எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, January 19, 2015

மஞ்சளில் ஒரு ஊறுகாய்

நவராத்திரிச் சுண்டல்கள் பாதியில் நின்றுவிட்டன.  வீடு வேலை செய்ய ஆரம்பித்ததில் இணையத்துக்கு அதிகம் வர முடியாமல் போய் விட்டது,. வந்தாலும் முதன்மைப் பதிவில் பதிவிடுவதோடு முடிந்து கொண்டிருந்தது. :) அப்படி ஒண்ணும் யாரும் ஏன் எழுதலைனு கேட்கலை!  காணோமேனு தேடவும் இல்லை.  என்றாலும் அவ்வப்போது நம் இருப்பைக் காட்டிக் கொண்டிருக்க வேண்டும் இல்லையா? அதுக்குத் தான் இந்தப் பதிவு.

ஆயிற்று.  இப்போதே இங்கே வெயில் கொளுத்தத் தொடங்கி விட்டது.  சில நாட்களாகக் காணாமல் போன சூரியன் இப்போது முழு வீச்சில் வரத் தொடங்கி விட்டான்.  காலை மட்டும் சீக்கிரம் எழுந்துக்க (எனக்கு மட்டும் இல்லாமல்) சூரியனுக்கும் சோம்பல்! ஹிஹிஹி, நான் எழுந்துக்க இப்போதெல்லாம் ஐந்து மணி, ஒரு சில நாட்கள் ஐந்தரை என ஆகி விடுகிறது.


 ஊறுகாய்க் காலம் தொடங்கப் போகிறது.  பல ஊறுகாய்களையும் ஏற்கெனவே பார்த்து விட்டோம்.  ஆனால் மஞ்சளில் ஊறுகாய் பார்க்கவில்லை.  இதுவும் கொஞ்சம் வெஜிடபிள் ஊறுகாய் மாதிரித் தான் என்றாலும் காய்களைச் சேர்க்காமல் மஞ்சள், இஞ்சி, மாங்காய் இஞ்சி, எலுமிச்சை, பச்சை மிளகாய் இவற்றை மட்டுமே வைத்துப் போட வேண்டும்.


நான் இதற்கு என மஞ்சள் வாங்கவில்லை.  சங்கராந்திக்கு வாங்கிய மஞ்சள் கொத்தில் கிடைத்த மஞ்சள் கிழங்குகளே போதுமானவையாக இருந்தன.   வாங்க வேண்டுமெனில் எல்லாமும் ஐம்பது கிராம் வாங்கவும். அதற்கு மேல் வேண்டாம்.  ஐம்பது கிராமே ஒரு பெரிய பாட்டில் நிறைய வரும். பச்சை மிளகாய் ஐம்பது கிராமில் பாதி போதும்.  அல்லது ஒரு பத்து மிளகாய் இருந்தால் போதும்.  ஏனெனில் மிளகாய்த் தூள் வேறே சேர்க்க வேண்டும்.  இப்போத் தேவையான பொருட்கள்:

பச்சை மஞ்சள் தோல் சீவித் துண்டமாக  நறுக்கியது  - ஒரு கிண்ணம்

இஞ்சி அதே போல் தோல் சீவித் துண்டமாக நறுக்கியது - அரைக்கிண்ணம்

மாங்காய் இஞ்சி (பிடித்தமானவர் சேர்க்கவும், இங்கே எனக்குக் கிடைக்கவில்லை;  திருச்சி போகணும்>)  நறுக்கியது     --- அரைக் கிண்ணம்

எலுமிச்சை  பெரிதாக இருந்தால் ஐந்து பழம்.   சின்னதாக இருந்தால் பத்துப் பழம்

பச்சை மிளகாய்  காரத்தைப் பொறுத்துப் பத்து அல்லது பதினைந்து இரண்டாக நறுக்கவும்.  பெரிய பச்சை மிளகாய் எனில் மூன்றாகக் கூட நறுக்கலாம்.  நறுக்கிய பச்சை மிளகாய்   அரைக் கிண்ணம்

உப்பு தேவையான அளவு

பெருங்காயத் தூள்  அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய்  அரைக்கிண்ணம்

மிளகாய்த் தூள்  3 டீஸ்பூன்

சர்க்கரை  ஒரு டீஸ்பூன்

கடுகு, வெந்தயப் பொடி  ஒரு டேபிள் ஸ்பூன்

ஊறுகாய் போட்ட உடனே சாப்பிட வேண்டுமெனில் நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றிக் கொண்டு மஞ்சள், இஞ்சி,மாங்காய் இஞ்சி, பச்சை மிளகாயைக் கொஞ்சம் வதக்கிக் கொள்ளவும்.

