எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, October 4, 2019

பாரம்பரியச் சமையலில் உடுப்பி ரசம்!

Image result for மிளகாய் வற்றல்  Image result for தனியா

மைசூர் ரசம் இப்போ என்னோட செய்முறையில் பார்க்கலாமா? நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்

புளி ஒரு எலுமிச்சை அளவுக்குக் கரைத்து இரண்டு கிண்ணம் ஜலம் எடுத்துக்கொள்ளவும்.
உப்பு தேவைக்கு, பெருங்காயம் ஒரு தூண்டு,மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
தக்காளி தேவையானால் ஒன்று
வறுத்து அரைக்க
மிவத்தல் 2, துவரம்பருப்பு இரண்டு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், ஜீரகம் ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் இரண்டு டீஸ்பூன்
துவரம்பருப்புக் குழைந்தது ஒரு கரண்டி நீர் விட்டுக் கரைத்து வைக்கவும்.
தாளிக்க நெய்: கடுகு, மி.வத்தல், கருகப்பிலை, கொத்துமல்லி!

புளி ஜலத்தை உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம், தக்காளி போட்டுக் கொதிக்க வைக்கவும்.கருகப்பிலை, கொத்துமல்லியையும் நறுக்கிச் சேர்க்கலாம். வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு சிவக்க வறுத்துக் கொண்டு தேங்காய்த் துருவலையும் வறுத்துக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும். ரொம்ப நைசாகவும் இல்லாமல் கொரகொரப்பாகவும் இல்லாமல் நிதானமாக அரைக்கலாம்.

ரசம் புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்த விழுதைப் போட்டு ஒரு கொதி விட்டுக் கொண்டு பருப்புக் கரைத்த நீரை விட்டு விளாவவும். அடியில் தங்கி இருக்கும் பருப்பு விழுதைப் போட வேண்டும் என அவசியம் இல்லை. போட்டாலும் தப்பில்லை. ரசம்  அடியிலிருந்து கலக்கினாலும் கரண்டியால் எடுத்து ஊற்றும்படி ஒரே மாதிரி இருக்கும். வேண்டுமெனில் தெளிவாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் துவரம்பருப்பு வைப்பதால் ரசம் முதலில் சொன்ன மாதிரி கெட்டியாக இருக்காது. ஒரு சிலர் வெந்தயமும் வைத்து அரைப்பார்கள். அது அவரவர் விருப்பம். இதே ரசத்தை முதலில் சொன்னமாதிரி கடலைப்பருப்பு வைத்து அரைத்தாலும் கெட்டியாக  வேண்டாம் எனில் கடலைப்பருப்பின் அளவைக் குறைத்துக் கொண்டு மிளகின் அளவை அதிகரிக்கலாம்.

{பொதுவாகவே ரசமோ, குழம்போ செய்தாலும் சரி, பொடி வகைகள் செய்தாலும் சரி, சாம்பார், ரசத்துக்கு வறுத்தாலும் சரி கடலைப்பருப்பைச் சேர்த்தால் காரம் குறைவாக இருக்கும். ரசமோ, சாம்பாரோ அது கெட்டியாக இருக்கும். அடை, வடை போன்றவற்றில் கடலைப்பருப்பு அதிகமானால் காரம் குறைவாக இருப்பதோடு அடையும், வடையும் கொஞ்சம் மெத்தென்றும் இருக்கும். கரகரப்பு வேண்டுமெனில் துவரம்பருப்புச் சேர்க்க வேண்டும். துவரம்பருப்பு நிறமும் அதிகம் கொடுக்கும்.}

ரசம் நன்கு பொங்கி வந்த பின்னர் கீழே இறக்கிக் கொத்துமல்லி தூவி நெய்யில் கடுகு, மிவத்தல், கருகப்பிலை தாளிக்கலாம்.  பூண்டு சேர்ப்பவர்கள் இந்த ரசத்திலேயே பூண்டை வதக்கிச் சேர்க்கின்றார்கள் அல்லது பாதிப்பூண்டை வதக்கிச் சேர்த்துப் பாதியை அரைக்கும் சாமான்களோடு சேர்த்து அரைத்துச் சேர்க்கின்றனர்.

