எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, February 5, 2012

காய்கறிகளைச் சமைக்காமல் சாப்பிட வாங்க!

இப்போ நல்லாக் காய்கள் எல்லாம் விதம் விதமாய்க் கிடைக்கும். இந்தக் காய்கள் எல்லாப் பருவங்களிலும் கிடைக்காது. இப்போக் கிடைக்கும் காய்களை வைத்து ஊறுகாய் போடுவது எப்படினு பார்க்கலாமா? இந்த ஊறுகாய் செய்து வைத்துக்கொண்டால் சப்பாத்திக்குக் காய் கிடைக்கலைனா சைட் டிஷ் ஆகப் பயன்படுத்திக்கலாம். ஏதேனும் ஒரு பருப்பை வேகவைத்து தால் பண்ணிண்டால் போதும். காய்கள் கொஞ்சம் இருந்தாலே போதுமானது. ஒவ்வொன்றிலும் வகைக்கு ஒன்றாக இருந்தாலே இரண்டு ஹார்லிக்ஸ் பாட்டில்கள் வரும். தேவையான காய்கள்:

காரட் இரண்டு

பீட்ரூட் பெரிது என்றால் ஒன்று, சின்னது என்றால் 2

டர்னிப் அதே போல் பெரிது ஒன்று அல்லது சின்னது 2

நூல்கோலும் அவ்வாறே.

சிவப்புக் குடைமிளகாய் பெரிதாக ஒன்று

மஞ்சள் குடைமிளகாய் பெரிதாக ஒன்று

காலி ஃப்ளவர் தேவை எனில் உதிர்த்துக்கொண்டு ஒரு கிண்ணம்

பச்சை மிளகாய் நூறு கிராம்

இஞ்சி நூறு கிராம் (இளசாக)

மாங்காய் இஞ்சி (கிடைத்தால்) 50 கிராம்

பச்சை மஞ்சள் நூறு கிராம் இளசாக

மாங்காய் கிடைத்தால் ஒன்று

எலுமிச்சம்பழம் பத்து நல்ல சாறுள்ளதாக.

சர்க்கரை கால் கிண்ணம்

உப்பு தேவையான அளவு

மிளகாய்த் தூள் 50 கிராம்

நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் 250 கிராம்

கடுகு, வெந்தயப் பொடி கால் கிண்ணம், சோம்பு 50 கிராம் வெறும் வாணலியில் வறுத்தது.

வினிகர்(white cooking vinegar) ஒரு கிண்ணம்

ஐந்து எலுமிச்சம்பழம் சாறு பிழிந்து ஊறுகாய் போடும் பாத்திரத்தில் ஊற்றிவிடவும். மிச்சம் ஐந்து பழத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி அதோடு சேர்க்கவும். ,மாங்காயையும் அவ்வாறே துண்டம் துண்டமாக நறுக்கி எலுமிச்சைச் சாறும் எலுமிச்சைத் துண்டங்களோடும் சேர்த்துப் போடவும்.

காய்களை நன்கு கழுவிக் கொண்டு பீட்ரூட், காரட், டர்னிப், நூல்கோல் போன்றவற்றைத் தோல் சீவிக் கொண்டு ஒரு இஞ்ச் நீளத்தில் மெலிதாக நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
உதிர்த்த காலிஃப்ளவர் பூக்களை கொதிக்கும் வெந்நீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துச் சிறிது நேரம் வைத்து விட்டு வடிகட்டிக்கொள்ளவும்.
குடைமிளகாய்களையும், பச்சை மிளகாயையும் தேவைக்கு ஏற்ப நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய் பெரிதானால் இரண்டாக நறுக்கிக் கொண்டு குறுக்கே வாயைப் பிளந்து வைத்துக் கொள்ளவும்.

அதே போல் இஞ்சி, மஞ்சள், மாங்காய் இஞ்சி போன்றவற்றையும் தோலைச் சீவிக் கொண்டு ஒரு இஞ்ச் நீளத்தில் மெலிதாக நறுக்கவும்.

