எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, May 22, 2020

பாரம்பரியச் சமையல்! தேங்காய்ப் பால்! பால் கொழுக்கட்டை!

இப்போச் சில சிறப்புப் பாயச வகைகள் வெல்லம் சேர்த்தவற்றில் பார்ப்போம். அவற்றில் ஒன்று தேங்காய்ப் பால். இது பாயச வகை இல்லை என்றாலும் வெல்லம் சேர்த்துக் காய்ச்சுவார்கள். ஏலக்காய் மட்டும் சேர்ப்பார்கள். ஒரு சிலர் முந்திரி போடுவார்கள். இது பொதுவாகப் புதியதாகத் திருமணம் ஆன தம்பதிகளைக் கல்யாணம் ஆன வருஷம் வரும் முதல் ஆடிப்பண்டிகைக்குச் செய்து கொடுப்பார்கள். "தலை ஆடி" அன்று மாப்பிள்ளையை அழைத்துத் தேங்காய்ப் பால் வெள்ளித் தம்பளரோடு கொடுக்காத மாமனார், மாமியாரை அந்தக் காலத்தில் எல்லாம், "ஆடிக்கழைக்காத மாமியாரைச் செருப்பால் அடி!" என்பார்களாம். இக்காலத்தில் தலை ஆடி என்றாலோ மாமனார், மாமியார் ஆடிக்கு மாப்பிள்ளையை அழைப்பது என்பதோ பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது தேங்காய்ப் பால் செய்முறையைப் பார்ப்போம்.

சுமார் ஒரு லிட்டர் அளவுக்கான தேங்காய்ப் பால் செய்யத் தேவையான பொருட்கள்.

நன்கு முற்றிய பெரிய தேங்காய்கள் இரண்டு, வெல்லம் தூளாகக் கால் கிலோ, ஏலக்காய் ஏழெட்டுப் பொடித்தது, பச்சைக்கற்பூரம் தேவையானால் சின்னத் துண்டாக ஒன்று, ஒரு சிமிட்டா என்பார்கள். பச்சரிசி ஒரு டேபிள் ஸ்பூன்(தேவையானால், இது பாலைக் கெட்டிப்படுத்த உதவும்) பச்சரிசியை ஊற வைக்க வேண்டும். தேங்காய்களை உடைத்து நன்கு ஒரே மாதிரியாகத் துருவிக் கொள்ளவும் துருவிய தேங்காய்த் துருவலோடு ஊறிய அரிசியைச் சேர்த்துக் கல்லுரலில் அரைக்க வேண்டும். இப்போதெல்லாம் கல்லுரல் இல்லாத காரணத்தால் மிக்சி ஜாரில் போட்டு அரைக்கலாம். இதில் முதல் பால் எடுத்ததும் தனியாக வைக்கவும். மறுபடி அந்தச் சக்கையைப் போட்டுக் கொஞ்சம் நீர் ஊற்றி மீண்டும் அரைத்து எடுக்கவும். இரண்டாவது பால் கிடைக்கும். இவ்விரண்டு பாலையும் வடிகட்டி ஒன்றாக வைத்துக் கொண்டு வடிகட்டினதில் இருக்கும் சக்கையோடு ஏற்கெனவே பிழிந்ததில் உள்ள சக்கையையும் போட்டுக் கொண்டு மறுபடி கொஞ்சம் ஜலம் விட்டு அரைத்து மூன்றாம் பாலையும் எடுத்துக் கொள்ளவும்.

இம்மூன்று பாலையும் ஒன்றாக வைத்துக் கொண்டு அடுப்பில் அடி கனமான உருளி அல்லது கடாயைப் போட்டுப் பாலை விட்டுச் சூடு செய்யவும். அடுப்பு மிதமான எரிச்சலிலே இருக்கட்டும். அதிகமாகப் பால் கொதிக்கக் கூடாது. கரண்டியால் கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும். பால் நன்கு சூடு ஆகும் சமயம் வெல்லத்தூளைப் போட்டு மேலும் கிளறவும். வெல்ல வாசனை போகச் சூடு செய்ததும் கீழே இறக்கி ஏலக்காய்த் தூளைச் சேர்க்கவும்.  பால் ரொம்பக் கொதித்து விட்டால் திரிந்து போகும் வாய்ப்பு இருப்பதால் கிட்டவே இருந்து வெல்லம் நன்கு கரைந்து கொதிக்க ஆரம்பிக்கையில் கீழே இறக்க வேண்டும்.  இது சூடாகக் குடிக்க நன்றாக இருக்கும். ஒவ்வொருத்தர் மிகுந்திருக்கும் தேங்காய்ச் சக்கையையும் நெய்யில் வறுத்து இதில் கொட்டுவார்கள். பிடித்தமானால் செய்யலாம்.

