எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, August 21, 2017

உணவே மருந்து! மாங்காய் 8

மாங்காய் சாதம்:-

இது எங்க வீட்டில் அவ்வளவா போணி ஆவதில்லை. நானும் யார் வீட்டுக்காவது போகும்போது அவங்க செய்தால் தான் சாப்பிட்டிருக்கேன். பெரும்பாலும் இதற்கு வெங்காயம், பூண்டு சேர்ப்பதில்லை.  எனக்கு என்னமோ மாங்காய்த் தொக்கை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடும் உணர்வு வருவதைத் தவிர்க்க முடியாது. எனினும் எளிமையான ஒரு குறிப்பு மட்டும் தரேன்.

நல்ல கல்லாமை (ஒட்டு மாங்காய்) ரகம் பெரிதாக ஒன்று. தோல் சீவித் துருவிக் கொள்ளவும்.  தனியே வைக்கவும்.

நல்ல அரிசியில் சாதம் சமைத்து உதிர் உதிராக வைத்துக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் சாதம்.

தாளிக்க

நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்

கடுகு,

உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை போன்றவை. வேர்க்கடலை மட்டும் ஒரு டேபிள் ஸ்பூன் போடவும். மற்றவை ஒரு டீஸ்பூன் போதும்.

பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி விழுது இரண்டு டீஸ்பூன்

மி.வத்தல்

பெருங்காயம், கருகப்பிலை

மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், மிளகாய்ப் பொடி ஒரு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லியை நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

கடாய் அல்லது அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை, மி.வத்தல், பெருங்காயம் கருகப்பிலை என வரிசையாகத் தாளிக்கவும்.

பின்னர் துருவிய மாங்காயைப் போட்டு வதக்கிப் பச்சை மிளகாய் விழுது, மி.பொடி மஞ்சள் பொடி சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும். உப்புச் சேர்க்கவும். இப்போது சமைத்த சாதத்தை அதில் போட்டு நன்கு கலக்கவும். தேவையானால் பச்சைக் கொத்துமல்லி தூவிப் பரிமாறவும். இதற்குத் தக்காளிப் பச்சடி நல்ல துணையாக இருக்கும். தக்காளியை நன்கு வதக்கிக் கொண்டு தயிரில் கலந்து உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலக்கி, கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொண்டு மாங்காய் சாதத்தோடு பரிமாறவும்.

மாங்காய் மோர்க்குழம்பு:-

இதற்கு அரைப் பழங்களாக இருக்கும் காய்கள் நன்றாக இருக்கும். தோலைச் சீவிக் கொண்டு துண்டங்களாக்கி மாங்காயை வேக விடவும். மாங்காய்க்குத் தேவையான உப்புச் சேர்க்கவும்.

வற்றல் மிளகாய், பச்சைமிளகாய் தலா இரண்டு

ஜீரகம் ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்

புளிப்பு அதிகம் இல்லாத மோர் ஒரு கிண்ணம் (மாங்காயில் புளிப்பு இருப்பதால் மோரில் புளிப்புத் தேவையில்லை)

மஞ்சள் பொடி

உப்பு மோருக்குத் தேவையானது, பெருங்காயம் சிறிதளவு

தாளிக்கத் தேங்காய் எண்ணெய் இரண்டு டீஸ்பூன், கடுகு, வெந்தயம், ஒரு மி.வத்தல், கருகப்பிலை

புளிப்பில்லாத மோரில் மிளகாய்கள், ஜீரகம், தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தேவையானால் அரிசியை ஊறவைத்துச் சேர்த்து அரைக்கலாம். அல்லது அரிசி மாவு இரண்டு டீஸ்பூனை அரைக்கையில் சேர்க்கலாம். இந்தக் கலவையை மோரில் மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்துக் கலந்து கொண்டு வெந்து கொண்டிருக்கும் மாங்காய்த் துண்டங்களோடு சேர்க்கவும். கரண்டியால் நன்கு கிளறவும். குழம்பு ஒரே ஒரு கொதி வந்தால் போதும். மேலே நுரைத்து வரும்போது கீழே இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு, வெந்தயம், மிவத்தல், கருகப்பிலை தாளிக்கவும்.

