எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, July 23, 2017

உணவே மருந்து! மாங்காய் 3

மாவடு ஊறுகாயை ரத்த அழுத்தம் இருக்கிறவங்க கூடக் கொஞ்சமாகப் பயன்படுத்தலாம் என எங்க குடும்ப மருத்துவர் ஒரு முறை சொல்லி இருக்கார். ஊறுகாயைச் சாதத்துக்குத் தொட்டுக்கிறவங்களைப் பார்த்திருப்பீங்க! கறி, கூட்டு மாதிரி ஊறுகாயும் போட்டுப்பாங்க! நான் அப்படிப் போட்டுக்காட்டியும் மாவடுவை வத்தல் குழம்பு சாதத்தோடு சாப்பிடப் பிடிக்கும். இப்போல்லாம் குறைச்சாச்சு! ஊறுகாய் எல்லாம் போட்டுக்கறதையும் நிறுத்தி விட்டேன். ஆனால் ஊறுகாய் போட்டு வைப்பது நிறுத்தலை. அம்பேரிக்காவில் இருந்தப்போப் பொண்ணுக்கு இருமுறை எலுமிச்சை ஊறுகாயும், மாங்காயில் ஆவக்காய் ஊறுகாயும், மாங்காய் இஞ்சி, இஞ்சி சேர்த்த தொக்கும், வெஜிடபுள் ஊறுகாயும் போட்டு வைச்சுட்டு வந்தேன்.

மாங்காய் ஊறுகாய் எல்லோருக்கும் தெரியும் தான். ஆனால் அதில் வித விதமாக இருக்கிறது அல்லவா? பொதுவாகக் கொஞ்சம் பழுக்கிற நிலையில் இருக்கும் அரைக்காயை(இந்தக் குறிப்பிட்ட மாங்காய் மதுரைப் பக்கம் "கல்லாமை" என்ற பெயரில் அழைக்கப்படும். மற்ற இடங்களில் "ஒட்டு" மாங்காய் என அழைப்பார்கள். பெரும்பாலும் இதில் தான் தொக்குப் போடுகிறார்கள். என்றாலும் தொக்குக்கெனத் தனி மாங்காய் இங்கே திருச்சி, ஶ்ரீரங்கம் கறிகாய்ச் சந்தையில் விற்கிறது.) நறுக்கி உப்பு, மிளகாய் தூவிச் சாப்பிடுவோம். வெளியே கடைகளில் பழக்கடைகள், தள்ளுவண்டிகள் ஆகியவற்றில் கூட இந்த மாங்காயை வில்லைகளாக நறுக்கி மாங்காய் பத்தை என்னும் பெயரில் விற்பார்கள். எனக்கும் அந்த ருசி பிடிக்கும். அதைத் தவிரவும் மாங்காயைப் பல சிறிய துண்டங்களாக நறுக்கிப் போடப்படும் புத்தம்புதிய துண்டம் மாங்காய் ஊறுகாயுடன் மோர் சாதம் மட்டுமில்லாமல் குழம்பிலிருந்து எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ள ரொம்பப் பிடிக்கும். அது செய்வதும் ரொம்பவே எளிமையானது.

ஒட்டு மாங்காய் எனப்படும் மாங்காய் பெரிதாக இருந்தால் ஒன்று அல்லது மாங்காய் ஏதேனும் ஒரு வகை ஒன்று அல்லது இரண்டு.

உப்பு தேவையான அளவு

மிளகாய்த் தூள் அவரவருக்குத் தேவையான காரம் கொடுக்கும்படி

பெருங்காயத் தூள் ஒரு டீஸ்பூன்

வெந்தயப் பொடி ஒரு டீஸ்பூன்

மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன்

நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூனிலிருந்து இரண்டு வரை மாங்காய்த் துண்டங்களின் அளவுக்கேற்ப