மேலே சொன்ன மாதிரி வெல்லம் சேர்த்துத் தேங்காய்ப் பால் விட்டுக் கிளறியதில் தான் பால் கொழுக்கட்டை செய்வார்கள்.

அதற்கு அரிசியைத் தேங்காய் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் விரும்பினால் போடலாம். அரிசியை மட்டும் ஊறவைத்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் ஓர் முட்டை நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு, அரைக் கிண்ணம் நீரையும் ஊற்றி, கால் தேக்கரண்டி உப்புச் சேர்த்து நீர் கொதிக்கையில் அரைத்த அரிசிவிழுதைப் போட்டு நன்கு கிளற வேண்டும். மாவு நிறம் மாறி வெந்து தானே உருண்டையாகத் திரண்டு வந்துவிடும். அந்த நிலையில் மாவை எடுத்துக் கீழே வைத்துக் கொஞ்சம் ஆறியதும் அழுத்திக் கைகளால் நன்கு பிசைய வேண்டும். உள்ளே கட்டி இல்லாமல் மாவு பிசைந்ததும் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

கால் கிலோ அரிசி எனில் அரைக்கிலோ வெல்லத்தைப் பொடி செய்து நீரில் கரைத்துக் கல், மண் போக வடிகட்டிக் கொண்டு அடுப்பில் வைத்துக் கொதிக்க விட வேண்டும். வெல்லம் கொதிக்கையில் இரண்டாம் பாலை முதலில் விட வேண்டும். அது சேர்ந்து கொதிக்கையில் உருட்டி வைத்த கொழுக்கட்டை உருண்டைகளைப் போட வேண்டும். வெந்த கொழுக்கட்டைகள் மேலே மிதந்து கொண்டு வரும். எல்லா மாவையும் போட்டு முடித்த பின்னர் கொழுக்கட்டைகள் எல்லாம்மிதந்து மேலே வந்ததும் முதல் பாலை ஊற்றிக் கீழே இறக்கிக் கொண்டு ஏலக்காய் சேர்க்க வேண்டும். தேங்காய்த் துருவல் இருந்தால் நெய்யில் வறுத்துச் சேர்க்கலாம்.

இப்போதெல்லாம் இதைச் சர்க்கரையும் மாட்டின் பாலைக் காய்ச்சி ஊற்றியும் செய்கின்றனர். அதற்குக் கொழுக்கட்டைகளைச் சர்க்கரைப் பாகு வைத்துக் கொண்டு அதில் பாதியளவு  பாலை விட்டுக் கொழுக்கட்டைகளைப் போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். கொழுக்கட்டைகள் எல்லாமும் போட்டு முடிந்து வெந்து மேலே வந்ததும் மீதம் உள்ள பாலை விட்டுக் கொதிக்க வைத்துக் கீழே இறக்க வேண்டும். மேலே சொன்ன அளவுக்கு சுமார் ஒன்றரை லிட்டர் பால் தேவைப்படும். நன்கு காய்ச்சிச் சுண்டவும் வைத்துக் கொள்ளலாம். அவரவர் விருப்பம்.