Image result for துவரம்பருப்பு Image result for மிளகு

அடுத்துக் கர்நாடகா மைசூர் ரசம். இதை உடுப்பி ரசம் என்கின்றனர். உடுப்பி ரசப்பொடி என இந்த ரசத்தை செஃப் வெங்கடேஷ்  பட் அவர்கள் தொலைக்காட்சியில் செய்து காட்டினார். இதற்குச் சேர்க்கும் மிளகாய் தனி ரகம் என்கின்றார் அவர்.மிளகாய் சிறியதாகக் கொஞ்சம் சுருங்கிக் காய்ந்த நிலையில் இருக்கின்றது. அதோடு ரசப்பொடிக்கு வறுக்கத் தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்த வேண்டும் என்றும் சொன்னார். இந்த ரசம் பல முறை வைத்துப் பார்த்தேன். நன்றாகவே இருக்கிறது. இப்போது செய்முறை.

Image result for ஜீரகம்
புளி முன் சொன்னது போல் எலுமிச்சை அளவுக்கு எடுத்துக்கொண்டு ஊற வைத்து நீர் விட்டுக் கரைக்க வேண்டும். இரண்டு கிண்ணம் எடுத்துக் கொள்ளவும். உப்பு தேவையான அளவுக்கு. மஞ்சள் பொடி கால் டீஸ்பூன். (இதற்கு மஞ்சள் பொடி கட்டாயம் போட்டால் நல்லது) பெருங்காயம், கருகப்பிலை, கொத்துமல்லி, தக்காளி, பச்சை மிளகாய் ஒன்று, வெல்லம் சிறிதளவு தேவையானால்

தாளிக்க நெய் கடுகு, மிவத்தல், கருகப்பிலை, (கொத்துமல்லி தேவையானால்)

குழைய வேக வைத்த துவரம்பருப்பு அரைக்கிண்ணம்

உடுப்பி ரசப்பொடி தயாரிக்கத் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 3, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், ஜீரகம் ஒரு டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், கருகப்பிலை ஒரு டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் இரண்டு டீஸ்பூன். எல்லாவற்றையும் தேங்காய் எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு நன்கு பொன் நிறத்துக்கு வறுத்து மிக்சி ஜாரில் போட்டுப் பொடியாக வைத்துக்கொள்ளவும்.

புளி ஜலத்தை உப்பு, தக்காளி, கருகப்பிலை, கொத்துமல்லி, பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். புளி வாசனை போகக் கொதித்ததும் பொடித்து வைத்த ரசப்பொடியைச் சேர்த்து ஒரு கொதி விடவும். வாசனை தூக்கலாகத் தெரியும். ஓர் கொதி வந்ததும் குழைய வேக வைத்த பருப்பை நீர் விட்டுக் கரைத்து ரசத்தில் விடவும். ரசம் கொதித்து நுரைத்து வரும்போது தேவையானால் வெல்லம் தூளாக ஒரு டீஸ்பூன் சேர்க்கவும். கீழே இறக்கிக் கொண்டு நெய்யில் கடுகு, மி.வத்தல், கருகப்பிலை தாளி த்துக் கொண்டு விரும்பினால் கொத்துமல்லி தூவவும்.

Thursday, October 3, 2019

பாரம்பரியச் சமையலில் இன்னொரு வகை எலுமிச்சை ரசம், மைசூர் ரச வகைகள்!