தாளிக்க கடுகு இரண்டு டீஸ்பூன்

மாங்காயைச் சின்னச் சின்னத் துண்டங்களாக நறுக்கிக் கொண்டு அதில் உப்புச் சேர்த்து மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பில் ஓர் கடாயில் நல்லெண்ணெயைக் காய வைத்துக் கொண்டு அதில் கடுகு தாளிக்கவும். மாங்காய்த் துண்டங்களின் மேல் பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி, வெந்தயப் பொடி ஆகியவற்றைப் போட்டு நல்லெண்ணயைச் சூடாக வெடித்த கடுகுடன் அதில் பரவலாக ஊற்றவும்.நன்கு கிளறி விடவும். இதை உடனே சாப்பிடலாம். இரண்டு, மூன்ரு நாட்கள் வைத்தும் சாப்பிடலாம். முன்னெல்லாம் இதை வைத்துச் சாப்பிடுவதெனில் தினம் தினம் வெயிலில் காய வைப்பார்கள். இப்போதெல்லாம் குளிர்சாதனப் பெட்டி இருப்பதால் இன்றைய பயன்பாடு முடிந்ததும் உடனே எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டுப் பின்னர் தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தலாம்.

Image result for மாங்காய் ஊறுகாய்

படத்துக்கு நன்றி: கூகிளார் வாயிலாக தினகரன்!

இதே போல் மாங்காயைச் சின்னச் சின்னத் துண்டங்களாக நறுக்கிய மாங்காயில் உப்பு மட்டும் சேர்த்துக் கொண்டு கடுகு, பச்சை மிளகாய் சேர்த்துத் தாளித்துக் கலந்தும் சாப்பிடலாம். இதோடு இஞ்சி, காரட் ஆகியவற்றைச் சேர்த்து உப்பு மட்டும் போட்டுப் பச்சைமிளகாய், கடுகு தாளித்துச் சாப்பிடலாம். அல்லது காரப்பொடி போட்டுக் கொண்டு கடுகு, பெருங்காயம் தாளித்தும் சாப்பிடலாம்.

எண்ணெய் மாங்காய்: மாங்காய் ஊறுகாய்க்கெனப் புளிப்பாகக் கிடைக்கும். அவற்றை வாங்கிக் கழுவிக் கொண்டு கொஞ்சம் பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். ஓடு வந்தால் பரவாயில்லை. மாங்காய்த் துண்டங்களை ஒரு கண்ணாடி ஜாடி அல்லது கல்சட்டி (ஹிஹிஹி) அல்லது பீங்கான் ஜாடியில் போட்டுத் தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும்.

எட்டு மாங்காய்கள் எனில் நல்ல புளிப்பான மாங்காயாக இருந்தால்  முக்கால்க்  கிண்ணம் உப்புத் தேவைப்படும். கல் உப்பாக இருந்தால் நல்லது. மாங்காயைத் தினமும் கிளறி விடவும். நான்கு நாட்கள் ஆனதும் மாங்காயையும் அதில் தளராக இருந்தால் அவற்றையும் மட்டும் தனியாக எடுத்து ஓரு மூங்கில் தட்டில் போட்டு வெயிலில் உலர்த்தவும்.  மாங்காயை எடுத்த பின்னர் ஜாடியில் சாறு இருக்கும். மாலை அதே சாறில் உலர வைத்தவற்றைப் போட்டு விட்டு மறுபடி மறுநாள் எடுத்து உலர்த்தவும். மீதம் கொஞ்சம் சாறு இருக்கும்.  அந்தச் சாறை அடியில் குப்பை, மண் ஏதும் இல்லையே என உறுதி செய்து கொண்டு ஒரு கல்சட்டியில் அந்தச் சாறைக் காய்ச்சவும். வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் மாங்காய்த் துண்டங்களையும் அதில் போட்டுக் கிளறி விட்டுக் கீழே இறக்கி வைக்கவும்.

ஓர் கடாயில் மாங்காய்க்குத் தேவையான மிளகாய் வற்றல், கடுகு, வெந்தயம் ஆகியவற்றைக் கொஞ்சம் நல்லெண்ணெயில் வறுக்கவும்.