கடாய் அல்லது நான் ஸ்டிக் கடாயில் ஒரு கரண்டி சமையல் எண்ணெயை ஊற்றிக் கொண்டு முதலில் இஞ்சி, மஞ்சள், மாங்காய் இஞ்சி நறுக்கியவற்றை வதக்கவும். நன்கு வதங்கியதும் தனியே எடுத்து ஆற வைக்கவும். பின்னர் மிளகாய்களை அதே போல் வதக்கவும். மிளகாய் சீக்கிரம் வதங்கி விடும். அதையும் தனியே எடுத்து ஆற வைக்கவும். இப்போது எண்ணெய் கடாயில் இல்லை எனில் மேலும் ஒரு கரண்டி ஊற்றிக் கொண்டு காய்களைப் போட்டு வதக்கவும். காய்கள் கொஞ்சம் வதங்கியதும், காய்களுக்கு மட்டும் தேவையான உப்பைப் போட்டுக் கொஞ்சம் மஞ்சள் தூள் தூவவும். காய்கள் நன்கு வதங்க வேண்டும். பின்னர் அதையும் எடுத்து ஆற வைக்கவும்.

எலுமிச்சை, மாங்காய் சேர்த்துப் போட்டிருக்கும் பாத்திரத்தில் வதக்கி ஆறவைத்த காய்களைச் சேர்க்கவும். தேவையான உப்பையும், மிளகாய்த் தூள், சர்க்கரை போன்றவற்றைச் சேர்க்கவும். நன்கு கலந்து விடவும். ஒரு நாள் அப்படியே வைத்துவிட்டு மறு நாள் வதக்கியதுக்கு எடுத்தது போக மீதம் உள்ள எண்ணெயை நன்கு சூடு பண்ணி ஆறவிட்டு ஊறுகாயில் சேர்த்துக் கலக்கவும். கடுகு, வெந்தயப் பொடி, வறுத்த சோம்பு போன்றவற்றையும் சேர்க்கவும். இவை நன்கு ஆறியதும் வினிகர் ஊற்றிக் கலந்து ஊறுகாயை இரண்டு நாட்கள் நன்கு ஊறவிட்டுப் பின் பாட்டிலில் போட்டுப் பயன்படுத்தவும்.

நாளைக்குப் படம் எடுத்துப் போடறேன்.

12 comments:

 1. இவற்றைச் செய்து ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டுமா? வெளியிலேயே வைத்தால் எத்தனை நாட்களுக்கு சலிப்பு வாடை வராமல் இருக்கும்?

  // இப்போது எண்ணெய் கடாயில் இல்லை எனில் //

  வியக்க வைத்த வரி. மனக்கண்ணில் செய்தபடியே எழுதி இருப்பீர்கள் போலும்!

  ReplyDelete
 2. //மீதம் உள்ள எண்ணெயை நன்கு சூடு பண்ணி ஆறவிட்டு //

  இந்த இடத்தில் ஒரு சந்தேகம். எந்தெந்த ஊறுகாய் வகைகளுக்கு எண்ணெயைக் காய்ச்சாமல் பச்சையாகவே ஊற்றலாம்? (அன்றன்றே உபயோகிக்கும் வகையிலா...சில விசேஷங்களிலும், திருமணங்களிலும் போடப்படும் ஊறுகாய்களுக்கு அப்படிப் போடுவதை சமையல்காரர் மூலமாக அறிந்திருக்கிறேன். நன்றாக இருந்தால் உடனே போய் பாராட்டி விட்டு, ரெசிப்பி கேட்டு விடுவோமாக்கும்!)

  ReplyDelete
 3. வினிகர் வாசனை பிடிப்பதில்லை. அது இல்லாமல் செய்ய முடியாதா?

  முன்பு தஞ்சையில் இருந்த காலங்களில் டி எஸ் ஆர் கம்பனியில் ஒரு விஜிடபிள் ஊறுகாய் போடுவார்கள். மிக அருமையாய் இருக்கும். இப்போதும் கிடைக்கிறது. பழைய வாசனை இல்லாமல், ஓ..இப்படிச் சொன்னால் வேறு அர்த்தம் வருகிறது, முன்பு சாப்பிட்ட டேஸ்ட் இப்போது அதில் இல்லை என்று தோன்றும்!

