எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, November 22, 2019

பருப்பு உசிலிகள்! பாரம்பரியச் சமையல்!

பருப்பு உசிலிக்குத் தேவையான பொருட்கள். நான்கு பேருக்கு. காய்கள் அதிகம் பிடிக்கும் எனில் கொத்தவரை, அவரை,(பிடித்தால்), பீன்ஸ், பயத்தங்காய் போன்றவை அரைக்கிலோ தேவை. காயை நன்கு கழுவிக் கொண்டு பொடியாக நறுக்கவும்.  உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவிட்டு நீரை வடிகட்டித் தனியாக வைக்கவும்.

Image result for பீன்ஸ்
பருப்பு உசிலிக்குத் தேவையான பொருட்கள்: துவரம்பருப்பு சுமார் 200 கிராம். (நான் கடலைப்பருப்பே போட மாட்டேன். பிடித்தவர்கள் இரண்டும் சேர்த்துப் போட்டுக்கொள்ளவும்) மிளகாய் வற்றல் காரத்துக்கு ஏற்றாற்போல் நான்கு, உப்பு தேவைக்கு, பெருங்காயம் பவுடர் எனில் அரைக்கும்போது சேர்க்கவும். கட்டி எனில் ஊற வைத்து ஜலத்தைச் சேர்க்கவும்.

பருப்பு சுமார் இரண்டு மணி நேரமாவது ஊறிய பின்னர் மிக்சி ஜாரில் எல்லாவற்றையும் போட்டு ரொம்பக் கொரகொரப்பாக இல்லாமல் கொஞ்சம் நைசாகவே அரைக்கவும். ஒரு சிலர் இதை இட்லித்தட்டில் ஆவியில் வேக வைத்துக் கொண்டு பின்னர் உதிர்ப்பார்கள். ஆனால் எங்க வீட்டில் அப்படி வைப்பதில்லை. அரைத்த மாவை அப்படியே உசிலிப்போம். கடாயில் சமையல் எண்ணெய் ஒரு கரண்டி விட்டுக்கொண்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை போட்டுத் தாளித்துக் கொண்டு அரைத்த மாவைப் போட்டு நன்கு கிளற வேண்டும். அடிக்கடி கிளறிக்கொடுக்கவும். எண்ணெய் தேவையானால் இன்னும் கொஞ்சம் விட்டுக்கொள்ளலாம். சிறிது நேரத்தில் நன்கு உதிராக வந்து விடும். இப்போது வேக விட்ட காய்களைச் சேர்த்து எல்லாம் நன்கு கலக்கும்வரை கிளறிப் பின்னர் கீழே இறக்கலாம். வாழைப்பூ எனில் பூவில் கள்ளனை ஆய்ந்து கொண்டு பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைத்து விட்டுப் பின்னர் அந்த மோரிலேயோ அல்லது புளி ஜலத்திலேயோ வேக வைக்க வேண்டும். உப்பு, மஞ்சள் பொடி சேர்க்க வேண்டும். பின்னர் வடிகட்டிக்கொண்டு முன்னர் சொன்னமாதிரி பருப்பை உசிலித்துக் கொண்டு வெந்து வடிகட்டிய வாழைப்பூவைச் சேர்த்து நன்கு கிளறி எடுக்கவேண்டும்.

ஓர் ஒற்றைத் தட்டில் இலையைப் போட்டு எண்ணெய் ஊற்றித் தடவி அதில் அரைத்த மாவைப் போட்டு ஓர் மூடியால் மூடி இட்லி வேக வைக்கிறாப்பொல் வேக வைப்பார்கள். அதன் பின்னர் அதை எடுத்துக் கொண்டு கைகளால் உதிர்த்துக்கொண்டு அடுப்பில் எண்ணெய் ஊற்றித் தாளித்துக் கொண்டு அதில் போட்டு உதிர்க்கலாம். இன்னும் சிலர் மிக்சி ஜாரில் வெந்த பருப்பு உசிலியைப் போட்டுச் சுற்றுவோம் என்கிறார்கள். ஆனால் இந்த மாதிரி எல்லாம் நாங்க செய்வதே இல்லை. அரைத்ததை நேரடியாகப் போட்டுக் கிளறிப் பண்ணுவது தான் எங்க வீட்டில் செய்யும் முறை.

