எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, May 14, 2016

உணவே மருந்து! தென்னை, தேங்காய்!

தென்னை உலகில் 80 நாடுகளில் வளர்க்கப்படுவதாக அறிகிறோம். இந்தியாவில் தென்னை வளர்ப்பு அதிகமாக இருந்தாலும் உலக அளவில் பிலிப்பைன்ஸ் நாடே தென்னை வளர்ப்பிலும் தேங்காய் உற்பத்தியிலும் முதலிடம் பெறுகிறது. மணற்பாங்கான நிலத்தில் தென்னை நன்கு வளரும். சூரிய ஒளியும் நல்ல மழையும் இருந்தால் நல்லது! தென்னை மரத்தின் அனைத்துப் பகுதிகளும் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகிறது. கிளைகளே இல்லாமல் வளரும் இந்த மரம் சுமார் முப்பது மீட்டர் வரை வளரும்.  தென்னை ஓலைகள் நாலைந்து மீட்டர் நீளமாக வளரக் கூடியது.

தென்னையிலிருந்து நாம் பெறும் பயன்கள் ஆவன:-

தென்னை ஓலைகள், வீடுகளின் கூரைக்கும், அடுப்பெரிக்கவும், விசிறிகள் செய்யவும் பயன்படும். தென்னம்பாளையைச் சமைக்கலாம். குருத்தாக இருக்க வேண்டும். தேங்காய் முற்றும் முன்னர் கிடைக்கும் இளநீர் உடலுக்கு அரு மருந்து. பல்வேறு விதமான வயிற்று நோய்களுக்கு இளநீர் நல்ல மருந்தாகச் செயல்படுகிறது.  ரத்தம் சுத்தி அடையும், தாகம் தீர்க்கும், உடலுக்குக் குளுமை தரும். கல்லீரல் நன்கு இயங்கும், தோல், தலை மயிர், நகங்கள் வளர இளநீர் பெருமளவில் உதவுகிறது.  100 கிராம் இளநீரில் 315 மில்லிகிராம் பொட்டாசியமும், 30 மில்லிகிராம் மக்னீசியமும் உள்ளது. இது உடலுக்குப் புத்துணர்ச்சி கொடுக்கவல்லது. எலும்புகளுக்கும் தசைகளுக்கும் இந்த தாது உப்புக்கள் புது வலுவையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.

குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள சர்க்கரை உடனடியாக உடலில் கிரஹித்துக் கொள்ளப்படுகிறது.  எந்த விதமான செயற்கைக்கலப்பும் இல்லாத பாக்டீரியாக்கள் இல்லாத இந்த இளநீர் மிகவும் பாதுகாப்பான ஒரு குளிர்பானம் ஆகும். சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்கவல்லது இளநீர்.  மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களும் சிறுநீர் மஞ்சளாகப்போகிறவர்களும் தொடர்ந்து இளநீரை அருந்தினால் நல்ல பயன் கிட்டும்.  பித்தக்கோளாறு, பித்தக் காய்ச்சல் உள்ளவர்களும் இளநீர் அருந்தலாம். மொத்தத்தில் அனைவருக்கும் ஏற்றதொரு பானம் இளநீர்.

தேங்காயில் உள்ள புரதம் மனித உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. அதுவே காய்ந்த நெற்று தேங்காய் எண்ணெய் எடுக்க மட்டுமே பயன்படும். உணவோடு சேர்த்து உண்ண அது ஏற்றதல்ல. தவிர்க்க வேண்டும். தென்னையிலிருந்து கள்ளும் இறக்குவார்கள். கள் உடல் நலனுக்கு நன்மைதரும் என ஒரு சாரார் கூறுகின்றனர். தென்னை மரத்தை வெட்டி விட்டால் அந்த நீளமான மரம் விறகாகப் பயன்படும். தேங்காய் மட்டையிலிருந்து எடுக்கப்படும் நாரை வைத்துக் கயிறு திரிக்கலாம். மிதியடிகள் பின்னலாம். கயிற்றால் ஆன திரைகள் செய்யலாம்.இப்படிப் பல பயன்பாடுகள் உள்ளன. தேங்காய்ச் சிரட்டையை இப்போது மரக்கன்றுகள் நடுவதற்குப் பயன்படுத்துகின்றனர். 

4 comments:

 1. தென்னை மரத்துக்குத் தான் எத்தனை தயாள குணம்.

  நன்றி கீதா..

  ReplyDelete
 2. தென்னையின் குணங்கள் தான் எத்தனை எத்தனை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா....

  ReplyDelete
 3. வாழை போலவே தென்னையின் தயாள குணங்கள்!

  ReplyDelete
 4. அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete