எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, January 13, 2013

பொங்கலுக்கு அவியலா? :D

பொங்கலுக்குத் தொட்டுக்க அவங்க வீட்டிலே அவியல் செய்வாங்கனு ரேவதி சற்றுமுன் கூறினார். இன்னும் சிலரும் சொல்லி இருக்காங்க. எங்க அப்பா வீட்டிலே கனுப்பண்டிகை அன்று பிசைந்த சாத வகைகளோடு தொட்டுக்க அவியல் இருக்கும்.  ஆனால் மாமியார் வீட்டில் அவியலே அபூர்வம்; அதிலும் பொங்கலுக்கு அவியல் செய்யவே மாட்டாங்க.  என்னிக்கானும் அவியல் செய்தாலும் அதிலே கடலைப்பருப்பு, ஜீரகம், அரிசி எல்லாம் அரைத்துவிட்டுக் கொட்டிப் பொரிச்ச கூட்டு மாதிரி இருக்கும்.  தயிர் சேர்த்தால் புளிக்கும்னு சில சமயம் பாலும் விடுவாங்க. மொத்தத்தில் அவியல்னா அது இல்லை.

திருநெல்வேலி மாவட்டத்திலே செய்யறது தான் உண்மையான அவியல்.  அதிலும் சில வீடுகளில் புளி நீர்க்கக் கரைத்து விட்டுக் காய்களை வேக வைத்து எடுப்பாங்க.  வெகு சில வீடுகளில் புளி விடாமல் செய்வாங்க. அவியலுக்குத் தேவையான காய்கள் எல்லாமும் நாட்டுக்காய்களாகவே இருத்தல் நலம்.  இப்போல்லாம் உ.கி. பீன்ஸ், காரட் இல்லாத அவியலைப் பார்க்க முடியலை.  உ.கி. மட்டும் நான் போடவே மாட்டேன். அது ருசியை மாற்றிவிடும். போனால் போறதுனு பீன்ஸ், காரட் எப்போவானும் சேர்ப்பேன்.

எல்லாக் காய்களையும் தனித்தனியாகவும் வேக வைக்கலாம்.  சேர்த்தும் வேக வைக்கலாம்.  வேக வைத்த காய்களை நீரை வடிகட்டி வைத்துக் கொண்டு வாயகன்ற உருளி, நான் ஸ்டிக் பாத்திரம் ஏதேனும் ஒன்றில் போடவும்.  காய்கள் எல்லாம் மொத்தம் அரைகிலோவுக்கு இருக்கும் எனில் சின்னத் தேங்காய் ஒன்று, நான்கு பச்சை மிளகாய் சேர்த்து நல்ல நைசாக அரைத்துக் கொள்ளவும்.  வடிகட்டிப் பாத்திரத்தில் உள்ள காய்களில் இந்த விழுதைச் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரம் கொதிக்க விடவும். நன்கு சேர்ந்து வந்ததும், தேங்காய் எண்ணெய் ஊற்றி அதிலேயே காம்போடு கருகப்பிலையைப் போடவும். சாப்பிடுகையில் பரிமாறத் தேவையான அவியலுக்கு மட்டும் தேவையான புளிப்பில்லாத தயிரைச் சேர்த்துக் கொண்டு பரிமாறவும்.  மொத்த அவியலிலும் முதலிலேயே தயிரைக் கலந்து விட்டால் அவியலே புளிக்கும்.

புளி சேர்த்துச் செய்கையில் அரைகிலோ காய்கறிகளுக்கு ஒரு நெல்லிக்காய் அளவுக்குப் புளியைக் கரைத்துக் கொண்டு அந்தப் புளி ஜலத்தில் வேக வைத்தால் போதும்.  எலுமிச்சை அளவு புளியெல்லாம் அதிகம்.  காய்கள் வெந்ததும் மேலே சொன்னாப்போல் தேங்காய், பச்சைமிளகாய் அரைத்த விழுதைப் போட்டுக் கலந்து கொதிக்கவிட்டுத் தேங்காய் எண்ணெய், கருகப்பிலை போட்டால் போதும்.  இதுக்குத் தயிர் வேண்டாம்.

