எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, May 15, 2020

பாயசங்களில் தென் மாவட்டப் பாயசங்கள்! பாரம்பரியச் சமையல்!

அடுத்து நாம் செய்யப் போகும் பாயசம் சதசதயம்! பெயரே புதுசா இருக்கில்லை? இதை அதிகம் திருநெல்வேலிக்காரங்களோ அல்லது நாகர்கோயில், கேரளப்பகுதி/பாலக்காடு பிராமணர்களோ செய்வார்கள். அவர்களில் பெரும்பாலோருக்கு ஐயப்பன் தான் குலதெய்வமாக இருப்பான். ஒவ்வொரு வருஷமும் ஐயப்பனுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றுகூடி சாஸ்தாப்ரீதி என்னும் பூஜையைப் பொதுவில் செய்து ஊர்க்காரர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய அளவில் சமாராதனைச் சாப்பாடு போடப்படும். இது திருநெல்வேலி ஜில்லா கல்லிடைக்குறிச்சி கிராமத்துக்காரர்கள் இந்த சாஸ்தா ப்ரீதி நடக்கையில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வந்து சேர்ந்து கொள்வார்கள் என முன்னெல்லாம் சொல்லுவார்கள். இப்போ எப்படினு தெரியலை. எனக்கு இது தெரியவந்தது நாங்க அம்பத்தூரில் வீடு கட்டும்போது தான்.

எங்களுக்கு வீடு கட்டிக்கொடுத்த ஒப்பந்ததாரர் பாலக்காட்டுக்காரர். அவர் வீட்டில் அடிக்கடி பகவதி பூஜை, சாஸ்தா ப்ரீதி எல்லாம் பண்ணுவார்கள். அப்போது தான் அங்கே அரவணைப் பாயசமும், சதசதயமும் சாப்பிட்டுப் பின்னர் அவங்களிடம் செய்முறையும் கேட்டு அறிந்து கொண்டேன்.  அப்போதெல்லாம் நம்மவரும், எங்க பையரும் தொடர்ந்து 3 வருஷங்கள் சபரிமலை போய்க் கொண்டிருந்ததால் இதைப் பண்ணிப் பார்க்கலாம் என்னும் எண்ணமும் தான். ஆனால் அப்போல்லாம் பண்ணவே முடியலை. பின்னர் பல வருஷங்கள் கழிச்சு ஒரு தரம் பண்ணினேன். ஆனால் அது அரவணை. சதசதயம் பண்ணவே இல்லை. இப்போச் செய்முறையைப் பார்ப்போம். அங்கே நெல்லைத் தமிழர் முழிச்சுட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கார் கோபமா! கதை சொல்லிண்டே இருக்காங்களேனு!

சதசதயம் பண்ணத்தேவையான பொருட்கள்:

பச்சரிசி ஒரு ஆழாக்கு.
இதைச் சாதமாக வடித்துக்கொள்ளலாம். வெண்கலப்பானையிலேயே வடிக்கலாம். இப்போதெல்லாம் குக்கரில் வைக்கிறார்கள். சாதம் குழையலாம், தப்பில்லை.

வெல்லம் சுமார் அரைக்கிலோ பாகுவெல்லம் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

ஏலக்காய்ப் பொடி சுமார் பத்துப் பனிரண்டு ஏலக்காயைப் பொடித்தது.

தேங்காய் நல்ல பெரியதாக ஒன்று. கிராமங்களில் சாஸ்தாப்ரீதி பண்ணும்போது நூறு தேங்காய்களின் தேங்காய்ப் பாலை எடுத்துக் குறைந்து நூறு லிட்டராவது பாயசம் பண்ணுவார்களாம்.  நமக்கு இங்கே ஒன்று போதும். தேங்காயை உடைத்துத் துருவி முதல் பால், இரண்டாம் பால், மூன்றாம் பால் என எடுத்துக்கொள்ள வேண்டும்.

தனியாக ஓர் அரைமூடித் தேங்காயைப் பல்லுப் பல்லாகக் கீறி வைத்துக் கொள்ளவேண்டும்.

