எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, July 22, 2020

பாரம்பரியச் சமையலில் பிசைந்த சாதம் வகைகள்!

கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகப் போகிறது இங்கே பதிவு போட்டு. ரொம்பவே தாமதம் ஆகிறது. தொடர்ந்து போட நினைச்சாலும் உட்கார முடியாமல் என்னென்னவோ வேலைகள். மின் வெட்டு! இத்யாதி, இத்யாதி! இன்று எப்படியானும் போட்டுடணும்னு உட்கார்ந்தேன். அதுவே இத்தனை நேரம் ஆகிவிட்டது. பாயச வகைகள் ஒரு வழியாக முடிந்தன. இனி பிசைந்த சாதம் வகைகளைப் பார்ப்போம். முன்னெல்லாம் ஆடிப்பெருக்கு, கணு ஆகிய நாட்களில் மட்டும் பிசைந்த சாதம் பண்ணுவார்கள். அல்லது வீட்டில் சமாராதனை போன்ற விசேஷங்களில் வைதிகர்கள் சாப்பிட்டால் ஏதேனும் பிசைந்த சாதம் பண்ணுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் தினமும் கூடப் பிசைந்த சாதம் ஏதேனும் ஒன்று பண்ணிவிடுகிறார்கள். முக்கியமாய்க் குழந்தைகளுக்கு இதான் பிடிக்கிறது. அவங்களுக்கு மத்தியானம் சாப்பிடவும் சௌகரியமாக இருக்கிறது. புதுமையான பிசைந்த சாதங்களைப் பார்க்கும் முன்னால் நாம் பாரம்பரியமான பிசைந்த  சாத வகைகளைப் பார்ப்போம்.

முதலில் வெல்ல சாதம்:-

நான்கு பேர்கள் சாப்பிட வெல்ல சாதத்துக்கு ஆழாக்கு அரிசி 200 கிராம் களைந்து சாதத்தை உதிரியாக வடித்துக்கொள்ளவும். நான்கைந்து சாதங்கள் பண்ணினால் இவ்வளவு அரிசி தேவை இல்லை,  மொத்தமாகச் சாதம் தேவையானதை வைத்து விட்டு அதில் இருந்து ஒரு கிண்ணமோ ஒன்றரைக்கிண்ணமோ சமைத்த சாதம் எடுத்துக்கலாம். இதற்குத் தேவையான சாமான்கள்.

தேங்காய் நடுத்தரமான மூடி எனில் ஒன்று

வெல்லம் தூள் செய்தது ஒரு கிண்ணம். நீரில் கரைத்து வடிகட்டி வைப்பதானால் வைத்துக் கொள்ளலாம். ஆனால் தேங்காயில் போட்டுக் கிளறும்போது நீண்ட நேரம் கிளறும்படி ஆகி விடும். ஆகவே ஒரு கரண்டி நீரில் கரைத்துக் கொண்டு கல், மண் இருந்தால் அகற்றிவிடலாம்.

ஏலக்காய்த் தூள் ஒரு தேக்கரண்டி. நெய் ஒரு மேஜைக்கரண்டி.  இதற்கு அதிகம் நெய் தேவை இல்லை. என்றாலும் கொஞ்சம் நெய் ஊற்றிக் கிளறினால் வாசனையாக இருக்கும்.

வாணலியில் அல்லது உருளியில் வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். தேங்காயும் வெல்லமும் சேர்ந்து கிளறியது பூரணமாக வரவேண்டும். நல்ல உதிரான பூரணமாக வந்ததும் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். சமைத்து உதிர்த்து வைத்திருக்கும் சாதத்தை இதில் போட்டு நெய் சேர்த்துக் கிளறவும். அடுப்பு எரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அடுப்பை அணைத்துவிட்டே கிளறிச் சேர்க்கலாம். சாதமும் பூரணமும் நன்கு கலந்த பின்னர் அதைச் சிறிது நேரம் ஊறவிட்டுப் பின்னர் பரிமாறவும்.

