நமக்குத் தான் மண்டையிலே ஏதானும் ஓடிட்டே இருக்குமா! இன்னிக்கு என்ன சமைக்கிறதுனு ஒரே தலையாய பிரச்னை! நேத்திக்கு தோசைக்காகத் தக்காளித் தொக்கு அரைச்சிருந்தேன். அதிலேயே சாதம் கலக்கலாமானு ரங்க்ஸ் கேட்க சரி கலக்கலாம்னு சொல்லி இருந்தேன். அது முடிவாச்சு! அப்புறம் ரசம். அதை விட முடியாது! ரசம் இல்லைனா சாப்பிட்ட மாதிரியே இருக்காது! என்றாலும் மோர் கொஞ்சம் நிறைய மிஞ்சி இருந்தது. கலந்த சாதத்துக்குப் பச்சடிக்குப் பதிலா மோர்க்குழம்பு வைக்கலாமானு யோசனை. அப்போத் தான் திடீர்னு நினைவில் வந்தது ராஜஸ்தான், குஜராத்தில் வைக்கும் ghகட்டே கி khகடி செய்யலாமானு நினைச்சேன். இது கிட்டத்தட்ட நம்ம ஊர்ப் பருப்புருண்டைக் குழம்பு போலத் தான்! ஆனால் பருப்பு ஊற வைச்செல்லாம் அரைக்க மாட்டாங்க. கடலை மாவிலே செய்வாங்க. செய்முறையைப் பார்ப்போமா?
கடலை மாவு ஒரு கிண்ணம், உப்பு தேவைக்கு! மிளகாய்ப் பொடி, பெருங்காயம், மஞ்சள் பொடி, ஓமம் ஒரு டீஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், தயிர் இரண்டு டேபிள் ஸ்பூன். கடலைமாவோடு உப்பு, பெருங்காயத் தூள், ஓமம், மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் தயிர் சேர்த்துச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து வைக்கவும். அரைமணி நேரம் இருக்கட்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் ஜலம் வைத்துக் கொதிக்க விடவும். இந்தக் கடலைமாவு பிசைந்ததை உருளை வடிவில் உருட்டி வைக்கவும். உருட்டி வைத்ததை வெந்நீரில் போடவும். வெந்ததும் மேலே மிதந்து வரும். ஹிஹிஹி, பண்ணும்போது படம் எடுக்க மறந்து போச்சுங்க! திட்டாதீங்க! இன்னொரு தரம் பண்ணினால் படம் எடுத்துடறேன். மிதந்து வருபனவற்றைத் தனியாக எடுத்து வைக்கவும். அடுத்து இப்போக் கடி.
கடியில் போட்ட ghகட்டாக்கள்
மோரை நன்றாகக் கடைந்து கொள்ளவும். கடைந்த மோரில் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, வறுத்த சீரகப் பொடி, பெருங்காயப் பொடி, (தேவையானால் கரம் மசாலாப்பொடி) உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த மோர்க் கரைசலை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். கொதிக்கும் நேரம் வெந்து எடுத்திருக்கும் கட்டாக்களைப் போடவும். கட்டாக்கள் மிதந்து வரும்போது மோர்க்குழம்பைக் கீழே இறக்கவும். இன்னொரு வாணலி அல்லது இரும்புக் கரண்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றிக் கடுகு, ஜீரகம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, ஒரு சின்னத் துண்டு லவங்கப் பட்டை, மிவத்தல், கருகப்பிலை போட்டுத் தாளிக்கவும். தாளிதத்தை மோர்க்குழம்பில் ஊற்றவும். பச்சைக் கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். இந்த மோர்க்குழம்பு ஃபுல்கா ரோட்டி, சூடான சாதம் போன்றவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
khகடி
தக்காளித் தொக்கு
பொதுவாய்த் தக்காளித் தொக்குக்கு மிவத்தல், தக்காளி இரண்டையும் நன்றாக எண்ணெயில் வதக்கிப்பேன். ஆனால் இப்போதெல்லாம் பச்சையாகவே பண்ணுகிறேன். மிவத்தல் ஒரு இருபது கால் கிலோ நல்ல சிவப்பான பழுத்த தக்காளி இரண்டையும் மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும். அடி கனமான வாணலி அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு பெருங்காயம் சேர்த்து மஞ்சள் பொடியும் சேர்க்கவும். அரைத்து வைத்திருக்கும் விழுதைக் கொட்டவும். உப்புச் சேர்க்கவும். நன்கு கிளறவும் சிறிது நேரம் நன்கு கொதித்ததும் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும். அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு ஆறியதும் ஒரு காற்றுப் புகா டப்பாவில் போட்டு பத்திரப் படுத்தவும். தோசை, சப்பாத்தி, இட்லி, போன்ற எல்லாவற்றிற்கும் இது தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
தக்காளித் தொக்கு சாதம்
சாதம் கலக்க! சாதத்தை உதிர் உதிராக வடிக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, ஒன்று அல்லது இரண்டு மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம் போட்டுத் தாளித்துக் கொள்ளவும். இந்தத் தாளிதத்தை எண்ணெயோடு சாதத்தில் கொட்டவும். நினைவாக சாதத்துக்கு ஒரு அரை டீஸ்பூன் உப்புச் சேர்க்கவும். ஹிஹிஹி, இன்னிக்குத் தொக்கிலே இருக்கும் உப்புப் போதும்னு சாதத்திலே போடலையா! உப்புப் போறலை! :) பின்னர் உங்கள் ருசிக்குத் தக்கவாறு தேவையான தொக்கைப் போட்டு நன்கு கிளறவும். அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டுப் பின் பரிமாறவும். அரைப் புளியோதரை மாதிரி இருக்கும். :)