எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, September 2, 2010

கொஞ்சம் லேட்டாயிடுச்சு, அதனால் என்ன?? தட்டை எப்போ வேணா சாப்பிடலாமே!

படம் நம்மது இல்லைங்க, இன்னிக்கு ஒருத்தர் கேட்டாங்க, அதனால் கூகிளார் கிட்டே கடன் வாங்கின படம் தான்.
தட்டை செய்முறை.

பொதுவாகத் தட்டையாக இருப்பதால் தட்டை என்றழைக்கப்படும் இதைத் தஞ்சை ஜில்லாவில் தட்டைச் சீடை என்றும், சேலம் பக்கம் தட்டு வடை என்றும் சொல்லப் படுவதுண்டு. செய்முறைகளும் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறினாலும் பொதுவாகத் தேவைப்படுவது அரிசி மாவு.

இரண்டு கப் அரிசி மாவு, (அரிசியைக் களைந்து சிறிது நேரம் ஊற வைத்துப் பின் வெளியில்மெஷினில் கொடுத்தோ அல்லது, வீட்டிலேயே மிக்சியிலேயோ அரைத்துச் சலித்து வைத்துக்கொள்ளவும்.

உளுந்து மாவு: உளுந்தை வெறும் சட்டியில் சிவப்பாக வறுத்து அரைத்துக்கொள்ளவேண்டும். இரண்டு கப் அரிசி மாவுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து மாவு போதும். உளுந்து மாவு அதிகம் போனால் தட்டை கரகரப்பு இருக்காது.

பொட்டுக்கடலை மாவு: இது போட்டால் தான் தட்டை கரகரப்பு இருக்கும். சிலர் போடாமலும் செய்கின்றனர். பொட்டுக்கடலை மாவு ஒரு டேபிள் ஸ்பூன். பொட்டுக்கடலையை வெறும் சட்டியில் வறுத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

உப்பு: தேவையான அளவு

தேங்காய்: பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன்.

கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் ஊற வைத்து நீரை வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

மிளகாய்ப் பொடி அல்லது மிளகாய் வற்றலை நீரில் ஊற வைத்து அரைத்துக் கொண்டது அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப.

பெருங்காயப் பொடி : ஒரு டீஸ்பூன்

நீர் மாவு பிசையத் தேவையான அளவு.

வெண்ணெய் அல்லது நெய், ஒரு டேபிள் ஸ்பூன். இத்தோடு எள் , வேர்க்கடலைப்பருப்பு எல்லாம் சேர்ப்பது அவரவர் விருப்பத்தைப் பொருத்து.

பொரிக்க எண்ணெய் கால் கிலோ வானும் தேவைப்படும்.

வெண்ணெயோ நெய்யோ சேர்க்காதவர்கள் பிடிக்காதவர்கள், சமையல் எண்ணெயையே கொஞ்சம் காய வைத்து மாவில் விட்டுக்கலாம்.

அரிசி மாவு, உளுத்த மாவு, பொட்டுக்கடலை மாவை ஒன்றாய்ச் சேர்த்து உப்புக் கலந்து, காரப்பொடி அல்லது மிளகாய் விழுது, பெருங்காயப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். வெண்ணெய் அல்லது நெய்யைச் சேர்த்து மீண்டும் கலக்கவும். எண்ணெய் சேர்ப்பவர்கள் வாணலியில் எண்ணெய் புகை வரும் வரை காய வைத்து மாவில் கொட்டிக் கலக்கவும். இப்போது தேவையான அளவுக்கு நீரைச் சேர்த்து மாவை நன்கு பிசையவும். பிசைந்த மாவைச் சிறு எலுமிச்சம்பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.

சற்று நேரம் வைத்திருந்து விட்டுப் பின் அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெயை ஊற்றிக் காய வைக்கவும். எண்ணெய் காய்ந்து புகை வரும்போது அடுப்பைத் தணித்துவிட்டு, பிசைந்து வைத்த மாவில் உருண்டைகளாகச் செய்து வைத்திருப்பதை, ஒரு துணி அல்லது பேப்பரில் தட்டையாக வட்டமாகத் தட்ட வேண்டும். மாவு கையில் ஒட்டாமல் இருப்பதற்குக் கொஞ்சம் எண்ணெய் தொட்டுக்கொள்ளவும். தட்டின தட்டையை ஒரு தோசைத் திருப்பியால் எடுத்துக் காயந்த எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். ஒரே சமயத்தில் நாலைந்து தட்டைகளைப் போட்டுப் பொரிக்கலாம். முன் கூட்டியே தட்டி வைத்துக்கொள்ளலாம்.

பின்னர் கரகரப்பு மாறாதிருக்கும்படி காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வைக்கவும். ஒரு மாதம் ஆனாலும் கெடாது.

2 comments:

 1. ஆமாம் கீதாம்மா ;எங்கள் ஊரில் (மேட்டூர் அணை ;சேலம் மாவட்டம் ) தட்டு வடை ரொம்ப
  பிரசித்தம் ;முதலில் அடிகடி வீட்டில் செய்வோம் ;இப்போது ஒரு பாட்டிம்மா அவரே செய்து வீடுகளுக்கு
  வினியோகிக்கிறார் .ஹி ஹீ நாங்கள் செய்வதை விட அவர் செய்வதே சுவையாக இருக்கிறது
  நல்ல பகிர்வு கீதாம்மா

  ReplyDelete
 2. ம்ம்ம்ம், நீங்கள் சொல்வது சரியே, பெரும்பாலும் இப்போதெல்லாம் வெளியிலேயே வாங்கறாங்க. நான் கூடியவரை தவிர்த்துவிடுவேன். கல்யாணங்களில் கொடுப்பதுதான் தவிர்க்கமுடியாது! :))))))

  ReplyDelete