அடுத்து வடநாட்டு முறையில் கேசரி பாத் அல்லது கேசர் பாத். கேசரிக் கலர் சேர்ப்பதால் இந்தப் பெயர். இதற்கும் உதிராக வடித்த சாதம் ஒரு கிண்ணம் தேவை.
அரைக்கிண்ணம் சர்க்கரை (வெள்ளைச் சர்க்கரை) தேங்காய்த் துருவல் அரைக்கிண்ணம், ஏலக்காய்த் தூள் ஒரு தேக்கரண்டி, முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தா போன்றவை நெய்யில் வறுத்தது இரண்டு மேஜைக்கரண்டி. நெய் ஒரு மேஜைக்கரண்டி. உணவுக்குச் சேர்க்கும் நிறமி. கேசரிக்கலரில் ஒரு சிட்டிகை

சர்க்கரையை ஓர் வாணலியில் போட்டுக் கொஞ்சமாக நீர் விட்டுக் கிளறிக்கொண்டே தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும். இரண்டையும் நன்கு கிளறவும். சேர்ந்து வரும்போது நெய்யையும், கேசரிக்கலரையும் சேர்க்கவும். உதிரி சாதத்தையும் இதில் போட்டுச் சேர்த்துக் கிளறவும். நன்கு கிளறியதும் நெய்யில் வறுத்த பருப்புக்களைச் சேர்க்கவும்.

நேரடியாகச் சாதத்திலேயே சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கேசரி நிறப் பொடியையும் சேர்த்துக் கிளறலாம். உங்களுக்கு எது வசதியோ அது மாதிரிச் செய்யவும். தேவையானால் இதற்குச் சுண்டக் காய்ச்சிய பாலையும் சேர்க்கலாம்.

எள் சாதம் தித்திப்பு வகை. உதிராக வடித்த சாதம் ஒரு கிண்ணம்

இரண்டு மேஜைக்கரண்டி எள்ளைக் களைந்து கல் அரித்து வெறும் வாணலியில் போட்டு வெடிக்கவிட்டு எடுத்துக் கொள்ளவும். எள்ளிற்கு அதிகம் வெல்லம் தாங்காது. ஆகவே ஒரு மேஜைக்கரண்டியில் முக்கால் பாகம் வெல்லத்தூளோடு வறுத்த எள்ளையும் தேங்காய்த் துருவல் ஒரு மேஜைக்கரண்டியும் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டுப் பொடிக்கவும். ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். இதில் தேவையான அளவுக்கு எடுத்து உதிரிச் சாதத்தில் போட்டுக் கலக்கவும். சுவையான தித்திப்பு வகை எள் சாதம் தயார்.

30 comments:

  1. கலந்த சாதம் என்று எழுதறதுக்குப் பதிலா பிசைந்த சாதம்னு எழுதிட்டாங்களோ? இந்தப் பெயரை இதுவரை கேள்விப்பட்டதில்லையே

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம், நாங்க பிசைந்த சாதம் என்றே சொல்லுவோம். பேச்சு வழக்கில் உள்ளதை எழுத்திலும் சொல்லி இருக்கேன். எங்க வீட்டிலே எல்லாம் பிசைந்த சாதம் தான்.

      Delete
  2. நீங்க எழுதியதில், எள் சாதம்தான் நான் சாப்பிட்டிருக்கேன். எனக்கு மிகவும் பிடித்த சாதம். ஆனால் நீங்கள் சொல்லுமளவு வெல்லமோ, தேங்காயோ போடமாட்டார்கள் (அல்லது அப்படிச் சாப்பிட்டதில்லை).

    என் மனைவி எப்போதும் எள் சாதம் காரமாகத்தான் பண்ணுவார். ஆனால் திருமணத்துக்கு முன்பு எள் சாதம் என்றால் தித்திப்பாக (லைட் இனிப்பு. காரம் அறவே இல்லை) சாப்பிட்டுத்தான் வழக்கம். அதனால் இப்போது எனக்குப் பண்ணும்போது இனிப்பாகத்தான் பண்ணுவார்.

    ReplyDelete
    Replies
    1. சமாராதனைக்குப் பண்ணுவதில் வெறும் எள் மட்டும் போட மாட்டாங்க! கொஞ்சம் தேங்காய்த் துருவலும் சேர்ப்பாங்க.

      எனக்கும் கல்யாணம் ஆகி வந்து தான் எள் சாதம் காரம் போடுவது பற்றித் தெரியும். அநேகமாய் சனிக்கிழமைகளில் என் மாமியார் எள் சாதம், மோர்க்குழம்பு பண்ணுவார். தோசை மிளகாய்ப் பொடிக்கு எள் சேர்ப்பதும் கல்யாணம் ஆகி வந்து தான். என் பிறந்த வீட்டில் எள் சேர்ப்பதே ச்ராத்தம் அன்று மட்டும்.