கதலிப்பழம் (தேன் கதலி என்பார்கள்) அது இல்லைனால் நம்ம பூவனே போதும். 2 அல்லது மூன்று கனிந்ததாக.

நெய் சுமார் கால் கிலோ

வடித்த சாதத்தை ஓர் வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நெய்யைப் பாதி விட்டுக் கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பொடி செய்த வெல்லத்தை நீரில் போட்டுக் கரைத்துக் கொண்டு கல், மண் இல்லாமல் வடிகட்டி அடுப்பில் ஓர் அடிகனமான பாத்திரத்தில் அல்லது உருளியில் போட்டுக் காய்ச்சவேண்டும்.. வெல்லம் நன்கு கரைந்து வரும்போது மசித்த சாதத்தை அதில் போட்டு நன்கு கிளறிக் கொடுக்கவும். தேவையானால் அரை டீஸ்பூன் உப்பைச் சேர்க்கவும். இனிப்பைத் தூக்கிக் காட்டும். பின்னர் மூன்றாம் பாலை விட்டுக் கொதிக்க விடவும். அது சேர்ந்து வரும்போது இரண்டாம் பாலை விட்டு விட்டுக் கதலிப்பழங்களை வில்லை வில்லையாக நறுக்கிப் பாயசத்தில் சேர்க்கவும். இரண்டாம் பாலை ஊற்றிக் கொதி வந்து சேர்ந்து வந்ததும் முதல் பாலை விட்டு அடுப்பை அணைக்கவும். ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும். மிச்சமிருக்கும் நெய்யில் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய்க் கீற்றுக்களைப் பொன்னிறமாக வறுத்துச் சேர்க்கவும்.  முந்திரிப்பருப்பெல்லாம் வேண்டாம். வேண்டுமானால் பிடித்தால் சுக்கை நன்றாகப் பொடி செய்து சேர்க்கலாம். பழத்தைப் பாயசத்தில் இருந்து நீக்காமல் அதோடு இலையில் பாயசத்தை விட்டுக் கொண்டு சூடாகச் சாப்பிட்டுப் பார்க்கவும்.

அடுத்து அரவணைப் பாயசத்தைப் பார்ப்போமா? கிட்டத்தட்ட சதசதயம் மாதிரித் தான். கொஞ்சமே வேறுபாடு!

 அரவணைப் பாயசம்


ஐயப்பன் பூஜைக்கு அரவணைப் பாயசம் செய்யறது உண்டு.  இதற்குத்


தேவையான பொருட்கள்:

நல்ல பச்சரிசியாக ஒரு கிண்ணம் சுமார் 200 கிராம். நெய் அரைகிலோவில் இருந்து ஒரு கிலோ வரையிலும் தாராளமாய்த் தேவை. வெல்லம் ஒரு கிலோ. தேங்காய் ஒன்று. உடைத்துப் பல்லுப் பல்லாகக் கீறிக்கொள்ளவும். ஏலக்காய்ப் பொடி.


வெண்கலப் பானை அல்லது திருச்சூர் உருளியில் அரிசியை நன்கு கழுவிக் களைந்து கொண்டு சாதமாகக் குழைத்துக் கொள்ளவும். ஒரு கிலோ நெய்யில் அரைகிலோ நெய்யை அந்தச் சாதத்தில் விட்டு நன்கு மசிக்கவும். தனியே எடுத்து வைக்கவும். அதே உருளியில் ஒருகிலோ வெல்லத்தைத் தூள் செய்து போட்டு நீர் சேர்த்துப் பாகு வைக்கவும். பாகு நன்கு காய்ந்து வரும்போது நெய்யில் கலந்த சாதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். நன்கு கிளறவும். வெல்லப் பாகும் சாதமும் சேர்ந்து வந்து கொதித்ததும், வெல்ல வாசனை போய்விட்டதா என உறுதி செய்து கொண்டு அடுப்பை அணைக்கவும். மிச்சம் நெய்யை ஒரு கடாயில் ஊற்றித் தேங்காய்க் கீறி வைத்திருப்பதை நெய்யில் வறுத்துக் கொட்டவும். ஏலப் பொடி சேர்க்கவும். இதற்கு முந்திரிப் பருப்புப் போட வேண்டாம்.


