எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, April 26, 2019

இன்னமும் பொடித்துக்கொண்டிருக்கோம்!

தோசை மிளகாய்ப் பொடி:-

தேவையான பொருட்கள்:- மிளகாய் வற்றல் சுமார் 25 எனில் ஒரு கிண்ணம் கடலைப்பருப்பு, ஒன்றரைக் கிண்ணம் உளுத்தம்பருப்பு. காரம் அதிகம் தேவை எனில் கடலைப்பருப்பைக் குறைத்துக் கொண்டு உளுத்தம்பருப்பை இரண்டு கிண்ணமாக எடுத்துக்கலாம். பெருங்காயம் கட்டியாக இருந்தால் நல்லது.  ஒரு சுண்டைக்காய் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இல்லை எனில் பருப்பை வறுக்கையில் பெருங்காயப் பொடியைச் சேர்த்து வறுக்க வேண்டும்.
உப்பு தேவையானது எள் விரும்பினால் ஒரு கரண்டி, வெல்லம் விரும்பினால் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியாக்கினது.
வறுக்க நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்

அடிகனமான கடாயில் நல்லெண்ணெயை ஊற்றிக் கொண்டு முதலில் கடலைப்பருப்பைப் போட்டுச் சிவக்க வறுத்து எடுக்கவும். பின்னர் உளுத்தம்பருப்பைப் போடவும். இரண்டையும் சேர்த்துப் போட்டால் உளுத்தம்பருப்பு சீக்கிரம் சிவந்துடும். கருகிப் போய்விடும் ஆபத்து இருக்கிறது. ஒவ்வொன்றாய் வறுத்து ஒரு பெரிய தட்டில் தனித்தனியே போட்டு ஆற வைக்கவும். இந்தச் சூட்டிலேயே பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக் கொண்டு அதிலேயே மிளகாய் வற்றலைக் காம்போடு போட்டுச் சிவக்க வறுக்கவும். மிளகாய் வற்றல் கறுப்பாகக் கூடாது. ஆகவே அடுப்பை நிழல் போல் எரிய விட்டு வறுக்கவும். பின்னர் அதையும் ஆற வைக்கவும்.

எள் போடுவதானால் எள்ளைக் களைந்து கல்லை அரித்துக் கொண்டு இன்னொரு வாணலியில் தனியாக வறுக்கவும். வெறும் வாணலியில் தான் வறுக்க வேண்டும். அதையும் தனியாக வைத்துக் கொள்ளவும்

பொருட்கள் பொறுக்கும் சூட்டில் ஆறியதும் மிக்சி ஜார் பெரியதாக எடுத்துக் கொண்டு காய்ந்த பொருட்களை அரைக்கும் பிளேடைப் போட்டுக் கொண்டு முதலில் மிளகாய் வற்றல் (காம்பு நீக்க வேண்டாம்) உப்பு, பெருங்காயம், பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு அரைக்கவும். மிளகாய் வற்றல் நன்கு மசிந்து பொடியாகட்டும். பின்னர் கடலைப்பருப்பைச் சேர்த்து மிக்சியில் திரிக்கவும். கடலைப்பருப்பும் மசிந்த பின்னர் உளுத்தம்பருப்பைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கிளறிவிட்டு மீண்டும் திரிக்கவும்.  கொரகொரப்பாக வேண்டுமெனில் கொஞ்சம்  திரிச்சதுமே எள்ளைச் சேர்ப்பதானால் சேர்த்துவிட்டு இரண்டு நிமிஷம் மிக்சியில் ஓட விடவும். பின்னர் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதைச் சீக்கிரம் பயன்படுத்த வேண்டும். எள் சேர்த்தால் பெரும்பாலும் விரைவில் வீணாகும் வாய்ப்பு இருக்கிறது. எனினும் மிளகாய்ப் பொடி வாசனையாக நன்றாக இருக்கும். கொரகொரப்பு தேவை இல்லைஎனில் உளுத்தம்பருப்பு அரை பட்டதும் எள்ளைச் சேர்க்கவும். எள்ளையும் சேர்த்து நன்கு திரித்ததும் எடுத்து பாட்டிலில் போட்டுப் பின்னர் பயன்படுத்தவும்.