Thursday, January 10, 2013

என்னனு பொருள் விளங்குமா? விளங்கணும்! :)))


நானூறு கிராம் பயத்தம்பருப்பு, ஐம்பது கிராம் கடலைப்பருப்பு, ஐம்பது கிராம் கோதுமை. முக்கால் கிலோ பாகு வெல்லம். முற்றல் தேங்காய் ஒன்று. உடைத்துப் பல்லுப் பல்லாகக் கீறி வைத்துக் கொள்ளவும். ஏலக்காய் ஐந்து அல்லது ஆறு. சுக்கு ஒரு துண்டு. ஏலக்காயையும் சுக்கையும் நன்கு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

பொருள்விளாங்காய் உருண்டையானாலும் சரி, பருப்புத் தேங்காயானாலும் சரி, பாகு வைப்பதில் தான் இருக்கிறது. முதலில் பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கோதுமை எல்லாவற்றையும் வெறும் வாணலியில் நன்கு சிவப்பாக வறுத்துக் கொள்ளவும். கோதுமை பொரியவேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாக மிஷினில் கொடுத்து அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.

மாவை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு ஏலக்காய், சுக்குப் பொடி கலந்து வைக்கவேண்டும். மாவைக் குவித்துக் கொண்டு நடுவில் பள்ளம் பண்ணிக் கொள்ளவும். வெல்லத்தை நன்கு தட்டிப் பொடியாக்கி ஒரு கிண்ணம் நீரில் கரைக்கவும். வெல்லத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும் வரை கொதிக்க வைத்து அழுக்கை நீக்கி மீண்டும் வெல்ல நீரை அடுப்பில் ஒரு வாணலியில் அல்லது உருளியில் வைத்துப் பாகு காய்ச்சவும். பாகு பதம் பார்க்க அருகே ஒரு கிண்ணத்தில் நீர் வைத்துக் கொள்ளவும். பாகு கொதித்து வரும்போது ஒரு தேக்கரண்டி பாகை எடுத்து நீரில் விட்டுப் பார்த்தால் தக்காளிப்பழம் உருட்டுவது போன்ற பதம் வரும். தேங்காய்க் கீற்றை மாவிலோ, பாகிலோ சேர்க்கலாம். பாகை  உடனே எடுத்துவிடவேண்டும். கொஞ்சம் அதிகமானால் பாகு காய்ந்து உருண்டை ஸ்வர்ணா சொன்ன மாதிரி கெட்டியாய் இருக்கும். அப்படி வேண்டும் என்றால் அதிகமாய்ப் பாகைக் காய்ச்சிக் கொள்ளலாம்.

காய்ந்த பாகை மாவின் நடுவில் உள்ள பள்ளத்தில் விட்டுக் கொண்டே, இன்னொரு கையால் மாவைக் கிளறவேண்டும். பழக்கமுள்ளவர்கள் தனியே செய்ய முடியும். இல்லை என்றால் வேறொருவரைக் கலக்கச் சொல்லலாம். மாவும், பாகும் நன்கு கலந்ததும் உருண்டை சூடு இருக்கும்போதே பிடிக்கவேண்டும். பருப்புத் தேங்காய்க் கூட்டில் அடைக்கவேண்டும் எனில் கூட்டில் ஏற்கெனவே நெய் நன்றாகத் ததும்பத் தடவி தயாராக வைக்கவும். அடுப்பைத் தணித்துக் கொண்டு, மாவையும், பாகையும் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்து சேர்த்த கலவையைக் கூட்டில் உடனே கொட்டிவிடவேண்டும். ஆறியதும் கூட்டைத் தட்டினால் பருப்புத் தேங்காய் தனியே வரும். 

