எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, November 2, 2019

பாரம்பரியச் சமையலில் சேனைக்கிழங்குக் கறி செய்முறைகள்

இன்னமும் கத்திரிக்காய் மஹாத்மியம் முடியவில்லை. கூட்டு வகைகள் , சப்பாத்திக்கான கூட்டுகள், பர்த்தா, துவையல், கொத்சு, பச்சடி ஆகியவை இருக்கின்றன. அதை அந்தத் தலைப்புக்களில் பார்க்கலாம். இப்போக் கறி வகைகள் என்னும் தலைப்பு என்பதால் அடுத்து வேறோர் காயில் கறி வகை பார்க்கலாம். சேனைக்கிழங்கில் பார்ப்போமா? சேனைக்கிழங்கு நம்ம ஊர்க்கிழங்கு எனச் சிலரும் இல்லை எனச் சிலரும் சொன்னாலும் நம்ம வீடுகளில் ஸ்ராத்தத்தில் எல்லாம் பயன்படுத்துகிறார்கள். பொங்கல் குழம்பு வகைகள், திருவாதிரைக்குழம்பு ஆகியவற்றில் இது ஓர் முக்கியமான காய் வகை. இதைப் பொடியாக நறுக்கி அப்படியே வதக்கலாம். அல்லது வேக வைத்து வதக்கலாம். இதில் சில கிழங்கு வகைகள் சாப்பிட்டால் சமயத்தில் நாக்கில் அரிப்பு வரும் என்பதால் பெரும்பாலும் அரிசி கழுவிய கழுநீரிலே இதை வேக வைப்பார்கள். அது பிடிக்காதவர்கள் அரிசி கழுவிய இரண்டாம் கழுநீரில் நறுக்கிப் போட்டு ஊற வைத்துவிட்டுப் பின்னர் மறுபடி நன்கு கழுவிப் புளி ஜலத்தில் வேக விடலாம். சிலர் முதலில் அரிசிக் கழுநீரில் வேகவிட்டு வடிகட்டிவிட்டுப் பின்னர் மறுபடி கழுவி புளி ஜலத்தில் வேக விடுவார்கள். இம்மாதிரி செய்வதால் அதன் காறல் தன்மை மாறிவிடும் என்பார்கள்.

Image result for சேனைக்கிழங்கு


சேனைக்கிழங்கு அரைக்கிலோ. நல்ல மண் போகக் கழுவிப் பொடியாகத் துண்டங்களாக நறுக்கவும். அரிசி கழுவிய நீரில் அதை ஊற வைக்கவும். பின்னர் அதை வடித்து நன்றாகக் கழுவவும். புளியை நீர்க்கக் கரைத்துக்கொண்டு அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கிய சேனைக்கிழங்கைப் போட்டு வேக வைக்கவும். நீரை வடிகட்டவும். அடுப்பில் தே.எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் ஏதேனும் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு வெந்து வடிகட்டிய துண்டங்களைப் போட்டுக்  காரப்பொடி  சேர்த்துக் கொண்டு சிறிது நேரம்  நன்கு வதக்கவும். பின்னர் எடுத்து வற்றல் குழம்போடு சூடாகப் பரிமாறவும்.

Image result for சேனைக்கிழங்கு

படங்கள் கூகிளார் வாயிலாக இணையத்தில் இருந்து

இன்னொரு முறை:- நறுக்கிய சேனைக்கிழங்குத் துண்டங்களை புளி ஜலத்தில் வேகவிடவும். வேக விட்டதை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். அரைக்கிலோ சேனைக்கிழங்குக் கறிக்குத் தேவையான மசாலா பொருட்கள்.

தேங்காய் ஒரு சின்ன மூடி.தேங்காயைத் துருவி எடுத்துக்கொள்ளவும். இல்லை எனில் தேங்காய்த் துருவல் ஒரு சின்னக் கிண்ணம்  , மி.வத்தல் நடுத்தரமானது 2, ஜீரகம் இரண்டு டீஸ்பூன். இவற்றை அம்மி இருந்தால் அம்மியில் எல்லாவற்றையும் சேர்த்து அரைகுறையாகக் கொரகொரவென அரைத்துக்கொள்ளவும். இல்லை எனில் மிக்சி ஜாரில் கொரகொரவெனப் பொடித்துக்கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணாய் (இதான் நன்றாக இருக்கும்) வைத்துக் கடுகு,உளுத்தம்பருப்பு, ஒரு சிவப்பு மி.வத்தல், கருகப்பிலை போட்டுத் தாளித்துக்கொண்டு வேக விட்டு வடித்த சேனைக்கிழங்கைப் போட்டு அதன் மேல் கொரகொரவெனப் பொடித்தவற்றைப் போட்டு நன்கு கிளறவும். சிறிது நேரம் நன்கு கிளறிவிட்டுப்பின்னர் அடுப்பிலிருந்து எடுக்கவும். இது ஒரு தனி ருசியாக இருக்கும்.

25 comments:

  1. நேற்று பாஸ் உபயம் கொடுக்க முருகன் கோவில் சென்றுவிட்டு, வர லேட்டாக, என் சமையல் வீட்டில்!  அவரைக்காய் வெந்தயக்குழம்பு, தக்காளி பருப்பு ரசம், இந்த சேனைக்கறி! 
     
    அவசரக்கறிதான்.  

    டைமண்ட் டைமண்டாக நறுக்கி வதக்கியது.  நேற்று வீட்டுக்கு வந்திருந்த என் இளைய சகோதரி மூன்றுமே நன்றாய் இருந்ததாய்ச் சொல்லி, மிஞ்சியவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டாள்!