அடுத்து வேர்க்கடலைப்பொடி! இதைச் சாதத்திலும் போட்டுச் சாப்பிடலாம். கறி, கூட்டு போன்றவற்றிலும் சேர்க்கலாம். இத்தோடு எள் சேர்த்தும் பண்ணலாம். எள் இல்லாமலும் பண்ணலாம்.

Image result for வேர்க்கடலை

வேர்க்கடலை ஒரு கிண்ணம் (வறுத்தது எனில் வெறும் வாணலியில் கொஞ்சம் சூடு செய்து விட்டுத் தோலை நீக்கிப் புடைத்துச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல் சுமார் 10 அல்லது 12 காரத்திற்கு ஏற்ப

பெருங்காயம் ஒரு துண்டு

கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்,
எள் தேவையானால் ஒரு டேபிள் ஸ்பூன்

Image result for எள்
உப்பு தேவைக்கு ஏற்ப

எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு முதலில் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் பொடி செய்து கொண்டு வேர்க்கடலையைப் போட்டுப் பொடித்துக் கொண்டு பின்னர் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றைப் போட்டுப் பொடித்த பின்னர் எள்ளைச் சேர்த்துக் கலந்து பொடியாக்கவும்.  இதில் ஒரு சிலர் பூண்டும் சேர்க்கின்றனர். பூண்டு பிடித்தவர்கள் பூண்டை வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு கடைசியில் சேர்க்கவும்.

அடுத்து இன்றைய சமையலில் அதிகம் பயன்படுத்தும் கரம் மசாலாப் பொடி

தேவையான பொருட்கள்:- பெரிய ஏலக்காய் 10 அல்லது 12
Image result for பெரிய ஏலக்காய்

இலவங்கப்பட்டை 25 கிராம்
Image result for இலவங்கப்பட்டை

கிராம்பு 10 அல்லது 12 எண்ணிக்கையில் போதும். அதிகம் போட்டால் காரம் ஜாஸ்தியாகத் தெரியும்.
Image result for கிராம்பு

சோம்பு 100 கிராம்

Image result for சோம்பு

இவற்றை வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும்போது இந்தப் பொடியில் கால் டீஸ்பூன் முதல் அரை டீஸ்பூனுக்குள் செய்யும் உணவுப் பொருளைப் பொறுத்துச் சேர்க்கலாம். அதிகம் சேர்க்க வேண்டாம்.

ஒரு சிலர் இதோடு மிளகு, ஜீரகம் சேர்க்கின்றனர். அவ்வாறு சேர்க்காமல் மிளகைத் தனியாகப்பொடியாகவும், ஜீரகத்தை வறுத்துக் கொண்டு தனியாகப் பொடியாகவும் வைத்துக் கொண்டால் வட இந்திய உணவுகளுக்குச் சரியாக வரும். இதைத் தவிரவும் கொத்துமல்லி விதையைக் காய வைத்துத் தனியாகப் பொடியாக வைத்துக் கொள்ளலாம். சிவப்பு மிளகாயை மிளகாய் கிடைக்கும் பருவத்தில் வாங்கி அரைக்கிலோவுக்குக் குறையாமல் காய வைத்து மிஷினில் கொடுத்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டால் ஊறுகாய்களுக்கும் சில வதக்கல் கறிகளுக்கும் பஜ்ஜி, பகோடா, போண்டா போன்றவை தயாரிக்கையிலும் ஆலு பராத்தா, மேதி பராத்தா, மூலி பராத்தா போன்றவை தயாரிக்கையிலும் மிளகாய்ப் பொடி சேர்க்கையில் பயன் படுத்திக்கொள்ளலாம்.

