எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, May 31, 2016

உணவே மருந்து, தென்னை, தேங்காய்!

தேங்காய் எண்ணெயின் அபரிமிதமான பலன்களைச் சொல்லி முடியாது. அது முக்கியமாக நம் சருமத்துக்கு நல்லதொரு பாதுகாப்பைக் கொடுத்து சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவும். குளிர் காலமாக இருந்தாலும் சரி, வெயில் அல்லது மழைக்காலமாக இருந்தாலும் தேங்காய் எண்ணெயை நம் உடலில் தடவிக் கொண்டால் நல்ல பலன் தரும்.  வெப்பத்தின் பாதிப்பிலிருந்தும் குளிரின் வறட்சியிலிருந்தும் சருமம் பாதுகாக்கப்படும். ஆறாத புண்களுக்குத் தேங்காய் எண்ணெயைத் தடவினால் பாதிப்புக் குறையும்.  முக்கியமாக நம் அன்றாட வாழ்வில் தலைக்கு தினந்தோறும் தடவிக் கொள்ளும் ஓர் எண்ணெய் எது எனில் அது தேங்காய் எண்ணெய் தான்.

நல்ல சுத்தமான தேங்காய் எண்ணெயை தினந்தோறும் தலைக்குத் தடவிக் கொண்டு வந்தோமெனில் நம் தலை மயிர் நன்கு வளர்ச்சி பெறுவதோடு அல்லாமல் பளபளவென்றும் மிருதுத் தன்மையோடு பட்டுப்போல் இருக்கும். தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொள்ளப் பிடிக்கவில்லை எனில் இரவில் தலை மயிரில் தடவிக் கொண்டு தலையில் உச்சந்தலையில் நன்கு அழுத்தித் தேய்த்துக் கொண்டு படுத்துக் காலை நல்ல குளியல் பொடி பயன்படுத்தித் தலையை அலசினால் தலை மயிரும் தலைப்பகுதியும் சுத்தமாக இருக்கும். வெயிலிலோ அல்லது குளிரிலோ உடலில், உதடுகளில், கால்களில் தோன்றும் வெடிப்புக்குத்தேங்காய் எண்ணெய் சிறந்த மருந்து.

தேங்காய் எண்ணெய் நூறு எடுத்துக் கொண்டு அதில் சாம்பிராணியைப் பொடித்துப் போட்டு நன்கு கலந்து அடுப்பில் வைத்துக் கிளறிப் பசை போல் ஆனதும் ஒரு பாட்டிலில் எடுத்துப் போட்டுக் கொண்டு தினமும் காலில் பித்தவெடிப்பால் அவதியுறும் பகுதிகளுக்குப் பூசி வந்தால் நாளடைவில் வெடிப்புகள் மறையும். இது வெகு காலம் கெடாது. கூட மஞ்சள் தூளும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் சுத்தமான மஞ்சள் கிழங்கில் மட்டுமே பொடித்த மஞ்சள் தூளாக இருக்க வேண்டும். தேங்காய் எண்ணெயைச் சூடாக்கிக் கீழே இறக்கி அதில் கட்டிக் கற்பூரம் சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டு வெதுவெதுப்பாக இருக்கையில் சளி பிடித்திருக்கும் நெஞ்சுப் பகுதிகளில் நன்கு தேய்த்துக் கொண்டு முதுகிலும் தேய்க்க வேண்டும். சளி குறைந்து நன்கு மூச்சு விட முடியும். தினம் தினம் முகத்தில் தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொண்டு சிறிது நேரம் ஊறிய பின்னர் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும். பொடுகு இருப்பவர்கள் தேங்காய் எண்ணெயோடு எலுமிச்சைச் சாறைச் சேர்த்துக் கலக்கித் தலையில் தடவி ஊறிய பின்னர் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.

சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறிது நாட்களிலேயே அதில் ஒருவித வாசனை வரும். கடைகளில் விற்கப்படும் கலப்பட எண்ணெயில் வாசனையே வராது. சிறு குழந்தைகளுக்கு முக்கியமாகப் பிறந்த குழந்தைகளுக்கு நல்ல தேங்காய் எண்ணெயில் குளிப்பாட்டி வந்தால் சருமத் தொந்திரவே வராது. ஒரு சிலர் முற்றிய தேங்காயைத் துருவி எடுத்துக் கொண்டு கல்லுரல் அல்லது மிக்சி ஜார் அல்லது அம்மியில் அரைத்து எடுத்துக் கொண்டு அதைக் கொஞ்சம் நீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சுவார்கள். சிறிது நேரத்தில் எண்ணெய் தனியாகப் பிரியும். அந்த எண்ணெயை உடலில் தேய்ப்பார்கள். இதன் மூலம் சுத்தமான தேங்காய் எண்ணெய் நம் கண்ணெதிரே கிடைக்கும். கொஞ்சம் வேலை இருந்தாலும் இது நம்பகத் தன்மை உள்ளது. ஆகவே இனியாவது தேங்காயையோ தேங்காயில் செய்த பொருட்களையோ ஒதுக்காமல் தேங்காய் எண்ணெயையும் உரிய முறையில் பயன்படுத்தி வாருங்கள். நலம் பெறுவோம்.

Sunday, May 29, 2016

உணவே மருந்து! தென்னை, தேங்காய்!

தேங்காய்ப் பால் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் அடிக்கடி வாய்ப்புண் வருபவர்களுக்கு வயிற்றிலும் புண்கள் இருக்கும். அத்தகையோருக்கு இந்தத் தேங்காய்ப் பால் மிக நன்மை பயக்கும். அதிக வெயிலின் காரணமாகவும் சிலருக்கு வாயில் புண்கள் ஏற்படும். அத்தகையோரும் தேங்காய்ப் பால் விட்டுக் கஞ்சி சாப்பிட்டால் வாய்ப்புண்ணும் வயிற்றுப் புண்ணும் தீர்ந்து போகும்.

புழுங்கலரிசியைக் களைந்து வறுத்துக் கொண்டு அத்துடன் (விருப்பப்பட்டால் பூண்டு,) வெந்தயம்(கட்டாயமாய்) சேர்த்துக் கொண்டு குழைய வடிக்க வேண்டும். அரிசியை வறுத்ததும் கொஞ்சம் பொடியாக ஆக்கிக் கொண்டால் விரைவில் குழையும். அதில் உப்புச் சேர்த்துத் தேங்காய்ப் பாலை விட்டுக் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

புதிதாகத் திருமணம் ஆனவர்களுக்கு ஆடி மாதம் பிறந்ததும் ஆடிக்கு அழைத்துத் தலை ஆடிச் சீர் செய்வார்கள். அப்போது மாப்பிள்ளைக்கு வெள்ளித் தம்பளரில் (வசதி படைத்தவர்கள் கொடுப்பார்கள்) தேங்காய்ப் பால் விட்டுக் குடிக்கக் கொடுப்பார்கள். இந்தத் தேங்காய்ப் பாலைச் செய்யத் தேங்காய்த் துருவலை நன்கு அரைத்து இரண்டு முறை பிழிந்து பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.  வெல்லத்தைப் பொடி செய்து  நீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டிக் கொதிக்க விடவேண்டும். வெல்லம் கொதித்துப் பாகு வரும் நேரத்தில் தேங்காய்ப் பாலைச் சேர்த்து ஒரு கொதி விட்டுப் பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு ஏலக்காய்த் தூள் சேர்க்கவேண்டும். விரும்பினால் முந்திரிப்பருப்பை வறுத்துச் சேர்க்கலாம்.

இளம் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றாலும் வாய்ப்புண் சரியாகும். இப்போதைய ஆங்கில மருத்துவர்கள் மட்டுமே தேங்காயில் கொழுப்புச் சத்து இருப்பதாகவும், தேங்காய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்க்கும்படியும் சொல்லி வருகின்றனர். உண்மையில் தேங்காய் உடல் நலத்துக்குக் கேடு விளைவிப்பதே அல்ல! நன்மையே தரும். ஆகவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் கூட தைரியமாகத் தேங்காயைச் சேர்க்கலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குத் தேங்காய்ப் பால் உடலில் மங்கனீசுக் குறைபாட்டை நீக்கும். சருமம் மற்றும் ரத்தக்குழாய்கள் நெகிழ்வுடன் இருக்கும். எலும்புகள் உறுதியாகும். அனீமியா எனப்படும் ரத்தசோகை குணமாகும். தசை இறுக்கம், நரம்புகள் முறுக்கிக் கொள்வதிலிருந்து தடுக்கும். எல்லாவற்றுக்கும் மேல் குண்டானவர்கள் சிறிதும் கவலை இல்லாமல் தேங்காய்ப்பால் சேர்க்கலாம். உடல் எடை குறையும். கீல் வாதம் உள்ளவர்களும் தேங்காய்ப் பால் சாப்பிடலாம். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தத் தேங்காய்ப் பால் சாப்பிடலாம். நோய் எதிர்ப்புத் தன்மையையும் அதிகரிக்கச் செய்கிறது. முக்கியமாக ஆண்களுக்குப் ப்ரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத் தன்மையை அதிகரிக்கச் செய்யும்.

