எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, June 1, 2019

பாரம்பரியச் சமையல்கள்! பருப்புருண்டை மோர்க்குழம்பு!

எல்லா மோர்க்குழம்பையும் போல் இதற்கும் நன்கு கெட்டியானமோர் தேவை. பருப்புக்களைப் போட்டு அரைத்து உருண்டைகளை மோர்க்குழம்பில் சேர்க்கப் போவதால் இதற்குப் பச்சைமிளகாய், தேங்காய்த்துருவலோடு விரும்பினால் ஜீரகம்சேர்த்து அரைத்துவைத்துக் கொண்டால் போதும். நான்கு பேருக்கான பருப்புருண்டை மோர்க்குழம்பிற்குத் தேவையான பொருட்கள்.

பருப்பு வகைகள் ஊற வைத்து அரைக்க. துவரம்பருப்பு மட்டும் போட்டால் போதும் எனில் ஒரு கிண்ணம் துவரம்பருப்பு களைந்து கல் அரித்து ஊற வைக்கவும்.

அரைக்கத் தேவையான பொருட்கள்:4 அல்லது 5 மி.வத்தல், உப்பு, பெருங்காயம். காரம் அதிகம் வேண்டுமெனில் ஒன்றிரண்டு பச்சை மிளகாயும் போட்டுக்கலாம். ஆனால் நாங்க காரம் குறைவாகத் தான் சேர்ப்போம்.

சிலர் தனித் துவரம்பருப்பில் பண்ணாமல் கொஞ்சம் கடலைப்பருப்பும் சேர்ப்பார்கள். கடலைப்பருப்புச் சேர்த்தால் காரம் குறையும் என்பதோடு உருண்டையும் மிருதுவாக வரும். ஆகவே அவரவர் விருப்பம் போல் பருப்பை ஊற வைக்கவும். சிலர் அரைக்கும்போதே ஒரு டேபிள் ஸ்பூன் அரிசியையும் சேர்த்து ஊற வைத்து அரைத்துவிடுவார்கள். சிலர் அரைத்த பின்னர் அரிசிமாவைப் போட்டுக் கலப்பார்கள். இதுவும் அவரவர் விருப்பம் போலவே இருக்கட்டும். உருண்டைகளைக் குழம்பில் போடும்போது கரைந்து போய் உடையாமல் இருப்பதற்காக அரிசிமாவோ அல்லது ஊற வைக்கையிலேயே அரிசியோ சேர்க்க வேண்டும்.

இப்போ இதை இரு முறைகளில் பண்ணலாம்.  எல்லாவற்றுக்கும் முதலில் பருப்பு வகைகளை ஊற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். கெட்டியாக அரைத்தால் நல்லது. கொஞ்சம் தளர இருந்தால் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு போட்டுத் தாளித்துக் கருகப்பிலை போட்டு அரைத்த விழுதையும் போட்டுக் கிளறி எடுத்துக் கொள்ளலாம். பச்சைக்கொத்துமல்லியும் பிடித்தால் போடலாம். கிளறி எடுத்த விழுதில் இருந்து சுமார் ஓர் சின்னத் தக்காளி அளவுக்கான உருண்டைகள் பிடிக்கவும். இட்லிப்பானையில் ஜலத்தை விட்டுக் கொண்டு நடுவில் ஓர் கிண்ணத்தை வைத்து அதிலும் ஜலம் ஊற்றி விட்டு மேலே ஒற்றைத் தட்டைப் போட்டுத் துணியோ அல்லது எண்ணெய் தடவிய வாழை இலையோ போடவும். உருட்டிய உருண்டைகளை அதில் வைக்கவும். இட்லித்தட்டை நன்கு மூடவும். வெளியே வேர்த்து விட்டு ஜலம் சொட்ட ஆரம்பித்தால் உருண்டைகள் வெந்துவிட்டன என அர்த்தம்.

