எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, March 29, 2012

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இப்போப் பச்சை மிளகாயில் தொக்குப் போடலாமா? ஹிஹிஹி, ஸ்ரீராம் புளி மிளகாய் கேட்டேனேனு நறநறப்பது தெரியுது. அதுக்கும் வரேன்.

நல்ல பிஞ்சு மிளகாய் கால் கிலோ வாங்கிக்குங்க. இதுக்குக் குறைந்தது 50 கிராம் புளி தேவை. உப்பு தேவையான அளவு, தாளிக்க நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், மஞ்சள் தூள், பெருங்காயம். புளியைக் கரைத்துக் கெட்டியாக எடுத்துக்கொள்ளவும். கால் கிலோ பச்சை மிளகாய்க்குத் தகுந்த புளிப்பு தேவை என்பதால் 50 கிராம் போதவில்லை போல் தோன்றினால் இன்னும் கொஞ்சம் கரைத்துக்கொள்ளலாம். பச்சை மிளகாயைக் கழுவிக் காம்பை நீக்கிக் கொண்டு கீறி வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கல்சட்டி அல்லது வாணலியை ஏற்றிக் கொண்டு காய்ந்ததும் நல்லெண்ணெய் விடவும். எண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்துக் கொண்டு கீறிய பச்சை மிளகாயைப் போட்டு மஞ்சள் பொடியும் சேர்த்து வதக்கவும். இந்த நெடி ஒத்துக்காத என் போன்றோர் மூக்கு மூடி போட்டுக் கொண்டு வதக்கவும். அப்படியும் விடாமல் இருமுறை, மும்முறை தும்மினால் சரியாயிடும். அப்போத் தான் அக்கம்பக்கம் எல்லாம் நீங்க புளி மிளகாய் போடறது தெரியவரும். இதைப் புளிமிளகாய்த் தண்ணீர்னும் சொல்வாங்க.

அப்புறமாப் புளி ஜலத்தைச் சேர்க்கவும். உப்புப் போட்டுக் கொதிக்க விடவும். புளி ஜலம் நன்கு கொதித்துக் கெட்டியானதும் கீழே இறக்கவும். அன்றே அரைத்து அன்றே வார்க்கும் புளியா தோசை எனப்படும் கல் தோசைக்கு நல்ல காம்பினேஷன் இந்தப் புளிப்பும் காரமும் சேர்ந்த சுவையான புளிமிளகாய்.


அடுத்து மிளகாய்த் தொக்கு:

தேவையான பொருட்கள்: கால் கிலோ பச்சை மிளகாய், தேவையான உப்பு, புளி 50 கிராம், வதக்க 200 கிராம் நல்லெண்ணெய், பெருங்காயம் ஒரு துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு. வெல்லத்தூள் 50 கிராம்

முதலில் மிளகாயைக் கழுவிச் சுத்தம் செய்துவிட்டுப் பின்னர் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக்கொண்டு நன்கு சுருள வதக்கவும். வதக்கிய மிளகாயை ஆற வைத்துவிட்டுப் பின்னர் உப்பு, புளி சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும். இப்போல்லாம் மிக்சி. முன்னெல்லாம் கல்லுரல் இல்லைனா அம்மியில் அரைக்கணும். கை போயிடும். அரைத்த விழுதை எடுத்துக்கொண்டு, ஒரு வாணலி அல்லது கல்சட்டியில் மிச்சம் உள்ள நல்லெண்ணெயை ஊற்றிக் கொண்டுக் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பெருங்காயம் சேர்க்கவும். அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறவும். பச்சையாக இருக்கும் அதன் நிறம் மாறி எண்ணெய் பிரிய ஆரம்பிக்கையில் வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் நன்கு சேர்ந்து கிளறியதும் உருட்டும் பதம் வந்ததும் கீழே இறக்கி ஆற வைத்து நன்கு அலம்பிய கண்ணாடி பாட்டிலில் அல்லது ஏதேனும் பீங்கான் பாத்திரத்தில் போட்டுப் பயன்படுத்தவும். இதுவும் தோசை, சப்பாத்தி, மோர்சாதம் போன்றவற்றிற்குத் துணையாக நன்கு ருசியாக இருக்கும்.

7 comments:

 1. நன்றி...

  //வதக்கிய மிளகாயை ஆற வைத்துவிட்டுப் பின்னர் உப்பு, புளி சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும்//

  மிளகாய் 'ஷேப்'பே இல்லாமல் இருக்குமே...எனக்கு மிளகாய் அப்படியே எடுத்து கடிக்கணும்! முதல் டைப்தான் ஓகே. ஆனால் என் அம்மா புளியைக் காய்ச்சாமல் பச்சையாகப் போடும் புளி மிளகாய்தான் அதிகம் போட்டு என்னைக் கெடுத்து வைத்திருக்கிறார்!! என்ன, உடனே உடனே செலவு செய்துடணும்! ஆனால் அது அதிகம் செய்ய முடிவதில்லை. ஆதரவு இல்லை!

  ReplyDelete
 2. இதற்கு நான் போட்ட கமெண்ட் என்ன ஆச்சு?

  ReplyDelete
 3. என்ன ஆகியிருந்தது? நேற்று பின்னூட்டம் வெளியானதைப் பார்த்தேனே...எப்படிக் காணாமப் போச்சு?

  இன்று 'மிக்சியில் அரைக்காத முழு மிளகாய்' போடப்பட்டது. நன்றிகள். சும்மா ஐம்பது கிராம் மிளகாய். அவ்வளவுதான். அவ்வளவு பிஞ்சா கிடைக்கவில்லை. எனினும் போட்டாச்சு...பார்ப்போம்.

  ReplyDelete
  Replies
  1. அதை ஏன் கேட்கறீங்க, மெனக்கெட்டு எழுதிட்டு கமென்டே வரலைனு நினைச்சேன். கடைசியிலே பார்த்தால் எங்கேயோ போய் ஒளிஞ்சுட்டு இருந்தது. தேடி எடுத்தேன். :)))) என்னோட மெயில் ஸ்பாமிலே கிடைச்சது. :))))))

   Delete
  2. இப்போக் கூட ஆறு கமென்டுக்கு ஏழு காட்டுது. அந்த இன்னொண்ணு எங்கேனு தெரியலை. :)))))

   Delete