      Delete
  3. கொழுக்கட்டைக்கு உள்ள பூரணத்தை சாதத்தில் கலந்தால் நன்றாக இருக்குமா? அது என்ன... சர்க்கரைப் பொங்கல் போலவும் இல்லாமல், இனிப்பு கலந்த சாதம்? இதுவரை சாப்பிட்டதில்லை.

    ReplyDelete
    Replies
    1. பதினெட்டாம் பெருக்கு அன்று சர்க்கரைப் பொங்கலோ, பாயசமோ எங்க வீடுகளில் பண்ண மாட்டார்கள். என் மாமியார் வீட்டிலும் சரி, பிறந்த வீட்டிலும் சரி வெல்ல சாதம் தான். இதே பூரணத்தை வைத்துச் சேவைக்கும் வெல்ல சேவையாகப் பண்ணுவோம். பூரணத்தோடு நன்கு கலந்து நெய் சேர்த்ததும் உதிர் உதிராக இருக்கும்.

      Delete
    2. //http://geetha-sambasivam.blogspot.com/2012/09/blog-post_6315.html// இங்கேயும் உங்க கருத்து இருக்கு. வெல்லப் பூரணம் கிளறி சேவையைச் சேர்த்துக் கலக்கச் சொல்லி இருக்கேனே!

      Delete
  4. பாயசத்தில் எல்லாம் எழுதினமாதிரி நினைவில்லையே... எதுக்கும் ஒரு தடவை புரட்டிப் பார்த்து எதையாவது மிஸ் செய்திருக்கிறீர்களா என்று பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் சாப்பிட்ட, எனக்குத் தெரிந்த பாயச வகைகளை மட்டுமே எழுதி இருக்கேன். மற்றவை இருக்கலாம். ஆனால் பண்ணிப் பார்க்கமலோ, சாப்பிட்டுப் பார்க்காமலோ எப்படி எழுதுவது?
      ஃபிர்னி என்ற ஒரு பாயச வகை வடக்கே பாஸ்மதி அரிசியில் பண்ணுவார்கள். ஏலக்காய், கசகசா, லவங்கம், தேஜ் பத்தா, இலவங்கப்பட்டை எல்லாம் போடுவாங்க. அதை எல்லாம் ஓட்டல்களில் சாப்பிட்டிருக்கேன். அதை எப்படி இங்கே எழுதுவது?

      Delete
  5. நீங்க எழுதியிருக்கற மாதிரி, ஆடிப்பெருக்கு, கனு அன்று - ஆகிய இரு நாட்களில்தான் கலந்த சாதம் பண்ணுவார்கள்.

    பெரும்பாலும் பசங்களுக்கு கலந்த சாதம் பிடிப்பதில்லை.

    நான்லாம் சின்ன வயதுல கலந்த சாதம்னா ரொம்ப ஆவலுடன் தட்டைப் போடுவேன். கலந்த சாதத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்தது உருப்படியாக பண்ணிய எலுமி சாதம் (நிறையபேர் எலுமியை ரொம்பவே பிழிந்து கசப்புச் சுவை வரவைப்பாங்க. இல்லைனா நிறம் மாத்திரம் மஞ்சளா இருக்கும், எலுமி வாசனையே இருக்காது), தேங்காய் சாதம், எள் சாதம், உளுந்து சாதம் போன்றவை. புளியோதரைலாம் அவ்வளவாகப் பிடிப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் கலந்தசாதம் எனப்படும் பிசைந்த சாதம் எப்போதுமே உண்டு. முன்னெல்லாம் கூட்டுக் குடும்பமாக இருந்தப்போ இந்த மாதிரி சாதம் கலந்தாலும் ஏதேனும் குழம்பு, ரசம் இருக்கணும். என் மாமியார் இந்தக் கலந்த சாதமெல்லாம் எப்போவுமே ரசம் சாதத்துக்கு அப்புறமாத் தான் போட்டுப்பாங்க. நானோ குழம்பு வைக்காமல் அதற்கு மாற்றாகப் பண்ணுவேன். கலந்த சாதம் ஏதேனும் பண்ணிட்டு ரசம், கூட்டு அல்லது ஏதேனும் கறி அல்லது அப்பளம் பொரிப்பது என எளிமையான சமையலா இருக்கும்.

