தீபாவளி பட்ச்ணங்களை ஒரு பிடி பிடிச்சா வயிறு வலிக்கத் தான் செய்யும்.
க்ர்ர்ர்ர், யாரு சாப்பிட்டாங்க பக்ஷணங்கள் எல்லாம்??? இருந்தாலும் வயிறு வலிக்குது!
சரி, சரி, இப்போ என்ன? மருந்தைச் சாப்பிட்டால் எல்லாம் சரியாயிடும்.
அந்த மருந்தும் நானே தான் கிளறிச் சாப்பிடவேண்டி இருக்கு. :(
சரி, சரி எனக்குச் சொல்லிக் கொடு, நான் கிளறுகிறேன்.
வேண்டாம்பா சாமி, அன்னிக்கு அல்வா கிளறினாப்போல் ஆயிடும். அப்புறமா அது சொத்தை, இது நொள்ளைனு என்னைச் சொல்லுவீங்க.
ரெண்டு பேருமாச் சேர்ந்து தானே அல்வா கிளறினோம்??
அது என்னமோ சரிதான். ஆனால் சரியா வரலைனதும், எனக்கு அல்வா கொடுத்துட்டீங்க! நானே மருந்தைக் கிளறிக்கறேன்.
சரி, சாமான்கள் என்னனு சொல்லு, அதையாவது எடுத்து வைக்கலாம்.
வறுத்துப் பொடிக்க வேண்டிய சாமான்கள்.
சுக்கு
மிளகு,
ஜீரகம்,
சோம்பு,
கசகசா,
கிராம்பு,
ஏலக்காய்,
கருஞ்சீரகம்
இலவங்கப்பட்டை,
சித்தரத்தை,
திப்பிலி,
தேசாவரம் அல்லது கண்டந்திப்பிலிக்குச்சிகள்
இது எல்லாத்தையும் நல்லாக் காய வைச்சுச் சம அளவு எடுத்துக்கவும். வெறும் வாணலியில் வறுக்கவும். வறுத்ததை மிக்சியில் போட்டு நன்றாய்ப் பொடியாக்கவும். அநேகமாய் நைசாகவே வரும். அப்படிக்கொஞ்சம் கொர கொரனு இருந்தாலும் பரவாயில்லை. பொடியைத் தனியாய் வைத்துக்கொள்ளவும்
இனி பச்சையாய் அரைக்க
இஞ்சி 50 கிராம்
கொத்துமல்லி விதை 100 கிராம்
இவற்றை நன்கு நீர் விட்டு அரைத்து, வடிகட்டிச் சாறு எடுத்துக்கொள்ளவும். மூன்று நான்கு முறை அரைத்துச் சாறை எடுக்கலாம்.
கருப்பட்டி பிடித்தால் கருப்பட்டி அல்லது வெல்லம். தூளாக்கியது ஒரு கிண்ணம் அல்லது 100 கிராம். கிளறுவதற்குத் தேவையாக ஒரு கரண்டி அல்லது ஐம்பது கிராம் நல்லெண்ணெய், ஐம்பது கிராம் நெய். சுத்தமான தேன் ஒரு கரண்டி.
நல்ல இரும்புச் சட்டியில்(நான் - ஸ்டிக் எல்லாம் சரிப்படாது. இரும்பின் சத்து மருந்தில் சேரணும்) இஞ்சி, கொத்துமல்லிச் சாறை விட்டுக் கொதிக்க விடவும். நன்கு தள தளவெனக் கொதிக்கும்போது தூளாக்கிய கருப்பட்டியைப் போடவும். கருப்பட்டி கரைந்து வாசனை போனதும், பொடி பண்ணி வைத்த மருந்துக் கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். விடாமல் கிளறவும். நடுவில் கொஞ்சம் நெய், நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறிக் கொண்டு இருக்கவும். கையில் ஒட்டாமல் உருட்டும் பதம் வந்ததும் கீழே இறக்கி ஆற வைக்கவும். ஆறியதும் தேனைச் சேர்த்து, ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும். ஒரு சின்ன ஸ்பூனால் ஒரு உருண்டை சாப்பிட்டாலே போதுமானது.