சூடாகவும் சாப்பிடலாம். ஆறினாலும் சாப்பிடலாம். நன்றாக இருக்கும். குறைந்தது ஆறு மாதங்களுக்கு வீணாகாது.

அடுத்து ஜவ்வரிசி, கடலைப்பருப்பு வெல்லப் பாயசம். இதுவும் தேங்காய்ப் பால் சேர்த்து. வெல்லம் போட்டுப் பண்ணும் பாயசங்களிலே தேங்காய்ப் பால் நன்றாக ஒத்துப் போகும்.

கடலைப்பருப்பு, ஜவ்வரிசி வெல்லப் பாயசம்:


தேவையான பொருட்கள் : 50 கிராம் கடலைப்பருப்பு.  50 கிராம் ஜவ்வரிசி, வெல்லம் 200 கிராம், தேங்காய்ப் பால் ஒரு கிண்ணம், ஏலக்காய்ப் பொடி சிறிது. முந்திரிப்பருப்பு, திராக்ஷைப் பழம் நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.  நெய் 50 கிராம்


கடலைப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துக் களைந்து கொண்டு வேக வைக்கவும்.  ஜவ்வரிசியையும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் வறுத்துக் கொண்டு நீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். தேங்காய் மூடியைத் துருவிக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டு அரைத்துப் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.  வெல்லத்தைத் தூளாக்கவும்.  வேக வைத்த கடலைப்பருப்பு, ஜவ்வரிசியைக் கொஞ்சம் நீர் சேர்த்துக் கொதிக்க விட்டுக் கொள்ளவும்.  வெல்லம் சேர்க்கவும்.  வெல்ல வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.  தேங்காய்ப் பாலைக் கொஞ்சம்கொஞ்சமாகச் சேர்க்கவும்.  தேங்காய்ப் பாலைச் சேர்த்ததும் அதிக நேரம் கொதிக்க வேண்டாம்.  கீழே இறக்கி ஏலப்பொடி சேர்த்துக் கொண்டு நெய்யில் முந்திரிப் பருப்பு, திராக்ஷையை வறுத்துச் சேர்க்கவும்.  சூடான, சுவையான பாயசம் கொஞ்சம் வித்தியாசமாகத் தயார்.

34 comments:

  1. சதசதயமும், அரவணையும் சுவைத்திருக்கிறேன்..செய்முறைக்கு நன்றி மாமி..கடலைப்பருப்போடு ஜவ்வரிசி சேர்த்து பாயசம்!!!பண்ணியதில்லை... குறித்துக் கொண்டேன்..பாசிப்பருப்போடு, கடலைப்பருப்பு சேர்த்து செய்த பாயசம் தான் சாப்பிட்டிருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆதி! நானும் இரண்டுமே சாப்பிட்டிருக்கேன். ஆனால் கல்யாணம் ஆகிப் பதினைந்து வருஷங்கள் ஆன பின்னரே தெரியும். இத்தனைக்கும் என் மாமி 4 பேர், என் தம்பி மனைவி, என் மன்னியோட அம்மானு பல திருநெல்வேலிக்காரங்க! :)))) ஜவ்வரிசிக் கடலைப்பருப்புப் பாயசம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

      Delete
  2. சுவையான குறிப்புகள். இங்கே நிறைய பாலக்காடு நண்பர்கள் உண்டு. அதனால் சுவைத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், நானும் சின்ன வயசில் சாப்பிட்ட நினைவு என்றாலும் பின்னாட்களில் தெரிந்து கொண்டது தான் நினைவில் இருக்கு. நல்லா ருசியாக இருக்கும்.