எலுமிச்சை ரசம் பாசிப்பருப்புச் சேர்த்து! பாசிப்பருப்பு அரைக்கரண்டி குழைய வேக வைத்துக் கொண்டு அதில் நீர் விட்டுக் கரைக்கவும். தக்காளியை முன் சொன்ன மாதிரி வெந்நீரில் போட்டுச் சாறை எடுத்துக் கொள்ளவும். தக்காளிச்சாறில் உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிடவும். கருகப்பிலை, கொத்துமல்லி கொதிக்கும்போது போட்டால் வாசனை என்பதோடு சத்தும் அதில் சேரும். ஆகவே நான் அதையும் போடுவேன். ரசப்பொடியோ, சாம்பார்ப் பொடியோ போடாமல் துவரம்பருப்பு, மிளகு, ஜீரகம் வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். ரசம் நன்கு கொதித்த பின்னர் பாசிப்பருப்புக் கரைத்த நீரை அதில் விட்டு விளாவவும். மேலே பொங்கி வருகையில் வறுத்த பொடியைப் போட்டு நெய்யில் கடுகு, மி.வத்தல் ஒன்று, ஜீரகம் தாளிக்கவும். எண்ணெய் அல்லது நெய்யில் பெருங்காயப் பொடியும் போட்டுக்கொள்ளலாம். கொத்துமல்லித் தழை பொடியாக நறுக்கிச் சேர்த்துவிட்டு எலுமிச்சைச் சாறு குறைந்தது அரை மூடி எலுமிச்சம்பழச் சாறு பிழியவும். இந்த ரசம் கஞ்சியில் விட்டுச் சாப்பிட நன்றாக இருக்கும். உடல் நலமில்லாதவர்கள் சூப் மாதிரி இந்த ரசத்தைக் குடிக்கலாம்.அப்போது பாசிப்பருப்போடு சேர்த்துப் போட்டு இன்னும் கொஞ்சம் நீர் விட்டு விளாவிக் குடிக்க எடுத்துக் கொள்ளலாம். மிளகு கொஞ்சம் தூக்கலாக இருந்தால் நல்லது. குழைவான சாதத்திலும் இந்த ரசத்தை விட்டு ரசம் சாதமாகச் சாப்பிடலாம்.

இதையே பொடி போட்டும் பண்ணலாம். பொடி போடுகையில் ஒரு டீஸ்பூன் மட்டும் பொடி போட்டுப் பாதி பச்சை மிளகாயும் போட்டுக் கொதிக்கவிட்டுப் பருப்பு ஜலம் விட்டு விளாவிக் கொண்டு பின்னர் பொங்கி வருகையில் முன் சொன்னமாதிரி மிளகு, ஜீரகப் பொடியைக் கொஞ்சமாகச்சேர்க்கலாம். மிளகு, ஜீரகப் பொடி ஒரு டீஸ்பூன் வரை போடலாம். தக்காளி புளிப்பு, எலுமிச்சை புளிப்பு இரண்டுக்கும் இது ஒத்துப் போகும்.

வறுத்து அரைத்த எலுமிச்சை ரசம். தேவையான பொருட்கள்

தக்காளி பழுத்ததாக நான்கு. முன் சொன்னமாதிரி வெந்நீரில் போட்டுத் தோலை உரித்துக் கொண்டு சாறு எடுத்துக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் சாறு இருக்கலாம்

உப்பு தேவைக்கு, பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி, கருகப்பிலை, கொத்துமல்லி, பச்சை மிளகாய் சின்னதாக ஒன்று தேவையானால்

வறுத்து அரைக்க, மி.வத்தல் இரண்டு, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு, துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன், மிளகு , ஜீரகம் வகைக்கு அரை டீஸ்பூன். எல்லாவற்றையும் சமையல் எண்ணெயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அல்லது அரைத்துக் கொள்ளவும்.

துவரம்பருப்புக் குழைய வேக வைத்தது அரைக்கிண்ணம் எடுத்து நீரில் கரைத்துக் கொள்ளவும்.

தக்காளிச் சாறில் உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்துக் கருகப்பிலை, கொத்துமல்லி போட்டுக் கொண்டு நன்கு கொதிக்கவிடவும். வேகவைத்த துவரம்பருப்பு நீரைத் தேவையான அளவுக்கு விளாவவும். விளாவும்போதே அந்த நீரிலேயே அரைத்து/பொடித்து வைத்ததைப் போட்டு விளாவலாம். அல்லது அரைத்து/பொடித்து வைத்ததைப் போட்டு விட்டுப் பின்னர் விளாவலாம். விளாவியதும் நுரை வரும்வரை அடுப்பில் வைத்துக் கீழே இறக்கி நெய்யில் கடுகு, ஜீரகம், கருகப்பிலை தாளித்துக் கொத்துமல்லித் தூவவும். எலுமிச்சைச் சாறைச் சேர்க்கவும்.

