின்புலம் அருமை. தெரியவே தெரியாது. மசூர் பருப்பிலேயே செய்தால் என்ன?

  க்ருஷ்ணா ஸ்வீட்சில் இந்த முறை சாப்பிட்டேன். பாதி வில்லை தான். இன்னமும் சப்பு கொட்டுகிறது.

  நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து எங்க வீட்டு மைபாக் செங்கல் தான். நிலையில்லாமல் ஆடும் ஸ்வாமி ஸ்டூல் காலில் ஒருமுறை எங்க வீட்டு மைபாக் வைத்து நிலைப்படுத்தியிருக்கிறேன்.

  ReplyDelete
 5. க்ருஷ்ணா மைபாக் நன்றாக இருந்தாலும் கொஞ்சம் வயிற்றைப் புரட்டியது என்றே நினைக்கிறேன்.

  ReplyDelete
 6. மைசூர் பாக் இதுவரை ட்ரை கூட பண்ணதில்லை. பதம் கொஞ்சம் தவறினால் கல்லு மாதிரி ஆயிடும். அதனால நான் எப்பவுமே செவன் கப்ஸ் பண்ணிடுவேன். உங்க ரெசிபி அப்படிங்கறதால நவராத்திரியில ஒரு தடவ நிச்சயமா ட்ரை பண்றேன். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாக் பிரமாதம்னு சொல்றாங்க. ஆனா எனக்கு அவ்வளவு ஒண்ணும் பிடிக்கல.

  இந்த செய்முறை படிக்கும்போது கோதுமை அல்வா பேரை பாத்தேன். உடனேயே ஆஹான்னு சாப்பிட ஆசை வந்துடுத்து. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஸ்வீட் கோதுமை அல்வாதான். அம்மா எப்பவும் கோதுமையை ஊற வெச்சு, அரைச்சு பால் எடுத்துதான் பண்ணுவா. ரொம்ப பிரமாதமா இருக்கும். நீங்களும் அப்படிதான் பண்ணுவீங்களா? கொஞ்சம் கோதுமை அல்வா ரெசிபி ப்ளீஸ். அப்பறம் அப்படியே கொஞ்சம் பாதுஷா ரெசிபியும் சொல்லிடுங்க. ப்ளீஸ், ப்ளீஸ்.:)) அவசரம் ஒண்ணும் இல்லை மேடம். நிதானமா உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எழுதுங்க, போதும். ரொம்ப நன்றி.  ReplyDelete
 7. //கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாக் பிரமாதம்னு சொல்றாங்க. ஆனா எனக்கு அவ்வளவு ஒண்ணும் பிடிக்கல.//

  அதே, அதே, மைசூர்பாகுனா உள்ளே புரையோடிண்டு ஓட்டைபோட்டுக் கொண்டு இருக்கணும். அதான் ஒரிஜினல் மைசூர்பாகு. கிருஷ்ணா ஸ்வீட்ஸெல்லாம் பல்லில்லாதவங்களுக்கு வேணா லாயக்கு. அப்பாதுரை சொல்றாப்போல் பாதிக்கு மேல் நோதான். :))))

  ReplyDelete
 8. அப்பாதுரை, டிசம்பர் 22-ஆம் தேதி ஸ்ரீரங்கம் வரச்சே கண்டிப்பா மைசூர்ப்பாகோட வரவேற்கிறேன். :)))))

  ReplyDelete
 9. ரொம்ப என்பது எழுத்துப் பிழையாகி விட்டதை இப்போதுதான் கவனிக்கிறேன்.//

  இம்பொசிஷன் எத்தனைக்குனு கொடுக்கிறது! அதான் கண்டுக்காம விட்டுடறேன் இப்போல்லாம். :P:P:P:P

  ReplyDelete
 10. மீனாக்ஷி, சம்பா கோதுமையை அரைச்சுப் பாலெடுத்துத் தான் கோதுமை அல்வா செய்வோம் எங்க வீடுகளிலே. இப்போவும் அப்படித் தான் செய்யறது உண்டு. சொல்லப் போனால் சிராத்தத்திலே கூட கோதுமை அல்வா உண்டு. அதுக்குச் சர்க்கரை சேர்ப்பதில்லை என்பதால் வெல்லம் போடுவது வழக்கம். கோதுமை அல்வால்லாம் தண்ணிபட்ட பாடாப் பண்ணிட்டு இருந்தேன் 2,3 வருஷம் முன்னால் வரை. :)))) இப்போத் தடா. அதனால் என்ன? செய்முறையை எழுதறேன். ஆனால் ரொம்பப் பொறுமையும் நிதானமும் வேணும். நேரமும் எடுக்கும். :)))