இப்போது பச்சைமிளகாய், தேங்காய்த்துருவலோடு ஜீரகம் பிடித்தால் வைத்து அரைத்துக் கொள்ளவும். இதற்குப் பருப்பு வகைகள் வைத்து அரைக்க வேண்டாம். பருப்பு உருண்டையைப் போட்டுக் கொதிக்க விடும்போது குழம்பு சேர்ந்து கொள்ளும். ஆகவே நீர்க்கவே மோரில் விட்டுக் கரைத்துக் கொண்டு கொதிக்கவிடவும்.குழம்பு கொதிக்கையில் இரண்டு இரண்டாக வெந்த உருண்டைகளைப் போடவும். ஓர் தோசைத்திருப்பி அல்லது இலைக்கரண்டியால் அவ்வப்போது கிளறி விடவும். வெந்த உருண்டைகள் மேலே வரும். எல்லா உருண்டைகளையும் போட்டு நன்கு கொதித்து மேலே வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டுத் தேங்காய் எண்ணெயில் குழம்பிற்குக் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

இன்னொரு முறையில் இப்படி இட்லிப்பானையில் உருண்டைகளை வேக வைக்காமல் குழம்பில் நேரடியாகப் போட்டு வேக வைக்கலாம். அதற்கு மோர்க்குழம்புக்கு அரைத்ததை நீர்க்க வைத்துக் கொண்டு இரு பாகமாக எடுத்துக் கொள்ளவும். ஒரு பாகத்தை அடுப்பில் வைத்துக் கொதிக்கையில் கிளறிய பருப்பை உருண்டைகளாகப் பிடித்துக் குழம்பில் போடவும். அடிக்கடி கிளறிக்கொடுக்கவும். உருண்டைகள் தானாக மிதந்து மேலே வரும். குழம்பும் கெட்டியாக ஆகிவிடும். எல்லா உருண்டைகளையும் போட்ட பின்னர் மிச்சம் இருக்கும் மோர்க்குழம்புக்கலவையை அதில் ஊற்றி ஒரு கொதி விட்டுப் பின்னர் கீழே இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு, கருகப்பிலை தாளிக்கவும். பிடித்தால் பச்சைக் கொத்துமல்லி போடலாம்.

15 comments:

 1. ஆஹா மிகவும் பிடித்த குழம்பு கீதாக்கா எனக்கு. என் மகனுக்கும்.

  இதே மெத்தட் தான். நான் செய்வது இரண்டாவது மெத்தட் டைரக்டாக உருண்டையைப் போடுவது. நான் எப்படி செய்வது என்றால் நீங்கள் சொன்னபடிதான் தேங்காய் ப மி ஜீ அரைத்ததை (ஜீ கொஞ்சமாகத்தான்) இரண்டாகப் பிரித்து முதலில் அரைத்த விழுது கொஞ்சம் தண்ணீர் கலந்து உருண்டைகளை பொட்டு அது வெந்ததும், மீதி அரைத்ததை தயிர் கலந்து அதில் விட்டு பதைத்ததும் இறக்கி தாளித்தல். தே எ தான். சில சமயம் தாளிக்கும் போது வெந்தயமும் கொஞ்சம் தாளிப்பேன். ப கொ போடுவேன் நன்றாக இருக்கும். பருப்பு இரு பருப்புமே சேர்த்துக் கொள்வது. ஏனென்றால் வீட்டில் கொஞ்சம் ம்ருதுவாக இருக்கணும்பாங்க என்பதால்.

  நினைவு படுத்திட்டீங்க நாளை இதைத்தான் செய்யப் போறேன்...நன்றி கீதாக்கா....

  புளி விட்டு செய்யும் மற்ற ப உ குழம்பிற்கும் நான் நேரடியாகத்தான் போடுவது அக்கா. இதுவரை தனியாக உருண்டைகளை வேக வைத்து சேர்த்ததில்லை.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா, உங்களோட மோர்க்குழம்பு வாட்சப்பில் வந்தது. இன்னிக்கு இங்கே பருப்புருண்டை போட்ட புளி விட்டுச் செய்யும் குழம்பு! :)

   Delete
 2. ஏன் கெட்டியான மோர்க்குழம்பு தேவைன்னு சொல்றீங்க? கொஞ்சம் நீர்க்க இருந்தாலும் ஓகேதானே. பருப்புருண்டை போடப்போவதால் எப்படியும் தளர ஆகிவிடும் இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. நெ.த. எங்கேயுமே கெட்டியான மோர்க்குழம்பு தேவைனு சொல்லவே இல்லை. பருப்பு உருண்டைகளைப் போட்டுக் கொதிக்கவிடும்போது குழம்பு கெட்டியாகும் என்றே சொல்லி இருக்கேன். மறுபடி படிங்க!