மாம்பழ சாம்பார்:- அதே போன்ற தித்திப்பும் புளிப்புமான மாங்காய்கள் தோல் சீவித் துண்டங்களாக்கிக் கொள்ளவும். உப்புச் சேர்த்து வேக விடவும்.

புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு கரைத்து வைத்துக் கொள்ளவும்

உப்பு தேவையான அளவு

துவரம்பருப்பு குழைய வெந்தது அரைக்கிண்ணம்

சாம்பார்ப் பொடி இரண்டு டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு அல்லது அரை டீஸ்பூன் பவுடர்

தாளிக்க எண்ணெய் இரண்டு டீஸ்பூன், கடுகு, வெந்தயம் தலா ஒரு டீஸ்பூன் ஒரு வற்றல் மிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி

வெந்து கொண்டிருக்கும் மாங்காய்த் துண்டங்களில் புளி ஜலத்தைச் சேர்த்து அதற்கேற்றவாறு உப்புச் சேர்த்துக் கொண்டு, சாம்பார்ப் பொடி, பெருங்காயப் பொடி தேவையானால் மஞ்சள் பொடி சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் வெந்த துவரம்பருப்பைச் சேர்க்கவும். நன்கு கொதித்துச் சேர்ந்து வந்ததும் கீழே இறக்கி எண்ணெயில் கடுகு, வெந்தயம், மிவத்தல், கருகப்பிலை தாளித்துக் கொட்டிப் பச்சைக்கொத்துமல்லி பொடியாக நறுக்கித் தூவவும். 

Thursday, August 10, 2017

உணவே மருந்து! மாங்காய்! 7

மாம்பழத்தில் கஸ்டர்ட் சேர்த்தும் செய்யலாம்.  இதற்கு மாம்பழம் நல்ல தித்திப்பானதாக இருக்க வேண்டும்.  ஒரு நடுத்தர அளவுப் பழத்தில் முதலில் செய்து பர்த்து விட்டுப் பின்னர் தேவை எனில் நிறையச் செய்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-
நல்ல சாறுள்ள கதுப்பு மாம்பழம்  பெரிதானால் ஒன்று நடுத்தர அளவெனில் 2

எடுத்துத் தோல் சீவிக் கொண்டு கதுப்பை நன்கு மசிக்கவும். அல்லது மிக்சி ஜாரில் போட்டு அடித்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.

பால் ஒரு லிட்டர் சுண்டக் காய்ச்சியது அல்லது மில்க் மெயிட் இரண்டு டேபிள்ஸ்பூன் கரைத்துக் கொள்ளவும்.

இன்னொரு அரை லிட்டர் பால் காய்ச்சாமல் தனியாக எடுத்துக் கொள்ளவும்.

கஸ்டர்ட் பவுடர் வித விதமான ருசிகளில் கிடைக்கிறது. மாம்பழ வாசனையில் கிடைக்கிறதாகத் தெரியவில்லை. பொதுவாக நான் இதற்கு வனிலா கஸ்டர்டே எடுத்துப்பேன். வனிலா கஸ்டர்ட் இரண்டு டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி தேவையானால்!

சர்க்கரை இரண்டு டேபிள் ஸ்பூன்

வெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது க்ரீம் ஒரு டேபிள் ஸ்பூன். நான் வெண்ணெய் தான் சேர்ப்பேன்.

மேலே அலங்கரிக்க பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். டுட்டி ஃப்ரூட்டி பிடிக்குமெனில் அதையும் போடலாம்.

அரை லிட்டர் காய்ச்சாத பாலில் இரண்டு டேபிள் ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரைப் போட்டு நன்கு கலக்கவும். சர்க்கரையும் சேர்த்துக் கலக்கவும். ஒரு அடி கனமான அகலமான பாத்திரத்தில் (நான் ஸ்டிக் இருந்தால் நல்லது) அதைக் கொட்டி ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெயையும் சேர்த்துக் கிளறவும். கிளறக் கிளறக் கெட்டியாக ஆகும். நன்கு கெட்டியானதும் நிறுத்திவிட்டுச் சுண்டக் காய்ச்சி ஆற வைத்திருக்கும் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைத்து விடவும். எல்லாப் பாலையும் விட்டுக் கிளறியதும் தேவையானால் ஏலப்பொடி சேர்த்து அல்லது மாம்பழ எஸ்ஸென்ஸ் சேர்த்து ஆற விடவும்.

