எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, November 30, 2015

உணவே மருந்து 2 சுண்டைக்காய்!

அது என்ன சுண்டைக்காய் விஷயம் எனச் சர்வ சாதாரணமாகச் சொல்வோம். சுண்டைக்காய் கால் பணம்; சுமைகூலி முக்கால் பணம் என்னும் பழமொழியும் உண்டு. இப்படி எல்லாம் குறைவாகப் பேசப்படும் சுண்டைக்காய் தான் நீரிழிவு உள்ளவர்களுக்கு மிகவும் நன்மையைத் தருகிறது. சுண்டைக்காய் மலைகளில் வளருவதையே மருந்தாகப் பயன்படுத்துவார்கள். வீடுகளில் செடிகளில்/சிறிய மரமாகவும் இருக்கும், காய்க்கும் சுண்டைக்காயை நாட்டுச் சுண்டைக்காய் என்பார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சுண்டைக்காயைப் பொதுவாக வற்றலாகச் செய்தே சாப்பிட்டு வருகிறோம்.

Image result for சுண்டைக்காய் பயன்கள்

படம் நன்றி கூகிளார்

ஆனால் நாட்டுச் சுண்டைக்காயைப் பருப்புப் போட்டுக் கறியும் செய்யலாம். சாம்பார் வைக்கலாம், வற்றல் குழம்பும் செய்யலாம். வைடமின் சி சத்து அதிகம் உள்ள இந்தச் சுண்டைக்காயில் பொதுவாக மலைச்சுண்டைக்காய் என்னும் கசப்புள்ள சுண்டைக்காயிலேயே வற்றல் போடுவோம். பச்சைச் சுண்டைக்காய் ஒரு கிலோ வாங்கிச் சுத்தம் செய்து காம்புகளை ஓரளவுக்கு நீக்கி லேசாகக் கீறிக் கொண்டு அரை லிட்டர் தயிரில் உப்புச் சேர்த்து ஊற வைக்க வேண்டும். ஒரு வாரமாவது ஊற வேண்டும். ஆனால் தினமும் கிளறி விட வேண்டும். இல்லை எனில் பூஞ்சைக்காளான் பிடிக்கும். பின்னர் வெளியே எடுத்து தயிர் இல்லாமல் ஒரு தட்டில் பரவலாகப் போட்டு வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மாவடு ஊறுகாய் போட்டு மீதம் இருக்கும் ஜலத்திலும் சுண்டைக்காயை ஊறப் போட்டு வற்றல் செய்யலாம். இதன் ருசி அபாரமாக இருக்கும்.

Image result for சுண்டைக்காய் பயன்கள்

படம் நன்றி கூகிளார்

தயிரிலோ, மாவடு ஜலத்திலோ சுண்டைக்காய் ஊறும்போதே அவற்றைச் சமைக்க எடுத்துக் கொள்ளலாம். இனி சுண்டைக்காயின் பலன்களைப்பார்ப்போமா?

ரத்த அழுத்தத்தைச்சீராக இருக்கவைக்க உதவுகிறது.  இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகையைக் கட்டுப்படுத்தும். உடல்நலமில்லாத சமயத்தில் கூட தைரியமாகச் சுண்டைக்காயைச் சாப்பிடுவதால் வயிற்றுக்கோளாறுகள் நீங்கும். வெள்ளை அணுக்கள் அதிகரிக்கும் பிரசவம் ஆன பெண்களுக்குக் கொடுக்கப்படும் அங்காயப்பொடி எனும் ஐங்காயப் பொடியில் அதிகம் சுண்டைக்காயே சேர்க்கப்படும். இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் என்றும் ஜீரண சக்தியைத் தூண்டி, வயிற்றில் சேர்ந்த நச்சுக்களை வெளியேற்றும் என்றும் சொல்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

நெஞ்சில் உள்ள கபத்தை அகற்றும் குணம் கொண்ட சுண்டைக்காய்ச் செடியின் வேரை உலர்த்திச் சூரணம் செய்துத் தேங்காய்ச் சிரட்டையில்(கொட்டாங்கச்சி) வைத்துக் கொண்டு ஒற்றைத் தலைவலிக்காரர்கள் இந்தப்பொடியால் ஒரு சிட்டிகை எடுத்துக் கொண்டு நசியமிட்டால் தலைவலி நீங்கும் என்றும் ஜலதோஷத்தினாலும் மூக்கடைப்பினாலும் அவதிப்படுபவர்கள் சுகம்பெறுவார்கள் என்றும் சொல்கின்றனர்.

வயிறு அஜீரணத்திற்கும் சீதக்கழிச்சலுக்கும், ஜீரணமாகாமல் கழிந்தாலும் சுண்டைக்காய், வெந்தயம், மாதுளை ஓடு, நெல்லி வற்றல், ஓமம், கருகப்பிலை, மாங்கொட்டைப் பருப்பு இவற்றைச் சமமாக எடுத்துக் கொண்டு தனித்தனியாக இளவறுப்பாக வறுத்துக் கொண்டு பொடி செய்து தினசரி ஒரு தேக்கரண்டி பொடியை மோருடன் கலந்து சாப்பிடலாம். இது நான் நெல்லிவற்றல், மாதுளை ஓடு சேர்க்காமலும் செய்து சாப்பிட்டிருக்கிறேன். நல்ல பலன் தரும். வாயுவையும் நீக்கும். அதே போல் சுண்டைக்காயை விளக்கெண்ணெயுடன் கலந்து வறுத்து மிளகு, சீரகம், வெந்தயம், கருகப்பிலையையும் வறுத்துப் பொடி செய்து சாதத்தோடு கலந்து சாப்பிடுவார்கள். விளக்கெண்ணெய் வாசனை பிடிக்காததால் பலருக்கும் இது கொஞ்சம் பிடிக்காது தான். சும்மா ஒரு கைப்பிடி சூடான  சாதத்தில் இந்தப்பொடியைக் கொஞ்சம் போல் போட்டு ஒரு வாய் சாப்பிட்டு வந்தாலே போதும்