  பாதுஷாவும் சொல்றேன். பாராட்டுவதற்கும் கேட்பதற்கும் நன்றிங்க. மைசூர்ப்பாகு சுலபமாய்ச் செய்துவிடலாம். முதலில் ஒரு கிண்ணம் கடலைமாவில் செய்யுங்க. அதிகம் வேண்டாம். அதற்கே 15,20 வில்லைகள் வரும். கிளறக் கிளற மேலே கொப்பளித்துக்கொண்டு மாவுக்கலவை பாத்திரத்தை விட்டு மேலே பொங்கி வரும். அது தான் இறக்கச் சரியான பதம்

  ReplyDelete
 11. கோதுமை அல்வா எல்லாம் நாள் முழுக்க பிடிக்குமே? திருநெல்வேலி அல்வாங்கறது கோதுமை அல்வாவா வேறயா?

  ReplyDelete
 12. மைசூர்பாகு "மெது"வா இருக்கக் கூடாதா? ஏன்? பாகுனு எதுக்கு சொல்றோம் பின்னே? க்ருஷ்ணாவோட ஸ்பெஷல்டியே "மெது"வான மைசூர்பாகு இல்லையோ?

  ReplyDelete
 13. ஸ்வீட் நல்ல வரதுக்கு பதம் தாங்க ரொம்ப முக்கியம். கூடவே கைவிடாம கிளறனும். அதனாலதான் கொஞ்சம் தயக்கம். இருந்தாலும் நீங்க சரியான பதம் எப்படின்னு எழுதி இருக்கறதால ஒரு சின்ன கிண்ணம் மாவு எடுத்து ட்ரை பண்றேன். வீட்ல இப்பதான் காய்ச்சின நெய் ரெடியா இருக்கு. பண்ணி பாக்கறேன். நீங்க சொல்ற மாதிரி மைசூர் பாக் பொற பொறன்னு இருக்கணும். அப்பதான் ருசியே!

  கோதுமை அல்வா ரெசிபி கண்டிப்பா வேணும். எனக்கு இது அவ்வளவு பிடிக்கும். அதுவும் நீங்க தண்ணி பட்ட பாடா பண்ணி இருக்கீங்கன்னு வேற சொல்றீங்க. அதனால உங்க ரெசிபி ரொம்பவே நல்லா இருக்கும். நீங்க சொல்ற விதத்துல பண்ணினா எனக்கும் நல்லா வரும்னு நம்பறேன். எனக்கு கேரட் அல்வா பண்ண தெரியும். நல்லாவும் வரும் என்னை பொறுத்த வரைக்கும் :). ஆனா இது பண்ணினதில்லை, எப்படி பண்ணனும்னும் தெரியாது.
  எங்க அம்மா வீட்ல தெவச சமயல் மெனு கேட்டீங்கன்னா அவ்வளவுதான். பட்சணமே பல வகை. அதுல முக்கியமா திரட்டு பால், தேன்குழல், அல்வா, அதிரசம், எள்ளுருண்டை, பருப்புருண்டை, வாழைக்காய் சிப்ஸ் .....இப்படி மெனு போயிண்டே இருக்கும். எல்லாமே தெவசம் அன்னிக்குதான் பண்ணனும், பண்ணுவாங்க. காய்கறி மட்டும்தான் முதல் நாள் நறுக்கி வெச்சுப்பாங்க. வீட்ல அன்னிக்கு குறஞ்சது ஐம்பது பேர் சாப்பிடுவாங்க. தெவசமா, கல்யாணமான்னு இருக்கும். நானும், எங்க அண்ணாவும் அன்னிக்கு ஸ்கூலுக்கு ஜூட் விட்டுடுவோம். :)

  அப்பாதுரை, திருநெல்வேலி அல்வா வேற டேஸ்ட். இதுவேற டேஸ்ட். எனக்கு இந்த அல்வாதான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  ReplyDelete
 14. பட்சணமே பல வகை. அதுல முக்கியமா திரட்டு பால், தேன்குழல், அல்வா, அதிரசம், எள்ளுருண்டை, பருப்புருண்டை, வாழைக்காய் சிப்ஸ் .....இப்படி மெனு போயிண்டே இருக்கும். எல்லாமே தெவசம் அன்னிக்குதான் பண்ணனும், பண்ணுவாங்க. காய்கறி மட்டும்தான் முதல் நாள் நறுக்கி வெச்சுப்பாங்க. வீட்ல அன்னிக்கு குறஞ்சது ஐம்பது பேர் சாப்பிடுவாங்க. தெவசமா, கல்யாணமான்னு இருக்கும். நானும், எங்க அண்ணாவும் அன்னிக்கு ஸ்கூலுக்கு ஜூட் விட்டுடுவோம். :)//

