எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, April 13, 2009

புத்தாண்டு வாழ்த்துகள், சமைக்கும் அனைவருக்கும்!

வேப்பம்பூப் பச்சடி செய்யலாமா இப்போ? இந்தப் புத்தாண்டுத் தொடக்கத்திலே தான் வேப்பம்பூப் பச்சடி செய்வாங்க. மற்ற நாட்களிலே வேப்பம்பூ ரசம், அல்லது பொடி செய்து போட்டுப் பிசைந்து சாப்பிடறதுனு இருக்கும். சில வீடுகளிலே ஊரிலே எங்கேயாவது அம்மை போட்டிருந்தால் வேப்பம்பூ பொரிக்க மாட்டாங்க. கிராமங்களிலேயும், சிறிய ஊர்களிலேயும் மட்டுமே இது பார்க்க முடியும். மற்ற இடங்களில் கொஞ்சம் கஷ்டம் தான். அந்த அம்மன் காப்பாத்துவா.

வேப்பம்பூவுக்குத் தனி மணம் உண்டு தெரியுமா? காலையிலே எழுந்ததும், சுமார் 4 மணியில் இருந்து 4-30 அல்லது ஐந்து மணிக்குள்ளே வேப்ப மரத்தடியிலே நின்னு மூச்சை உள்ளே இழுத்து ஆழ்ந்து சுவாசிங்க வேப்பம்பூவின் மணம் நாடி, நரம்பிலெல்லாம் பரவும். இப்போ ஜன்னலுக்கு வெளியே கீழே வேப்பம்பூ கொட்டிக் கிடக்கு. முன்னே எல்லாம் கொஞ்சம் சுத்தமாய் இருக்கும், நிறைய எடுத்து வைச்சுக்குவோம். இப்போ அசோகா விதைகளும் விழுந்து சுத்தமே செய்ய முடியலை. :(((( என்ன செய்யறது. ஓரளவு சுத்தமான வேப்பம்பூவை எடுத்துக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு வேப்பம்பூ வேணும்.

இந்தப் பச்சடியை இருவிதமாய்ச் செய்யலாம். ஒன்று புளி சேர்த்து. தஞ்சை ஜில்லாவில் புளி சேர்த்தே அதிகம் செய்வாங்க. மற்றது மாங்காய் சேர்த்து. மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் மாங்காய் சேர்த்தே செய்வாங்க. சிலர் இரண்டும் கலந்துக்கிறாங்க. அது எப்படி இருக்கும்னு தெரியலை. இப்போ ஒண்ணொண்ணாய்ப் பார்ப்போமா??

மாங்காயைத் தோல் சீவிப் பொடிப் பொடியாய் நறுக்கி ஒரு கிண்ணம் நீர் சேர்த்து வேக வைக்கவும்.வேக ஆரம்பிச்சதும் கொஞ்சம் போல் உப்புச் சேர்க்கவும். நன்று வெந்ததும், மாங்காய்க் குழம்பில் கொஞ்சம் போல மிளகாய்த் தூள்(இது தேவையானால் மட்டும்) சேர்க்கவும். பின்னர் வெல்லம் பொடித்து அதில் சேர்க்கவும். வெல்லம், மிளகாய்த் தூள் எல்லாம் சேர்ந்து நன்றாய்க் கொதித்து சேர்ந்து வரும்போது ஏலக்காய் சேர்த்துக் கீழே இறக்கவும். வாணலியில் நெய்யைக் காய வைத்துஅதில் சுத்தம் செய்த வேப்பம்பூவைப் போட்டுப் பொரிக்கவும். பச்சடியில் சேர்க்கவும். மாங்காய்ப் பச்சடி வேப்பம்பூ சேர்த்துத் தயார்.

அடுத்துப் புளி சேர்த்து: புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்துக் கரைக்கவும். அதில் உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வாசனை போகக் கொதிக்கும் போது வெல்லம் சேர்க்கவும். நன்று கெட்டியானதும் கீழே இறக்கி ஏலக்காய் சேர்த்து, முன் சொன்ன மாதிரியே வேப்பம்பூவை நெய்யில் பொரித்துச் சேர்க்கவும். வேப்பம்பூப் பச்சடி தயார்.

படம் உதவி கூகிளார்: கபீரன்பன் வந்து வேப்பம்பூப் பச்சடியை பனோரமாவிலே ஏன் போடலைம்பார். அதனால் முன்னாலேயே சொல்லிடறேன்.

2 comments:

  1. இப்படி ஒரு ப்ளாக் இருக்கிரதே தெரியாதே?
    சரி சரி எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. யாரான ரங்கமணிகளை தேடுங்க!

    ReplyDelete
  2. அட, இங்கே எங்கே வந்தீங்க??? இதெல்லாம் விளம்பரமா பண்ண முடியும்?? அதுவும் ராத்திரி 2-09 மணிக்கு முழிச்சிண்டு இருந்து?? சமையல் தெரிஞ்சுக்க இவ்வளவு ஆசையா?

    ReplyDelete