இந்த எலுமிச்சை ரசம் ஒவ்வொருத்தர் புளியும் விட்டு எலுமிச்சையும் பிழிந்து தக்காளியும் போட்டுப் பண்ணுகின்றனர். அது ரசமும் கெட்டியாக இருக்கும். புளிப்பும் அதிகமாக இருக்கும். ரசவாங்கி பண்ணினால் கூடப் புளியும் விட்டு எலுமிச்சையும் பிழிகின்றனர். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ருசி!


மைசூர் ரசம் முதல் வகை: இது என் மாமியார் அடிக்கடி பண்ணுவது. இந்த மைசூர் ரசம் பண்ணும்போது சாம்பார் பண்ண மாட்டார்கள். சாம்பாருக்குப் போடும் அத்தனை பருப்பும் ரசத்துக்குப் போடுவார்கள். பொதுவாக நானெல்லாம் சாம்பாரிலேயே பருப்பைக் கண்ணிலே தான் காட்டுவேன். ரசத்துக்கு பருப்புக் கரைத்த நீர் தான். அந்த மாதிரி ரசம் பண்ண மாட்டாங்க! கெட்டியாகவே இருக்கும் அதிலும் மைசூர் ரசம் என்றால் கேட்கவே வேண்டாம். என் புக்ககத்தில் பொதுவாக ரசமே பிடிக்காதவங்க இந்த ரசம் மட்டும் பருப்பு அதிகம் போடுவதாலோ என்னமோ சாப்பிடுவார்கள். அன்று காயும் பண்ணாமல் அப்பளம் பொரிப்பார்கள்.

நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்: புளி ஓர் எலுமிச்சை அளவுக்கு, உப்பு தேவைக்கு, தக்காளி, விரும்பினால் 1 அல்லது 2 சேர்க்கலாம். பெருங்காயம் புளி ஜலத்திலோ அல்லது வறுக்கும்போதோ சேர்க்கலாம். கருகப்பிலை( என் புக்ககத்தில் கருகப்பிலையை ரசம் கொதிக்கையில் போட மாட்டார்கள். கடைசியில் தாளிக்கையில் தான் இலையை மட்டும் உருவிச் சேர்ப்பாங்க! நான் ஆர்க்கோடு கிள்ளிக் கொதிக்கையில் போடுவேன்.) சாம்பார்ப் பொடி/ரசப்பொடி ஒரு டீஸ்பூன். (என் புக்ககத்தில் எல்லாவற்றுக்கும் பொடி சேர்ப்பாங்க! அது அரைச்சு விட்ட சாம்பாரானாலும் சரி, அரைத்து விட்ட ரசம், ஜீரக ரசம் போன்ற எதுவானாலும் பொடி கட்டாயமாய்ச் சேர்க்கணும். ஆகவே அந்த முறையையே இங்கே சொல்கிறேன்.

வறுக்க: மி.வத்தல் 2, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், மிளகு அரை டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், ஜீரகம் பச்சையாகக் கொஞ்சம் போல். தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன். எல்லாவற்றையும் எண்ணெயில் வறுத்து நன்கு நைசாக அரைக்காமல் கொஞ்சம் கொரகொரப்பாகவே அரைக்கவும்.

பருப்பு இதற்கு அதிகமாகப் போடுவார்கள். இந்த அளவுக்கு ரசத்துக்கு ஒரு கிண்ணம் குழைய வேக வைத்த பருப்புச் சரியாக இருக்கும். புளி ஜலத்தில் பொடி, உப்பு, பெருங்காயம், தக்காளி சேர்த்துப் பொடி வாசனை போகக் கொதித்ததும் வெந்த பருப்போடு (கரைப்பதில்லை) அரைத்த விழுதையும் சேர்த்துக் கொண்டு ரசத்தில் சேர்க்கவும். நன்கு கலக்கவும், இல்லைனா அரைத்த விழுது கட்டி, கட்டியாக ஆகிவிடும். பின்னர் தேவையான அளவுக்கு நீரைச் சேர்க்கவும். ரசம் ஓரளவுக்குக் கெட்டியாகவே இருக்கும். கடைசியில் மேலே பொங்கி வருகையில் நெய்யில் கடுகு, மி.வத்தல், கருகப்பிலை,
தாளித்துக் கொத்துமல்லியையும் சேர்க்கவும். இது நல்ல கெட்டியாக இருக்கும். கொஞ்சமானும் சாதத்தில் நெய் ஊற்றிக்கொள்ளாமல் சாப்பிடவும் முடியாது. கிட்டத்தட்ட சாம்பாருக்கு மாற்று.