  அதே, அதே, இங்கேயும் அதே கதை தான். அல்வா, திரட்டுப்பால், பயத்தம் உருண்டை, தேன்குழல்,வடை, அதிரசம், எள்ளுருண்டை, மூணு வறுவல்னு போதும்டா சாமினு ஆயிடும். :)))) இப்போல்லாம் வரவங்க சாப்பிட முடியறதில்லைனு சொல்றாங்க என்பதால் திரட்டுப்பால், தேன்குழல், பயத்தம் உருண்டைக்குத் தடா போட்டுட்டு மத்தது பண்ணறோம். :))))

  ReplyDelete
 15. திருநெல்வேலி அல்வாவும் கோதுமை அல்வா தான் என்றாலும் வீட்டில் செய்வதுக்கும் அதுக்கும் நிச்சயமா வித்தியாசம் இருக்கும். மீனாக்ஷி சொல்வது சரியே.

  மைசூர்பாகு சாஃப்டா இருக்கக் கூடாது அப்பாதுரை. கையால் உடைக்கவும் செய்யணும்; அதே சமயம் வாயில் போட்டால் கரையவும் செய்யணும்; உள்ளே புரையோடியும் இருக்கணும். அதான் மைசூர்ப்பாகு. :))))) கடலை மாவை வறுக்கலைனால் பச்சை வாசனையும் வரும். :))))

  ReplyDelete
 16. கோதுமை அல்வாவுக்கு நாள் முழுக்கப் பிடிக்காது. குறைந்த பட்சமாக இரண்டு மணி நேரம் ஆகும். அதற்கு மேல் வேண்டுமானால் ஆகலாம். குறைச்சு ஆகாது. கைவிடாமல் கிளறணும். வெந்நீரைக் கொதிக்க வைத்துச் சேர்த்துக் கொண்டே இருந்தால் கிளறும் நேரம் குறையும். அல்வா உள்ளேயும் நன்றாக வெந்து கொள்ளும்.

  ReplyDelete
 17. திரட்டுப் பாலைக் கூட திவசத்துக்குத்தான் செய்யணுமா? எல்லா திவசமும் செய்யக் கூடாதா?! தீபாவளி எப்போ வரும்னு காத்திருக்கலாம். திவசம் எப்போ வரும்னு காத்திருக்க வேண்டியதாப் போகுதே! சிப்ஸ், தி.பா, ஆஹா...!

  ReplyDelete
 18. திருமணமான புதிதில் ஒரு தீபாவளிக்கு ஆர்வக் கோளாறில் பல்வேறு பட்சணங்கள் செய்யத் தீர்மானித்து, அதில் ஒன்றாக கோதுமை அல்வாவும் செய்து விட்டோம். வல்லுனர்களையும் அனுபவசாலிகளையும் கேட்டுக் கேட்டு கோதுமை ஊறப் போட்டு அரைத்து அரைத்து பால் எடுத்து அல்வா செய்து, இலகுவாய், இளகியதாய், மென்மையாய், நிறமாய் மிக அழகாக வந்திருந்ததை டம்ளரில் ஊற்றி ஊற்றிக் குடித்தோம்! ருசி நல்லாத்தான் இருந்தது தெரியுமா...

  ReplyDelete
 19. ஶ்ரீராம், சிராத்தத்தில் செய்யும் தித்திப்பு பட்சணங்கள் எல்லாவற்றுக்கும் வெல்லம் தான் போடணும். தி.பா.வுக்கும் வெல்லம் தான். :))) சர்க்கரை போட்டு மற்றப் பண்டிகைகளுக்கும் செய்யலாம். எங்க மாமியார் வீட்டில் கிருஷ்ண ஜயந்திக்குத் திரட்டுப் பால் இல்லாமல் நிவேதனம் இல்லை. ஆனால் இப்போ மூணு வருஷமாக நிறுத்தியாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சு! அவர் சாப்பிட முடியாது என்பதால். :(

  அல்வாக் கிளற ரொம்பப் பொறுமை வேண்டும். :)))) சிலர் கிளறியதும் நெய்யை ஊற்றி விட்டு ஒட்டாமல் வருதுனு நினைச்சு எடுத்துடுவாங்க. அப்படி எல்லாம் எடுக்கக் கூடாது. பாத்திரத்தில் சுருண்டு வந்தால் போதாது. மொத்த அல்வாவும் கரண்டியால் கிளறுகையில் பாத்திரத்தை விட்டுத் திரும்பிக்கணும். கொஞ்சம் அல்வாவை எடுத்துத் தட்டிலே போட்டுப் பார்த்தால், "ணங்" சப்தம் வரணும். கையால் பிய்த்தால் துண்டங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கணும். :))))))

  ReplyDelete