19 comments:

 1. கீதாக்கா இந்த பால் கொழுக்கட்டையை எங்க வீட்டில் குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது செய்வோம் .அம்மா என் மகளுக்கு செய்ய சொன்னாங்க :) இப்படித்தான் செய்வோம் ஒன்லி வித் தேங்காய்ப்பால் ..ஒரேயொரு பிரிஞ்சி இலை இருக்கும் .எங்க வீட்டு குழந்தைகள் எல்லாருக்கும் செய்தோம் ஊரில் :) 

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல்,முதல் வருகைக்கு (இந்தப் பதிவுக்கு) நன்றி. நாங்களும் குழந்தைகள் குப்புறக் கவிழ்ந்தால், நீந்தவோ தவழவோ ஆரம்பித்தால், பல் முளைத்தால் என்று ஒவ்வொன்றுக்கும் கொழுக்கட்டை உண்டு. ஆனால் அரிசி தேங்காய் அரைச்சுத் தண்ணீரில் வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கொண்டு அதில் அரைச்ச மாவைப் போட்டுக் கிளறிக் கொழுக்கட்டையைச் சின்னச் சின்னதாகப்பண்ணி இட்லித் தட்டில் ஆவியில் வேக வைத்து எடுத்து விநியோகம் செய்வோம். ஒன்பது மாதம் அல்லது ஒரு வயதுக்கப்புறமோ அல்லது குழந்தை பிறந்தவுடன் தைமாத வெள்ளிக்கிழமை, ரதசப்தமி, கணு போன்ற நாட்களில் நிறைநாழி வைத்து அதில் கொழுக்கட்டைகள், கரும்புத்துண்டங்கள், சின்னச் சின்ன அப்பங்கள் அதோடு காசு எல்லாம் போட்டுக் குழந்தையை இன்னோர் கொஞ்சம் பெரிய 4,5 வயதுக்குட்பட்ட குழந்தை மடியில் உட்கார்த்தி அதன் தலையில் மெதுவாகக் கொட்டுவோம். அக்கம்பக்கம் அனைவரையும் அழைப்போம். கொழுக்கட்டைகள், அப்பங்கள், கரும்புத்துண்டங்களைச் சின்னக் குழந்தைகள் பொறுக்குவாங்க. பெரியவங்க கீழே விழும் காசுகளைப் பொறுக்கிப்பாங்க. அப்புறமா அனைவருக்கும் வெற்றிலை, பாக்கோடு கொழுக்கட்டை, சுண்டல், அப்பம் எல்லாம் ஓலைப்பெட்டியில் வைத்துக் கொடுப்போம். எங்க வீட்டில் அப்பா எங்க பையருக்குப் பண்ணினார். எங்க பெண்ணுக்கு அப்போ ஐந்து வயது என்பதால் அவள் மடியில் உட்கார்த்தி வைத்தோம்.

   Delete
  2. யெஸ்ஸ்ஸ் ..இதேதான் எங்கவீட்டிலும் செய்தாங்க ..ஆனா குழந்தை தலையில் மேலே குடை விரிச்சி அதில் கொட்டுவாங்க :)கிகிகி :) அப்போ 50 பைஸாலாம் நானும் பொறுக்கி எடுத்தேன் :) 

   Delete
 2. பாயசத்துலேர்ந்து கொழுக்கட்டைக்குத் தாவி விட்டீர்களே...

  எனக்குத் தெரிந்து பால் கொழுக்கட்டை, வெல்லத்தில்தான் செய்வார்கள். ஜீனியில் அவ்வளவு நன்றாக இருக்கும்னு தோன்றவில்லை.

  ReplyDelete
  Replies
  1. நெல்லை சீனியிலும் செய்யலாம். அதே பாலில் (தேங்காய்ப்பால் இல்லை) வெல்லம் போட்டும் செய்யலாம். செட்டிநாட்டு பால் கொழுக்கட்டைனு சீனி பாலில் செய்ததுதான் தராங்க. நானும் வீட்டில் செய்ததுண்டு. பாலில் வெல்லம் போட்டு அல்லது சீனி போட்டு. அதுக்கு பாலைக் கொஞ்சம் நன்றாகக் குறுக்கிக் கொண்டு சேர்த்துவிட்ட்டால் சுவை இருக்கும். வெல்லம் சேர்த்தாலும் சரி சீனி சேர்த்தாலும் சரி பாலைக் குறுக்கிச் சேர்ப்பது. சிலர் மில்க்மெய்டும் சேர்க்கறாங்க அவசரமா செய்ய.

   அக்கா சொல்லிருப்பது போல அரிசி தேங்காய் அரைத்தும் கொழுக்கட்டை செய்து பால் விட்டுச் செய்வதில் சேர்த்தால் அந்த டேஸ்டும் நன்றாக இருக்கிறது.

