எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, February 17, 2013

எரிசேரின்னா இதாங்க!

எரிசேரிக்குச் சேனைக்கிழங்கு, வாழைக்காய் இரண்டும் போடலாம்.  அல்லது ஏதேனும் ஒண்ணு மட்டும் கூடப் போடலாம்.  செய்முறை என்னமோ ஒண்ணு தான்.

சேனைக்கிழங்கு கால் கிலோ, தோல் சீவிக் கொண்டு கொஞ்சம் பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.  அரிசி களைந்த இரண்டாம் கழுநீரில் அதை ஒரு கொதி விட்டுப் பொங்கி வருகையில் வடிகட்டி வைக்கவும். இதன் மூலம் சேனைக்கிழங்கின் காறல் குணம் போகும்.  அல்லது வெறும் வெந்நீரில் கூட ஒரு கொதிவிட்டுப் பொங்க ஆரம்பிக்கையில் இறக்கி வடிகட்டிக்கலாம்.  அப்படியே சேனைக்கிழங்கை வேக வைக்கக் கூடாது.  அதுக்குத் தான் இந்த முறை.

வாழைக்காய் நடுத்தரமாக 2, தோல் சீவிக் கொண்டு சேனைக்கிழங்குத் துண்டங்களைப் போல் நறுக்கவும்.  இதற்கு நடுத்தர அளவில் ஒரு தேங்காய் தேவை. தேங்காயை உடைத்துத் துருவிக் கொள்ளவும்.  ஒரு டேபிள் ஸ்பூன் அரிசியை ஊற வைக்கவும்.  மிளகாய்த் தூள் (காரம் வேண்டுமெனில் ) ஒரு டேபிள் ஸ்பூன்/ அல்லது இரண்டு டீஸ்பூன் போதும்.  ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள், மஞ்சள் பொடி கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.  தாளிக்கத் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை.  சிலர் ஜீரகம் சேர்க்கிறார்கள்.  சேர்ப்பவர்கள் அரைக்கையில் சேர்த்து அரைக்கலாம்.  நான் ஜீரகம் சேர்ப்பதில்லை.  சுவை மாறும்.

ஏற்கெனவே வடிகட்டி வைத்திருக்கும் சேனைக்கிழங்கை மீண்டும் நல்ல தண்ணீரில் வேக வைக்கவும்.  பாதி வெந்ததும், வாழைக்காய்த் துண்டங்களையும் சேர்க்கவும்.  இரண்டும் நசுங்கும் பதம் வெந்ததும், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மிளகுத் தூள் சேர்க்கவும்.  பொடி வாசனை போக உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.

மிக்சி ஜாரில் ஒரு மூடித் தேங்காயைப் போட்டு ஊற வைத்த அரிசியையும் போட்டு நன்கு நைசாக அரைக்கவும்.  மிச்சம் இருக்கும் தேங்காய்த் துருவலில் கெட்டியான பால் எடுத்துக் கொள்ளவும்.  தேங்காய்ச் சக்கையைத் தூர எறிய வேண்டாம்.  அரைத்த விழுதை வெந்து கொண்டிருக்கும் காய்களில் கொட்டிக் கிளறவும்.  லேசாக ஒரு கொதி வந்ததும், எடுத்து வைத்திருக்கும் தேங்காய்ப் பாலை ஊற்றவும்.  இன்னொரு வாணலி அல்லது இரும்புக் கரண்டியில் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொண்டு கடுகு, உ.பருப்பு தாளித்துக் கருகப்பிலை தேங்காய்ச் சக்கையை நன்கு சிவக்க வறுத்து எரிசேரியில் கொட்டவும்.  தேங்காய் எண்ணெய் தேங்காய் மணத்துடன் சுவையான எரிசேரி தயார்.

ஒரு சிலர் தேங்காய்ப் பால் எடுத்துச் சேர்க்காமல்,தேங்காய்த் துருவலை நன்கு வறுத்துச் சேர்ப்பார்கள்.  இது அவரவர் விருப்பம். சுவையில் மாறுபாடு தெரியும்.  அவ்வளவே.

8 comments:

 1. அருமையான குறிப்பு. அம்மா இப்படித் தான் செய்வார். நானும் செய்ய வேண்டும்.

  ReplyDelete
 2. 1) காரப் போடி சேர்ப்பதில்லை.

  2) தேங்காய்ப் பால் எடுத்ததில்லை.

  மற்றபடி ஓகே. நீங்கள் சொல்லியிருப்பது போலவும் ஒருமுறை செய்து பார்க்க வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம், தேங்காய்ப் பால் எல்லாருமே சேர்ப்பதில்லை. காரப்பொடியும் எல்லாரும் சேர்ப்பதில்லை. ஒரு சிலர் வற்றல் மிளகாயைத் தேங்காய்,சீரகம், அரிசியோடு சேர்த்து அரைத்துக் கலப்பார்கள் என்றும் கேள்விப் பட்டேன். ஆனால் அது எல்லாமும் பொரிச்ச கூட்டு மாதிரி ருசியைக் கொடுப்பதாக எனக்குத் தோணும். :))))))

   Delete
 3. திரு.காஸ்யபன் வீட்டுக்குப் போன போது சாப்பிட்டேன். அருமையாக இருந்தது.
  செய்முறை சுலபமாக இருக்கும் போலிருக்கிறதே? ட்ரை பண்ணுறேன்.

  ReplyDelete
 4. வாங்க கோவை2தில்லி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 5. வாங்க அப்பாதுரை, இங்கே தான் ஏமாத்திட்டீங்க, சாப்பிடாமல்! :)))))

  ReplyDelete
 6. ருசியான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராஜராஜேஸ்வரி, நன்றி.

   Delete