  ReplyDelete
 4. வாங்க ஶ்ரீராம், குளிர்சாதனப் பெட்டியில் ஊறுகாயை வைப்பது எனக்கும் பிடிக்காது. ஆனால் ஒரு விஷயம், ஊறுகாயைக் காலை நேரம் குளித்துவிட்டே எடுக்கவேண்டும்; அன்றைய தேவைக்கு உள்ள ஊறுகாயைக் காலை வேளையிலேயே எடுத்து வைத்துவிட வேண்டும். தினமும் கிளறிவிட வேண்டும். இன்றைய அவசர உலகில் இதெல்லாம் எல்லாராலும் முடியாது என்பதைப் புரிந்து கொண்டதால், சொன்னேன். மற்றபடி நான் ஊறுகாயைக் குளிர் பெட்டியில் வைத்துப் பயன்படுத்துவதில்லை. ஓரளவுக்கு சுத்தம் இருந்தால் மட்டும் போதாது. அதனாலேயே குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் தான் இந்தக் காலத்தில் சீக்கிரம் ஊறுகாய் வீணாகாது.

  ReplyDelete
 5. வியக்க வைத்த வரி. மனக்கண்ணில் செய்தபடியே எழுதி இருப்பீர்கள் போலும்!//

  ஹிஹிஹி, 13 வயசில் இருந்து தனியாகச் சமைக்கிறேன். எல்லாம் அனுபவப் பாடம் தான். :))))))

  ReplyDelete
 6. எலுமிச்சை, வெந்தய மாங்காய், எண்ணெய் மாங்காய், கொண்டைக்கடலை, வெந்தய ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய் போன்றவற்றிற்கு எண்ணெயைக் காய வைத்துப் பின்னர் ஆற வைத்துச் சேர்க்கலாம்.

  அதே ஆவக்காய் ஊறுகாய் எனில் பச்சை எண்ணெய் தான். ஆனால் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தேவையான எண்ணெயை எடுத்துக்கொண்டு மேலே மெலிதான வெள்ளைத்துணியால் மூடிக்குறைந்த பக்ஷம் மூன்று மணி நேரம் வெயிலில் அந்த எண்ணெயை வைத்துவிட்டுப் பின்னர் மாங்காய்க் கலவையில் சேர்க்கவேண்டும். அவ்வாறே கடுகு, வெந்தயம் போன்றவற்றையும் வெயிலில் வைத்துப் பின்னர் வறுக்காமல் பச்சையாகப் பொடி செய்து சேர்க்கவேண்டும்.

  ReplyDelete
 7. அன்றன்றே உபயோகிக்கும் ஊறுகாய்களில் எண்ணெயிலேயே வதக்கிச் சேர்ப்பதால் காய வைத்து விடவேண்டாம். உதாரணமாக எலுமிச்சை ஊறுகாய் கல்யாணங்களுக்குக் கொதிக்கும் வெந்நீரில் எலுமிச்சையை ஊற வைத்துக் கொண்டு பின்னர் நறுக்கி உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெயைச் சூடு பண்ணியும் விடுவார்கள். ஊற வைத்த முழு எலுமிச்சையை எண்ணெயில் நன்கு வதக்கிவிட்டுப் பின்னர் நறுக்கியும் உப்பு, மிளகாயத் தூள் சேர்த்துக்கொண்டு மிச்சம் எண்ணெயைச் சேர்ப்பார்கள். இரண்டாவது முறையில் எலுமிச்சை ஊறுகாய்த் தோல் கொஞ்சம் கசப்பு லேசாகத் தெரியும்.