      Delete
  3. இந்த சதசதயம் பற்றி நெல்லையில் இருக்கும்போது கேள்விப்பட்டதே இல்லை. வாழ்க்கையில் சுவைத்ததும் இல்லை. இது நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல சாஸ்தா/ஐயப்பன் மண்டலபூஜையின்போத் பாலக்காட்டில் செய்யும் பாயசவகை. பாலக்காட்டினர் பிறகு அவர்களின் இடத்திலிருந்து மைக்ரேட் செய்தபிறகு மற்ற இடங்களிலும் அவர்களின் 'பூர்வ வாசனையில்' இந்தப் பாயசம் செய்வது தொடர்ந்திருக்கலாம். (பெயரே சமஸ்கிருதம். நூறு தேங்காய் வைத்து நூறு லிட்டர் பாயசம். நூற்றின் மடங்கு).

    ReplyDelete
    Replies
    1. திருநெல்வேலி சமையல்களிலும் தேங்காயின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். இதை நான் எங்க மாமிகள், தம்பி மனைவி, இன்னமும் நாங்க குடியிருந்த வீடுகளில் கூடக் குடி இருந்த திருநெல்வேலி மாவட்டக்காரர்கள், இப்போப் பக்கத்தில் இருக்கும் திருநெல்வேலி மாமி ஆகியோரிடம் பார்த்திருக்கேன். இந்தப் பாயசம் சாப்பிட்டிருக்கேன். எங்க அம்மாவும் பண்ணி இருக்கா. ஆனால் பெயரெல்லாம் ரொம்ப வருஷம் கழிச்சே தெரியும். பெரும்பாலும் இடிச்சுப் பிழிஞ்ச பாயசம்னு சொல்லியே கேட்டிருக்கேன்.

      Delete
    2. சாஸ்தாப்ரீதி ஐயப்பன்/சாஸ்தா குலதெய்வமாக உள்ள அனைவருக்கும் எந்த மாவட்டமானாலும் பொதுவான ஒன்று நெல்லைத் தமிழரே! பாலக்காட்டுக்காரங்களில் பலருக்கும் சாஸ்தா இல்லாமல் வேறு குலதெய்வங்களும் உண்டு. ஆகவே இது தென் மாவட்டங்களில் பரவலாகக் காணப்படும் ஒன்று. என் கடைசி நாத்தனார் புக்ககம் திருநெல்வேலி மாவட்டத்து அரவங்குளம். அவங்க குலதெய்வம் சாஸ்தா! மலை மேல் கோயில். அவங்க புக்ககத்தினர் குடும்பம் அனைவரும் சேர்ந்து வருஷத்துக்கு ஒரு நாள் அங்கே சென்று அங்கே சாஸ்தாப்ரீதி செய்து அங்கேயே ஊரணை ஜலத்தில் சமைத்துச் சாப்பாடு போடுவார்கள். அப்போ இந்தப் பாயசம் தான்.

      Delete
    3. http://thakkudupandi.blogspot.com/2011/04/blog-post_21.htmlஎன் நண்பர் "அம்பி"யோட தம்பி அவங்க ஊரான கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்ற சாஸ்தாப்ரீதியின் கலாட்டாக்களை வர்ணித்திருக்கும்பதிவு இங்கே! அவங்க ஊர்க்காரங்க அனைவரும் சேர்ந்து பண்ணுவாங்க. சுழற்சி முறையில் ஒவ்வொரு வீடு ஒரு வருஷம்னு வரும்னு சொன்ன நினைவு.

      Delete
    4. http://agathiyarpogalur.blogspot.com/2018/07/blog-post_23.html

      Delete
  4. அரவணை பாயசம் என்பது கேரளாவுடன் சம்பந்தப்பட்டது. அங்குதான் நெய்ப்பாயசம் என்றும் அரவணை என்றும் சொல்வார்கள். ஆனால் பெருமாள் கோவிலில் (திருவரங்கம்) அரவணை உண்டு.

