இந்த வருஷம் ஏதும் எழுதலையோனு நினைச்சேன். ஹிஹிஹி, இங்கே வந்தே அத்தனை மாதங்கள் ஆகின்றன. ஆனால் மார்ச் 21 ஆம் தேதி வரை எழுதி இருக்கேன். அதன் பின்னர் தான் கால் வலி/குடும்பப் பிரச்னைகள்/மனச்சோர்வு/மறுபடி கால் வலி/வீக்கம்/படுக்கைனு ஆகிவிட்டது. இப்போக் கொஞ்ச நாட்களாகப் பரவாயில்லை என்றாலும் அதிக நேரம் உட்கார்ந்தால் காலில் லேசாக வீங்க ஆரம்பிக்கிறது. ஆகவே கொஞ்சம் பயமாகவும் இருக்கு. என்றாலும் இன்னிக்குக் கட்டாயமாய் இங்கே வந்தாவது பார்க்கணும்னு வந்துட்டேன். இப்போதைக்குப் புதுசா எதுவும் போடலை. ஆனால் இரண்டு நாட்கள் முன்னர் செய்த ஒரு திப்பிச வேலையைப் பத்தி மட்டும் சொல்லிட்டுப் போயிடறேன்.
நான் எப்போவுமே எதுவும் வீணாகாதபடிக்குக் கொஞ்சமாச் சமைச்சாலும் சில/பல சமயங்கள் மிஞ்சத் தான் செய்கிறது. போன வாரம் ஞாயிறன்று அவரைக்காய் போட்டு சாம்பார் வைத்திருந்தேன். எப்போதும் வைப்பதை விடக் கொஞ்சமாக வைத்திருந்தாலும் அது என்னமோ மிஞ்சி விட்டது. அதை அப்படியே வைச்சுச் சூடு பண்ணி விட்டு எடுத்து வைச்சுட்டேன். மறுநாள் என்ன சமைப்பது என வழக்கமான மண்டை காய்தல். யோசிச்சேன். நம்ம ரங்க்ஸ் கேட்டார் என்ன சமையல்னு! நேத்திக்கு சாம்பார் தான்னு சொல்லிட்டேன். அதை அப்படியே வைச்சுச் சாப்பிடவும் யோசனை. ஆகவே இரண்டு பெரிய வெங்காயம் நறுக்கிக் கொண்டேன். சின்ன வெங்காயம் இருந்தாலும் அதை உரிச்சு, வதக்கி வேக வைக்க நேரம் எடுக்குமே! கொஞ்சமாய் நீர்ப்புளிக் கரைசல் அரைக்கிண்ணம். ஒரு மி.வத்தல், ஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை, ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, வெந்தயம் அரை டீஸ்பூன், சின்னத் துண்டு லவங்கம், ஏலக்காய் ஒன்று,தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் தேங்காய் எண்ணெயில் வறுத்து அரைத்துக் கொண்டேன். அரைக்கரண்டி பருப்பைக் குழைய வேக வைத்துக் கொண்டேன்.
