எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, March 27, 2013

இலை வடாம் சாப்பிட்டிருக்கீங்களா?

அடுத்து இலை வடாம் செய்யலாமா?  நான் செய்யலை.  ஆனாலும் செய்முறை சொல்றேன்.  இதுக்கும் அரிசி, ஜவ்வரிசி வேணும்.  ஒவ்வொருத்தர் கசகசா, ஜீரகம் போடறாங்க. அவங்க அவங்க வீட்டு வழக்கப்படி போட்டுக்குங்க.  எங்க வீட்டிலே வெறும் அரிசியும் ஜவ்வரிசியும் மட்டுமே.


கால் கிலோ அரிசிக்கு ஒரு பெரிய கரண்டி அல்லது ஐம்பது கிராம் ஜவ்வரிசி போட்டு ஊறவைத்து அரைக்கவும்.  அரைத்த மாவு இட்லி மாவு பதத்துக்கு இருக்கலாம்.  முதல்நாளே அரைத்து வைத்துவிட்டால் மறுநாளைக்குப் புளிப்பு வந்துவிடும்.  ஆகவே இதுக்குத் தனியா எலுமிச்சம்பழம் தேவையில்லை. பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் போட்டு அரைத்து மாவில் கலந்து கொள்ளவும்.  இதையும் மறுநாள் வடாம் இடும்போது கலந்து கொண்டால் போதும்.  குழந்தைகளுக்குக் கொடுப்பதெனில் அல்லது பிரசவம் ஆன பெண்களுக்குக் கொடுப்பதெனில் உப்பும், ஓமமும் மட்டும் போதும்.  துளி பெருங்காயம் சேர்க்கலாம்.

அரைத்த மாவைப் பச்சை மிளகாய் விழுது அல்லது உப்பு, ஓமம், பெருங்காயப் பவுடர் கலக்கவும்.  மாவு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் சேர்த்துக் கலக்கவும்.  கரண்டியால் தூக்கி விடுகிறாப்போல் இருக்க வேண்டும்.  இப்போது ஒரு வாழை இலையை நன்கு துடைத்துக் கொண்டு அடுப்பில் இட்லிப் பானை அல்லது உங்களுக்கு இட்லி வழக்கமாக எதில் செய்வீர்களோ அதை அடுப்பில் ஏற்றி நீரை விட்டுக் கொதிக்க வைக்கவும்.  அடியில் ஒரு பாத்திரம் வைத்தால் தான் மேலே ஒற்றைத் தட்டை வைக்க முடியும்.  இப்போதெல்லாம் இலை வடாம் செய்யும் பாத்திரம் செட்டாகக் கிடைக்கிறது என்கிறார்கள்.  அதையும் வாங்கிக்கலாம்.  அதில் ஒரு நேரத்தில் நாலைந்து செய்யலாமென நினைக்கிறேன்.  வாழை இலையைத் துடைத்து எண்ணெய் தடவி ஒற்றைத் தட்டின் மேல் போட்டு மாவைக் கரண்டியில் எடுத்து மெதுவாகக் கரண்டியால் வட்டமாக எழுதவும்.  பின்னர் ஒரு இறுக்கமான மூடியால் மூடவும்.



ஓரிரண்டு நிமிடங்களில் வெந்துவிடும்.  வெளியே எடுத்து அப்படியே சாப்பிடப் பிடிக்குமெனில் அப்படியே சாப்பிடலாம்.  அல்லது நிழலில் உலர்த்தி எடுத்துச் சேகரம் செய்து வைத்துக் கொண்டு எண்ணெயிலோ மைக்ரோவேவ் அவனிலோ வைத்துப் பொரித்துச் சாப்பிடலாம்.  வாழை இலையில் ஒவ்வொன்றாக வைப்பதால் நேரம் ஆகுமென்பதால் இப்போது வந்திருக்கும் இலை வடாம் பாத்திர செட்டில் வைத்தால் ஒரு நேரத்தில் நாலைந்து கிடைக்கும்.  என்னிடம் பாத்திரம் இல்லை.  ஒற்றைத் தட்டில் வைத்துத் தான் வேக விடுவேன்.  கொஞ்சமாகப் பண்ணுவதால் சீக்கிரம் ஆகிவிடும். வயிற்றுக்கு நல்லது.

படம் கூகிளாரைக் கேட்டு வாங்கினேன்.

இதே போல்  பலாச்சுளையும் வெல்லம் தேங்காய் கலந்த பூரணத்தை எண்ணெய் தடவிய  வாழை இலையில் தடவிய மாவில் வைத்து இலையோடு மூடி வேக வைத்து எடுக்கலாம்.  அது பின்னர்.