ஆறியதும் மிக்சியில் போட்டு நன்கு அடிக்கவும். மிகவும் மிருதுவாக வந்திருக்கும். இப்போது ஏற்கெனவே அடித்து வைத்திருக்கும் மாம்பழக் கதுப்புக் கலவையைப் போட்டுத் திரும்ப ஒரு தரம் அடிக்கவும். கொஞ்சம் மாம்பழத்தைத் துண்டுகள் போட்டு தனியாக வைத்திருக்கவும்.

Image result for கஸ்டர்ட்

படம் : இணையத்தில் கூகிளார் உதவியுடன்!

கலவையை இப்போது குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டுப் பின்னர் பரிமாறுகையில் கிண்ணங்களில் கஸ்டர்ட் கலவையை  விட்டதும் மேலே ஓரிரண்டு மாம்பழத் துண்டங்களையும், பாதாம், முந்திரி, பிஸ்தா நறுக்கி வைத்திருப்பதையும் போட்டு அலங்கரித்துக் கொடுக்கவும்.  அல்லது டுட்டி,ஃப்ரூட்டி மட்டும் போட்டுக் கொடுக்கலாம்.

அடுத்து மாம்பழத்தில் ஶ்ரீகண்ட்

இது மஹாராஷ்டிரம், குஜராத் பக்கம் ரொம்பவே பிரபலம். வெறும் தயிரிலேயே ஶ்ரீகண்ட் செய்வார்கள். மாம்பழப் பருவங்களில் மாம்பழ ஶ்ரீகண்ட் செய்வார்கள். இதற்குத் தேவை நல்ல கொழுப்புச் சத்துள்ள பால் சுமார் ஒரு லிட்டர்

கொழுப்புச் சத்துள்ள பால் ஒரு லிட்டர். நன்கு காய்ச்சி  ஆற வைத்து உரை ஊற்றவும். மேலே ஏடு படிய வேண்டும். பால் அவ்வளவு நல்ல பாலாக இருந்தால் நல்லது. எதற்கும் க்ரீம் இரண்டு டேபிள் ஸ்பூன் வைத்துக் கொள்ளவும்.

நல்லப் பழுத்த மாம்பழங்கள் 2 தோல் சீவி நறுக்கிக் கொண்டு துண்டங்களில் கொஞ்சம் எடுத்து வைத்து விட்டு மிச்சத்தை நன்கு கூழாக்கிக் கொள்ளவும்.

தயிரை எடுத்து ஒரு மஸ்லின் துணியில் கட்டி ஒரு மணி நேரம் வைக்கவும். தயிரில் நீர் இருந்தால் அனைத்தும் துணி வழியே வெளியேறிவிடும். பின்னர் துணியைப் பிரித்துத் தயிரைச் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். மத்தினால் கூடக் கடையலாம். வாசனைக்குக் குங்குமப் பூக் கிடைத்தால் சேர்க்கலாம். அது கிடைப்பது அரிது என்பதால் ஏலக்காய் சேர்க்கலாம்.

நன்கு கடைந்த தயிருடன் தேவையானால் க்ரீம் சேர்க்கவும். மாம்பழக் கலவையையும் சேர்க்கவும். நன்கு கரண்டியாலேயே கலக்கவும். பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். பரிமாறும்போது நறுக்கியதில் எடுத்து வைத்த மாம்பழத் துண்டங்களோடு தேவையானால் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவையும் போட்டு அலங்கரித்துப் பரிமாறலாம்.


மாம்பழ குல்ஃபி! :

நல்ல பாலாக ஒரு லிட்டர் பால்! பால் கொழுப்புச் சத்து இல்லை எனில் இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர் தேவை. ஒரு மாம்பழம் இருந்தால் போதும். சர்க்கரை ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய் அல்லது எஸ்ஸென்ஸ் அரை டீஸ்பூன் அளவுக்கு.  கொழுப்புச் சத்துள்ள பால் எனில் கஸ்டர்ட் சேர்க்க வேண்டாம்.

