சொஜ்ஜி அப்பம்: சொஜ்ஜி அப்பம்னா என்னனு கேட்காதீங்க. சொஜ்ஜி அப்பம் இரண்டு முறைகளில் செய்யலாம். ஒண்ணு வெல்லம் போட்டுச் செய்வது; இன்னொண்ணு சர்க்கரை போட்டுச் செய்வது. அதே போல் ஒண்ணு போளி போல் தட்டித் தோசைக்கல்லில் போட்டு எடுப்பது. இன்னொண்ணு எண்ணெயில் பொரித்து எடுப்பது. எண்ணெயில் பொரித்து எடுக்கும் சொஜ்ஜி அப்பங்களானாலும், போளி மாதிரி தட்டினாலும் மூன்று நாட்கள் வரை வைச்சுச் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்: ரவை 200 கிராம், வெல்லம் பாகு தூள் செய்தது 200 கிராம். ஏலக்காய்த் தூள் ஒரு டீஸ்பூன். நெய் குறைந்தது 100 கிராம், முந்திரிப்பருப்பு(தேவையானால்) வேக வைக்க நீர் தேவையான அளவுக்கு.
மேல் மாவுக்கு: பொடி ரவை 50 கிராம், மைதா 200 கிராம், உப்பு அரை டீஸ்பூன், வெண்ணெய் அல்லது நெய் இரண்டு டேபிள் ஸ்பூன். கலந்து பிசைய நீர் தேவையான அளவு.
முதலில் மாவைப் பிசைந்து ஊற வைக்கலாம். ரவையையும், மைதாவையும் ஒன்றாய்க் கலந்து கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய்யைப் போட்டு உப்புச் சேர்ந்து நன்கு குழைக்கவும். ஐந்து நிமிடங்கள் போல் விடாமல் குழைத்துவிட்டுப் பின்னர் ரவை, மைதா கலந்த கலவையைப் போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் அந்த நெய்யோடு ரவை, மைதா நன்கு கலக்கும்படி கலக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டுப் பிசையவும். தேவை எனில் மீதம் உள்ள நெய்யைச் சேர்க்கலாம். ரொம்பவே நெய் அல்லது வெண்ணெய் சேர்த்தால் பொரிக்கையில் அல்லது தோசைக்கல்லில் போடுகையில் உதிர்ந்துவிடும் என்பதால் தேவை எனத் தெரிந்தால் மட்டுமே சேர்க்கவும். நன்கு சப்பாத்தி மாவு பதத்துக்கு வந்ததும், நல்லெண்ணெய் விட்டு மூடி வைக்கவும். இது வெள்ளையாக இருக்கலாம் எனில் மஞ்சள் தூள் சேர்க்கவேண்டாம். கலர் வேண்டுமென்றால் மாவு பிசைகையிலேயே ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கலாம். இது அவரவர் விருப்பம்.
வாணலியை அடுப்பில் ஏற்றிக் கொள்ளவும். இன்னொரு பக்கம் வேறொரு பாத்திரத்தில் நீரை நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளவும். அடுப்புத் தணித்து வைத்து நீர் சூடாகவே இருக்கட்டும். அடுப்பில் ஏற்றிய வாணலியில் எடுத்துக் கொண்டிருக்கும் நெய்யில் பாதியை ஊற்றி ரவையைப் போட்டு நன்கு வறுக்கவும். ரவை நன்கு சிவக்க வறுபட்டதும் கொதிக்கும் வெந்நீரை ஊற்றிக் கிளறவும். ரவை நன்கு வெந்து வரும் சமயத்தில் வெல்லத் தூளைச் சேர்க்கவும். வெல்லத் தூளைச் சேர்க்கையில் கொஞ்சம் நீர் விட்டுக் கொள்ளும். பயப்பட வேண்டாம். கிளறிக் கொண்டே இருக்கவும். மிச்சம் இருக்கும் நெய்யைத் தேவையானால் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். நன்கு சுருண்டு வருகையில் அடுப்பை அணைத்துக் கீழே இறக்கி ஏலக்காய்ப் பொடியைத் தூவி முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துப் போடவும். நன்கு ஆற வைக்கவும். ஆறியதும் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
சப்பாத்திப் பலகையில் பிசைந்து வைத்துள்ள மாவில் ஒரு சின்ன உருண்டை எடுத்துக் கொண்டு பூரி அல்லது சப்பாத்தி அளவுக்கு இட்டுக் கொள்ளவும். உருட்டிய சொஜ்ஜி உருண்டைகளில் ஒன்றை அதில் வைத்து மூடவும். நன்கு மூடியதும் ,எண்ணெய் அல்லது நெய்யைத் தொட்டுக் கொண்டு அதிரசம் போல் தட்டவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து தட்டிய சொஜ்ஜி அப்பத்தைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
போளி மாதிரித் தட்டி தோசைக்கல்லில் போட்டு எடுக்கும் முறையில் மேற்கூறியது போல் செய்து கடைசியில் எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுக்கவும். ஆனால் பொரித்து எடுக்கும் சொஜ்ஜி அப்பங்களே சுவையாக இருக்கும்.
இதை வெல்லம் சேர்க்காமல் சர்க்கரை சேர்த்தும் மேற்கூறிய மாதிரிச் செய்யலாம். பொதுவாக சுமங்கலிப் பிரார்த்தனை போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்குச் செய்கையில் வெல்லம் சேர்த்துச் செய்வார்கள். மற்றச் சாதாரண நாட்களில் சர்க்கரை சேர்த்துச் செய்வார்கள். அடுத்துச் சில போளி வகைகள் பார்க்கலாம்.