Sunday, March 24, 2013

கருவடாக் குழம்பும், அரைக்கீரை மசியலும் சாப்பிட்டிருக்கீங்களா?

இப்போக் குழம்புக் கறிவடாம்/கருவடாம் போடலாம்.  இது குழம்புக்கு மட்டுமில்லாமல் பிட்லை, கூட்டு, மோர்க்குழம்பு, கீரை மசித்தால் என எல்லாத்திலும் போடலாம். இதிலும் வெங்காயம் போட்டு/போடாமல் என இரு முறைகள் உண்டு.

சிவப்புக் காராமணி/தட்டாம்பயறு கால் கிலோ, அரை கிலோ உளுத்தம்பருப்பு, மி.வத்தல் பத்து முதல் இருபது/அவரவருக்குக் காரம் தேவை எப்படியோ அவ்வாறே.  இதுக்கு இருபது வரை தாராளமாய்ப் போடலாம், உப்பு தேவையான அளவு. பெருங்காயம். கருகப்பிலை, கொத்துமல்லி.

காராமணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.  உளுத்தம்பருப்பைக் காலையில் ஊற வைக்கவும்.  இரண்டு மணி நேரம் உளுத்தம்பருப்பு ஊறியதும். மி.வத்தல், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்சி அல்லது கிரைண்டரில் அரைக்கவும்.  வடை மாவு பதத்துக்கு அரைத்ததும் எடுத்துக் கருகப்பிலை, கொத்துமல்லி நறுக்கிச் சேர்க்கவும். ப்ளாஸ்டிக் ஷீட்டில் சின்னச் சின்ன உருண்டையாக உருட்டி வைக்கவும்.

வெங்காயம் வேண்டுமெனில் இதே அளவுக்கு கால் கிலோ சின்ன வெங்காயம்/பெரியவெங்காயம் ஏதேனும் ஒன்றைப் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளவும்.  பின்னர் உருட்டி வைக்கவும்.

கருவடாம் போட்ட குழம்பு:  புளி கரைத்த நீர் இரண்டு கிண்ணம், உப்பு, தேவையான அளவு.  குழம்புப் பொடி இரண்டு டீஸ்பூன் அல்லது ஒரு டேபிள் ஸ்பூன்(காரத்துக்கு ஏற்றவாறு), தாளிக்க கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, து,பருப்பு, வகைக்கு ஒவ்வொரு டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், மி.வத்தல் ஒன்று, கருகப்பிலை, நல்லெண்ணெய் ஒரு கரண்டி.  கருவடாம் பத்து அல்லது பனிரண்டு.

கல்சட்டியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும்.  எண்ணெய் காய்ந்ததும் முதலில் கருவடாங்களைப் போட்டுப் பொரித்து எடுத்துத் தனியாக வைக்கவும். பின்னர் கடுகு,பருப்பு வகைகள், மி.வத்தல், கருகப்பிலை தாளித்துக் குழம்புப் பொடி வறுத்துச் செய்யாத பொடியாக இருந்தால் எண்ணெயிலேயே போட்டுக் கொஞ்சம் வறுத்துப் புளிக்கரைசலைச் சேர்த்து உப்புப் போடவும்.  குழம்பு நன்கு கொதித்துச் சேர்ந்து வரும்போது வறுத்துத் தனியாக வைத்திருக்கும் கருவடாங்களைச் சேர்த்து ஒரே கொதி விட்டுக் கீழே இறக்கிவிடவும்.

கூட்டு, பிட்லை, கீரை போன்றவற்றிற்குத் தாளிக்கையில் கருவடாமும் வறுத்துத் தாளிக்கலாம்.  பெரிதாகத் தோன்றினால் இரண்டாகக் கிள்ளிக் கொள்ளலாம்.


Wednesday, March 20, 2013

ஆசாரமானவங்க இங்கே எட்டிப் பார்க்க வேண்டாம்! :)

வெங்காயக் கறிவடாம் போடப் போறோமே.  அதான் முன் ஜாக்கிரதையாச் சொல்லி வைச்சேன்.  இதுக்கும் அரிசி, ஜவ்வரிசி எல்லாம் முன் சொல்லப் பட்ட அளவிலேயே எடுத்து ஊற வைச்சு நல்லா நைசா அரைக்கணும்.

அரை கிலோ அரிசி, நூறு கிராம் ஜவ்வரிசி போட்டு அரைச்சிருந்தீங்கன்னா அதுக்கு அரைகிலோ சின்ன வெங்காயம்/பெரிய வெங்காயம் தேவை.  வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  ஐம்பது கிராமுக்குக் குறையாமல் பச்சை மிளகாயை உப்பு, பெருங்காயம் போட்டி நைசாக அரைக்கவும்.  எலுமிச்சம்பழம் ஒன்று.