பாலைக் காய்ச்சி அரைலிட்டராக்கிக் கொள்ளவும்.  தேவையானால் கஸ்டர்ட் பவுடர் தனியாக ஒரு கிண்ணம் பாலில் சேர்த்துக் கலந்து அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்துக் கிளறிக் கெட்டியானதும், அரை லிட்டராக ஆன பாலில் கலக்கவும். மாம்பழத்தையும் அடித்துச் சேர்க்கவும். சர்க்கரை தேவையானால் சேர்க்கவும். ஆற வைத்து ஏலப்பொடி அல்லது மாம்பழ எஸ்ஸென்ஸ் சேர்க்கவும். இதற்கு மேலே அலங்கரிக்க எதுவும் தேவை இல்லை.  சற்று ஆற விட்ட பின்னர் இதை அப்படியே குல்ஃபி மோடில் ஊற்றிக் குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரீசரில் உறைய வைக்கவும். தேவையான போது எடுத்து வைத்துத் தின்னலாம்.

Kulfi mode.jpg      Kulfi.jpg


மாங்காய் இன்னும் வரும்! :)

Saturday, August 5, 2017

உணவே மருந்து! மாங்காய் 6!

மாங்காய்த் தொக்குப் போலவே தான் மாங்காய் ஜாமும்! ஆனால் இதில் கொஞ்சம் சிட்ரிக் ஆசிட் சிலர் சேர்க்கின்றனர். உணவுப் பொருளில் சேர்க்கும் நிறமும் சேர்க்கின்றனர். எஸ்ஸென்ஸ் சேர்ப்பவர்களும் உண்டு. என்றாலும் மிகவும் எளிமையாக மாங்காய் ஜாம் செய்வதெனில் நல்ல கிளி மூக்கு மாங்காய் (கல்லாமை அல்லது ஒட்டு என்னும் ரகம்) வாங்கிக் கொள்ள வேண்டும். பழமாகவும் இல்லாமல் காயாகவும் இல்லாமல் அரைக்காயாக இருந்தால் நல்லது.

இரண்டு மாங்காய் தேவை. அல்லது செய்யும் அளவுக்கேற்ப அவரவர் விருப்பம் போல் எடுத்துக்கலாம். நான் இரண்டு மாங்காய்க்கான அளவே சொல்லப் போறேன்.

ஒரு கிண்ணம் சர்க்கரை

நெய் ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு ஒரு டீஸ்பூன்

மாங்காயைத் துருவிக் கொண்டு ஒரு கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரம் ஒன்றில் நெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றிக் கொண்டு துருவிய மாங்காயைப் போட்டுச் சற்று நேரம் வதக்கவும். உப்பைச் சேர்க்கவும். ஐந்து நிமிடம் வதக்கிய பின்னர் சர்க்கரையைச் சேர்த்து மீண்டும் வதக்கவும். சர்க்கரை கரைந்து நீர் விட்டுக் கொள்ளும். அது சேர்ந்து வரும் வரை வதக்க வேண்டும். விருப்பம் இருந்தால் ஏலத்தூள் சேர்க்கலாம். இது ஒரு எளிமையான முறை. ப்ரெட், சப்பாத்தி, பூரி போன்றவற்றோடு சேர்த்து உண்ணலாம்.

அடுத்து இன்னொரு முறை

அதே போல் மாங்காய் வாங்கித் துருவிக் கொள்ளவும்.

உப்பு ஒரு டீஸ்பூன், கால் டீஸ்பூன் மிளகாய்த் தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், அல்லது லவங்கம், ஏலக்காய், லவங்கப்பட்டை மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்த பொடி ஒரு டீஸ்பூன், சர்க்கரை ஒரு கிண்ணம், மாங்காய்/மாம்பழ நிறம் கொடுக்க உணவுப் பொருளில் சேர்க்கும் வண்ணம் திரவமாக இருந்தால் ஒரு சொட்டு, பொடியாக இருந்தால் ஒரு சிட்டிகை. நெய் ஒரு டேபிள் ஸ்பூன்

மாங்காயை முன் சொன்னது போல் நெய்யில் வதக்கிக் கொண்டு உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கொஞ்ச நேரம் வதக்க வேண்டும். பின்னர் சர்க்கரையும் சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் பொடித்த மசாலாப்பொடியைச் சேர்க்கவும். மாங்காய்/மாம்பழ வண்ணம் கொடுக்கும் உணவுச் சேர்க்கையையும் சேர்க்கவும். ஆற வைத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

மாம்பழ ஜூஸ் ஒரு மாம்பழத்திலிருந்து மூன்று பேருக்கு ஜூஸ் தயாரிக்கலாம்.

