எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, December 29, 2008

அடுத்து என்ன கொழுக்கட்டை??

இப்போ நாம் அரிசி மாவினால் தயாரிக்கப் படும் கொழுக்கட்டைகள் பத்தித் தெரிஞ்சுக்கலாமா?? முதல்லே அரிசி மாவைத் தயார் செய்துக்கணும். இதுக்கு ஐ.ஆர்.20 அரிசி தான் நல்லா வருது என்று என்னோட கருத்து. எதுவாய் இருந்தாலும் அரிசி, கொஞ்சம் பழைய அரிசியாய் இருந்தால் நல்லது. அப்போத் தான் கொழுக்கட்டை மிருதுவாய் இருக்கும். புது அரிசி என்றால் கொழுக்கட்டையை ஆறிப் போனதும் சாப்பிட முடியாது. 1/4 கிலோ அரிசியை எடுத்துக் கொண்டு இது சுமார் ஒரு ஆழாக்குக்குக் கொஞ்சம் கூட இருக்கும். ஆகவே ஆழாக்கு அல்லது நீங்க எப்போவும் அரிசி அளக்கும் பாத்திரத்தால் ஒரு பங்கு அரிசி எடுத்துக் கொள்ளவும். அரிசியைக் களைந்து ஒரு மணி நேரமாவது ஊற வைக்கவேண்டும். அரிசியை பவுடர் போல் மாவாக்கிக் கொள்வது என்றால், தண்ணீரை வடித்துவிட்டு அரிசியைச் சிறிது நேரம் வைக்கவேண்டும். அரிசியில் வடித்தது போக மிச்சம் தண்ணீர் இல்லாமல் இருக்கவேண்டும். அதை உங்கள் செளகரியம்போல் மிக்ஸியிலோ அல்லது மாவை உரலில் போட்டு இடித்தோ தயார் செய்து கொள்ளவும். எனக்கு அரிசியைத் தண்ணீர் விட்டு அரைத்து தோசை மாவு பதத்துக்கு வைத்துத் தயார் செய்வதே சரியாக இருக்கும். இது பழக்கம் உள்ளவர்கள் அரிசி ஊறினதுமே கொஞ்சம் ஜலம் விட்டு நல்ல நைசாக அரைத்துத் தோசை மாவு பதத்துக்கு வைத்துக் கொள்ளவும்.

மாவு எப்படித் தயார் செய்து கொண்டாலும் சரி, உங்கள் செளகரியம்போல் செய்து கொள்ளலாம். மாவு பவுடராக இருந்தால் ஒரு கிண்ணம் மாவு இருந்தால் ஒரு கிண்ணம் அளவுத் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அடி கனமான வெங்கலப் பாத்திரமோ அல்லது கடாயோ நல்லது. ஒரு சின்ன ஸ்பூன் நல்லெண்ணெயும், ஒரு சிட்டிகை உப்பும் கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும். ஒரு சின்னக் கிண்ணம் தண்ணீரைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது மாவைக் கொஞ்சம், கொஞ்சமாய்த் தூவிக் கொண்டே வந்து, கிளறவும். தண்ணீர் போதவில்லை என்றால் எடுத்து வைத்திருக்கும் வெந்நீரை விட்டுக் கொள்ளவும். மாவு பந்து மாதிரித் திரண்டு உருட்டித் தனியாக வரும். அப்படி வந்ததும், மாவைத் தனியாக ஒரு மெல்லிய துணியைப் போட்டு மூடி வைக்கவும். தண்ணீர் விட்டு அரைத்த மாவானால், வெங்கலப் பாத்திரத்தில் ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு, நல்லெண்ணெய், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கொதிக்கும்போதே கரைத்த மாவை விட்டுக் கிளறவும், மாவு நன்றாய்த் திரண்டு வரும்போது எடுத்து ஆற வைக்கவும். பூரணம் ஏற்கெனவே நாம் தயார் செய்த தேங்காய்ப் பூரணம் தவிர, எள்ளுப் பூரணம், உளுந்துப் பூரணம், கடலைப்பருப்புப் பூரணம் இவைதான் விநாயக சதுர்த்தி வழிபாடுகளுக்குச் செய்ய முடியும்.

எள்ளுப் பூரணம்:எள்ளைக் களைந்து வறுத்து, வெல்லத்தோடு சேர்த்துக் கொஞ்சம் தேங்காய்த் துருவலும், விருப்பம் இருந்தால் சேர்க்கலாம். ஏலக்காய் சேர்க்கவும்.

கடலைப்பருப்புப் பூரணம்: கடலைப்பருப்பை வறுத்து ஊற வைத்து வேக வைத்துவிட்டு, அரைக்கவும். வெல்லம் சேர்த்தும் அரைக்கலாம். அல்லது அரைத்துவிட்டுப் பின்னர் வெல்லம் போட்டு அடுப்பில் வைத்துக் கிளறலாம். தேவையானால் கொஞ்சம் தேங்காய் சேர்க்கலாம். தேங்காய்ப் பூரணம் தனியாய் இருப்பதால் விருப்பம் போல் சேர்க்கலாம். இப்போது மாவை நன்றாய்ப் பிசைந்து கொண்டு சிறு, சிறு உருண்டைகளாய் உருட்டிக்கொண்டு, நெய்யும், நல்லெண்ணெயும் ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொண்டு அதைத் தொட்டுக் கொண்டு சிறிய சிறிய கிண்ணங்களாய் மாவைச் செய்து கொண்டு பூரணத்தை வைத்து மூடி வைக்கவும். பின்னர் இட்லித் தட்டு அல்லது, குக்கரில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, வேறொரு தட்டில் இலை அல்லது துணி போட்டு கொழுக்கட்டைகளை வைத்து வேக வைத்து எடுக்கவும்.

1 comment:

  1. அக்கா நான் அரிசி மாவிலும் (பதப்படுத்திய மாவு) செய்வதுண்டு இப்படி அரிசியை அரைத்து தோசை மாவு பக்குவத்தில் எடுத்து வணக்கி செய்வதும் உண்டு அக்கா...நல்லா விரிவா சொல்லிருக்கீங்க..

    ஆமாம் பழைய அரிசி அதுவும் ஐ ஆர் 20 நல்லாருக்கும். எங்க பிறந்த வீட்டுல இந்த அரிசிதான் வாங்குவாங்க..முன்னாடி..

    கீதா

    ReplyDelete