பொரிச்ச கூட்ட்டு வா ஆஆஆஆஆஆஆஆஆரம்!

அடுத்ததும் பொரிச்ச கூட்டுத்தான்.  இதுக்குக் கொத்தவரைக்காய், அவரைக்காய், பீன்ஸ் போன்றவைக்கே முதலிடம்.  எனினும் சில சமயம் செளசெளவிலோ, பூஷணிக்காயிலோ போனாப்போகுதுனு செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

மேலே சொன்ன காய்களில் ஏதேனும் ஒன்று கால் கிலோ, தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்(கழுவி, நனைத்து ஊற வைக்கவும்.) சாம்பார்ப் பொடி ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயம் கட்டி அல்லது பொடி சிறிதளவு.  தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை, தாளிக்கத் தே. எண்ணை சிறந்தது, இல்லைனா சமையல் எண்ணெய் ஏதானும் ஒன்று ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன்.

கடலைப்பருப்பை நன்கு ஊற வைத்து முதலில் வேக வைக்கவும்.  பின்பு நறுக்கிய காய்களை அவரை, கொத்தவரை, பீன்ஸ் போன்றவை என்றால் வேறொரு கடாயில் சிறிது வதக்கி வெந்து கொண்டிருக்கும் பருப்பில் சேர்க்கவும்.  மற்றக் காய்கள் எனில் நறுக்கி அப்படியே சேர்க்கலாம்.  சாம்பார்ப் பொடி ஒரு டீஸ்பூன் போட்டுத் தேவையானால் மஞ்சள் பொடி சேர்க்கவும்.  கொஞ்சம் வெந்ததும் உப்புச் சேர்க்கவும்.  நன்கு வெந்து சேர்ந்து வரும் சமயம் தே.எண்ணெயில் கடுகு, உபருப்பு, பெருங்காயம் சேர்த்துத் தேங்காய்த் துருவலைப் போட்டு வறுத்துக் கொண்டு  கடைசியில் கருகப்பிலையைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டிக் கொண்டு கூட்டில் கொட்டிக் கலக்கவும்.  அதுவே சேர்ந்து இருக்கும்.  சேர்ந்து இல்லை என்றாலோ அல்லது மாவு சேர்ப்பது பிடித்தம் என்றாலோ அரிசி மாவு இரண்டு டீஸ்பூன் கரைத்து ஊற்றிக் கொஞ்சம் கொதிக்க விடவும்.

Tuesday, January 8, 2013

பொரிச்சுப் பொரிச்சு ஒரு கூட்டு! 2-ஆம் முறை

அடுத்துப் பருப்புப் போட்டுச் செய்யும் கூட்டுகள்:  இதையும் செளசெள, முட்டைக்கோஸ், கத்திரிக்காய், புடலை, பூஷணி போன்றவற்றில் செய்யலாம். பொதுவாகப் பாசிப் பருப்பு தான் போடுவார்கள்.  எப்போதாவது துவரம்பருப்புப் போடலாம்.  ஆனால் அது அவ்வளவு நன்றாக இருக்காது.  வெறும் கடலைப்பருப்பு மட்டும் ஊறவைத்துப் போட்டு வேக வைத்துக் கொண்டும் பண்ணலாம்.  ஆனால் அதற்குப் பூஷணிக்காய், கொத்தவரை, பீன்ஸ் போன்றவையே நன்றாக இருக்கும். பறங்கிக் காயில் பருப்புப் போட்டும் அல்லது போடாமலும் செய்யலாம்.  அதைப் பின்னால் பார்க்கலாம்.