Image result for கீரை

இதுவே கீரை வகைகள் எனில் கீரையைக் கழுவி நறுக்கிக் கொண்டு பருப்பு உசிலிக்கு அரைத்ததோடு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதைக் கட்டாயமாக இட்லித்தட்டில் வேக வைத்தே ஆகவேண்டும். வெந்ததும் அதை எடுத்துக் கடாயில் எண்ணெய் ஊற்றித் தாளித்துக்கொண்டு வெந்த கீரை+பருப்புக்கலவையைப் போட்டு உதிர்க்கவேண்டும். நன்கு பொலபொலவென உதிர்ந்து விடும்.

Image result for சேம்பு இலை   Image result for முட்டைக்கோஸ்

இனி முட்டைக்கோஸ், புடலை, சேம்பு இலை ஆகியவற்றில் பண்ணும் முறை. முட்டைக்கோஸைப் பெரிய இலையாக வரும்படி எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நன்கு கழுவிவிட்டு உப்பு, மஞ்சள்பொடி தடவிக்கொண்டு சிறிது நேரம் வைக்க வேண்டும். பின்னர் அரைத்த பருப்பு விழுதை அதில் பரவலாகத் தடவ வேண்டும். பின்னர் அதை அப்படியே சுருட்டி வைக்க வேண்டும். அதே போல் முட்டைக்கோஸின் 2,3 இலைகளில் தயார் செய்து கொண்டு பின்னர் அதை இட்லித்தட்டில் வைக்க வேண்டும். வெந்த பின்னர் அவற்றைத் தேவையான அளவில் வெட்டிக்கொண்டு கடாயில் எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக்கொண்டு இதையும் போட்டு நன்கு வறுத்து எடுக்க வேண்டும். இதே போல் சேம்பு இல்லையிலும் பண்ணலாம். சேம்பு இலையை நன்கு கழுவிக்கொண்டு அரைத்த மாவைத் தடவிக்கொண்டு இலையைச் சுருட்டி இட்லித்தட்டில் வேக வைத்துக்கொண்டு பின்னர் முன் சொன்ன மாதிரி வறுத்து எடுக்க வேண்டும்.

Image result for புடலை

புடலங்காய் எனில் இரண்டு அங்குலம் நீளத்துக்கு நீள் சதுர வடிவில் வெட்டிக்கொள்ள வேண்டும். அவற்றில் முன்னால் சொன்ன மாதிரி உப்பு, மஞ்சள் பொடி தடவிக் கொஞ்ச நேரம் வைக்க வேண்டும். பின்னர் புடலங்காயின் உள் பாகத்தில் அரைத்த விழுதைத் தடவிக்கொண்டு அப்படியே பாதியாக மடிக்க வேண்டும். தேவை எனில் ஒரு நூலால் புடலங்காயைச் சுற்றலாம். பின்னர் இப்படியே எல்லாப் புடலங்காயிலும் தடவிச் சுருட்டிக்கொண்டு இட்லித்தட்டில் வைத்து வேக விட்டுக்கொண்டு நறுக்கியோ நறுக்காமலோ அப்படியே வறுத்து எடுக்கலாம்.

படங்களுக்கு நன்றி கூகிளார்.

19 comments:

  1. எங்கள் சின்ன வயதில் அம்மா செய்யும்போது இட்லித் தட்டில் வேக வைத்து செய்வார்களோ என்று தோன்றுகிறது.  சரியாகநினைவில் இல்லை. இப்போதெல்லாம் அரைத்த உடன் நேராக வாணலிதான்!! சின்ன வயதில் நாங்கள் இதை உசிலி என்று சொல்லிப் பழகியதில்லை. வடகறிதான்!

    ReplyDelete
    Replies
    1. பருப்புசிலி என்ற அருமையான வார்த்தையை 'வடகறி; என்று கொச்சைப் படுத்திவிட்டீர்களே... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (நான் இதுவரை வடைகறி சாப்பிட்டதே இல்லை. அது வடையை வைத்துச் செய்வாங்கன்னு நினைத்துக்கொண்டிருக்கிறேன்)

      Delete
    2. வாங்க ஸ்ரீராம், வடகறி என்பது வடநாட்டு கோஃப்தா மாதிரியான ஒரு க்ரேவி இல்லையோ? பருப்பு உசிலி வேறே.காய்களே சேர்க்காமல் வெறும் பருப்பை அரைத்து உசிலித்துக் கூடத் தொட்டுக்கலாமே!