கல்சட்டியைப் போட்டுத் தேங்காய் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கிக் கொண்டு நீர்ப்புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விட்டேன். பின்னர் நேற்றைய சாம்பாரை அதில் சேர்த்துக் கொண்டேன். நன்றாகக் கொதிக்க வைத்தேன். பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்கும்போதே சமைத்த சாதத்தோடு குழைந்த பருப்பையும் சேர்த்துக் கலந்து கொண்டேன். தளதளவெனக் கொதித்தது. நல்ல வாசனையும் வந்தது. பின்னர் இரும்புக்கரண்டியில் நெய்யைத் தாராளமாக ஊற்றிக் கொண்டூ கடுகு மட்டும் போட்டுப் பாதி மி.வற்றல், கருகப்பிலை, பெருங்காயத் தூள் போட்டுத் தாளித்துச் சாதத்தில் விட்டுக் கலக்கிவிட்டுக் கொத்துமல்லித் தழையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தேன். சாம்பார் சாதம் தயார். ரசம் வைத்துவிட்டுப் பாகற்காயை வதக்கிவிட்டு அது போறாதோனு சந்தேகத்தில் இரண்டு அப்பளங்களும் பொரித்து எடுத்துக்கொண்டு அன்னிக்குப் பாட்டை ஒப்பேத்தியாச்சு. இதே போல் வத்தக் குழம்பு மிஞ்சினால் புளியஞ்சாதம் மாதிரி மாற்றலாம். அதைப் பின்னர் பார்ப்போமா? அன்னைக்கு என்னமோ உடம்பு கொஞ்சம் ஒரு மாதிரி இருந்ததால் படங்கள் எல்லாம் எடுத்துப் போடலை. ஆனால் புதிதாகச் செய்யும் சாம்பார் சாதம் போலவே அமைந்திருந்தது. இன்னொரு முறை இந்தத் திப்பிசம்பண்ணும்போது படங்கள் மட்டும் எடுத்துப் போடறேன்.
பாதி படித்துக்கொண்டிருக்கும்போதே வித்தியாசமான சாம்பார் வைக்கிறாரே.. இது மிஞ்சினால் மறுநாள் இதை என்ன செய்வார் என யோசிக்க ஆர்ம்பித்துவிட்டேன். ஹா ஹா
ReplyDeleteஹாஹாஹா, நெல்லை, அப்படி மிஞ்சும்படி எல்லாம் பண்ணுவதில்லை. எப்போவானும் தான்.
Deleteபல சமயங்களிலும் சாம்பார் கொஞ்சமாய் மிஞ்சினால் ராத்திரிக்குச் சப்பாத்தி பண்ணிக் காய்களைச் சேர்த்துக் கூட்டாக மாற்றிடுவேன். மோர்க்குழம்பு மிஞ்சினால் அன்னிக்கு தஹி ஆலு தான். வற்றல் குழம்பு எனில் அன்னிக்கு ராத்திரி அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமானு ஏதானும் பண்ணினால் அல்லது கிச்சடி பண்ணினாலும் செலவாகிடும்.
Deleteசாம்பார் சாதம்..அருமையான ஐடியாதான். இந்த பட்டை லவங்கம்தான் கொஞ்சம் இடிக்குது
ReplyDeleteநெல்லை, பட்டையும் கிராம்பும் (நான் பொதுவாக லவங்கம் எனப்படும் கிராம்பு அதிகம் சேர்ப்பதில்லை. உணவு காரமாகிவிடும்.) இல்லாமலும் செய்யலாம்.
Deleteகாலைல செய்த பருப்புக் குழம்பு (நான் கிச்சன் இன்சார்ஜா இருக்கும்போது) மிஞ்சினால் தோசை, பருப்பு குழம்பு சாயந்தரம் சாப்பிடுவேன். எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
ReplyDeleteசாத்துமது, பருப்பு குழம்பு மிஞ்சினால் மனைவியை சப்பாத்தி பண்ணச் சொல்லி அதனுடன் தொட்டுப்பேன் (என் உணவு 6 மணிக்கு முன்னர் முடிந்துடும்). ஆனா பாருங்க.. பசங்களுக்கு 8 மணிக்கு சப்பாத்திக்கு நல்ல சைட்-டிஷ் பண்ணுவா... எனக்குக் கடுப்பாயிடும். குழம்பு/ரசம் இருக்கேன்னு பாவம்னு ஐடியா கொடுத்தால் எனக்கே வம்பா முடியும். 5 மணிக்குள்ள நல்ல சைட்-டிஷ் பண்ணுவது கஷ்டம். அவங்களும் 9 மணிக்குத்தான் சாப்பிடுவாங்க. இப்படிப் போகுது என் கதை
சப்பாத்திக்குத் தொட்டுக்கும் சப்ஜி வகைகளை முன் கூட்டியே செய்துக் காசரோலில் போட்டு வைச்சுக்கலாமே. நீங்களும் சாப்பிடும்போது போட்டுக்கலாம். ஆனால் பருப்புக்குழம்பை எல்லாம் சப்பாத்திக்கு சைட் டிஷாகவும் மாற்றலாம், ஒருத்தருக்கும் சொல்லாமல் தான்.