அடுத்துத் தேங்காய் எண்ணெயைப் பார்க்கலாம்.

Saturday, May 14, 2016

உணவே மருந்து! தென்னை, தேங்காய்!

தென்னை உலகில் 80 நாடுகளில் வளர்க்கப்படுவதாக அறிகிறோம். இந்தியாவில் தென்னை வளர்ப்பு அதிகமாக இருந்தாலும் உலக அளவில் பிலிப்பைன்ஸ் நாடே தென்னை வளர்ப்பிலும் தேங்காய் உற்பத்தியிலும் முதலிடம் பெறுகிறது. மணற்பாங்கான நிலத்தில் தென்னை நன்கு வளரும். சூரிய ஒளியும் நல்ல மழையும் இருந்தால் நல்லது! தென்னை மரத்தின் அனைத்துப் பகுதிகளும் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகிறது. கிளைகளே இல்லாமல் வளரும் இந்த மரம் சுமார் முப்பது மீட்டர் வரை வளரும்.  தென்னை ஓலைகள் நாலைந்து மீட்டர் நீளமாக வளரக் கூடியது.

தென்னையிலிருந்து நாம் பெறும் பயன்கள் ஆவன:-

தென்னை ஓலைகள், வீடுகளின் கூரைக்கும், அடுப்பெரிக்கவும், விசிறிகள் செய்யவும் பயன்படும். தென்னம்பாளையைச் சமைக்கலாம். குருத்தாக இருக்க வேண்டும். தேங்காய் முற்றும் முன்னர் கிடைக்கும் இளநீர் உடலுக்கு அரு மருந்து. பல்வேறு விதமான வயிற்று நோய்களுக்கு இளநீர் நல்ல மருந்தாகச் செயல்படுகிறது.  ரத்தம் சுத்தி அடையும், தாகம் தீர்க்கும், உடலுக்குக் குளுமை தரும். கல்லீரல் நன்கு இயங்கும், தோல், தலை மயிர், நகங்கள் வளர இளநீர் பெருமளவில் உதவுகிறது.  100 கிராம் இளநீரில் 315 மில்லிகிராம் பொட்டாசியமும், 30 மில்லிகிராம் மக்னீசியமும் உள்ளது. இது உடலுக்குப் புத்துணர்ச்சி கொடுக்கவல்லது. எலும்புகளுக்கும் தசைகளுக்கும் இந்த தாது உப்புக்கள் புது வலுவையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.

குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள சர்க்கரை உடனடியாக உடலில் கிரஹித்துக் கொள்ளப்படுகிறது.  எந்த விதமான செயற்கைக்கலப்பும் இல்லாத பாக்டீரியாக்கள் இல்லாத இந்த இளநீர் மிகவும் பாதுகாப்பான ஒரு குளிர்பானம் ஆகும். சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்கவல்லது இளநீர்.  மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களும் சிறுநீர் மஞ்சளாகப்போகிறவர்களும் தொடர்ந்து இளநீரை அருந்தினால் நல்ல பயன் கிட்டும்.  பித்தக்கோளாறு, பித்தக் காய்ச்சல் உள்ளவர்களும் இளநீர் அருந்தலாம். மொத்தத்தில் அனைவருக்கும் ஏற்றதொரு பானம் இளநீர்.