      Delete
    3. வடகறி என்பது பெரிய நீளமான செய்முறை. பல பொருட்கள் தேவைப்படும். என் மன்னி செய்வார் அடிக்கடி. ஆனால் எனக்கு என்னமோ இட்லியோடு அது நல்லா இருக்காது என்று தோணும். அதே போல் கும்பகோணம் பக்கம் பண்ணும் கடப்பாவும் இட்லியோடு நன்றாக இருக்காது!

      Delete
    4. நீங்க வேற...கும்பகோணம் மங்கள விலாஸில், நான் சென்ற அன்று ஸ்பெஷல் 'கடப்பா'. எனக்கு தோசைக்கு சிறிது விட்டார்கள் (நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க).

      எனக்கு கடப்பாவும் பிடிக்கலை... நெல்லை சொதியும் பிடிக்கலை.

      Delete
    5. இரண்டிலும் பூண்டு அதிகம். அதிலும் கடப்பாவில் பூண்டு தான். நான்கு பேருக்குக் கடப்பா பண்ண சுமார் 100/150 கிராம் பூண்டு தேவை. அந்த வாசனையே எங்களுக்குப்பிடிக்கிறதில்லை. கடையில் கேட்டுப்போம் என்னிக்குக் கடப்பா போடுவீங்க என! அந்த நாள் அந்தக் கடைப்பக்கமே திரும்ப மாட்டோம்.

      Delete
  2. முட்டைகோஸில் செய்முறை இப்படிச் செய்ததில்லை.  செய்து பார்க்கச் சொல்லவேண்டும்.  ஆனால் பாசுக்குப்பெரும்பாலும் பொறுமை இருக்காது.  கொசைப்பொடியாக நறுக்கிக் கொண்டு வாணலியில் இட்ட பருப்புடன் சேர்த்துவிடுவோம்.  முன்னதாக கோஸை வேகவைத்துக்கொண்டுதான்!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா! முயற்சி செய்து பாருங்கள்.

      Delete
  3. முட்டைகோஸில் செய்முறை இப்படிச் செய்ததில்லை.  செய்து பார்க்கச் சொல்லவேண்டும்.  ஆனால் பாசுக்குப்பெரும்பாலும் பொறுமை இருக்காது.  கோஸைப் பொடியாக நறுக்கிக் கொண்டு வாணலியில் இட்ட பருப்புடன் சேர்த்துவிடுவோம்.  முன்னதாக கோஸை வேக வைத்துக் கொண்டுதான்!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா! முயற்சி செய்து பாருங்கள்.

      Delete
  4. ரசித்தேன். ருசித்தேன்.
    தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.

    ReplyDelete
    Replies
    1. முடிஞ்சப்போ வாங்க முனைவர் ஐயா!

      Delete
  5. இந்த இடுகையில் மிகச் சரியா சொல்லியிருக்கீங்க (தலைப்பு மற்ற எல்லாமே தலைப்பு சம்பந்தப்பட்டது).

    ஏற்கனவே சொன்ன மாதிரி, என் மனைவியின் அக்கா, துவரம்பருப்பு மட்டும் போட்டு நீங்க சொன்ன செய்முறைலதான் கொத்தவரை பருப்புசிலி செஞ்சிருந்தாங்க.

    நான் வெகு விரைவில் இந்த மெதட்டில் செய்துபார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நெல்லைத் தமிழரே!

      Delete
  6. கோஸ் பருப்புசிலி விளக்கிய விதம் தெளிவா இருந்தது. அதனையும் செய்துபார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நெல்லைத் தமிழரே!

      Delete
  7. புடலை பருப்புசிலி முழுவதுமா புரியலை. புடலையை நீள் சதுரமா நறுக்கி, எப்படி நூலால் கட்டுவது?

    ReplyDelete
  8. புடலங்காயைச் சின்னத் துண்டங்களாகப் போடாமல் இரண்டு அங்குல நீளத்துக்கு உருண்டையாகவே நறுக்கிக் கொண்டு பின்னர் அதை இருபாகமாக நறுக்கிப் பாருங்கள். புரியும்.

    ReplyDelete
  9. வித விதமான பருப்புசிலி பிரமாதம் கீதாமா.
    அதுவும் முட்டைக்கோஸும், புடலங்காயும் சூப்பர் யோசனை.
    பருப்புசிலி அரைத்து நிறைய எண்ணெய் விட்டு வதக்கி செய்தாலதான் அது உசிலி. மத்த மெத்தட் எல்லாம் ருசிப்பதில்லை.
    பெண்ணுக்குச் சொல்கிறேன்.

    ReplyDelete