ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோடு பதிந்திருக்கிறேன். இதுவும் எங்கள் ப்ளாகில் ஒரு "திங்க"ற கிழமைக்கு வந்ததே! சுட்டி கீழே!
தக்காளி சாதம். ராகேஷ் ரகுநாதன் செய்முறையில். ஒரு சில மாற்றங்கள் உண்டு.
பொதுவாகத் தக்காளி சாதம் நான் எப்படிப் பண்ணி இருக்கேன் எனில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் வதக்கிக் கொண்டு அதில் சாம்பார்ப் பொடி, உப்புச் சேர்த்துக் கொத்துமல்லி, புதினா இலைகளைச் சேர்த்துச் சமைத்த சாதத்தில் இந்த தக்காளி மசாலாவுக்குத் தேவையானதைப் போட்டுக் கலந்து விடுவேன்.
இன்னொரு முறையில் தக்காளியை மட்டும் வதக்கிக் கொண்டு அதற்குப் பச்சை மிளகாய், காரப்பொடி, தனியாப் பொடி சேர்த்துக் கொஞ்சம் போல் கரம் மசாலா அல்லது ஏலக்காய், கிராம்பு தாளித்துக் கொண்டும் பண்ணி இருக்கேன். இதிலும் கொத்துமல்லி, புதினா இலைகள் சேர்ப்பேன். பல ஆண்டுகள் முன்னர் என் மாமி தேங்காய்ப் பாலும், தக்காளி+வெங்காயம்+பூண்டை அரைத்துக் கொண்ட மசாலாவை நன்கு வதக்கியும் தேவைப்பட்ட மசாலா சாமான்கள் தாளிதத்தில் சேர்த்து பாஸ்மதி அரிசியை ஊற வைத்து அதில் சேர்த்து உப்புச் சேர்த்துக் குக்கரில் வைத்திருந்தார். அதுவும் நன்றாக இருந்தது. ஆனாலும் நான் அப்படிப் பண்ணவே இல்லை. இப்போ சமீபத்தில் நம்ம ரங்க்ஸ் ராகேஷ் ரகுநாதனின் வீடியோவைப் பார்த்துட்டு இந்த மாதிரித் தக்காளிச் சாதம் ஒரு நாள் பண்ணு என்றார்.
சரினு நேற்றுப் பண்ணினேன். அதற்குத் தேவையான பொருட்கள்.
பாஸ்மதி அரிசி ஒரு கிண்ணம் சுமார் 200 கிராம்
தக்காளி இரண்டை எடுத்துக் கழுவி அதன் கண்ணை எடுத்துவிட்டுப்பின்னர் வெந்நீரில் ப்ளாஞ்சிங் செய்து வைக்கவும். சிறிது நேரம் கழித்து தோலை உரித்துக் கொண்டு தக்காளியை மிக்சி ஜாரில் போட்டு நன்கு அடித்துச் சாறாக எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒன்றிரண்டு தக்காளித்துண்டுகள் மசியலைனாப் பரவாயில்லை. எடுத்த தக்காளிச் சாறு கீழுள்ள படத்தில்/
தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பாஸ்மதி அரிசி ரொம்பவும தண்ணீர் தாங்காது என்பதால் ஒரு கிண்ணத்துக்குள்ளாகத் தேங்காய்ப் பால் இருக்கட்டும். ஆதலால் தேங்காய் கொஞ்சமாகவே இருக்கட்டும். நான் சின்னதாக ஒரு பாதி மூடி எடுத்துக் கொண்டேன்.
வெங்காயம் ஒன்று நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய்.
இங்கே ஒரு வெங்காயம் நறுக்கி வைச்சிருக்கேன். தேங்காய்ப் பால் எடுக்கத் தேங்காய், நறுக்கிய பச்சை மிளகாய், ப்ளாஞ்சிங் செய்திருக்கும் தக்காளிகள், பாத்திரத்தில் ஊறும் அரிசி ஆகியவை மேலே காணலாம்.
இஞ்சி தேவையானால் ஒரு சின்னத் துண்டு. பூண்டு சேர்ப்பவர்கள் இஞ்சியையும், பூண்டையும் சிதைத்துக் கொள்ளவும். \
கொத்துமல்லி, புதினா இலைகள் பொடியாக நறுக்கியது வகைக்கு ஒரு மேஜைக்கரண்டி. என்னிடம் புதினா இல்லை என்பதால் கொத்துமல்லி மட்டும் கடைசியில் தூவினேன். வதக்கும்போது சேர்க்கலை.
தாளிக்க எண்ணெயும் நெய்யுமாக ஒரு மேஜைக்கரண்டி
ஏலக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, தேஜ்பத்தா என்னும் மசாலா இலை. இதில் கிராம்பு ராகேஷ் சேர்க்கலை. அதே போல் சோம்பு, ஜீரகமும் சேர்க்கலை. நான் இவை சேர்த்தேன். பச்சை மிளகாயையும் இஞ்சியையும் போட்டு வதக்கிக் கொண்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கினேன்.
மிளகாய்த் தூள் கால் தேக்கரண்டி(காரமாக இருப்பதால் கொஞ்சமாகப் போட்டேன்._
ஒரு தேக்கரண்டி தனியாப் பொடி
அரைத்தேக்கரண்டி மஞ்சச்ள் பொடி (கரம் மசாலாப் பொடி தேவையானால் சேர்க்கலாம். நான் சேர்க்கலை) கொத்துமல்லி, புதினா இலைகளை வெங்காயம் வதக்கினதும் சேர்க்கிறாங்க. அது உங்களுக்குப் பிடித்தால் சேர்க்கலாம். நான் சேர்க்கலை. வெங்காயம் வதங்கியதும் தக்காளிச் சாறைச் சேர்த்தேன். அதில் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடி சேர்த்துத் தக்காளி ப்யூரியை நன்கு சுண்டும்படி கொதிக்க விட்டேன். கொதித்துச் சேர்ந்து வரும்போது மேலே எண்ணெய் பிரியும்.
மேலே சொன்ன கலவையில் ஒரு கிண்ணம் தேங்காய்ப் பால் சேர்த்தது மேலே காணும் படத்தில்
வெந்த சாதம் குக்கரில். பாஸ்மதி அரிசியை குறைந்தது அரை மணி நேரமாவது ஊற வைத்துவிட்டுப் பின்னர் சமைத்தால் அரிசி நீளமாகவும், மிருதுவாகவும் வேகும்.பொதுவாக வெந்நீர் கொதிக்கவிட்டு ஒரு கிண்ணம் சேர்ப்பது உண்டு. ஆனால் இதில் தேங்காய்ப் பால் சேர்ப்பதால் ஒரு கொதி விட்ட பின்னர் குக்கரை மூடுகிறோம். சாதம் மிருதுவாகவே இருக்கும்.