   Delete
 3. ஓகே... நீர்க்கவே மோரில் கரைக்கச் சொல்லியிருக்கீங்க.

  ஆனால் இந்த முறைல நான் குழம்பு செய்ததில்லை (சாப்பிட்டதும் இல்லை). செய்துபார்க்கணும்.

  ReplyDelete
  Replies
  1. நான் இரு முறைகளிலும் செய்வேன்.

   Delete
 4. முன்னர் அளவு பருப்புருண்டை குழம்பு வகைகள் பிடிப்பதில்லை. ஏனோ தெரியவில்லை. ஆனால் பருப்புருண்டை மோர்க்குழம்பு சாப்பிட்டுப்பார்க்கலாம் என்று தோன்றுகிறது!

  ReplyDelete
  Replies
  1. வெயிலுக்கு நல்ல மோர் சாதமும், தொட்டுக்க பருப்புருண்டைகளும் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்க ஸ்ரீராம். ரொம்ப நல்லா இருக்கும்.

   Delete
  2. வாங்க ஶ்ரீராம், இங்கேயும் மாமாவுக்குப் பருப்புருண்டை அவ்வளவாப் பிடிக்காது. குழந்தைகள் இருந்தால் செய்வது தான். இன்னிக்கு என்னமோ அதிசயமாப் புளிவிட்ட குழம்பில் பருப்பு உருண்டைகள் போட்டேன்.

   Delete
 5. வணக்கம் சகோதரி

  எ. பியில் தங்கள் பதிவாக மோர்குழம்பு, பின்பு கருத்திட வருகிறேன் என சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் சொன்னதும், நானும் தங்கள் "எண்ணங்கள்" பதிவில் தேடி சற்று குழம்பி விட்டேன். பின்பு தாங்கள் பல தளவாடங்களுக்கு ஹா ஹா ஹா. (இல்லையில்லை! பல தளங்களுக்கு) சொந்தமுடையவர் என்பது நினைவில் வரவே என் முதல் கால்(கை)அடியை பதித்து இங்கும் வந்து விட்டேன்.

  ப. உ மோர் குழம்பு அனேக செய்முறைகளுடன் பதிந்திருந்தது மிகவும் நன்றாக சுவையாக உள்ளது. நானும் இவ்விதந்தான் செய்வேன். இது செய்தால் அன்றைய தினம் காய் எதுவும் தேவையின்றி ப. உ களை தொட்டுக் கொண்டே சாப்பிட்டு விடலாம். ஆனால் சமயத்தில் எங்கள் வீட்டில் காயும் ஒரு பக்கம் வேண்டும் என்பார்கள். தாங்கள் கொடுத்த பாரம்பரிய சமையல் விபரங்கள் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, கமலா, வாங்க, வாங்க முதல் வரவுக்கு நன்றி. இது என் வெளிநாட்டு உறவினர் ஒருத்தருக்காக ஆரம்பித்தது. தமிழ் தெரியாத என் பெண், மாட்டுப்பெண் மற்றும் உறவினருக்காக ஆங்கிலத்திலும் இருக்கு! :))))) இந்த ரகசியத்தை உங்களிடம் மட்டும் சொல்லி இருக்கேன். :))))

   Delete
  2. பருப்பு உருண்டைகளைத் தொட்டுக்கொண்டு தான் எங்க அம்மா வீட்டில் எல்லாம் சாப்பிடுவோம். தேவை எனில் அப்பளம் பொரிப்பார்கள். ஆனால் இங்கே புக்ககத்தில் காய் வேண்டும் என்பார்கள். ஆகவே இரண்டும் பண்ணுவேன். :)

   Delete
  3. http://cookingforyoungsters.blogspot.com

   Delete
  4. அங்கேயும் உட்கார்ந்து எழுதி பல மாதங்கள் ஆகின்றன. பெண் கேட்டுக் கொண்டே இருக்கிறாள். :)

   Delete
  5. ஏ..அம்மா... எத்தனை பிளாக்குகளில் எழுதியிருக்கீங்க...ரொம்ப சுறுசுறுப்பு நீங்க. நான் என் நெல்லை பயணம், காஞ்சி பயணம் எழுதி துரை செல்வராஜு சாருக்கு அனுப்பணும்னு தினம் நினைத்துக்கொண்டிருக்கிறேன். சோம்பேறித்தனம்.

   Delete