Deleteஅடடா.புது சாம்பார் சாதம் பிரமாதம்.
ReplyDeleteஇங்கேயும் கார்த்தால ஒண்ணு. சாயந்திரம் ஒண்ணு என்று
செய்வதால் மிஞ்சுவது ஏகம்.
வத்தக் குழம்பும் பருப்பு சேர்த்த கீரையும் மிச்சம்.
நாமளும் இது மாதிரி செய்து விடலாம்.
நன்றியோ நன்றி கீதாமா. நலமுடன் இருங்கள்.
கீரையை எல்லாம் சப்பாத்திக்கு சைட் டிஷாக மாற்றிடலாம் ரேவதி. வத்தக்குழம்போடு கொஞ்சம் புளியோதரைப் பொடி சேர்த்துப் புளியஞ்சாதமாக மாற்றலாம்.
Deleteசாம்பார் மிஞ்சினா இவ்வளவு வேலை செய்யணுமா? எங்க பாஸ் lentil soup என்று சாம்பாரை குடித்துவிடுவார். இல்லாவிட்டால் அடுத்த நாள் காலை பொங்கல் செய்து இந்த சாம்பாரையும் அதற்கு துணை வைப்பார்.
ReplyDeleteவத்தல் குழம்பு நாள் ஆகத்தான் சுவை கூடும். 5 நாள் உபயோகிக்கலாம். அல்லது திருநெல்வேலி காரர்கள் செய்வது போன்று சாதத்தில் பருப்பு போட்டு அதன் மேல் வத்தல் குழம்பையும் ஊற்றி சாப்பிடலாம்.
ஜெகே அண்ணா அதே அதே எங்கள் வீட்டில் பருப்பு போட்டு நெய் விட்டு வ கு ஊற்றிச் சாப்பிடும் பழக்கமும் உண்டு.
Deleteகீதா
பொதுவாகவே புளி கொஞ்சமாச் சேர்ப்பேன். அரைக்கிலோ ஒரு மாதத்துக்கு அதிகம். இப்போவோ மருத்துவர் என்னைப் புளி சேர்க்காதே என்கிறார். ஆகவே இந்த மாதிரிக் குடிப்பதெல்லாம் சரியா வராது. வயிற்றுப் பிரச்னைகள் வேறே வரும். அன்னிக்கே சாயந்திரம் மிஞ்சினதுக்கு ஏற்றதாகச் சமைத்துவிடுவேன் அநேகமா. எப்போவானும் தான் இப்படி.
Deleteபருப்பு சாதம் தமிழர்கள் அனைவருக்கும் பழக்கமான ஒன்று.
Deleteகீதாக்கா ஆஹா அவரைக்காய் போட்ட சாம்பார். திப்பசம் சூப்பர்.
ReplyDeleteநம் வீட்டிலும் கிட்டத்தட்ட இதே போலத்தான் ஒரு வேளை மீந்துவிட்டால்....என்ன காய் போட்டாலும் ஒரு வேளை மீந்துவிட்டால், காயைப் பொருத்து அதோடு வேறு காய்கள் போட்டு சாம்பார் சாதம், கதம்ப சாதம் அல்லது வெங்காயம் போட்டு கிரேவி சப்பாத்திக்கு
வழக்கமான பொங்கல் அல்லது சிறுதானிய பொங்கல் செய்துவிடுவவது வழக்கம்.