    நான் கேரளக் கோவில்களில் சுவைத்த அரவணை பாயசத்தில் அரிசி விரைத்துக்கொண்டு இருக்கும். நீங்களும் ஐயப்பன் அரவணைப்பாயசத்தில் இதனைக் கண்டிருக்கலாம். குழைந்த சாதத்தில் செய்யப்படுவதில்லை இது. அல்லது, வெந்த சாதத்தை-நன்கு, சர்க்கரைப் பாகில் போட்டு நெய்விட்டு கிளறுவதால் அரிசி விரைத்துக்கொள்கிறது போலிருக்கு (நான் செய்யும் அரிசி வெல்லப் பாயசத்திலும் இதுபோல நிகழ்ந்திருக்கு. அப்போ நான் அளவுக்கு அதிகமாக வெல்லத்தைப் பாகு-கொஞ்சம் முற்றிய பாகு வைத்திருப்பேன் போலிருக்கு)

    ReplyDelete
    Replies
    1. அரவணைப்பாயசம் குழைந்த சாதத்தில் தான் செய்து வருகிறோம். வெல்லப்பாகு கொதிக்கக் கொதிக்க அரிசி விறைத்துக் கொள்ளத் தான் செய்யும். வீட்டிலேயே பண்ணி ஆறு மாதத்துக்கு வைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போல்லாம் குக்கரில் சாதத்தை வைக்கச் சொல்கின்றனர். நானெல்லாம் வெண்கலப்பானையில் தான் குழைய வைச்சுப் பண்ணி இருக்கேன். ஸ்ரீரங்கம் கோயில் அரவணை நான் சாப்பிட்டதில்லை என்பதால் அது பற்றித் தெரியாது. திருப்புல்லாணிப் பாயசம் கிட்டத்தட்ட சதசதயம் போலத் தான் இருந்தது.

      Delete
    2. நான் பிரசாதத்தைப் பற்றி எழுத விரும்பலை. ஆனால் நீங்க சொன்னதைப் படித்துவிட்டு, திருப்புல்லாணி சென்றிருந்த போது, நைஸா (டூர் ஆபரேடர் எப்போதும் வெளியின் நீங்களா சாப்பிட்டுட்டு வரக்கூடாது என்பார். அன்று அவரும் மதிய உணவின்போது சிறிது திருப்புல்லாணி பாயசம் பிரசாதமாகத் தந்தார்) மடப்பள்ளி அருகில், 50 ரூ அல்லது 100 ரூ நினைவு இல்லை, பாயசம் வாங்கிச் சாப்பிட்டோம் (மனைவியோட). சாதாரணமாகத்தான் இருந்தது. கோவில் sanctityதவிர, நான் நல்லா பாயசம் செய்வேன் என்றும் தோன்றியது.

      Delete
    3. எங்களுக்குப் பிடித்திருந்தது நல்ல சூடாகத் தித்திப்புடன் தேங்காய் வாசனையுடன் இருந்தது.

      Delete
  5. ஜவ்வரிசி கடலைப்பருப்பு பாயசமா - ஐயஹோ.... ஜவ்வரிசியில் வெல்லம் போட்டு ஒரு பாயசமா? அதற்கு துணையாக கடலைப்பருப்பா? இறைவா.... ரசனை இப்படி கீழிறங்கிவிட்டதே...

    இருந்தாலும் மூன்றுநாட்களாகத் தொடரும் 'இனிப்பு உண்ணாமை' விரதம் எப்போது ப்ரேக் ஆகிறதோ (என் ஆசையினால்) அப்போது இதனைச் சிறிதளவு செய்து பார்க்கிறேன்/செய்யச் சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ரேவதி அந்தக் காலத்திலேயே இந்தப் பாயசத்தை அவர் பாட்டி பண்ணுவார் எனச் சொல்லி இருக்கார் பாருங்க! ஆக உங்களுக்குத் தெரியலை என்றால் அப்படி ஒண்ணு இல்லைனு அர்த்தம் இல்லை. என் மாமியார், நாத்தனார் எல்லாமும் அப்படித் தான்! "இல்லவே இல்லை! இப்படி எல்லாம் பண்ணவே முடியாது!" என்பார்கள். பின்னர் வேறு யார் மூலமாகவாவது தெரிந்து கொண்டு "அப்படியா" என்பார்கள். முதலில் எல்லாம் புழுங்கலரிசி முறுக்கு, தட்டை, சேவை எல்லாம் அவங்க ஒத்துக்கவே இல்லை. நான் பண்ணிக் கொண்டு வந்து கொடுத்தும் கூட ஒத்துக்க மாட்டாங்க. நீ பச்சரிசியிலே தான் பண்ணி இருப்பே என்பார்கள். பின்னர் நேருக்கு நேர் பார்த்ததும் தான் நம்பலாம் என ஆரம்பித்தார்கள்.

