எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, January 10, 2012

திருவாதிரைக்களி செய்முறையும், ஏழுதான் குழம்பும்!

திருவாதிரைக்களி செய்முறை:
தேவையான பொருட்கள்:
நல்ல பச்சரிசி இரண்டு கிண்ணம். வெல்லம் தூள் செய்தது மூன்று கிண்ணம். து.பருப்பு ஊற வைத்தது ஒரு டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு சின்ன மூடி, முந்திரிப்பருப்பு, தாளிக்க, வறுக்க நெய் இரண்டு டேபிள் ஸ்பூன். ஏலக்காய்ப்பொடி அரை டீஸ்பூன். வேக வைக்க நீர்.

பச்சரிசியைக் களைந்து சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறின அரிசியில் இருந்து நீரைச் சுத்தமாக வடித்து வைக்கவும். வடிகட்டி இருந்தால் அதில் போட்டு நீரை வடிக்கவும். நீர் நன்றாக வடிய வேண்டும். ஒரு மணி நேரம் வைத்திருந்த பின்னர் அடுப்பில் ஒரு கடாயை ஏற்றிச் சூடு செய்யவும். அதில் இந்த அரிசியைக் கொஞ்சம்கொஞ்சமாகப் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும். மொத்த அரிசியையும் இப்படி வறுத்துக்கொண்டு ஆற வைக்கவும். ஆறிய அரிசியை மிக்சி ஜாரில் போட்டு ரவை போல் உடைக்கவும்.

இப்போது அடுப்பில் நான் ஸ்டிக் பாத்திரம் அல்லது வெண்கல உருளி அல்லது அடி கனமான பாத்திரம் ஒன்றை ஏற்றி நாலு கிண்ணம் நீரை ஊற்றவும். கொஞ்சம் கூட வைத்தாலும் நீர் கொதித்ததும் எடுத்துத் தனியாக வைத்துக்கொண்டால் பின்னால் தேவைப்படும்போது கொஞ்சம்கொஞ்சமாக ஊற்றிக்கொள்ளலாம். நீர் நன்கு கொதித்து வருகையில் ஊற வைத்த துவரம்பருப்பைப் போட்டு ஒரு கொதி வரும்போது தூள் வெல்லத்தையும் போடவும். வெல்ல வாசனை போகக் கொதிக்க வேண்டும். கொதித்ததும் அரைத்துப் பொடித்த மாவைப் போட்டுக்கொண்டே கிளறவேண்டும். மாவைக் கட்டியில்லாமல் கிளற வேண்டும். நன்கு உப்புமா பதத்துக்கு வரும்வரை கிளறவேண்டும். நீர் போதவில்லை எனில் எடுத்து வைத்திருக்கும் வெந்நீரை ஊற்றிக்கொள்ளலாம். நன்கு பொல பொலவென்று வந்ததும், பக்கத்தில் இன்னொரு பாத்திரம் அல்லது வாணலியில் நெய்யை ஊற்றி முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுக்கவும். முந்திரிப்பருப்பைக் களியில் போட்டுவிட்டு அந்த நெய்யிலேயே தேங்காய் துருவலையும் வறுக்கவும். களியில் போடவும். ஏலக்காய்ப் பொடியைத் தூவவும்.

இதோடு சைட் டிஷாகப் பண்ண வேண்டியது ஏழுதான் குழம்பு. சிலர் வீட்டில் கூட்டுப் போல் கெட்டியாகவும் இருக்கும். மதுரை, தஞ்சை மாவட்டங்களில் இதற்குத் துவரம்பருப்பையும் குழைய வேக வைத்துச் சேர்ப்பார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் சிலர் பருப்பே போடாமல் செய்வார்கள். இதற்குப் பெரும்பாலும் நாட்டுக்கறிகாய்களே சுவையாக இருக்கும். கிடைக்காத இடம் என்றால் கிடைக்கும் வேறு காய்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

தேவையான காய்கள்:
வெள்ளைப் பூஷணிக்காய் ஒரு கீற்று
பறங்கிக்காய் ஒரு கீற்று
வாழைக்காய் பெரிதாக இருந்தால் ஒன்று சின்னது என்றால் 2
கத்திரிக்காய் 5ல் இருந்து 8க்குள்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பெரிய கிழங்கு என்றால் ஒன்று
பச்சை மொச்சை உரித்தது ஒரு கிண்ணம்
அவரைக்காய் 100 கிராம்
சேனைக்கிழங்கு கால் கிலோ
சேப்பங்கிழங்கு(விரும்பினால் கால் கிலோ)
சிறுகிழங்கு கால் கிலோ
கொத்தவரைக்காய் 100 கிராம்
இதோடு பீன்ஸ், காரட், செளசெள இதெல்லாம் விரும்பினால் சேர்க்கலாம். எல்லாக் காய்களையும் இரண்டு அங்குல நீளம் ஒரெ மாதிரியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தனியாக வைக்கவும்.