நன்றி கீதாக்கா
கீதா
வாங்க கீதா. அவரைக்காய் சாம்பார் அதிலும் அதில் உள்ள பருப்புக்களோடு சாப்பிட்டால் ருசியோ ருசி. இப்போக் கொஞ்ச நாட்களாக நம்ம வீட்டில் சிறுதானிய சீசன் இல்லை. :)))))
Deleteவற்றல் குழம்பு அல்லது சுண்ட வைத்த புளிக்குழம்பு போல் செய்வதை ஒரு வாரமேனும் வைத்திருந்தாலும் நன்றாக இருக்கும் ஏனென்றால் அது ஊற ஊறத்தான் நன்றாக இருக்கும் நான் சொல்வது வெந்தயம் போட்டுச் செய்யும் சுண்ட வைத்த புளிக்குழம்பு/வத்தக் குழம்பு.
ReplyDeleteசுண்டைக்காய் போட்டுச் செய்யும் வற்றல் குழம்பு நம் வீட்டில் செய்வது உப மிவ நமி வறுத்துப் பொடி செய்து கூடவே வாசனைக்குக் கருகப்பிலையும் சேர்த்துப் பொடித்துப் போட்டுச் செய்வது.
கீதா
ம்ம்ம்ம், சுண்ட வைத்தால் அந்தக் குழம்பு சுண்டக்குழம்பா? நாங்கல்லாம் சுண்டைக்காய் வற்றல் போட்டால் தான் சுண்டைக்காய்க்குழம்பு என்போம். சில சமயம் நானும் இந்தப் பொடி வறுத்துச் சேர்த்துக் குழம்பு பண்ணுவது உண்டு. என்னதான் மாற்றி மாற்றிப் பண்ணினாலும் சமயங்களில் என்ன சமைப்பது என்று மண்டை காயும்.
Deleteரசமும் சாம்பாரும் சேர்ந்து மிஞ்சினால் இரண்டையும் சேர்த்தது பமி கரி,கொத் போட்டு தேவைப்பட்டால் வெங்காயம் சேர்த்து கொதிக்கவைத்து இறங்குவோம். அதற்கு சொதி என்று பெயர் சொன்னார்கள் (தஞ்சையில்)
ReplyDeleteபொங்கலன்னிக்குப் பண்ணும் தனிக்கூட்டுக்காய்கள், ரசம், தனிக்கூட்டு ஆகியவற்றை எல்லாம் சேர்த்து இப்படித் தான் கொதிக்க வைத்துச் சுண்ட வைப்போம். என் மாமியார் இதைத் தான் எரிசேரி(அவங்க சொல்வது எரிச்சேரி) என்பார். நாங்கல்லாம் சேனை, வாழை போட்டுப் பண்ணுவதை எரிசேரி என்போம். சொதி செய்முறை வேறே இல்லையோ!
Deleteஆம். அது அதிகாரபூர்வ சொதி!
Delete:)))))
Deleteசாம்பார் மட்டும் மிஞ்சும் பட்சத்தில் அதை மறுநாள் வாணலியில் இட்டு கொஞ்சம் சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்து சுண்டவைப்போம். தொடர்ந்து கிளறிக்கொண்டே இருப்போம். கொஞ்சம் நல்லெண்ணெய் இட்டு சுருள வதக்கி அல்வா பதத்துக்கு வந்ததும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கி வைத்து விடுவோம். என் மகன்கள் ஏனோ இதை சக்தி மாசாலாக் குழம்பு என்பார்கள். மற்றவர்கள் சுண்டக்குழம்பு என்பார்கள். என் அப்பா இதற்கு பெரும் ரசிகர். "ம்மா... செய்யும்போதே இப்படி பழங்குழம்பு செய்ய முடியாதா?" என்பார்!