    ReplyDelete
    Replies
    1. சில சமயங்களில் கிழங்கு நன்றாக இருந்தால் அப்படியே வதக்கினாலும் வதங்கும். ஆனால் பொதுவாகத் திருச்சியில் சேனைக்கிழங்கு சுமார் ரகம் தான். சென்னையில் நன்றாக இருக்கும்.

      Delete
    2. எபில திங்கக்கிழமை பதிவில் போட்டால் என்ன ஶ்ரீராம்?

      Delete
    3. போட்டிருக்கார்னு நினைக்கிறேன்.

      Delete
    4. சேனைக்கிழங்கு கிரேவி என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன் நெல்லை.  படித்திருப்பீர்கள்.

      https://engalblog.blogspot.com/2013/10/blog-post_9648.html 

      Delete
    5. மறுபடியும் போய்ப் படிச்சுட்டு மறுபடியும் அதே மாதிரிக் கருத்துச் சொல்லிட்டு வந்தேன். :)

      Delete
  2. முதல் முறையில் புளிஜலம் இல்லாமல் நேற்று செய்தேன்.  எனினும் முன்னர் இது மாதிரி செய்திருக்கிறேன்.  ஒருமுறை மகா சொதப்பலாகி கொழகொழ என்று வந்துவிட, அதை திப்பிச வகையில் என்னவோ செய்ததும் மகன்களுக்கு அது ரொம்பப் பிடித்துப் போய் இனி சேனையில் இதே மாதிரி செய் என்றது நினைவுக்கு வருகிறது!  இதை எபியில் கூட பகிர்ந்திருந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. கிழங்கு வாகு! நல்ல கிழங்காக இருந்தால் நன்றாக வதங்கும். நீங்கள் வாங்கியது என்ன கிழங்கோ? இருந்தாலும் திப்பிச வேலை செய்திருக்கீங்களே! பாராட்டுகள்.

      Delete
  3. இரண்டாவது முறையில் இதுவரை செய்ததில்லை.  மிளகும் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன்.  மிளகு சேர்த்தால் எரிசேரி வாசனை வந்துவிடுமோ?

    ReplyDelete
    Replies
    1. @ ஸ்ரீராம், மிளகு சேர்த்தால் அந்த ருசி தனி. இதுக்கு ஒரு பெயர் உண்டு. கேரளாக்காரங்க/பாலக்காட்டுக்காரங்க செய்வாங்க. தோரன்னு நினைக்கிறேன். மிளகு சேர்க்காமல் தான் செய்யணும். மிளகாய் வற்றல் சேர்ப்பதால் இதுக்குக் காரப்பொடி தனியாக வேண்டாம்.

      Delete
    2. தனியாப்பொடியும் தூவலாமோ?   அதுவும் தனி ருசியோ?

      Delete
    3. மி.வத்தல். ஜீரகம், தேங்காய் சேர்த்துச் செய்யும் கறி எனில் தனியாப் பொடி எல்லாம் தேவை இல்லை. ஏனெனில் இது பாரம்பரிய முறை. இதில் மாற்றம் வேண்டாம். மற்றபடி காரப்பொடி சேர்த்தாலோ அல்லது வேறு முறை ஏதேனும் இருந்து செய்தாலோ அதில் தனியாப்பொடி தூவிக்கலாம்.

      Delete
  4. இரண்டு வகையிலுமே நீங்கள் காரப்பொடி சொல்லவே இல்லையே...   நான் (நாங்கள்) தாராளமாகவே சேர்ப்பேன்(போம்)!

    ReplyDelete
    Replies
    1. காரப்பொடி முதல் வகையில் தான் உண்டு. விட்டுப் போயிருக்கு சேர்த்துடறேன்

      Delete
  5. பர்த்தா என்றால் கணவன் இல்லையோ?

    ReplyDelete
    Replies
    1. எப்படி வேணா வைச்சுக்கோங்க! :P :P :P :P

      Delete
  6. இங்கு செய்யும்போது சேனையை கட் பண்ணி வெறும்ன வதக்குவோம்.

    நான் புளிஜலம் விட்டு வேகவைத்ததில்லை. (பெரும்பாலும் தொண்டையில் அரித்ததில்லை). சிறிய வயதில் செவப்பு நிறச் சேனை அரிக்கும்.)

    ReplyDelete
    Replies
    1. சேனைக்கிழங்கு வதக்கல், கத்திரிக்காய்ப் பொடி தூவிக் கறி, சில சமயம் சேப்பங்கிழங்கு ஆகியவற்றுக்கு நீர்க்கப் புளி ஜலம் சேர்த்தால் சுவை கூடும். நீங்க நினைக்கிறாப்போல் புளி ருசி தெரியும் அளவுக்குச் சேர்ப்பதில்லை. அவற்றின் காரத்தன்மை நீங்குவதற்காகக் கொஞ்சம் போல் புளி ஜலம்.

      Delete
  7. தேங்காய் சீரகக் கறி.... இந்த முறையில் விரைவில் செய்துபார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்து ருசித்துவிட்டுச் சொல்லுங்க!

      Delete
  8. புளி சேர்த்த கறி வகைகள், சாம்பார் செய்யும்போது நன்றாக இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. அதில் புளி பெரிய அளவில் தெரியாது நெல்லை.   இலேசாக நிறம் மாறி இருக்கலாம்.  அவ்வளவுதான்.  மற்றபடி நல்ல மொறுமொறுவென்று கூடச் செய்யலாம்!

      Delete
    2. ஏற்கெனவே மேலே சொல்லிட்டேன். ஸ்ரீராமும் சொல்லி இருக்கார். புளி ஜலம் அதிகம் தேவைப்படாது.

      Delete
  9. நல்லதொரு செய்முறை. புளிசேர்த்து செய்வது உண்டு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், கருத்துக்கு நன்றி.

      Delete