கால் கிலோ துவரம்பருப்பை மஞ்சள் பொடி சேர்த்துக்க் குழைய வேகவைக்கவும். புளி நூறு கிராம் ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும். இவை எல்லாம் தயாராக இருக்கட்டும். இப்போது அரைக்க வேண்டியவை

அரைக்க:
மி.வத்தல் பத்து அல்லது பதினைந்து
கொத்துமல்லி விதை 100 கிராம்
கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு ஒரு டீ ஸ்பூன்
மிளகு ஒரு டீஸ்பூன்
வெந்தயம் ஒரு டீஸ்பூன்
அரிசி ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் ஒரு மூடி
ஒரு சிலர் எள்ளும், கடுகும் அரைக்கும்பொருட்களோடு சேர்ப்பார்கள். ஆனால் அதெல்லாம் அவரவர் விருப்பம். தாளகம் என்றால் பாதிமூடி அரைக்கையில் சேர்த்தாலும் தாளிக்கையில் பல்,பல்லாகக்கீறியும் போடுவதுண்டு. மேலே சொன்ன பொருட்களை ஒவ்வொன்றாகச் சமையல் எண்ணெயில் வறுக்கவும். வறுத்த பொருட்களை ஆறவிட்டு மிக்சியில் போட்டு நன்றாகப் பொடி செய்யவும்.
தாளிக்க: தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, மி.வத்தல்.கருகப்பிலை, கொத்துமல்லி.

காய்களைக்கழுவி கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். புளி கரைத்த நீரைக் கொதிக்க வைத்து வேக விட்ட காய்களை சேர்க்கவும். புளிக்கரைசலுக்குத் தேவையான உப்பையும் போடவும். நன்கு கொதிக்கையில் வெந்த பருப்பைச் சேர்த்துக்கொண்டு, ஒரு கொதி விட்டதும், அரைத்து வைத்த பொடியைப் போடவும். இன்னொரு பக்கம் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெயைக் காய வைத்துக்கொண்டு அதில் கடுகு, மி.வத்தல் 2 கருகப்பிலையைப் போட்டுத் தாளிக்கவும். பச்சைக்கொத்துமல்லியைத் தூவவும்.

6 comments:

  1. கீதாம்மா! இன்றைக்கு வெண் பொங்கலுக்கு எழு தான் குழம்பு செய்தேன்...என் பிராணநாதர் விரலை கடிக்காத குறையாக அனுபவித்து ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அழகை வேடிக்கை பார்த்துக் கொண்டே என்னுடைய நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்... :):) இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!

    ReplyDelete
  2. நன்றி சுவாதி, இங்கேயும் நேற்று வெண்பொங்கலுக்கு இந்தக் குழம்பு தான். :))))

    ReplyDelete
  3. அருமையான விளக்கம் நன்றி

    ReplyDelete
  4. ஒரு நாளைக்கு இந்த ஏழு தான் கூட்டைச் செய்துபார்க்கிறேன். ஆனா எனக்கு மட்டும் என்பதால், ஒவ்வொண்ணும் 5 தான்கள் வரதாப் போட்டுப் பண்ணணும். இல்லைனா ஏழு காய் குழம்பை, ஏழு நாள் வைத்திருந்து சாப்பிடும்படியாயிடும்.

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்துட்டுச் சொல்லுங்கள். :)

      Delete
  5. @ நெ.த. திருநெல்வேலிப் பக்கம் தாளகம் என்றொரு குழம்பு செய்வார்கள். இதே மாதிரித் தான் காய்கள் சேர்த்து அரைத்து விட்டு ஆனால் பருப்புச் சேர்க்காமல் பண்ணுவார்கள். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்!

    ReplyDelete