ReplyDeleteஎன்னோட பெரிய நாத்தனார் இப்படிச் செய்வார். அதை ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் போட்டுச் சாப்பிடச் சொல்லுவார். மத்த 2 பெண்களுக்கும், பையருக்கும், அவங்க இருவருக்கும் மட்டும் புதிய குழம்பு. அந்தப் பெண்ணும் வாய் திறக்காமல் ரசிச்சே சாப்பிடுவாள். அவள் தான் இப்போ அம்மாவைப் பார்த்துக்கறா. கஷ்டங்களில் உதவுகிறாள்.
Deleteஅச்சச்சோ... புதுக்குழம்பை விட நல்ல ருசியா இருக்கும் அது... அந்த நன்றியில்தான் அவரும் அம்மாவைப் பார்த்துக்கறாங்க போல...!!
Deleteஎன்னவோ! ஆனால் இந்தப் பெண் கொஞ்சம் கறுப்பு என்பதால் சாணி சேகரித்து எருமுட்டை தட்டுவது, வெயிலில் வடாம் பிழிவது, கடைகளுக்குச் செல்வது எல்லாம் இந்தப் பெண் தலையில். "இதுக்கு மேலே நீ கறுப்பாக முடியாது! அதனால் நீயே செய்" என அம்மாவே சொல்வார். ஆனால் அந்தப் பெண் அம்மா என்றால் அன்பு என உருக்கமோ உருக்கம். :))))
Deleteவெந்தயக்குழம்பு, வத்தக் குழம்புகளை சும்மா சூடு செய்தால் போதும். ஆனால் சென்ற வாரம் அதையும் சுண்ட வைத்து மகன்களுக்கு போட்டபோது ரசித்தார்கள்.
ReplyDeleteஆமாம், எங்க பையருக்கும் இது பிடிக்கும். எனக்கு முதல்நாள் பண்ணின அரிசி உப்புமாவோடு முதல் நாள் பண்ணின வத்தக்குழம்பு (வற்றல் போட்டது) தொட்டுக் கொண்டு சாப்பிடப் பிடிக்கும்.
ReplyDeleteசமையல் பதிவுகளுக்கு மட்டும் உடனடியாகக் கருத்துச் சொல்லறவங்க மற்றப் பதிவுகளுக்கு ஏன் அப்படி வரதில்லை?
ReplyDeleteஏன் வர்றதில்லை?
Deleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஏன் வரதில்லைனு நீங்க தான் சொல்லணும். சுஜாவுக்கு இப்போப் பரவாயில்லையா? எழுந்து கொண்டு விட்டாளா?
Deleteசமையல் பதிவுன்னா எல்லாருக்கும் கருத்து சொல்ல முடியும். அப்படி இல்லாமல் 12ம் நூற்றாண்டில் கிள்ளிவளவன் கையில் வாளுடன்... என்று எழுதினால் அதற்கு என்ன கருத்து போடுவாங்க? அப்படியும் இல்லாமல், 60களில் எழுத்தாளர் புனிதம், இலக்கியத்தில் ஆற்றிய பணி என்றெல்லாம் எழுதினீங்கன்னா, போனாப் போறதுன்னு நான் மட்டும் வந்து 'ஆஜர்' என்று சொல்லணும்
Deleteஹாஹாஹா, சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லணும். இங்கே வந்து புலம்பல்! இஃகி,இஃகி, இஃகி!
Deleteகாலை முதல் எல்லா தளங்களிலும் நான் ரோபோ இல்லை என்று உறுதி கொடுக்க வேண்டி இருந்தது. மூன்று கமெண்ட்ஸ்க்கு மேல் கொடுத்தால் டிராபிக் லைட், இரு சக்கர வாகனம் என்றெல்லாம் அடையாளம் காட்ட வேண்டி இருக்கிறது!
ReplyDeleteசொல்லாதீங்க! ரோபோ காதிலே விழுந்துடப் போகிறது. ஒரு வாரமாக் கண்ணிலேயே படலை. இல்லைனா எங்கேயானும் ஒளிந்து கொண்டு மிரட்டும். :P :P
Delete