ஊறுகாய்ப் பொடி:- எந்த ஊறுகாய்க்கும் மிளகாய்ப் பொடி மட்டும் போதாது. கூடவே கடுகையும் , வெந்தயத்தையும் வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு ஊறுகாய் தயாரிக்கையில் மிளகாய்ப் பொடி சேர்க்கும்போது அதையும் சேர்த்துப் பின்னர் எண்ணெயைக் காய்ச்சி ஆற வைத்தோ, பச்சையாகவோ சேர்க்கலாம். சுமார் 100 கிராம் சின்னக் கடுகையும், 100 கிராம் வெந்தயத்தையும் வெறும் வாணலியில் வறுத்துச் சேர்த்துப் போட்டு மிக்சி ஜாரில் பொடித்து வைக்கலாம். இதைப் புளிக்காய்ச்சல் காய்ச்சும் போதும் தேவை எனில் சேர்க்கலாம். வெறும் வெந்தயத்தையும் வறுத்துப் பொடித்து வைத்துக் கொண்டால் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயப்பொடி சாப்பிடலாம். உணவு வகைகளில் சேர்க்கலாம். வற்றல் குழம்பில் இறக்கும்போது சேர்க்கலாம். ஊறுகாய்களில் வெறும் வெந்தயப்பொடி மட்டும் சேர்க்கலாம். என்னிடம் எல்லாப் பொடிகளும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். தீர்ந்து விட்டதெனில் மறுபடி பண்ணி வைத்துக் கொள்வேன்.

15 comments:

  1. இட்லி மிளகாய்ப்பொடிக்கு துவரம்பருப்பு சேர்க்கலையா? நான் சேர்ப்பேன். எங்க அம்மா மிக அதிகமாக எள் சேர்ப்பார்.

    எள் இல்லாமல், கொப்பரைத் தேங்காய் போட்டு அரைத்து தேங்காய் மிளகாய்ப்பொடி செய்யலாம்னு தெரியுமோ?

    ReplyDelete
    Replies
    1. இட்லிப் பொடிக்குத் துவரம்பருப்பு சேர்ப்பதில்லை. தேங்காய்ப் பொடி செய்திருக்கோம். தெரியும். ஒவ்வொன்றாகத் தான் எழுத முடியும்.

      Delete
  2. வேர்க்கடலை பொடிக்கு, லவங்கப்பட்டை, கிராம்பு, சோம்புலாமா? ஐயையோ.... எங்க வீட்டில் இதற்குத் தடாவாச்சே....

    ஆமாம் அது ஏலக்காய் படமா? பக்கத்திலேயே எழுதினால்கூட சந்தேகம் வரும்படியான படம்...

    ReplyDelete
    Replies
    1. வேர்க்கடலைப் பொடி செய்முறையை மீண்டும் ஒரு முறை படிக்கவும்.அதில் எங்கும் சோம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை சொல்லப்படவில்லை.

      Delete
    2. //ஆமாம் அது ஏலக்காய் படமா? பக்கத்திலேயே எழுதினால்கூட சந்தேகம் வரும்படியான படம்...//
      கரம் மசாலா, பிரியாணி,புலவ் தாளிப்பு இன்னும் சில வீட்டு மருந்துகளில் சேர்க்கப்படும் கறுப்பு ஏலக்காய்/பெரியதை நீங்கள் பார்த்ததில்லை என எண்ணுகிறேன். இதில் வாசனை அதிகம் இருப்பதால் ஒரு ஏலக்காயைச் சில சமயங்களில் 3 முறைக்குப் பயன்படுத்திப்பேன். உள்ளே உள்ள அரிசியை மட்டும் எடுத்துக் கொண்டு!

      Delete
    3. உண்மை... நான் கறுப்பு ஏலக்காயைப் பார்த்ததில்லை. (ஆனால் நல்ல ஏலக்காயின் அரிசி கறுப்பாகத்தான் இருக்கணும் என்பது தெரியும்)

      வேர்க்கடலைப்பொடி-படித்ததில் பிழைதான். கரம் மசாலாவுக்குத்தான் சொல்லியிருக்கீங்க...

