எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, May 31, 2009

வெங்காயம் பிடிக்குமா? பிடிக்காதா?

கொண்டைக்கடலை மூணு நாளா ஊறிட்டு இருக்கு. இந்த வெயில்லே ரொம்ப ஊற வைச்சாலும் வீணாயிடும். ஆகவே நல்லா அலசுங்க. அலசும்போது உங்க மாமியார், மாமனார், நாத்தானார், மச்சினர் ஆகியவங்களை அலசறாப்போல நினைச்சுக்கவும். நல்லாத் தண்ணீர் விட்டு அலசுவீங்க உங்களை அறியாமலேயே. அப்புறமா கொஞ்சம் கொண்டைக்கடலையை எடுத்துத் தனியா வைக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் ஊறிய கடலை இருக்கலாம். மிச்சம் கடலையைக் குக்கரில் வேகவைக்கவும். உ.கி. போடணும்னா அதையும் சேர்த்தே வேக வைக்கவும். இப்போ முதல்லே வெங்காயம் சேர்க்காமல் செய்யற விதம் பார்க்கலாம். சிலருக்கு வெங்காயமே பிடிக்காது. சிலர் சேர்க்கவே மாட்டாங்க. ஆகவே முதல்லே அதைப் பார்க்கலாம். எங்க வீட்டிலே எப்போவுமே இரு முறைகளும் உண்டு. வெங்காயத்துக்கு ஓட்டுப் போடும் உறுப்பினர்களும், வெங்காயத்தைக் கண்டாலே ஓடும் நபர்களும் இருக்காங்க. ஆகவே இரண்டுமே கட்டாயமாய்ச் செய்யப் படும்.

கால் கிலோ கொ.கடலை வேக வைச்சது, பெரிய உ.கிழங்கு ஒன்று வேக வைச்சு உதிர்த்துக் கொள்ளவும்.

தேவையான மசாலாப் பொருட்கள்: மசாலானதும் எல்லாரும் என்னவோ தவிர்க்க வேண்டியதுனு நினைக்காதீங்க. சும்மா மிளகாய்ப் பொடியும், தனியாப் பொடியும் போட்டால் கூட அதுவும் மசாலா தான்.

அரைக்க: பச்சை மிளகாய்: இரண்டு, கொத்துமல்லித் தழை ஒரு கைப்பிடி, இஞ்சி, ஒரு துண்டு, ஏலக்காய் இரண்டு, கிராம்பு இரண்டு அல்லது மூன்று, தக்காளி நல்ல சிவந்த தக்காளி இரண்டு.இத்தோடு ஊற வைத்து எடுத்து வச்சிருக்கும் கொ.கடலை ஒரு டேபிள் ஸ்பூனையும் சேர்க்கணும். தேங்காய், (விருப்பப் பட்டால்). மாதுளம் விதையும், விரும்பினால்.

புளி ஒரு நெல்லிக்காய் அளவு, வெல்லம் ஒரு நெல்லிக்காய் அளவு, உப்பு தேவையான அளவு, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள்(விருப்பப் பட்டால்), ஜீரகம் வறுத்துப் பொடி செய்த தூள் ஒரு டீ ஸ்பூன்.

இப்போ மேலே சொன்ன பொருட்களில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் தவிர மற்றவற்றை நன்றாய் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். ஜீரகம் மட்டும் தாளிக்கவும். பின் மஞ்சள் தூள், மி.தூள், மல்லித் தூள் சேர்த்து, அதோடு அரைத்த கலவையையும் சேர்த்து நன்றாய் எண்ணெய் பிரிந்து வரும் வரைக்கும் வதக்கவும். எண்ணெய் பிரிய ஆரம்பிச்சதும், கொ.கடலையைச் சேர்க்கவும். பின்னர் புளியைக் கரைத்து ஊற்றி, உ.கிழங்கையும் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து தளதள வெனக் கொதித்து வரும்போது வெல்லம் சேர்க்கவும். நன்கு கெட்டியானதும், இறக்கி ஜீரகத் தூளைச் சேர்த்துவிட்டுப் பின் பச்சைக் கொத்துமல்லித் தழைகளைப் பொடிப் பொடியாய் நறுக்கிச் சேர்க்கவும். வெங்காயமோ, பூண்டோ இல்லாத கொ.கடலை மசாலா தயாராகிவிட்டது. சாப்பிட்டுட்டுச் சொல்லுங்க. அப்புறமா வெங்காயம் சேர்த்துப் பண்ணிப் பார்ப்போம்.

7 comments:

  1. அட! நாந்தான் முதலா?

    வெங்காயம், பூண்டு சேர்த்தது வேண்டும்....இப்பமே!!!

    ReplyDelete
  2. அடுத்து அதுதான். இப்பமே கேட்டால் எங்கே போறது???

    ReplyDelete
  3. நானானி முதல் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. //அலசும்போது உங்க மாமியார், மாமனார், நாத்தானார், மச்சினர் ஆகியவங்களை அலசறாப்போல நினைச்சுக்கவும். நல்லாத் தண்ணீர் விட்டு அலசுவீங்க உங்களை அறியாமலேயே//



    என்னங்க இது கொலை வெறி தாக்குதலா இருக்கு:)



    நல்லா இருக்கு குறிப்பு..எனக்கு சில சமயம் வெங்காயம் பிடிக்கும் சில சமயம் பிடிக்காது..அதற்க்கு தகுந்தாற்போல் செய்து கொள்வேன்:)வாழ்த்துக்கள் கீதா..



    நேரம் கிடைக்கும் பொழுது என் தளத்திற்கும் வாங்க.



    அன்புடன்,

    அம்மு.

    ReplyDelete
  5. வாங்க அம்மு, நல்லா அலசி ஆராய்ச்சி எல்லாம் பண்ணி இருக்கீங்க போல! :D கொஞ்ச நாளா வேலை அதிகம், உடல்நிலை காரணமா இந்தப் பக்கமே வரலை, இன்னிக்குத் தான் பார்க்கிறேன் எல்லாத்தையும், நன்றிம்மா/ப்பா.

    ReplyDelete
  6. அம்மு, உங்க தளத்துக்குக் கட்டாயமாய் வரேன்.

    ReplyDelete