      Delete
    2. //எப்போதும் உண்டு// - திருமண விருந்தில் ரசத்துக்கு அப்புறம் ஒரு கலந்த சாதம் (அனேகமா புளியோதரை), காராசேவுன்னு போடுவாங்க. என்னடா இது சம்பந்தமே இல்லாம என்று தோணும். நீங்க தினப்படி சமையல்ல உண்டுன்றீங்க. பெண்களைத்தான் எவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்காங்க! (அவங்களும் சும்மா இல்ல. சமையல் செய்து நம்மைப் படுத்தியிருக்காங்க ஹா ஹா)

      Delete
    3. என்னோட மாமியார் தான் ரசத்துக்கு அப்புறமாச் சாப்பிடணும்னு சொல்லுவாங்க. நாங்கல்லாம் குழம்பே விட்டுக்காமக் கலந்த சாதம்/பிசைந்த சாதத்தை முதல்லே சாப்பிட்டுடுவோம். அதுக்கே அவங்க கேலியாப் பார்ப்பாங்க! எங்க பக்கத்துக் கல்யாணங்களிலே இப்போத் தான் சில காலமாக் கல்யாணத்தன்று புளியோதரை போடறாங்க. முன்னெல்லாம் கிடையாது. ஐயங்கார் கல்யாணங்களில் தான் புளியோதரை, காராச்சேவுனு போடுவாங்க. பரிமாறும்போதே தெரியும் ஐயங்கார் கல்யாணம்னு!

      Delete
  6. கலந்த சாதம் என பொதுவாக சொல்வதையே பிசைந்த சாதம் எனச் சொல்வார்களோ முன்னர்? இதில் இரண்டு மூன்று வகைகள் சுவைத்ததுண்டு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், ஒருவேளை இது தென்மாவட்டத்து வழக்குச் சொல்லாக இருக்கலாம். கலந்த சாதம்னு நான் பொதுவாகச் சொன்னதில்லை.

      Delete
  7. தினமும் கலந்த சாதம் என்றால், எலுமிச்சம் சாதம், புளியோதரை செய்வார்கள் போல...   எங்கள் வீட்டில் எல்லாம் சாதம் விட்டு நாங்கள்தான் கலந்து கொள்கிறோம் - குழம்பு சாதம், ரசம் சாதம், மோர் சாதம் என!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், நான் கத்திரிக்காய் சாதம், தக்காளி சாதம், தக்காளித் தொக்கு சாதம், மாங்காய் சாதம், பட்டாணி சாதம், கொத்துமல்லி, புதினா சாதம்னு எல்லா விதமும் பண்ணுவேன். அதோடு சம்பா சாதமும் பண்ணுவது உண்டு. ஜீரா ரைஸ், வெங்காயம் மட்டும் தாளித்துக்கொண்டு சாதம் எனப் பண்ணுவேன். காய்கள் வசதியாக இருந்தால் வெஜிடபுள் பிரியாணி அல்லது புலவ் பண்ணுவது உண்டு. ஆனால் எங்க இருவருக்கு அது அவ்வளவாய்ச் செலவு ஆகாது. காய்களை நறுக்கி அரை வேக்காட்டில் பாதியை உப்புச் சேர்க்காமல் எடுத்து வைத்துக் கொண்டு விடுவேன். மீதம் காய்களில் கொஞ்சமாக மசாலா சேர்த்துக் கொண்டு சாதத்தை வடித்து அதில் கலப்பேன். இல்லைனா நிறைய ஆகிடும். செலவு பண்ணுவதற்குள்ளே போதும் போதும்னு ஆயிடும்.

      Delete
  8. வெல்ல சாதம் செய்திருக்கிறோம்.  அவ்வப்போது விசேஷ நாட்களுக்கே இதைச் செய்வதுண்டு.  கேசர் பாத் செய்ததில்லை.  எள் சாதமும் செய்ததில்லை.  எள் சேர்க்க வேண்டுமென்றாலே இந்த நாளில் சேர்க்கக் கூடாது, அந்த நாளில் செய்யக்கூடாது என்று ஏதும் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கானும் வெல்ல சாதம் தெரிஞ்சிருக்கே ஸ்ரீராம். கேசர் பாதெல்லாம் ரொம்ப சுலபம். எள் சேர்க்கணும்னா சனிக்கிழமைகளில் சேர்த்துப் பண்ணிப் பாருங்க, மற்ற நாட்களில் ச்ராத்தம் தவிர்த்து சேர்ப்பது உசிதம் இல்லை.