தேங்காயில் உள்ள புரதம் மனித உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. அதுவே காய்ந்த நெற்று தேங்காய் எண்ணெய் எடுக்க மட்டுமே பயன்படும். உணவோடு சேர்த்து உண்ண அது ஏற்றதல்ல. தவிர்க்க வேண்டும். தென்னையிலிருந்து கள்ளும் இறக்குவார்கள். கள் உடல் நலனுக்கு நன்மைதரும் என ஒரு சாரார் கூறுகின்றனர். தென்னை மரத்தை வெட்டி விட்டால் அந்த நீளமான மரம் விறகாகப் பயன்படும். தேங்காய் மட்டையிலிருந்து எடுக்கப்படும் நாரை வைத்துக் கயிறு திரிக்கலாம். மிதியடிகள் பின்னலாம். கயிற்றால் ஆன திரைகள் செய்யலாம்.இப்படிப் பல பயன்பாடுகள் உள்ளன. தேங்காய்ச் சிரட்டையை இப்போது மரக்கன்றுகள் நடுவதற்குப் பயன்படுத்துகின்றனர். 

Sunday, May 8, 2016

உணவே மருந்து! தென்னை, தேங்காய்!

தேங்காய் குறித்துப் பலரும் பலவிதமாகச் சொல்கின்றனர். சமீப காலத்தில் ஆங்கில மருத்துவத்தில் தேங்காயைச் சாப்பிடாமல் தவிர்க்கச் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் தேங்காய் ஒரு அருமருந்து. தாராளமாகச் சாப்பிடலாம். முற்றிய நெற்றுத் தேங்காயைத் தான் அதிகம் உண்ணக் கூடாது! அதோடு இல்லாமல் இந்துக்களின் வாழ்க்கையில் தேங்காய் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. தேங்காய் இல்லாமல் எந்தவிதமான பண்டிகைகளோ, வழிபாடுகளோ இடம் பெறாது. பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் விநாயகருக்குத் தேங்காய் உடைப்பதாகப் பிரார்த்திப்பார்கள்.

தேங்காயைத் தரையில் போட்டு உடைத்துச் சிதறுகாயாக உடைப்பதால் மனித மனத்தின் அகங்காரம் குறையும் என்பது ஐதீகம். தென்னை மரத்தைக் கற்பக விருட்சம் என்பார்கள். தேங்காய் மிகச் சிறப்பாக ரத்தத்தை சுத்திகரிக்கிறது. இதயம், கல்லீரல்,சிறுநீரகக் கோளாறுகளைத் தீர்க்கவல்லது. தேங்காயின் இளநீர் உடலுக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். தாகம் தணிக்க இதைவிடச் சிறந்த நீர் வேறு ஏதும் இல்லை. மிகச் சுத்தமான நீர் என்றால் அது இளநீர் மட்டுமே. உடல்சூட்டைத் தணிக்கும் வல்லமை கொண்டது தேங்காயிலிருக்கும் நீர். விக்கல்களைத் தடுக்கும். நம் உடலுக்குத் தேவையான புரோட்டீனும் குளுகோஸும் அதிகம் முற்றாத அரைத் தேங்காயில் இருக்கிறது.  சிறு குழந்தைகளுக்கும் இளநீர் கொடுப்பதன் மூலம் அவர்களுக்குச் செரிமானம் நல்ல முறையில் நடக்கும். அடிக்கடி வயிற்றுப் போக்குக்கு ஆளாகிறவர்களும், சிறுநீரகத்தில் தொற்று உள்ளவர்களும் இளநீரை தினம் தினம் பருகினால் நல்ல முன்னேற்றம் தெரியும். தீராத வயிற்றுப் புண்ணையும் தீர்க்கும் வல்லமை கொண்டது இளநீர்.

தேங்காய் எண்ணெயும் தேங்காயிலிருந்து கிடைக்கிறது. முற்றிய நெற்றுத் தேங்காய்களைத் துண்டங்களாக்கி வெயிலில் காயவைத்துச் செக்கில் ஆட்டி எடுப்பதே தேங்காய் எண்ணெயாகும். தென்னாட்டில் முக்கியமாகக் கேரளாவில் தேங்காய் எண்ணெய் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.  தேங்காய் எண்ணெய் விரைவில் செரிமானம் ஆகிவிடும். இதில் செய்யும் உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப் போகாது. எண்ணெயில் பொரித்தெடுத்துச் செய்யப்படும் முறுக்கு, தேன்குழல் போன்றவையும் ஒருமாதம் வரை வைத்திருக்கலாம்.  நம் தோல் வியாதிகளுக்கு அருமருந்தாகத் தேங்காய் எண்ணெய் ஆயுர்வேதத்தில் பயன் படுத்தப்படுகிறது.  தீராத புண்கள், தோல் நோய்கள், வாத நோய்களுக்கும் மற்றும் கற்பூராதித் தைலமாகவும், தலைக்குத் தேய்த்துக் கொள்ளும் நீலி பிருங்காதித் தைலம் போன்றவையும், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலத்திலும், பொடுகுக்குப் பயன்படும் பொடுதலைத் தைலத்திலும் தேங்காய் எண்ணெய் பெரும்பங்கு வகிக்கிறது. 