      Delete
  3. வேர்க்கடலைப்பொடி செய்ததே இல்லை. படங்களுடன் நன்றாய் பதிவிட்டிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், இங்கேயும் வேர்க்கடலைப் பொடி செய்தால் அது சாபுதானா கிச்சடிக்காக மட்டுமே! சாதம் பிசையவோ, கூட்டு, குழம்பில், கறி வகைகளில் சேர்த்தாலோ மாமாவுக்குப் பிடிப்பதில்லை.

      Delete
  4. மிளகாய்ப்பொடியில் வெல்லம் சேர்ப்பதை நிறுத்தி வருடங்களாகின்றன! எள் சேர்த்தால் என் மகனுக்குப் பிடிக்கவில்லை என்பதால் எனக்கும் கிடைப்பதில்லை!

    ReplyDelete
    Replies
    1. வெல்லம் நிறையவெல்லாம் சேர்க்கவும் கூடாது ஸ்ரீராம். அந்த மிளகாய் வற்றலின் காரம் வயிற்றை ஏதும் பண்ணாமல் இருக்கத்தான் கொஞ்சம் போல் வெல்லம் சேர்க்கிறோம். சிலர் புளி கூட தோசை மிளகாய்ப் பொடிக்குப் போடுவார்கள். எப்படிப் போட்டாலும் நான் தோசை மிளகாய்ப் பொடி சாப்பிட்டுப் பல வருஷங்கள் ஆகின்றன. வெளியே போகும்போது அவருக்கு மட்டும் மிளகாய்ப் பொடி தடவிய இட்லிகள். எனக்குத் தனியாய்ச் சட்னி அரைச்சு எடுத்துக் கொள்வேன்.

      Delete
  5. ஊறுகாய்ப்பொடி, மசாலாப்பொடி போன்றவை அரைத்து வைத்துக்கொண்டால் எத்தனை நாட்களுக்குள் உபயோகப்படுத்த வேண்டும்? பழைய வாசனை வந்து விடாதா?

    ReplyDelete
  6. ஸ்ரீராம், கரம் மசாலாப் பொடி நான் 100 கிராம் போலப் பஞ்சாபில் இருந்து 2014 இல் வாங்கி வந்தேன். அது போன வருஷம் வரை வந்தது. :) நன்கு வறுத்துப் பொடித்தால் விரைவில் வீணாகாது. ஊறுகாய்ப் பொடியெல்லாம் நான் கொஞ்சமாகத் தான் பண்ணி வைச்சுப்பேன். 3 மாதம் இருந்தால் பெரிய விஷயம். வெந்தயப்பொடியெல்லாம் ஆறு மாசம் தாங்கும். நன்கு வறுத்துப் பொடித்து வைச்சுக்கணும்.

    ReplyDelete
  7. ஆம்சூர் பவுடர், கசூரி மேதி எல்லாமும் ஒரு பாக்கெட் வாங்கி வைத்தால் ஒரு வருஷம் வருகிறது பயன்பாட்டைப் பொறுத்து.

    ReplyDelete
  8. அதிரா இல்லாததால் நானும் வருவதில்லை. வம்பு இழுக்க முடியவில்லை. இந்தக் காலத்து இல்லத்தரசிகளுக்கு இதல்லாம் செய்யமுடியாது. ஆச்சியே துணை. உங்களை போன்ற மாமிகள் தான் முடியலை என்று சொல்லிக்கொன்டு செய்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதிராவுக்கு அம்மா வந்திருப்பதால் வரவில்லை. அதோடு அவர் இந்தப் பக்கம் அதிகம் வரமாட்டார். ஏஞ்சலின் தான் வருவார். அவரும் வேலைகளில் மும்முரம்! இந்தப் பொடிகளை இன்னமும் வீட்டில் செய்து வைத்துக்கொள்ளும் இளையோர்கள் இருக்கின்றனர்.

      Delete