எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, August 25, 2012

காலி ஃப்ளவர் பஜ்ஜி அல்லது பக்கோடா!

இங்கே காலிஃப்ளவர் கிடைக்கிறதில்லை.  சென்னையில் கிடைக்கும், நல்ல காலிஃப்ளவராக வாங்கிப் பூக்களாக உதிர்த்து எடுங்கள்.  குளிர்ந்த நீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துப் பூக்களை அதில் போட்டுப் பூச்சிகள் இருந்தால் எடுக்கவும்.  வெந்நீரில் போட்டால் பூக்கள் உள்ளே இருந்து வெளிவராமல் பூவினுள்ளேயே செத்துப் போகும்.  ஆகையால் எப்போதுமே குளிர்ந்த நீரில் தான் போட்டு வைக்க வேண்டும்.  இதை வடிகட்டிக் கொண்டு பூக்களில் பூச்சி இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு (பார்த்தாலே தெரியும்)  கொதிக்கும் வெந்நீரில் பத்து நிமிஷம் முதல் இருபது நிமிஷம் வரை போட்டு வைத்துப் பின் வடிகட்டிக் கொள்ளவும்.

கடலை மாவு  ஒரு கிண்ணம், அரிசி மாவு அரைக்கிண்ணம், மைதா மாவு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.  அல்லது உங்க வீட்டில் இட்லி மாவு, தோசை மாவு அரைத்தது இருந்தால் அதை இரண்டு பெரிய கரண்டியால் எடுத்துக் கொள்ளவும்.  ஒரு கிண்ணம் கடலை மாவை அதில் போட்டுக் கொண்டு கொஞ்சம் போல் உப்பு (இட்லிமாவில் உப்பு இருக்கும்) , மிளகாய்த் தூள் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயத் தூள் சேர்த்துக் கலக்கவும்.  இட்லி மாவு இல்லாதவர்கள் மேற்சொன்ன மூன்று மாவோடும் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டு நீர் விட்டுக் கெட்டியாக இட்லி மாவு பதத்துக்குக் கரைக்கவும்.

அடுப்பில் கடாயை ஏற்றிக் கொண்டு சமையல் எண்ணெயைக் காய விடவும்.  எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு பூவாகக் கடலைமாவுக் கலவையில் தோய்த்து எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.  சட்னி இல்லாமலும் சாப்பிடலாம்.  அல்லது சாஸ், புளிச் சட்னி, பச்சைச் சட்னி பிடித்தால் அதோடு சாப்பிடலாம். 

8 comments:

 1. என்ன எல்லா இடத்துலயும் சமையல் குறிப்புகள்? தொடர்ந்த மூன்றாவது குறிப்பு! சாஸ், புளிச் சட்னி, பச்சைச் சட்னி விவரமும் லேசாச் சொல்லியிருக்கலாமே... கா.பிளவர் கிடைச்சதுமே செய்துடுவோம்!

  ReplyDelete
 2. வீட்ல காலிபிளவர் இருக்கு. ட்ரை பண்ணலாமா யோசிக்கிறேன்.
  குளிர்ந்த நீரில் கழுவியெடுப்பது - உபயோகமான டிப். நன்றி.

  ReplyDelete
 3. ஏன்னு கேக்காதீங்க.. சின்ன வயசுலந்தே இந்த பஜ்ஜி, போண்டா (குணுக்கு?) எல்லாம் அப்படியே வச்சிருந்து மோர் சாதத்துக்கு சேர்த்து சாப்பிடறது தான் எனக்கு பிடிக்கும். வீட்ல திட்டுவாங்க.. ("ஆறிபோய் ஏண்டா இப்படி வேஸ்ட் பண்றே?")

  ReplyDelete
 4. பிரமாதமாக இருந்தது. மோர் சாதம்-காலிபிளவர் பஜ்ஜி சாப்பிட்டக் கையோடு பின்னூட்டம்.
  ரெசிபிக்கு ரொம்ப நன்றி.

  ReplyDelete
 5. அட?? காலிஃப்ளவருக்கு ரசிகர் கூட்டம்னு நினைச்சு வந்தால் அப்பாதுரையும் ஸ்ரீராமும் மட்டும் தான். :))))))) ஹிஹிஹி, ஏமாந்துட்டேன்.

  வாங்க ஸ்ரீராம், கொஞ்ச நாட்களா மின் தமிழில் சமையல் பத்தின பேச்சு! அதான்.

  புளிச்சட்னி, பச்சைச் சட்னி ஏற்கெனவே எழுதிட்டேன்னு நினைக்கிறேன். அதனால் என்ன, உங்களுக்காகத் திரும்பத் தரேன். ஓகேயா! காலிஃப்ளவர் சென்னையில் கிடைக்குமே! :))))

  ReplyDelete
 6. அப்பாதுரை, வாங்க, ஒரு படமும் இணைச்சிருக்கலாமோ? :))))

  எனக்கும் இந்த பஜ்ஜி, போண்டா, வடை எல்லாம் ரசம் சாதத்தோட ரொம்பப் பிடிக்கும். மோர் சாதத்துக்கும் பிடிக்கும் தான். ஆனால் நம்ம ஃபேவரிட் ரசம் தான். :))) அதுவும் உளுந்து வடையை ஜீரக ரசத்தில் போட்டு ஊற வைச்சு ரச வடையாச் சாப்பிட்டால்! ஆஹா! ஓஹோ, பேஷ், பேஷ் தான்! :)))))

  ReplyDelete
 7. ரசனைக்கு நன்றி அப்பாதுரை& ஸ்ரீராம்.

  ReplyDelete
 8. மின்தமிழ், என்ன அது?

  பின்னூட்டதுல photo எப்படி சேர்க்கறதுனு தெரியலே. எனக்கும் தோணிச்சு.. போட்டோ நல்லா இருந்திருக்கும். தங்கக் கலர்லே நல்லா வந்திருந்தது காபஜ்ஜி.

  "i would not have touched it if you told me it was cauliflower, dad" - ஆனால் பண்ணினதெல்லாம் காலியாயிடுச்சு. ஒவ்வொரு பூவா கிள்ளி எடுத்து நறுக்கி.. கொஞ்சம் சிரமமான வேலை, but it was fun. மறுபடி தேங்க்ஸ்.

  சாதத்தில் சிறந்தது மோர்சாதம் - இது என் கருத்து. இதையே வேறே விதமா சொல்வாங்க கூடப் பொறந்தவங்க.

  ReplyDelete