Sunday, May 1, 2016

உணவே மருந்து! பாகற்காய் தொடர்ச்சி

பொதுவாக இப்போதெல்லாம் கொம்புப் பாகல் எனப்படும் நீளப் பாகற்காயே கிடைக்கிறது. பாகற்காயில் என்னதான் மருத்துவ குணம் இருந்தாலும் கொம்புப் பாகலை விட மிதி பாகல் எனப்படும் சின்னப் பாகலே அதிகம் பயன்படுத்துமாறு சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். பித்த, வாத சம்பந்தமான தோஷங்களை இது போக்கும் என்கிறார்கள். முறைப்படி சமைத்து உண்டால் கட்டாயம் பலன் தெரியும் என்கின்றனர்.  பாகல் இலைச்சாறு உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சலுக்கு நல்ல தீர்வு என்றும் சொல்கின்றனர். பாகல் கொடியோடு கருவாப்பட்டை, திப்பிலி, அரிசி, நீரடிமுத்து எண்ணெய் என்னும் ஒரு வகை எண்ணெய் ஓர் அளவு எடுத்துக் கொண்டு எண்ணெயில் இவற்றை அரைத்துப் பூசி வர சொறிசிரங்குகள், புண்கள் குணமாகும்.

மிதி பாகல் இலைச்சாறோடு பழுத்த பாகல் பழங்களின் சாறையும் சேர்த்து தினம் காலை உள்ளுக்குச் சாப்பிட்டால் காமாலை, மண்ணீரல், கல்லீரல் நோய்கள் குணமாகும்.  நீரிழிவு நோய்க்குப் பாகற்காய்ச் சாறு நல்லதொரு மருந்தாகும். கொம்புப் பாகலுக்கு மருந்தை முறிக்கும் சக்தி உண்டு. முன்னெல்லாம் ஒருவரை வசியப்படுத்த இடுமருந்து என்னும் மருந்து வைக்கும் வழக்கம் இருந்ததாகவும், அந்த இடு மருந்து வைத்திருப்பதைப் பாகற்காய்ச் சாறின் மூலம் கண்டுபிடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். யாருக்கு இடுமருந்து வைத்திருப்பதாக சந்தேகப்படுகிறோமோ அவர்கள் உள்ளங்கையில் பாகல் இலையைச் சாறாகப் பிழியவேண்டும். சற்று நேரத்தில் சாறு கட்டிவிட்டால் இடு மருந்து வைத்திருக்கிறது என்றும், கட்டவில்லை என்றால் பாதிப்பு இல்லை என்றும் பொருள். கீல் வாயு நோயுள்ளவர்க்கும் பாகற்காய் அருமருந்தாகும்.

பாகற்காயை வற்றல் போடவேண்டும் எனில் நன்கு கழுவிக் கொண்டு வில்லைகளாக நறுக்கிக் கொள்ல வேண்டும். அவற்றோடு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொஞ்சம் தயிர் விட்டுக் கலந்து வைக்கவேண்டும். பின்னர் அரைமணி நேரம் கழித்து வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு ஊறிய பாகற்காயைப்பிழிந்து போட்டுக் கொஞ்சம் மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து எடுக்கலாம்.

நீண்டநாட்கள் வைத்துக்கொள்ள வேண்டுமானால் ஒரு இரவு பாகற்காயை தயிர், உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி கலந்த கலவையில் ஊற வைத்து மறு நாள் அவற்றை நன்கு பிழிந்து ஒரு பெரிய தட்டில் அல்லது துணியில் பரத்தி வெயிலில் தொடர்ந்து 2,3 நாட்கள் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதைத் தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளலாம்.