வதக்கியதில் உப்பு, பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள் சேர்த்துக் கொண்டு எலுமிச்சம்பழத்தைச் சாறு எடுத்துச் சேர்த்துக் கலக்கவும்.  மீதம் உள்ள எண்ணெயைச் சுட வைத்துப் பின் ஆற வைத்துச் சேர்க்கவும்.  வெளியில் வைத்தால் இரண்டு நாட்களும், குளிர் சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வாரமும் இதை வைத்திருக்கலாம். வதக்காமல்  பச்சையாகவே எலுமிச்சைச் சாறு உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கலந்தும் வைத்துச் சாப்பிடலாம்.

கொஞ்ச நாட்கள் வைத்திருக்க வேண்டுமானால் மேற்சொன்னபடி நறுக்கிய காய்களைக் கலந்து கொள்ளவும். எலுமிச்சையைப் பொடித்துண்டமாக நறுக்கிச் சேர்க்கவும்.  சின்னதாக இருந்தால் ஆறு எலுமிச்சையையும், பெரிதாக இருந்தால் மூன்று எலுமிச்சையையும் நறுக்கிச் சேர்க்கவும்.  மீதம் உள்ள எலுமிச்சையில் சாறு எடுத்துக் காய்களோடு கலக்கவும்.  உப்பு, பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள், சர்க்கரை, கடுகு, வெந்தயப் பொடி ஆகியவற்றையும் சேர்த்துக் கலக்கவும்.

அடுத்த நாள் கொஞ்சம் நீர் விட்டிருக்கும்.  கிளறி விட்டு விட்டு நல்லெண்ணெயைக் காய வைத்து ஆற விட்டு ஊறுகாயில் சேர்க்கவும்.  வினிகர் வாசனை பிடித்தமெனில் White Cooking Vinegar வாங்கி ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது மூன்று டீஸ்பூன் சேர்க்கவும்.  இதை வெளியேயே வைத்திருக்கலாம்.  வினிகர் ஊற்றுவதால் சீக்கிரம் கெடாது.  எங்களுக்கு வினிகர் வாசனை பிடிக்காது. பொதுவாக ஊறுகாய்களைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது இல்லை.  ஆனால் இந்த ஊறுகாய் சீக்கிரம் பயன்படுத்த வேண்டும்.  ஆகவே இந்த ஊறுகாயை மட்டும் எண்ணெய் ஊற்றிக் கிளறி விட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பின்னர் சாப்பிடும் முன்னர் வெளியே எடுத்து வைத்து விட்டுப் பயன்படுத்துவோம்.  சப்பாத்திக்குக் காய்கள் ஏதும் பண்ணவில்லை என்றாலோ, ஆலு பரோட்டா, முள்ளங்கி பராட்டா, தேப்லா போன்றவற்றுக்கோ நல்ல துணை.  

21 comments:

  1. ///காணோமேனு தேடவும் இல்லை.////

    ஆரு சொன்னா?!!.நானெல்லாம் தேடினேன்!..:

    மாங்காய் இஞ்சி இங்கே கிடைக்குது அதிசயமா!..பச்சை மஞ்சளை என்னதான் பண்ணுறதுன்னு தெரியாம முழிச்சிட்டிருந்தேன்.. இதைப் பண்ணிடறேன் உடனே!..:)!.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பார்வதி, சாப்பிட கரெக்டா வந்ததில் சந்தோஷம். யாரானும் சாப்பிட்டு நல்லா இருக்குனு சொன்னால் அதைவிட சந்தோஷம்! :)

      Delete
  2. குறித்துக் கொண்டேன். எண்ணெயைக் காயவைத்தபின், ஆற வைத்துதான் ஊற்ற வேண்டுமா? அப்படியே ஊற்றினால் வதக்கிய எஃபெக்ட் கிடைக்குமே!

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை, சூடாவே விட்டுக்குங்க! தப்பெல்லாம் இல்லை. ஆனால் ஆற வைத்து விடுவது தான் நல்லதுனு பெரியவங்க சொல்வாங்க! :)

      Delete
  3. மஞ்சள் ஊறுகாய் அட்டகாசமாக இருக்கிறது படிக்க. இதுக்காகவே திருச்சி வரணும்..