நான் செய்யும் முறையை அடுத்த பதிவில் பார்க்கலாம். 

Tuesday, October 1, 2019

பாரம்பரியச் சமையலில் பருப்பு ரசம், மைசூர் ரச வகைகள்!

நாம இப்போப் பார்க்கப் போவது அன்றாடம் வைக்கும் பருப்பு ரசம். இதை அநேகமாக தினம் தினம் வைப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் மாற்றி மாற்றித் தான் வைப்பேன். பருப்பு ரசம் வாரம் ஒரு முறை சாம்பாருக்குப் பருப்புப் போடும்போது வைப்பேன். அல்லது பாசிப்பருப்புப் பொரிச்ச குழம்பு, கூட்டு, மொளகூட்டல் வகைகளுக்குப் போட்டிருந்தால் அன்னிக்கு எலுமிச்சம்பழ ரசம் பாசிப்பருப்புப் போட்டு வைப்பேன். ஆனால் நம்மவருக்கு எலுமிச்சை ரசத்தில் பாசிப்பருப்புப் போட்டால் பிடிக்கிறதில்லை. துவரம்பருப்புப் போட்டுத் தான் வைக்கச் சொல்லுவார். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதையும் பார்ப்போம். இப்போப் பருப்பு ரசம் சாதாரணமாகச் செய்வது. பருப்பு ரசம்னு பெயரே தவிர இதற்குப் பருப்பை வேக வைத்து நிறையச் சேர்க்கக் கூடாது. பொதுவாகவே ரசம் தெளிவாக இருக்க வேண்டும். கெட்டியாக இருக்கக் கூடாது. அப்புறமா சாம்பாருக்கும் ரசத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போய் விடும். ஆகவே பருப்புக் கரைத்த நீரைத் தான் ரசத்தில் விட்டு விளாவ வேண்டும். நான்கு பேருக்கான பருப்பு ரசம் செய்முறை.

Image result for tomato

படத்துக்கு நன்றி கூகிளார்

புளி எலுமிச்சை அளவு எடுத்துக் கொண்டு ஊற வைத்துக் கரைத்துக் கொண்டு இரண்டு கிண்ணம் எடுத்துக் கொள்ளவும்.
உப்பு தேவையான அளவு, பெருங்காயம் ஒரு சின்னத்துண்டு. ரசப்பொடி ஒன்றரை டீஸ்பூன், பச்சை மிளகாய் தேவையானல் சின்னதாக ஒன்று அல்லது பாதி, கருகப்பிலை, கொத்துமல்லி பொடியாக நறுக்கி ஒரு டீஸ்பூன் வகைக்கு, தக்காளி சின்னதாக ஒன்று அல்லது நடுத்தரமான தக்காளியில் பாதி போட்டால் போதும்.
துவரம்பருப்புக் குழைய வேகவைத்ததில் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்த பருப்பில் நீர் விட்டுக் கரைத்து வைத்துக்கொள்ளவும்.

புளி ஜலத்தை ரசம் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டு உப்பு, கருகப்பிலை, தக்காளி, பாதி பச்சை மிளகாய், பெருங்காயம், ரசப்பொடி சேர்த்துக் கொதிக்க வைக்கவும். புளி வாசனை போக ரசம் கொதித்ததும் கரைத்து வைத்துள்ள பருப்பு ஜலத்தை விட்டு விளாவவும். அடியில் கெட்டியாகப் பருப்புத் தங்கி இருக்கும். அதைச் சேர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பிடித்தவர்கள் ரசம் மண்டியாக வேண்டும் என்பவர்கள் சேர்க்கலாம். விளாவியதும் ரசம் பொங்கி நுரைத்து வரும்போது கீழே இறக்கி நெய்யில் கடுகு, கருகப்பிலை தாளித்துக் கொட்டி இன்னும் கொஞ்சம் கொத்துமல்லித் தழை தூவவும். கொத்துமல்லி இலையை மட்டும் சிலர் போடுவார்கள். அதில் வாசனையும் இருக்காது. சத்தும் குறைவு. தண்டு இருந்தால் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். நல்ல வாசனையாக இருக்கும். இதையே தக்காளி போடாமலும் பருப்பு ரசமாக வைக்கலாம். அவரவர் வீட்டு வழக்கம், விருப்பம் போன்றவற்றைப் பொறுத்து அது செய்து கொள்ளலாம்.

