எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, December 1, 2012

ஓமத்தைப் பொடி செய்துவிட்டால் ஓமப்பொடியா?

அடுத்து ஓமப்பொடி தயாரிப்பு முறையைப் பார்க்கலாமா?  இதுக்குத் தேவையான பொருட்கள்

கடலை மாவு இரண்டு கிண்ணம், அரிசி மாவு ஒரு கிண்ணம், நெய் விழுது ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு, தேவையான அளவு, ஓமம் சுத்தம் செய்து ஊற வைத்து அரைத்த விழுது அல்லது மிக்சியில் செய்த பொடி ஒரு டேபிள் ஸ்பூன் வரை அவரவர் ருசிக்கு ஏற்ப. பெருங்காயம் தேவையில்லை.  மிளகாய்த்தூள் கொஞ்சம் சேர்த்து, ஓமத்தை முழுதாகப் போட்டுச் செய்கையில் பெருங்காயம் சேர்க்கலாம்.(கொஞ்சமாக), பிசையத் தேவையான நீர்.

அரிசிமாவு & கடலைமாவில் நெய்யை விழுதாகப் போட்டு உப்புச் சேர்த்து முன் சொன்னது போல் நன்கு கலக்கவும். கைக்குக் கரகரவென வருகையில் ஓம விழுது அல்லது பொடி செய்த ஓமத்தைச் சேர்க்கவும்.  நீர் விட்டு நன்கு பிசையவும்.  தேன் குழல் அச்சில் பொடிப் பொடியாக ஓமப்  பொடி பிழியும் அச்சில் பிசைந்த மாவைப் போட்டு பரவலாகப் பிழியவும்.  இது சீக்கிரம் வெந்துவிடும்.  ஆகவே உடனடியாக எடுக்க வேண்டும்.  இல்லை எனில் கறுத்து விடும்.  ஓமம் நிறையச் சேர்த்தால் குழந்தைகளுக்குத் தாராளமாய்க் கொடுக்கலாம்.  இதற்கும் தேவையான மாவை முன் கூட்டியே கலந்து கொள்ளாமல் கொஞ்சம் கொஞ்சமாகவே கலந்து கொள்ளவும்.  அப்போது தான் எல்லாம் ஒரே நிறமாக வரும்.

மிளகாய்ப் பொடி சேர்த்துச் செய்யும் ஓமப் பொடிக்கு மிளகாய்த் தூள் இரண்டு டீஸ்பூன் போட்டால், ஓம விழுது அல்லது பொடி செய்த ஓமத்தை இரண்டு டீஸ்பூன் போடலாம்.  இவை எதுவுமே போடாமல் கடலைமாவு, அரிசி மாவு ஒரு கிண்ணத்திற்குப் பதிலாக அரைக்கிண்ணம் சேர்த்து உப்பு, நெய் சேர்த்துப் பிசைந்து செய்யும் ஓமப் பொடியைத் தயிர்வடை, பேல்பூரி, அவல் உப்புமா போன்றவற்றில் மேலே தூவிக் கொள்ளலாம்.  சாட் வகையறாக்களிலும் தூவிக் கொள்ளலாம்.

8 comments:

 1. ஏனோ இதுவரை வீட்டில் செய்ததில்லை! பெரிய விருப்பம் இல்லாததும் காரணமோ என்னமோ! :))

  ReplyDelete
 2. வாங்க ஸ்ரீராம், ஓமப்பொடி செய்யவும் சுலபம், சாப்பிட அதைவிட சுலபம். அந்தக் காலம் எனச் சொல்லப்படும் சிறு வயதில் வீட்டில் டிஃபன் இல்லைனா அப்பா ஓரணா கொடுப்பார். பைசாக்கள் அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் ஆன காலம். எனக்கு ஆறு வயதுக்குள்ளாக இருக்கலாம். அப்போ அந்த ஓரணாவில் மேலாவணி மூல வீதி மேல கோபுரத் தெருவில் திரும்பும் முக்கில் இருந்த பக்ஷணக் கடையில் அரை அணாவுக்கு ஓமப்பொடி வாங்கிச் சாப்பிடுவோம் நானும், என் அண்ணாவும், தம்பியும். மிச்சம் அரை அணாவை சேமிப்போம். :)))) இப்போ அரை அணாவும் கிடையாது. பத்து ரூபாய்க்குக் குறைந்து எந்தக் காரமும் வாங்கவும் முடியாது. :(

  ReplyDelete
 3. வாங்க அப்பாதுரை, இல்லை பின்னே! :)))))))

  ReplyDelete
 4. அரையணாவுக்கு எத்தனை ஓமப்பொடி கொடுத்தார்கள்? மூணு பேருக்கும் சேர்த்தா இல்லை ஆளுக்கு அரையணாவா? சில சமயம் செழிப்பு என்பதன் அர்த்தமே மாறிவிட்டதோ என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 5. ஓமம் விழுது போட்டுத்தான் செய்வோம். பொடிபோட்டு செய்ததில்லை.செய்து பார்க்கின்றேன்.

  ReplyDelete
 6. ஆளுக்கு அரையணா அப்பாதுரை. அது வரும் குறைந்த பட்சமாக 50 கிராமுக்குக் குறையாது. இப்போல்லாம் அந்த மாதிரி எங்கே கிடைக்குது! அந்தக் கடையில் சர்க்கரைப் பாகில் ஊறின தித்திப்புச் சேவும் கிடைக்கும் பாருங்க, டேஸ்டோ டேஸ்ட்!

  ReplyDelete
 7. ஊற வைத்து அரைத்தால் விழுது. அதையே பொடி செய்தால் பொடி. ருசியில் ஒண்ணும் மாற்றம் இருக்காது மாதேவி. முயன்று பாருங்க.

  ReplyDelete