மாவை முன்னர் சொன்னது போலவே வெண்கல உருளி அல்லது அடி கனமான பாத்திரத்தில் கொட்டிக் கிளறி எடுத்துக் கொண்டு, பச்சை மிளகாய் விழுது, எலுமிச்சைச் சாறு, பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.  நன்கு கலக்கவும்.

பின்னர் ப்ளாஸ்டிக் ஷீட்டில் சின்னச் சின்ன உருண்டையாக உருட்டி வைக்கவும்.  மொத்தமாக உருட்டாமல் பாதுஷாவுக்கு உருட்டுவது போல் நடுவே காயும்படியாகக் கொஞ்சம் தட்டையாகவே கிள்ளி வைக்கவும். இது சில சமயம் ஒரே நாளில் காய்ந்துவிட்டாற்போல் தெரிந்தாலும் உள்ளே ஈரம் இருக்கும்.  ஆகவே இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய வைக்கவேண்டும்.  இதை மாலை வேளையில் காபி, டீயோடு சாப்பிடவும் பொரித்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

வெங்காயம் தெரிய வேண்டாம் வாசனை போதும் என்பவர்கள் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் மிக்சியில் போட்டு அடித்துக் கொண்டு மாவில் கொட்டிக் கலந்து கொண்டு உருட்டி வைக்கலாம்.  இதில் வெங்காயம் வெளியே தெரியாது.  ஆனால் வாசனையாக இருக்கும். அவரவர் விருப்பம் போல் செய்து கொள்ளலாம்.

Sunday, March 10, 2013

ஜவ்வரிசியில் வடாம் பிழியலாமா?

அரிசிக் கருவடாம் போட்டாச்சு.  அடுத்து ஜவ்வரிசி மட்டும் போடுவோமா?  ஜவ்வரிசி தெரியணுமா? தெரியவேண்டாமா?  ஜவ்வரிசி தெரிய வேண்டாம்னா அரை கிலோ ஜவ்வரிசியை மோரில் காலையிலேயே ஊற வைக்கவும்.  அரைகிலோவுக்கு அரை லிட்டர் மோர் போதும்.  மிகுதிக்கு நீர் ஊற்றிக் கொள்ளலாம்.  இரண்டு அல்லது மூன்று மணி நேரமாவது ஊற வேண்டும்.  ஆகவே காலை ஏழு, எட்டு மணிக்குக் கூழ் கிளறணும்னா நாலு மணிக்கே ஊற வைக்கலாம்.  அல்லது ஐந்து மணிக்குள்ளாக ஊற வைக்கவும்.  இதற்குக் காரம் கொஞ்சம் போட்டாலும் எடுப்பாய்த் தெரியும். ஆகவே 100 கிராம் பச்சைமிளகாயை உப்பு, பெருங்காயம் சேர்த்து நைசாக விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். எலுமிச்சம்பழம் அரை மூடி போதும்.  ஏற்கெனவே மோரில் ஊறுகிறது.  மோர் இல்லை எனில் நீரில் ஊறப் போட்டுவிட்டு எலுமிச்சைச் சாறை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.


பின்னர் அடி கனமான பாத்திரத்தில் ஒரு லிட்டருக்குக் கொஞ்சம் கூடவே  நீரை ஊற்றிக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாகத் தளதளவெனக் கொதித்ததும், ஊறிய ஜவ்வரிசியை அதில் கொட்டிக் கிளறவும்.  முத்து முத்தாகத் தெரியணும்னா ஜவ்வரிசியை ஊற வைக்காமல் நன்கு களைந்து அப்படியே போடலாம்.  ஆனால் நீரைக் கூட வைத்துக் கொதிக்க விட வேண்டும்.  ஒரு மணி நேரம் ஆகும் நன்கு கெட்டிப் பட்டுக் கூழாக வர. கூழாக வந்ததும், கீழே இறக்கி வைத்துக் கொண்டு பச்சை மிளகாய் விழுதைத் தேவையானதைப் போட்டுவிட்டு எலுமிச்சைச் சாறும் சேர்க்கவும்.  முன்பெல்லாம் ஓலைப்பாய் அல்லது இதற்கெனத் தனி வெள்ளைத் துணி இருக்கும்.  அதில் வட்ட வட்டமாக வில்லை, வில்லையாக எடுக்கிறாப்போல் கரண்டியால் விடுவார்கள்.   இது ஒரே நாளில் காயாது.  ஆகையால் துணி அல்லது பாயின் பின் பக்கத்தை நீரில் நனைத்துக் கொண்டு மெதுவாகப் பிய்த்து எடுத்துத் தனியாகப் போட வேண்டும்.

