எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, November 13, 2012

முள்ளாய்க் குத்தாத தேன்குழல்! :))

இப்போ முள்ளுத் தேன்குழலை எப்படிச் செய்யறதுனு பார்ப்போம்.  இது அரிசியை ஊற வைச்சு அரைச்ச மாவிலே ஒரு மாதிரியாகவும், வறட்டு அரிசியிலே ஒரு மாதிரியாகவும் செய்யணும்.  முதல்லே வறட்டு அரிசியிலே பார்ப்போம்.

அரிசி ஒரு கிலோ என்றால் ஒரு ஆழாக்கு கடலைப் பருப்பு, ஒரு ஆழாக்கு பாசிப் பருப்பு.  பருப்பு வகைகளை வெறும் வாணலியில் பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் அரிசியோடு கலந்து நன்கு நைசாகவே அரைக்கவும்.

இந்த அரைத்த மாவு இரண்டு கிண்ணம், வெண்ணெய் தேவையான அளவு, உப்பு, பெருங்காயம், பிசைய நீர்.  சிலர் வீடுகளில் எள் சேர்ப்பார்கள்.  அவங்க எள்ளையும் சேர்த்துக்கலாம். நான் எள் போட மாட்டேன்.  அரிசி மாவோடு உப்புச் சேர்த்துப் பெருங்காயம் , வெண்ணெயும் சேர்த்து முன்னர் தேன் குழலுக்குச் சொன்னாப் போலவே நன்கு கலக்கவும்.  கைகளால் கலந்து கொண்டு அது கரகரப்பாகக் கைக்கு வந்ததும் நீர் விட்டுப் பிசையவும்.  பின்னர் அடுப்பில் வாணலியில் சமையல் எண்ணெயை வைத்துத் தேன்குழலைப் பிழிந்து எடுக்கவும்.


இன்னொரு முறை:

ஊற வைத்த அரிசியில் அரைத்த மாவு இரண்டு கிண்ணம், கடலை மாவு அரைக் கிண்ணம், பொட்டுக்கடலை மாவு இரண்டு டேபிள் ஸ்பூன்.  கடலை மாவை பச்சை வாசனை போக வறுக்கவும்.  பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் வறுத்து மிக்சியில் பொடி செய்யவும்.  உப்புப் பெருங்காயத்தோடு இவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.  இதற்கு வெண்ணெய் கொஞ்சமாகப் போட்டால் போதும்.  அல்லது வாணலியில் சமையல் எண்ணெய் அரைக்கரண்டியை நன்கு காய வைத்து மாவில் ஊற்றவும்.  மாவு முழுதும் வெண்ணெய் அல்லது எண்ணெய் கலந்த பின்னர் நீர் ஊற்றிப் பிசையவும்.  பின்னர் தேன்குழல்களாகக் காய்ந்த எண்ணெயில் பிழியவும்.

வெளிநாடுகளில் அரிசி மாவு ரெடிமேடாகக் கிடைப்பதில் மேலே சொன்னாப் போல செய்யலாம். தைரியமாகச் செய்யலாம்.  அங்கே இருந்த இரண்டு தீபாவளிகளில் நான் அப்படித் தான் செய்தேன்.  நன்றாகவே வருகிறது.  அல்லது லாங் கிரெயின் அரிசி வாங்கி அதை ஊற வைத்து அரைத்து மாவாக்கியும் செய்து கொள்ளலாம்.  கடலைப்பருப்பை எல்லாம் வறுத்து அரைக்க முடியாது என்பதால் கடலைமாவு, பொட்டுக்கடலை மாவு போட்டுக் கொள்ளலாம்.  இந்த மாவிலேயே கொஞ்சம் காரப்பொடி, தேங்காய் பல் பல்லாகக் கீறிப் போட்டு, கடலைப்பருப்பு அல்லது வேர்க்கடலையை ஊற வைத்துச் சேர்த்துத் தட்டையாகவும் தட்டலாம். நல்ல கரகர தட்டைக்கு நான் காரன்டி. 

3 comments:

  1. முள்ளு முறுக்கு எங்க பாஸ் இப்படித்தான் - 2வது முறையில் - செய்தார்கள். என்ன, ஊற வைக்கவில்லை, வெண்ணெய் சேர்க்கவில்லை! அவசரத்துக்கு நெய் சேர்த்தார்கள்! பரவாயில்லை!

    ReplyDelete
  2. நெய்யையும் சூடு பண்ணி விட்டிருந்தால் இன்னும் கரகரகரகர! :)))))

    ReplyDelete
  3. இங்க கிடைக்கற அரிசிமாவு ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. நான் எல்லா பட்சணமும் இதுலதான் பண்றேன். ரொம்ப நல்லா வரது. Especially கொழக்கட்டை பிரமாதமா வரது. அப்படியே தண்ணி விட்டு பஜ்ஜி மாவு பதத்துல கலந்து நேரா கொழக்கட்டை மாவு கிளரிடலாம். அஞ்சு நிமிஷ வேலைதான். இந்த மாதிரி மாவு இந்தியால கிடைக்கறதா தெரியல. வரும்போது பாக்கணும்.

    நான் முள்ளு தேன்குழல் நீங்க எழுதி இருக்கா மாதிரி கடலை மாவு, பயத்தமாவு சேர்த்துதான் எப்பவுமே பண்ணுவேன். அரிசி மாவோட, கடலை மாவும், பொட்டுக்கடலை மாவும் சேர்த்து, உப்பு, பெருங்காயம், வெண்ணெய், காரப்பொடி போட்டு ரிப்பன் பண்ணுவேன். இது கரகரன்னு ரொம்ப நன்னா இருக்கும்.
    நல்ல கணிசம் வரும்.

    பரவாயில்லை இந்த ரெசிபி எல்லாம் நிறைய உங்களோடது மாதிரிதான் நானும் பண்றேன். இதுக்காக எனக்கு நானே ஒரு 'பேஷ்' சொல்லிக்கறேன். :))

    ReplyDelete