மாம்பழம் நல்ல சாறுள்ள பழுத்த பழம் ஒன்று

சர்க்கரை (தேவையானால்) நான் பொதுவாகப் பழச்சாறுகளில் சர்க்கரை சேர்ப்பதில்லை.

ஏலப்பொடி அல்லது எஸ்ஸென்ஸ் ஏலப்பொடியானால் ஒரு சிட்டிகை, எஸ்ஸென்ஸ் எனில் கால் டீஸ்பூன்

பால் அரை லிட்டர்

முதலில் பாலைக் கொழுப்புச் சத்துள்ள பாலாக வாங்கி நன்றாகக் காய்ச்சி ஆற விடவும். பாலை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும். அதே ஜாரில் மாம்பழத்தைத் தோலைச் சீவி நறுக்கித் துண்டங்களாகப் போட்டு நன்கு அடிக்கவும். மாம்பழத்துண்டங்கள் தெரியாமல் விழுதாக வரும்வரை அடிக்கவும். பின்னர் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். சர்க்கரை விருப்பமானால் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். ஏலப்பொடி அல்லது எஸ்ஸென்ஸ் சேர்த்து ஒரே தரம் மிக்சியில் சுற்றிவிட்டுப் பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பரிமாறவும். ஐஸ் சேர்த்தால் மாம்பழச் சாறு நீர்த்து விடும். ஆகையால் எப்போது பரிமாறணுமோ அதற்கு 2,3 மணி நேரம் முன்னரே தயார் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். இந்த அளவுக்கு மூன்று பேர் தாராளமாக ஒரு கிளாஸ் மாம்பழச் சாறு சாப்பிடலாம்.

மாங்கோ லஸ்ஸி

இதற்கும் நன்கு பழுத்த மாம்பழங்கள் வேண்டும். புளிக்காத கெட்டித் தயிர் இரண்டு மாம்பழம் எனில் அரை லிட்டர் தயிர் தேவை. சர்க்கரை ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு  அரை டீஸ்பூன். மாம்பழ எஸ்ஸென்ஸ்  கால் டீஸ்பூன்

மாம்பழங்களைத் தோல் நீக்கிக் கொண்டு துண்டங்களாக்கி மிக்சி ஜாரில் போட்டு நன்கு அடிக்கவும். தனியாக எடுத்து வைக்கவும். புளிக்காத கெட்டித் தயிரை அதன் மேல் இருக்கும் ஆடையை நீக்காமல் அப்படியே மிக்சி ஜாரில் போட்டு சர்க்கரை, உப்புச் சேர்த்து அடிக்கவும். இதோடு மாம்பழக் கலவையைப் போட்டுக் கலந்து கொண்டு மாம்பழ எஸ்ஸென்ஸையும் விட்டு ஒரு தரம் மிக்சிஜாரில் சுற்றவும் பின் பரிமாறவும். தேவையானால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டுப் பின்னர் பரிமாறலாம்.

மாங்காய்ப் பச்சடி

இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று என்பதோடு மாங்காய்ப் பருவத்தில் இது செய்யாத வீடே இருக்காது! (எங்க வீடு தவிர்த்து) ரங்க்ஸ் அவ்வளவா ரசிப்பதில்லை. ஆனால் மாமனார் வீட்டில் அனைவரும் மாங்காய்ப் பச்சடியைப் பெரிய கல்சட்டியில் செய்தாலும் போதாது என்பார்கள்.

புளிப்பான மாங்காயாக இருந்தாலும் பச்சடி செய்யலாம்.

மாங்காய் ஒன்று

உப்பு அரை டீஸ்பூன்

அரிசி மாவு ஒரு டீஸ்பூன்

வெல்லம் அரைக்கிண்ணம்

ஏலக்காய் தேவையானால்

மாங்காயைத் தோல் சீவிக் கொண்டு துண்டங்களாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொதிக்கும் நீரில் வேக வைக்கவும். உப்புச் சேர்க்கவும். மாங்காய்த் துண்டங்கள் நன்கு வெந்ததும் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கரைந்து வெல்ல வாசனை போகும் வரை கொதித்ததும் ஒரு டீஸ்பூன் அரிசிமாவைக் கரைத்து ஊற்றி ஒரு கொதி வருகையிலேயே அடுப்பை அணைக்கவும். ஏலக்காய்த் தூள் விரும்பினால் சேர்க்கலாம்.