இப்போது ப்ளாஸ்டிக் யுகமாக இருப்பதால், குளிர்சாதனப் பெட்டி, ஏசி போன்றவை சுற்றி வரும் பெரிய ப்ளாஸ்டிக் பாயில் போடலாம்.  அன்றே எடுக்க வரும்.  அதன் பின்னரும் இரண்டு நாட்களாவது காய வேண்டும்.  இல்லை எனில் பொரித்தால் நாக்கில் ஈஷிக் கொள்ளும்.

இதிலேயே கலர் வேண்டுமெனில் கீழே இறக்கியதும்  உணவுப் பொருட்களுக்குச் சேர்க்கும் கலரைத் தேவையான அளவுக்குச் சேர்க்கவும்.   காரம் குறைத்துப் போட்டால் குழந்தைகளுக்கு தாராளமாய்க் கொடுக்கலாம்.  வயிற்றுக்கு நல்லது.  இதை எண்ணெயில் பொரிக்காமல் மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுத்து விடலாம்.

Monday, March 4, 2013

வடாம் போட வரீங்களா? வடாம் போட வரீங்களா?

இப்போக் கறிவடாம் போடும் நேரம்.  ஆகவே கறிவடாம் எப்படிப் போடுவதுனு பார்க்கலாம். நல்ல பச்சரிசியாக அரைக்கிலோ எடுத்துக்குங்க.  ஜவ்வரிசி போடும் வழக்கம் உள்ளவங்க அரைக்கிலோ பச்சரிசிக்கு ஐம்பது கிராம் ஜவ்வரிசி போடலாம்.  இல்லைனா அரிசி மட்டும் எடுத்துக்குங்க.  இதை எல்லாரும் செய்யறாப்போல் மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துச் செய்யச் சொல்லப் போவதில்லை.  நாளைக்கு வடாம் போடறதுன்னா இன்னிக்கு ராத்திரியே அதை நல்லாக் கழுவி அரிசியும் ஜவ்வரிசியுமா நீர் ஊற்றி ஊற வைச்சிடுங்க.

மறுநாள் காலையிலே  ஊற வைத்த அரிசியையும், ஜவ்வரிசியையும் நன்றாக நைசாக (சில்க் மாதிரி வழவழனு இருக்கணும்.) அரைத்து எடுத்துக் கொள்ளவும்.  தோசை மாவு பதத்துக்கு இருக்கலாம்.  பின்னர் அரிசி அரைக்கிலோவுக்குத் தேவையான பச்சைமிளகாய் ஐம்பது கிராம், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்சி ஜாரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். நல்ல நைசாக விதைகள் இல்லாமல் அரைத்துக் கொள்ளவும்.  ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை அதோடு சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது அடி கனமான உருளி அல்லது வேறு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றிக் கொண்டு மூன்று கிண்ணம் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.  நன்றாகக் கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவைக் கொதிக்கும் நீரில் ஒரு கையால் ஊற்றிக் கொண்டே இன்னொரு கையால் கிளறவும்.  நன்கு மாவு முழுதும் ஒன்றாய்க் கலந்து வேகும்வரை கிளறவும். கீழே இறக்கும் முன்னர் ஒரு கரண்டி பாலை ஊற்றிக் கலக்கவும்.  இதனால் வடாம் வெண்மையாக இருக்கும்.  பின்னர் வெந்த மாவை ஒரு அகலமான தாம்பாளத்தில் கொட்டிக் கொண்டு அரைத்து வைத்துவிட்டு எலுமிச்சைச் சாறு கலந்த பச்சை மிளகாய் விழுதைப் போட்டுக் கலக்கவும்.   மாவு சூடாக இருந்தால் ஒரு கிண்ணத்தில் குளிர்ந்த ஜலம் வைத்துக் கொண்டு அதைத் தொட்டுக் கொண்டு மாவும், மிளகாய் விழுதும் நன்கு கலக்கும்படிப் பிசையவும்.  பின்னர் மொட்டை மாடியில் ஒரு துணி அல்லது வெண்ணிற ப்ளாஸ்டிக் ஷீட் போட்டுக் கொண்டு ஓமப்பொடி அச்சு, தேன்குழல் அச்சு, முள்ளுத் தேன்குழல் அச்சு, ஓட்டு பக்கோடா அச்சு என உங்களுக்கு விருப்பமானதில் மாவைப் போட்டுப் பிழியவும்.  வெயில் கடுமையாக இருந்தால் ஒரே நாளில் காய்ந்துவிடும்.