   கீதா

   Delete
  2. வாங்க நெல்லை. இதுவும் தேங்காய்ப் பாலும் ஒரே மாதிரிச் செய்வதால் பால் கொழுக்கட்டையையும் இங்கேயே பகிர்ந்தேன். சர்க்கரை போட்டுத் தான் சென்னை ஓட்டல்களில் பால் கொழுக்கட்டை கொடுக்கிறார்கள்.

   Delete
  3. தி/கீதா சொல்வது போல் செட்டி நாட்டில் பால் கொழுக்கட்டை பாலில் சர்க்கரை சேர்த்தே பெரும்பாலும் செய்கின்றார்கள்,

   Delete
 3. தேங்காய் பால் பாயசமும் நன்றாக இருக்கிறது (படிக்கும்போதே எப்படி இருக்கும்னு தெரிகிறது). ஆனால் ஜலமாக இருக்கும் போலிருக்கிறது. பாயசம் என்றால் கையில் எடுத்துச் சாப்பிடும்படி அரிசி/கடலைப்பருப்புடன் இருக்கவேண்டாமோ?

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத் தமிழரே, கெட்டியாக வருவதற்குத் தான் அரிசியையும் தேங்காயோடு சேர்த்து அரைக்கிறோம். கெட்டியாகவே இருக்கும். அது சரி, உங்களுக்குக் கல்யாணம் ஆகித் தலை ஆடிக்குத் தேங்காய்ப் பால் கொடுக்கலையா? என்ன போங்க! இத்தனைக்கும் அவங்க கும்பகோணம். அங்கே தலை ஆடிக்கு அழைப்பது ரொம்பவே முக்கியம் பெறும்! :)))))

   Delete
  2. கீசா மேடம்... அப்போ துபாயில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். நிச்சயதார்த்தம், மேரேஜ் ரெஜிஸ்ட்ரேஷனுக்கு சென்னை வந்தேன் (ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்திலும் மறந்தும் அவ கையை பிடிச்சிடாதீங்க. கல்யாணத்தின் போது நான்தான் அவ கையைப் பிடித்து உங்கள்ட கொடுக்கணும். அது வரைல பட்டுடாதீங்க - மாமனார்). அப்புறம் மூணு மாதம் கழித்து திருமணத்துக்கு வந்தேன். மனைவியை அழைத்துச் சென்றேன். அப்புறம் பெண் பிறந்து ஒரு மாதம் கழித்துதான் சென்னை வந்தேன். அதுனால எதுக்கும் அவங்க அழைக்க முடியாது, நானும் சென்றுருக்க முடியாது ஹா ஹா. அவங்களோட தீபாவளிக்கு இருந்ததே பல வருடங்கள் கழித்துத்தான்

   Delete
 4. கீதாக்கா நல்ல பாயாசவகைகள். நம் வீட்டில் இதெல்லாமே நல்லா போணியாகும். முன்பெல்லாம் அடிக்கடி செய்வதுண்டு...இதே தான்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நம்ம வீட்டிலும் போணிஆவது தான். இப்போத் தான் கையைக் கட்டிப் போட்டிருக்கிறது! :(

   Delete
 5. தேங்காய் பால்/பால் கொழுக்கட்டை செய்முறை சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. சமீபத்தில் கூட வீட்டில் செய்தார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், முகநூலில் நானும் பார்த்தேன். நன்றி வெங்கட்

   Delete
 6. ஆர்வத்தைத் தூண்டுகிறீர்கள்.   பால் கொழுக்கட்டை, தேங்காய்ப்பால் பாயசம்...   ஸ்...   ஆ....!

  ReplyDelete
  Replies
  1. செய்து சாப்பிடுங்க ஸ்ரீராம். தேங்காய்ப் பால் பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை.

   Delete
 7. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கீதா அக்கா.  நமஸ்காரங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம், இதோடு நான்கு முறை சொல்லி இருக்கீங்கனு நினைக்கிறேன். இங்கே, வாட்சப், தனியாக, எ.பி.என :)))) இன்னும் ஒருதரம் சொல்லிட்டா ஐம்பெரும் விழாவுக்குப் பொருத்தமா இருக்கும். :)))

   Delete
 8. பால் பாயாசம்,பால் கொழுக்கட்டை தித்திக்கிறது.

  ReplyDelete