  ReplyDelete
 8. வினிகர் வாசனை எங்களுக்கும்(என் கணவருக்கும், எனக்கும்) பிடிக்காது. எங்களுக்கு எனத் தனியாகப் போட்டால் வெஜிடபிள் ஊறுகாயானால் கூட வினிகர் சேர்ப்பதில்லை. அதற்குப் பதிலாகக்கடுகு, வெந்தயப் பொடியைக் கொஞ்சம் கூடப் போட்டுவிட்டு நல்லெண்ணெயும் விட்டால் போதுமானது. வடமாநிலங்களில் வினிகர் பிடிக்காதவர்கள் கடுகு எண்ணெய் சேர்க்கின்றனர். பஞ்சாபில் ஆலிவ் எண்ணெய் சேர்க்கின்றனர்.

  வினிகர் சேர்ப்பது preservationக்குத் தான். இன்றைய பெண்கள் அவசரத்தில் தினமும் கிளறிவிட மறந்துவிடுவார்கள். ஆகவே வினிகர் சேர்த்தால் அந்தத் தேவை இருக்காது. ஊறுகாய் போடுவதை விடவும் அதைப் பாதுகாப்பதில் கவனம் தேவை.

  பி.கு. தஞ்சாவூர் டி.எஸ்.ஆர். ஊறுகாய் சாப்பிட்டதில்லை. :)))) ஊறுகாய்கள் எதுவானாலும் வீட்டிலேயே போட்டுவிடுவதால் வெளியில் வாங்கிச் சாப்பிட்டதில்லை. அதனால் இது குறித்துச் சொல்லத் தெரியவில்லை. இந்தியா வந்ததும் வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்துவிட்டுச் சொல்றேன். :))))))

  ReplyDelete
 9. (அன்றன்றே உபயோகிக்கும் வகையிலா...சில விசேஷங்களிலும், திருமணங்களிலும் போடப்படும் ஊறுகாய்களுக்கு அப்படிப் போடுவதை சமையல்காரர் மூலமாக அறிந்திருக்கிறேன்//

  அப்படியா? நான் பார்த்தவரைக் காய்ச்சி விடுகிறார்கள். இனிமேல் போகும் கல்யாணங்களில் கவனிக்கணும். :)))))

  ReplyDelete
 10. சமைக்காம சாப்பிடலாம்'னதும் நீங்க செஞ்சு தர போறீங்க போலனு ஓடோடி வந்த என்னை 'ஓ நோ' சொல்ல வைத்து விட்டீர்களே மாமி....அவ்வவ்... ஜஸ்ட் கிட்டிங், nice ideas to eat healthy food...thanks...:)

  ReplyDelete
 11. சொந்தக்கதை சோக கதையப்பா! நித்யமே சாலட் என்கிற இந்த காஸ் பூஸ் தான் ! லெபெனீஸ் cucumber, red pepper ,1button mushroom 1red raddish, 10 வல்லாரை, rocket, lettuce, pumpkin seeds 1 spoon ட்ரெஸ்ஸிங்க்கு லெமன் ஜுஸ், வ்ர்ஜின் ஆலிவ் ஆயில், ஒரு நுள்ளு ஸோய் சாஸ்! கேக்க அள்ளிபிடுங்கி திங்கறமாதிரி இருக்கா! தினம் தின்னு பாருங்க தெரியும் .நானே நினைச்சுப்பேன் ஒரு தொட்டிக்குள்ள தலைய விட்டுண்டு "ப.. ப" இங்கற மாதிரி:(

  ReplyDelete
 12. .நானே நினைச்சுப்பேன் ஒரு தொட்டிக்குள்ள தலைய விட்டுண்டு "ப.. ப" இங்கற மாதிரி:(//

  சிப்பு சிப்பா வருதே; ரெண்டு நாள் முந்திதான் பையர் எல்லா விஷயங்களையும் சேர்த்து சாலட் பண்ணினார். ஒரு பவுல் நிறையக்கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். நம்ம ரங்க்ஸ் க்ளீனா மாட்டேனுட்டார். நான் என்ன ஆடா? னு கேள்வி வேறே

  வேறே வழி மாட்டிண்டேன்; ஆடு மாதிரிக்கத்திண்டே சாப்பிட்டேனோனு ஒரு சந்தேகம்! :))))))

  ReplyDelete