      Delete
    2. நெல்லை ஜவ்வரிசிப் பாயாசம் செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க...எவ்வளவு டேஸ்டியா இருக்கும் தெரியுமா...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..சும்மா சாப்பிட்டுப் பார்க்காம் எதுவும் சொல்லக் கூடாது ஹா ஹா ஹா ஹாஹ் எங்க பாட்டி எல்லாம் டக்குனு செய்வது இது இல்லைனா அரிசி நெய் பாயாசம்...கடலைப்பருப்பு பாயாசம்

      கீதா

      Delete
    3. நாளைக்கு ஜவ்வரிசி, கடலைப்பருப்புப் பாயசம் தான் பண்ணணும்னு இருக்கேன். :))))

      Delete
    4. இருக்கலாம் கீதா ரங்கன். இப்போ நான் மோர் சாதத்துக்கு குழம்புக்குப் பதில் பாயசம் விட்டுக்கொண்டு சாப்பிடுவேன் என்று எழுதினால், பொதுவா படிக்கறவங்களுக்கு, இது என்ன ரசனை ஐயையே என்று தோன்றும். பிறகு ஒரு நாள் லஜ்ஜையை விட்டுவிட்டு அப்படிச் சாப்பிட்டுப் பார்த்தால் ஒருவேளை அவர்களுக்கும் பிடிக்கலாம் (உதாரணம்தான்).

      அதுபோல ஜவ்வரிசியை எனக்கு ஜீனி சேர்த்தது தவிர வெல்லத்தில் சேர்த்து பாயசம் செய்யலாம் என்ற நினைப்பே விநோதமா இருக்கு. ஒரு நாள் செய்துபார்த்துட்டுச் சொல்றேன். (சேமியாவிலயும் வெல்லம் போட்டுச் செய்யலாம்னு சொல்லிடாதீங்க. அதுமாதிரி இன்னும் கற்பனை பண்ணிப் பார்க்கலை)

      Delete
    5. இன்னிக்கு நான் ஜவ்வரிசி, கடலைப்பருப்புப் போட்டுத் தான் பாயசம் பண்ணினேன். பண்ணும்போது படம் எல்லாம் எடுக்கும் அளவுக்கு நேரம் இல்லை. அப்போத் தான் தொலைபேசி அழைப்புகள், வாசலில் யாரோ கூப்பிடறது, எனத் தொடர் வேலைகள். ஆனால் பாயசம் கொஞ்சம் மிச்சம் இருக்கு. அதை வேணா சாயங்காலம் படம் எடுக்கப் பார்க்கிறேன். மறந்துடாமல் இருக்கணும்.

      Delete
  6. தேங்காய்ப்பால் எடுத்துச் செய்யும் எல்லாச் செய்முறையும் கேரளத்தவர்களது முறை. முன்பு நாகர்கோவில் பகுதியும் மலையாள தேசத்தின் ஒரு பகுதியாக இருந்ததால் அங்கும் இந்த முறை இருக்கும் (அங்கெல்லாம் தென்னை மரங்கள் அதிகம்).

    ReplyDelete
    Replies
    1. உங்க வீட்டில் செய்திருக்க மாட்டாங்க போல! ஆனால் நான் பார்த்தவரையிலும் திருநெல்வேலிக்காரங்க நிறையத் தேங்காய் போட்டுப் பாயசம் பண்ணுவாங்க. சாப்பிட்டிருக்கேன். சில சமையல் முறைகள் எங்க மாமிகள் மூலமாகவே நாங்க அறிந்திருக்கோம். என் பெரியப்பா பெண்ணைத் திருநெல்வேலிக்காரங்களுக்குத் தான் கொடுத்திருக்காங்க. அவங்க அவியலில் தயிரே சேர்க்க மாட்டாங்க. புளி நீர்க்க விட்டுத் தான் அதில் காய்களை வேக வைத்து அவியல் பண்ணுவாங்க

      Delete
    2. //புளி நீர்க்க விட்டு// - ஆமாம். என் மனைவி வீட்டில் இந்த வழக்கம் கிடையாது. இப்போல்லாம், புளி ஜலம் விடுவதற்குப் பதில் மாங்காய் கட் பண்ணிப் போட்டுவிடுகிறேன்.