பருப்புப் போட்ட மிளகு ரசம். பொதுவாகக் கல்யாணங்களில் மிளகு வாசனையோடு நீர்க்க ரசம் வைத்து ஊற்றுவார்கள். அவர்கள் பருப்புப் போடவில்லை என அர்த்தம் இல்லை. அடியில் தங்கி இருக்கும். மேலாக எடுத்துப் பரிமாறுவார்கள். ஆனால் ரசப்பொடினு அதிகம் போடாமல் கொஞ்சம் போல் மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி போட்டு விட்டு நிறைய மிளகு ஜீரகம் பொடி செய்து போட்டு இருப்பார்கள். ரசம் மிளகு வாசனையோடு நன்றாக இருக்கும். அதற்கு முன்னர் சொன்ன அளவில் புளி ஜலம் எடுத்துக் கொண்டு ரசப்பொடி போடாமல் மற்ற சாமான்களோடு மஞ்சள் பொடி, அரை டீஸ்பூன் மி.பொடி, அரை டீஸ்பூன் தனியாப்பொடி போட்டுக் கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பருப்பு ஜலத்தைப் பருப்போடு சேர்த்து விளாவிக் கொண்டு நுரைத்து வந்ததும் கீழே இறக்கும்போது மிளகு, ஜீரகம் நன்கு பொடித்துச் சேர்த்துப் பின்னர் நெய்யில் தாளித்துக் கருகப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும். பரிமாறுகையில் தெளிவாக ரசத்தை எடுத்துப் பரிமாறிக் கொண்டு பின்னர் தேவைப்படும்போது அடியில் உள்ள வண்டலிலேயே மேற்கொண்டு நீர்க்கப் புளி ஜலம் விட்டுத் தக்காளி சேர்த்து அதிகம் தேவைப்படும்போது ரசத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்.

Image result for எலுமிச்சம்பழம்

படத்துக்கு நன்றி கூகிளார்

எலுமிச்சம்பழ ரசம் முதல் முறை: தக்காளியை வெந்நீரில் ஊற வைத்துக் கொண்டு தோலை உரித்துக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டு அடித்துச் சாறாக எடுத்துக் கொள்ளவும். வெந்த துவரம்பருப்பு நீரையும் அதோடு சேர்த்துக் கொண்டு ஒரு டீஸ்பூன் ரசப்பொடி, ஒரு பச்சைமிளகாய் (விருப்பமுள்ளவர்கள் இஞ்சி சேர்க்கலாம். நான் சேர்ப்பதில்லை), பெருங்காயம், கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துப் பொடி வாசனை போகக் கொதிக்க விடவும். கருகப்பிலை, கொத்துமல்லியை ரசம் கொதிக்கையில் போட்டால் வாசனை அதிகமாக இருப்பதோடு அவற்றின் சத்தும் ரசத்தில் சேரும். பின்னர் தேவையான ஜலத்தை விட்டு விளாவிக்கொண்டு நுரைத்து வரும்போது நெய்யில் கடுகு, ஜீரகம் தாளித்துக் கொண்டு கொத்துமல்லிப் பொடியாக நறுக்கிச் சேர்த்துவிட்டு நல்ல எலுமிச்சம்பழமாக இருந்தால் அரை மூடி எலுமிச்சைச் சாறும் சின்ன எலுமிச்சையாக இருந்தால் ஒரு பழத்தின் சாறையும் சேர்க்கவும். இதிலேயே மிளகு, ஜீரகப் பொடியும் சேர்க்கலாம்.