இப்போ மேலே சொன்ன காய்களில் ஏதேனும் ஒன்று கால்கிலோ, பாசிப்பருப்பு அரைக்கிண்ணம், மி.வத்தல், சீரகம், தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன், 2 டீஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்ற(தேவையானால், நான் சேர்ப்பதில்லை)  கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை, தாளிக்க மட்டும் எண்ணெய்.
சீரகம், மி.வத்தலோடு தேங்காய் துருவல், அரிசி மாவு சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.  மி.வத்தல் ஒன்று போதும்.  காரம் வேண்டுமெனில் கூடப்போட்டுக்கலாம்.  அவரவர் ருசிக்கு ஏற்றவாறு சேர்க்கலாம்.

காயைப் பொடிப் பொடியாகத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.  முதலில் பாசிப் பருப்பைக் களைந்து நன்கு குழைய வேக வைக்கவும்.  குக்கரில் வேக வைப்பவர்கள், காயைக்கொஞ்சம் வேக வைத்துக் கொண்டு, பின்னர் குழைந்த பருப்பைச் சேர்க்கவும்.  பருப்பு வெந்ததும் காயைச் சேர்க்கவும்.  மஞ்சள் தூள் மட்டும் போட்டுக் கொஞ்ச நேரம் வேக வைக்கவும்.  நசுங்கும் பதம் வந்ததும் உப்புச் சேர்க்கவும். உப்புச் சேர்ந்து கொஞ்சம் வெந்ததும்.  அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.  ஒரு கொதி நன்கு வந்ததும் கீழே இறக்கவும்.  தேங்காய் எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை தாளிக்கவும். ஜீரகம் பிடிக்காதவர்கள் அது இல்லாமல் வெறும் தேங்காய் மி.வத்தல் சேர்த்து அரைத்துச் செய்து கொள்ளலாம்.

Saturday, January 5, 2013

பொரிச்ச கூட்டுன்னா எண்ணெயிலேயா பொரிப்பீங்க?

அடுத்துப் பார்க்கப் போறது ரொம்பச் சாதாரணமான, ஆனால் எல்லாரையும் குழப்பும் ஒரு சமையல் குறிப்பு. அதான் பொரிச்ச கூட்டு.  இந்தப் பொரிச்ச கூட்டுக்கும், பொரிச்ச குழம்புக்கும் குழப்பம் பண்ணிக்கிறவங்க நிறைய உண்டு.  முதல்லே பொரிச்ச கூட்டைப் பார்க்கலாம்.  இதற்கான காய்கள் ஒரு சில தான்.

அவரைக்காய், பீன்ஸ், கத்திரிக்காய், பூஷணிக்காய்(வெள்ளை), பறங்கிக்காய்(பழுக்காதது), செளசெள, கொத்தவரை,  புடலை, கீரைத்தண்டு, முட்டைக்கோஸ் மற்றும் எப்போதேனும் வாழைக்காயிலும் செய்யலாம்.

அதே சமயம் பொரித்த குழம்பும் அவரைக்காய், முருங்கைக்காய்,  கீரைத்தண்டு, கத்திரிக்காய், புடலங்காய், கொத்தவரை போன்றவற்றில் செய்யலாம்.  மற்றக் காய்களில் பொரித்த குழம்பு அதிகம் செய்வதில்லை.  என்றாலும் எங்க மாமியார் வீட்டில் மிகுந்திருக்கும் காய்களை எல்லாம் போட்டுச் சில சமயம் செய்வதுண்டு. அதிலே உருளைக்கிழங்கும், காரட்டும் கூட இடம் பெறும்.  அதே போல் முட்டைக்கோஸ் பொரித்த கூட்டில் காரட்டைப் போடலாம்.  பச்சைப்பட்டாணி கிடைத்தால் அதையோ அல்லது ஊற வைத்த பச்சைப் பட்டாணியோ போடலாம்.  பொரிச்ச கூட்டுச் செய்யப் பருப்பு வேண்டும்னு அவசியம் இல்லை.  ஆனால் பொரிச்ச குழம்புக்குப் பாசிப்பருப்புப் போடணும்.  ஒரு சில சமயம் பாசிப்பருப்பும், துவரம்பருப்பும் கலந்து போடுவதும் உண்டு.  பொரிச்ச குழம்பு சாதத்தோடு சேர்ந்து சாப்பிடவும், பொரிச்ச கூட்டு சைட் டிஷாகவும் பயன்படுத்துகிறோம்.  இன்னிக்கு பீன்ஸ் பொரிச்ச கூட்டு.  முடிஞ்சால் படம் எடுக்கிறேன். :))))


பொரிச்ச கூட்டு வகைகள் நிறையவே இருக்கு.