மிளகாய் வற்றல் எட்டு நடுத்தர மாங்காய்களுக்கு சுமார் நூறு கிராம் தேவைப்படும். காரம் கூட்டியோ, குறைத்தோ போடலாம். எல்லாவற்றையும் நன்கு வறுத்துக் கொண்டு மிக்சியில் ஜாரில் போட்டுக் கடுகு, வெந்தயத்தோடு பொடிக்கவும். கீழே இறக்கி வைத்த மாங்காயில் போட்டுக் கலந்து வைக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் 200 கிராம் ஊற்றி நன்கு காய்ச்சவும். இந்த ஊறுகாயில் கொட்டிக் கிளறவும். மறுநாள் முதல் பயன்படுத்தலாம். இந்த ஊறுகாயைக்  கொஞ்சம் அதிக நாட்கள் வைத்திருக்க முடியும்

6 comments:

  1. 'நான் புது மாங்காய் ஊறுகாய் நீங்கள் சொன்னதுபோல் பண்ணுவதில்லை. மாங்காய் கட் செய்து, உப்பு சேர்த்து பிசிறி வைத்துக்கொள்வேன். கடாயில் நல்லெண்ணெய் கொதிக்கவைத்து, அதில் கடுகு, பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைத்தவுடன் காரப்பொடி, மஞ்சள் சேர்த்து, உடனே மாங்காயில் கொட்டிவிடுவேன் (இல்லைனா காரப்பொடி சூட்டில் கறுத்துவிடும்). பெருங்காயம் எப்போதும் அதிகமாகச் சேர்ப்பேன். வெந்தயப் பொடியும் சேர்ப்பேன். இதைச் செய்தவுடன், எனக்கு உடனே தயிர்சாதம் வேண்டும்.

    மாங்காய் துண்டமும், பெரியதாகப் போடுவேன்.

    எனக்கு கலந்த சாதத்துக்கும் (எலுமி, தேங்காய், கேரட்) புது மாங்காய் ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிடப் பிடிக்கும். (ரொம்ப எண்ணெய் வழியக்கூடாது)

    எண்ணெய் மாங்காய் நான் செய்ததில்லை. வாய்ப்பு வரும்போது செய்துபார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. நானும் புது மாங்காய் ஊறுகாய் நிறையத் தொட்டுக்கப் போட்டுப்பேன், :) ஆனால் காயும் எண்ணெயில் மிளகாய்த் தூளைச் சேர்ப்பது இல்லை. அடுப்பை அணைத்தால் கூட! கமறும்! அப்புறமா நிலைமை சிக்கலாகி விடும்! வத்தக்குழம்புக்குக் கூட மிளகாய் தாளிக்காதே என என் மருத்துவர் சொல்லிட்டே இருப்பார்! ஆனாலும் சமையலில் தவிர்க்க முடியறதில்லை. இம்மாதிரித் தவிர்ப்பேன். மி.பொ.யை நறுக்கிய துண்டங்களின் மேல் போட்டுக் காய்ச்சிய எண்ணெயை ஊற்றுவேன் பல சமயங்களிலும்.

      Delete
  2. காரசாரமா மாங்காய் ஊறுகாய்.... மோர் சாதத்துடன் நல்ல combo....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஊறுகாய்களின் ராணி மாங்காய் ஊறுகாய் தான்! :)

      Delete
  3. ஊறுகாய்களின் ராணி மாங்காய்தான். தொக்கு செய்யும்போது ஒட்டு மாங்காயில் செய்வது என் அம்மா காலத்தில் செய்து சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது. அந்தக் காலம் மறந்துபோய் இப்போது உருண்டை மாங்காயில்தான் தொக்கு போட்டுக் கொண்டிருக்கிறோம்! மறுபடி ஒட்டு மாங்காயில் போட்டுச் சாப்பிடவேண்டும். சமீபத்தில் என் மாமியாரின் தங்கை வீட்டிலிருந்து மாவடு கொடுத்து அனுப்பினார்கள். சமீபத்தில் இந்த அளவு தரமான மாவடு நான் சாப்பிட்டதில்லை. விழுந்த நடுவில் செய்யாமல், இதற்காகவே பறித்த வடு.

    ReplyDelete
    Replies
    1. அட! ஶ்ரீராமும் அதே சொல்லி இருக்கார். ஒட்டு மாங்காய் தான் தொக்குக்கு ஏற்றது என எங்க வீட்டில் சொல்லுவாங்க. ஆனால் இங்கே திருச்சி, ஶ்ரீரங்கம் மார்க்கெட்டுகளில் தொக்கு மாங்காய் என்றே விற்கின்றனர். அதிலே தொக்குப் பண்ணினால் எனக்கு ஒரு வருஷம் வரும்! :)

      Delete