      சில சமயம், ஞாபக மறதியில் தயிர் சேர்க்காமல்கூட அவியல் செய்து சாப்பிட்டுவிடுவேன்.

      Delete
    3. எங்க வீட்டுல சதசதயம் செய்வதுண்டு. அதே போல ஸாஸ்தா பூஜைக்கு கிராமத்தில் செய்வதுண்டு. ஊருக்கே சாப்பாடு அன்று இருக்கும் அது போல பங்குனி உத்திரம் அன்று அங்கு சாஸ்தா வழிபாடுதான்.

      கதலிப்பழத்தைப் பாட்டி பிசைந்து சேர்த்துவிடுவார். அவர் அந்தக்காலத்து மனுஷி இல்லையா! நான் கட் செய்து அல்லது மத்தால் மசித்து.

      அரவணைப் பாயாசம் நம் ஊரிலும் சரி வீட்டிலும் சரி அரிசியை மசிக்கறதில்லை. அது கொஞ்சம் முழித்துப் பார்க்கும் வகையில்தான் செய்வாங்க. கொஞ்சம் கடித்துச் சாப்பிடும் படி ஆனால் வெல்லம் பாகு வைத்து செம டேஸ்டியா இருக்கும் ஆமாம் நோ முந்திரி அலங்காரம்.

      எங்கள் பகுதிகளில் தேங்காய்ப்பால் பாயசம் அதிகம்தான்.

      சத சதயம் கதலி போல நேந்திரன் பழமும் சேர்த்தோ அல்லது நேந்திரன் பழ பாயாசம் சக்கப் பிரதமன் போல நெந்திரன் பிரதமனும் செய்வதுண்டு. உங்களுக்கும் தெரியும் அக்கா

      ஆமா எங்க வீட்டில அவியல்ல தயிர் சேர்க்க மாட்டாங்க. புளிதான்..அவியல் கெட்டியாதான் இருக்கும் கேரளத்து அவியல் போல காயில் தேங்காய் ஒட்டிக் கொண்டு கெட்டியாக இருக்கும். தளர்வாக இருக்காது.

      கீதா

      Delete
    4. அவியலுக்குத் தயிரே சேர்க்கலைனால் தான் நன்றாக இருக்கும். தளர ஓடவும் கூடாது! ஆனால் நான் பார்த்தவரையில் அவியல் யாரும் அப்படிப் பண்ணுவது இல்லை. மாங்காய் போட்டு அவியல் என் அம்மா பண்ணுவார். நன்றாகவே இருக்கும். நேந்திரம்பழப் பாயசம் சாப்பிட்டதில்லை தி/கீதா.

      Delete
    5. அரவணைக்கு சாதத்தைப் பாதி நெய்யை விட்டு நன்கு மசிக்கச் சொல்லித் தான் சொன்னார்கள். நானும் அப்படித் தான் பண்ணிக் கொண்டு வரேன்.

      Delete
  7. இடுகையில் பாயசத் தலைப்பு பளிச் என்று இல்லாவிட்டால், பின்பு நாங்கள் ரெஃபர் பண்ணுவது கஷ்டமாகிவிடும். கொஞ்சம் இடுகையை அலங்கரிக்கக்கூடாதா? அது, கஷ்டமெனில், விரைந்து இடுகைகள் போடவும்.