சுண்டைக்காய் வேரோடு, இலுப்பைப் பிண்ணாக்கு(இப்போக் கிடைக்குமானு தெரியலை)தும்பை வேர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு காய வைத்துப் பொடி செய்து கொண்டு நசியமிட்டு வந்தால் வாத சம்பந்தமான நோய்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். இப்போது அங்காயப் பொடி செய்முறை பார்க்கலாம்,

தேவையான பொருட்கள்

வேப்பம்பூ சுத்தம் செய்யப்பட்டது ஒரு கிண்ணம்

சுண்டைக்காய் வற்றல் ஒன்று அல்லது இரண்டு கிண்ணம்

இந்துப்பு அல்லது சாதாரண உப்பு தேவைக்கு

பெருங்காயம் பவுடர் இரண்டு டீஸ்பூன் அல்லது கட்டி சிறிதளவு

ஓமம்  ஒரு டேபிள் ஸ்பூன்

கருகப்பிலை

மிளகாய் வற்றல் இரண்டு அல்லது மூன்று

மிளகு, சீரகம் தலா இரண்டு டீஸ்பூன்

சுக்கு ஒரு பெரிய துண்டு

தனியா(விருப்பப்பட்டால்)

எல்லாவற்றையும் வெறும் வாணலியில் (உப்பு உட்பட) வறுத்துக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டுப் பொடி செய்து கொள்ளவும். சாப்பிடும்போது கொஞ்சம் போல் சூடான சாதத்தில் இந்தப் பொடியைப் போட்டுக் கொண்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொஞ்சம் சாப்பிட்டதும் பின்னர் சாம்பாரோ, குழம்போ, ரசமோ சாப்பிட்டுக்கொள்ளலாம். இதை அஜீரணம் ஏற்படும்போதும் வாயில் ருசியின்மை உணர்தல் போன்ற சமயங்களில் சூடான சாதத்துடன் சாப்பிடலாம். அல்லது மோரில் கலந்து குடிக்கலாம். 

8 comments:

 1. அங்காயப் பொடி செய்முறைக்கு நன்றி அம்மா...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிடி. அங்காயப் பொடி செய்து சாப்பிட்டுப் பாருங்க.

   Delete
 2. மலைச் சுண்டைக்காய் மதுரையில் இருக்கும்வரை தாராளமாய்க் கிடைத்தது. எனவே இதை மதுரைச் சுண்டைக்காய் என்று அழைத்தே பழகி விட்டது. அதன் கசப்பால் பலரும் வேண்டாம் வேண்டாம் என்றாலும், எனக்கு பாகற்காய்கே கசப்பும் பிடிக்கும். இந்தச் சுண்டைக்காயின் கசப்பும் பிடிக்கும். நான் தஞ்சாவூர்க் காரனாக்கும்! எனவே காஃபியும் கசப்பாகத்தான் சாப்பிடுவேன்!

  மலைசுண்டைக்காயை மோரில் ஊற வைத்து ஊறிக் கொண்டிருக்கும்போதே எண்ணெயில் பொரித்துச் சாப்பிடுவது சுகமோ சுகம்! அந்த வாசனை எங்கள் வெட்டில் மற்றவர்களுக்கு அலர்ஜி! நிறைய பேர்களுக்கு மாகாளியின் வாசனை கூடப் பிடிப்பதில்லை!

  எங்கள் வீட்டில் ஒரு பிரச்னை என்ன என்றால் இந்தப் பிடிக்கும் ஐட்டங்கள் விஷயத்தில் நான் மைனாரிட்டி ஆகி விடுவதால் எனது பெரும்பாலான விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள நானே களத்தில் இறங்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. இங்கே எல்லாச் சுண்டைக்காயும் கிடைக்கும். வாங்கி நிறைய வற்றல் போட்டு உறவினர்களுக்கெல்லாம் கொடுக்கிறேன். மோரில் ஊறிக் கொண்டிருக்கும் சுண்டைக்காயை எண்ணெயில் பொரித்துக் குழம்பு சாதம், ரசம் சாதத்துக்குத் தொட்டுக்க நிறையவே போட்டுப்பேன். இங்கே நம்ம ரங்க்ஸுக்கும் முன்னால் எல்லாம் சுண்டைக்காய்னாலே பிடிக்காது. இப்போது என்னோடு சேர்ந்தோ என்னமோ சாப்பிட ஆரம்பிச்சிருக்கார். என் மன்னி இப்போவும் பாகற்காய் சாப்பிட மாட்டாங்க என்பதோடு குழந்தைங்களுக்கும் பழக்கலை. கசக்கும், என்ன? வேணுமா என்றே குழந்தைங்களிடம் கேட்பாங்க! :) அப்புறம் எந்தக் குழந்தை சாப்பிடும்?

   Delete
 3. சுண்டைக்காயின் சிறப்பு பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், நன்றி.

   Delete
 4. மிக நன்றி கீதா. படத்திலாவது பச்சை சுண்டைக்காயைப் பார்த்துக் கொள்கிறேன்.
  மதுரையில் தான் சுண்டைக்காய் நன்றாகக் கிடைக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, இங்கேயும் சுண்டைக்காய் நிறையக் கிடைக்குது! எல்லா வகைச் சுண்டைக்காய்களும் கிடைக்கும்.

   Delete