    காலை ஐந்து மணிக்கு எழுந்திருப்பதை சோம்பல் என்கிறீர்களா!!

    தேப்லா போஜன வஸ்து தானே?

    ReplyDelete
    Replies
    1. வாங்க அப்பாதுரை, எங்கே? அதான் சொல்லாமல் வந்துட்டு ஓடிடறீங்களே!
      நான் நாலரை மணிக்கு எழுந்துப்பேன் வழக்கமா. இப்போல்லாம் அரைமணி, ஒரு மணி தாமதம் ஆகிவிடுகிறது. :(

      தேப்லா போஜன வஸ்துவே தான். சமையல் குறிப்புக் கொடுத்திருக்கேன். படம் போடவில்லை. ஒருநாள் பண்ணினால் படம் எடுத்துச் சேர்க்கணும். :) காரம் போட்ட சப்பாத்தி அல்லது பரோட்டா! கொஞ்சம் மொறு மொறுனு வேக விடலாம். வழிப்பயணத்துக்கு ஏற்றது.

      Delete
    2. குஜராத்தியரின் சிறப்பு உணவு தேப்லா!

      Delete
    3. அப்பாதுரை, தேப்லா செய்முறை எழுதிய பதிவு. விரைவில் படம் போட முயற்சிக்கிறேன். :)

      http://geetha-sambasivam.blogspot.in/2014/01/blog-post_31.html

      Delete
  4. செய்து ருசிக்கிறோம்... நன்றி அம்மா...

    ReplyDelete
    Replies
    1. பாருங்க டிடி, பிடிச்சதானு சொல்லுங்க.

      Delete
  5. மஞ்சள் ஊறுகாய் எனக்குப் புதிது. செ்ய்து பார்க்கிறேன். அபூர்வமாகப் பார்த்தேன். நன்றியும் அன்புடனும்

    ReplyDelete
    Replies
    1. வாங்க காமாட்சி அம்மா, உங்கள் வருகை சந்தோஷமாக இருக்கிறது. குஜராத்தில் மஞ்சள் ஊறுகாய் ரொம்பவே பிரபலம். வெறும் மஞ்சளில் மட்டுமே கூடப் போடுவார்கள். செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்க.

      Delete
  6. இப்படி ஒரு ப்ளாக் நீங்க எழுதறது இப்போதான் தெரியும்! இனி அவ்வப்போது வருகிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ், முடிஞ்சப்போ இதில் போடுவேன். :)

      Delete
  7. ஹை! குஜராத்தி ரிசிப்பி! மஞ்சள் ஊறுகா! தேப்லாவுடன் சாப்பிட்டதுண்டு....அருமையான ரிசிப்பி....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், துளசிதரன், தேப்லாவோடு மட்டுமல்ல மூலி பராத்தா, ஆலு பராத்தா, மேதி பராத்தா போன்றவற்றோடும் நல்ல துணை இது.

      Delete
  8. ரொம்பவும் வித்தியாசமாய் தெரிகிறது. செய்து பார்க்கவும் ஆசை. ஆனால் மஞ்சள் பொங்கல் சமயத்தில் அல்லவா கிடைக்கும். சற்று தாமதமாகப் பார்த்து விட்டேன் இந்த குறிப்பை! அடுத்த பொங்கல் வரைக்கும் காத்திருக்கணும்!

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு மனோ சாமிநாதன். நீங்க எங்கே இருக்கீங்கனு தெரியலை. மஞ்சள் பங்குனி மாதம் வரை கிடைக்கும். பச்சை மஞ்சள் கூறு கட்டி விற்பாங்க. வாங்கலாம். அடுத்த பொங்கல் வரை காத்திருக்க வேண்டாம். :)

      Delete
  9. கீதா மாமி... மஞ்சள் ஊறுகாய் நான் கேள்விப்படாதது. இன்னும் கொஞ்ச நாளில், நீங்கள் என்ன என்ன எழுதவில்லை என்று கண்டுபிடித்துச் சொல்கிறேன். 'நீங்கள் உங்கள் அனுபவத்தில் பண்ணியவற்றின் செய்முறையைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  10. ஓ கே. மஞ்சள் ஊறுகாய் போட்ட ஆசையாக உள்ளது

    ReplyDelete
  11. ஓ கே. மஞ்சள் ஊறுகாய் போட்ட ஆசையாக உள்ளது

    ReplyDelete