    நான் எப்போதாவது நேரம் கிடைக்கும்போது எல்லாவற்றையும் செய்துபார்த்து படங்களோட வெளியிடறேன்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இது மட்டும் வேலை இல்லை நெல்லைத் தமிழரே! வீட்டில் எல்லா வேலைகளும் நான் தான்! வேலை செய்யும் பெண்ணைக் கொரோனாவுக்காக வரவேண்டாம்னு நிறுத்தியாச்சு. அதோடு அந்தப் பெண்ணுக்கு மூலம் ரொம்ப அதிகம் ஆகி மருத்துவரிடம் போய்க் கொண்டிருக்கிறாள். என்னிக்கு அறுவை சிகிச்சைனு சொல்லுவாங்களோ! என்ன தான் லேசர் அறுவை சிகிச்சை என்றாலும் குறைந்தது பதினைந்து நாட்களாவது ஆகும் உடல் நலம் தேற! ஆக என்னோட வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு நேரம் இருந்தால் தான் இணையம்! பதிவு எல்லாம்.

      Delete
    2. என் கருத்து உங்கள் இடுகைக்கு பெருமை சேர்க்கத்தான் சொன்னேன். தவறைச் சுட்டிக்காட்டுவது போலச் சொல்லலை கீசா மேடம்.

      நீங்க இப்போலாம் ரொம்ப பிஸி என்பதையும் (எக்ஸ்ட்ரா வேலைகளும் சேர்ந்துகொள்வதால்) புரிந்துகொள்கிறேன்.

      Delete
    3. நீங்க சொல்வது புரிகிறது. ஆனால் நான் இணையத்துக்கு வந்ததும் பதிவுகளைக் காப்பி, பேஸ்ட் பண்ணுவதில்லை. நேரடியாத் தட்டச்சு செய்கிறேன். அப்போ இதெல்லாம் நினைவில் வரதே இல்லை. அதோடு கணினியில் உட்காரும் நேரமும் குறைந்து வருகிறது! :(

      Delete
    4. வேலை செய்யும் பெண் இல்லாததால் வேலைகள் அதிகம் என என்னைப் பொறுத்தவரை இல்லை. ஏனெனில் 2018 ஆம் ஆண்டு வரை வேலைக்கு ஆள் வைச்சுக்கலை. நான் தான் செய்து கொண்டிருந்தேன். 2018 ஆம் ஆண்டில் அக்கி வந்தப்புறமா என்னால் எதுவுமே முடியாமல் போய்விட்டது. அதுக்கப்புறமா உடலின் சக்தியே உறிஞ்சி விட்டாற்போல் ஆகி விட்டது.

      Delete
  8. சதசதயம்,அரவணைப் பாயசம் இனிமை.
    ஜவ்வரிசி, கடலைப் பருப்பு பாட்டி செய்வார் . நான் செய்ததில்லை.
    இங்கே சரி என்றால் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி, ஜவ்வரிசி, கடலைப்பருப்புப் பாயசம் நீங்கள் ஒருத்தர் தான் தெரியும்னு சொல்லி இருக்கீங்க! நன்றி.

      Delete
  9. இதன் தொடர்ச்சியா ஒரு சந்தேகம் கீசா மேடம். ஜவ்வரிசில கண்ணாடி மாதிரி பெருசா இருக்கும் ஜவ்வரிசி வடநாட்டில் அதிகம். நம்ம ஊர் ஜவ்வரிசி வெள்ளையா இருக்கும். இரண்டுக்கும் உபயோகத்தில் வேறுபாடு ஏதாவது உண்டா? (கண்ணாடி ஜவ்வரிசிதான் சாபுதானா செய்முறைகளுக்கு உபயோகிக்கணும், பாயசத்துக்கு நம்ம ஊர் ஜவ்வரிசிதான் என்று)

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கண்ணாடி ஜவ்வரிசி நான் பயன்படுத்துவது இல்லை நெல்லைத் தமிழரே, வட மாநிலங்களில் பயன்படுத்தறாங்களானும் பார்க்கவில்லை நான் வடாம் போடும் மாவு ஜவ்வரிசிதான் பயன்படுத்துகிறேன். ஜவ்வரிசியே இங்கே தென்னிந்தியாவில் இருந்து வடமாநிலங்களுக்குப் போகிறது தான் எனக் கேள்வி.

      Delete