முதல் வகை.   மேலே சொன்ன ஏதேனும் ஒரு காய். நான்கு பேருக்கு எனில் ஒரே ஒரு கூட்டு மட்டும் தான் என்றால் அரை கிலோவுக்குக் கொஞ்சம் குறைச்சலாக இருந்தால் போதும்.  பருப்புப் போடாமல் செய்வதே முதலில் சொல்லப் போறேன்.காய்களைக் கழுவிக்கொண்டுப் பொடித்துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.  நறுக்கிய துண்டங்கள் குறைந்த பக்ஷமாக மூன்று அல்லது நான்கு கிண்ணங்கள் வரும்.  அதற்குத் தேவையானவை, தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன், அரிசி மாவு.  இவை இரண்டையும் நன்கு நைசாக நீர் விட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

காய்களை ஒரு உருளி அல்லது கல்சட்டி, அல்லது அலுமினியம் கடாய் அல்லது நான்ஸ்டிக் கடாய் அல்லது பாத்திரம் ஏதேனும் ஒன்றில் ஒரு முட்டை நல்லெண்ணெய் விட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.  கறிகளுக்கு ஊத்தறாப்போல் எண்ணெயை நிறைய விட்டெல்லாம் வதக்கக் கூடாது.  ஒரு முட்டைனா ஒரே ஒரு முட்டைதான்.  காய் சீக்கிரம் வேகவும், நிறம் மாறாமல் இருக்கவுமே இப்படி வதக்க வேண்டும்.  வதக்கிய பின்னர் தேவையான நீரை ஊற்றி மஞ்சள் பொடி, அரை ஸ்பூன் சாம்பார் பொடி பிடித்தமானால் சேர்க்கவும்.  காய் நசுங்கும் பதம் வெந்ததும் உப்புச் சேர்த்து ஓரிரு நிமிடம் வேக வைக்கவும்.  அரைத்த விழுதைச் சேர்க்கவும்.  ஒரு கொதி விட்டுக் கீழே இறக்கிக் கொண்டு தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரே ஒரு மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும்.  இப்போது உங்கள் கூட்டு சாப்பிடத் தயார்.



கூட்டுசாதம் பிடித்தால் சாதத்தோடும் சாப்பிடலாம்.  அல்லது சைட் டிஷாகவும் பயன்படுத்தலாம்.  மிகவும் மிதமான உணவுக் குறிப்பு இது.  எண்ணெயும் அதிகம் தேவையில்லை.  தேங்காயில் கொலஸ்ட்ரால் இருக்கு என்பவர்கள் ஒரு முறை ஏதேனும் பண்பட்ட ஆயுர்வேத மருத்துவர்களிடம் பேசிப் பார்த்தால் தேங்காய் நம் உடலுக்கு எவ்வளவு தேவை என்பது புரியும்.  கொப்பரை பயன்படுத்தக் கூடாது.  சமையலில் தாளிக்கும் அளவு தே. எண்ணெயோ, கூட்டில், கறியும் சேர்க்கும் தேங்காயோ உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பைத் தரக்கூடியவை.

அடுத்தடுத்த முறைகள் தொடரும்.  இதுவே பெரிசாயிடுச்சே.  படம் எடுத்தாச்சு. சேர்க்கணும்.  சேர்த்துடுவோம். :))))

சேர்த்துட்டோமுல்ல!