      Delete
    2. நிஜமாவே வெல்ல சாதம் கேள்விப்பட்டதே இல்லை. ஸ்ரீராம், இதைச் சாப்பிட்டிருக்கேன்னு சொல்றார். என் சந்தேகம் என்னன்னா.... ரொம்ப சொப்பு வைத்து பிள்ளையார் கொழுக்கட்டை செய்ய அலுத்துக்கொண்டு, இரண்டு ஏடு செய்த பிறகு, மீதி உள்ள பூரணத்தை சாதத்தில் கலந்து ஸ்ரீராமுக்கு அவர் பாஸ் கொடுத்திருப்பாரோ?

      Delete
    3. ஹா...  ஹா..  ஹா...   இல்லை, நெல்லை...   இது சற்று சுலபம் என்று அவ்வப்போது பாஸ் செய்வதுண்டு.  ஆனால் பாருங்கள்..  மற்ற சாதங்கள் நான் அப்படிச் சொல்லவில்லை!

      Delete
    4. பாயசம் வைப்பதற்குப் பதிலாக விசேஷ நாட்களில் ஸ்ரீராமின் பாஸ் வெல்ல சாதம் செய்திருப்பார்.

      Delete
  9. வெல்ல சாதம் செய்திருக்கிறோம்.  அவ்வப்போது விசேஷ நாட்களுக்கே இதைச் செய்வதுண்டு.  கேசர் பாத் செய்ததில்லை.  எள் சாதமும் செய்ததில்லை.  எள் சேர்க்க வேண்டுமென்றாலே இந்த நாளில் சேர்க்கக் கூடாது, அந்த நாளில் செய்யக்கூடாது என்று ஏதும் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. மேலே சொல்லிட்டேன்.

      Delete
  10. எள்ளு சாதம், வெல்ல சாதம்,கேசர்பாத்
    எல்லாமே அருமை.
    கச்சிதமாக விவரங்களோடு
    பதிவு எழுதினால் அதே போலப் பின்பற்றுவது சுலபம்.
    ஆடி பதினெட்டுக்கு மெனு தயார்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, இந்த வருஷம் தான் பண்டிகையே இல்லையே! அதற்கேற்றாற்போல் கொரோனா வேறே! ஏதோ பண்ணினால் சரினு இருக்கு!

      Delete
  11. வெல்லா சாதம் முதல் எல்லாமும் சூப்பர் கீதாக்கா. வீட்டில் செய்வதுண்டு.

    திருவனந்தபுரத்தில் ஒரு கோயிலில் இந்த வெல்ல சாதத்தை கொஞ்சம் நெகிழவே பாயாசம் போல அந்த போத்தி கொடுத்துவிடுவார். நாங்கள் இருந்த வீட்டின் அருகில் இருந்த கோயிலில். நன்றாகவே இருக்கும். சத்சங்கம் நடந்தாலும் இதுதான் பெரும்பாலும் பிரசாதமாக. சிலப்ப தேங்காய்த் துண்டம் கீறி நெய்யில் வறுத்துப் போட்டும் அதில் கலந்திருக்கும். அப்படி யும் வீட்டில் அப்போ எல்லாம் செய்ததுண்டு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, வெல்ல சாதம் நெகிழ்வா இருந்து அதுவும் பாயசம் போல் இருந்து நான் பார்க்கலை. ஒருவேளை பாயசமாகவே இருந்திருக்குமோ? வெல்ல சாதத்தில் தேங்காய்த் துண்டம் எல்லாம் கீறி நெய்யில் வறுத்துச் சேர்ப்பதில்லை. வெல்லத்தோடு சரி சமமாகத் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பூரணமாகக் கிளறிடுவோம்.

      Delete
    2. ஒருவேளை பசில பாயசத்துக்கும் அக்கார வடிசலுக்கும் சர்க்கரைப் பொங்கலுக்கும் வெல்ல சாத்த்திற்கும் வித்யாசம் தெரியாம கீதா ரங்கன் சாப்பிட்டிருப்பாரோன்னு கேட்டால் அவர் கோபித்துக்கொள்ளப் போகிறார். அதனால் நான் கேட்கப் போவதில்லை

      Delete
    3. ஹாஹாஹாஹா, இருக்கும், இருக்கும். ஏனெனில் நான் அறிந்தவரை வெல்ல சாதம் நெகிழ்வாவே இருக்காது!

      Delete