எச்சரிக்கை
படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
Friday, July 2, 2010
அப்பாடா! ஒரு வழியா தவலை வடை பண்ணியாச்சு!
சரி, சரி, இப்போ இந்தப் பொருட்களை எல்லாம் எடுத்து ஊற வைங்க தவலை வடைக்கு.
புழுங்கலரிசி ஒரு கிண்ணம்
பச்சரிசி ஒரு கிண்ணம்
து.பருப்பு ஒரு கிண்ணம்
க.பருப்பு ஒரு கிண்ணம்
உ.பருப்பு முக்கால் கிண்ணம்
பாசிப் பருப்பு அரைக் கிண்ணம்
புழுங்கலரிசியையும், பச்சரிசியையும் நன்னாக் கழுவிட்டுச் சேர்த்து ஊற வைக்கணும்.
கலர் போற துணியைத் தனியா நனைப்போமே அப்படியா?
கடவுளே, துணிக்கும், சமையலுக்கும் என்ன பொருத்தம்னு கேட்கறீங்களோ?
இல்லை தனித்தனியா ஊற வைக்கச் சொன்னியே அதான்!
தனித்தனியா ஊற வைக்கிறது அரைக்கச் செளகரியமா இருக்கும், அதுக்குத் தான். நீங்க தானே அரைக்கப் போறீங்க?
என்ன நானா? எனக்குத் தவலை வடையே வேண்டாம். :P
க்ர்ர்ர்ர்ர்ர் யாரு விட்டா? நீங்க மிக்சியிலே தானே அரைக்கப் போறீங்க? நான் கையாலேயே அரைச்சுப் பண்ணிக் கொடுத்திருக்கேனே?
சரி, சரி, எல்லாம் ஹெட் லெட்டர்! சரி இப்போ ஊற வைச்சாச்சு! அடுத்து என்ன??
படுத்துத் தூங்கணும்!
என்ன??
பின்னே? ஊறவேண்டாமா இரண்டு மணி நேரமாவது! அதுக்குள்ளே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமே!
எழுந்திருங்க. மணி மூணாச்சு, அரைச்சு எடுத்துத் தவலை வடையைத் தட்டி எடுக்கணும்! இன்னிக்குனு பார்த்து எனக்கு வீசிங் வேறே ஜாஸ்தியா இருக்கு!
சரி, சரி, அப்போ வடை சாப்பிடாதே!
என்ன??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
மிக்சியை எடுத்துக்குங்க. அதோட ஜாரிலே முதல்லே மி.வத்தல் ஆறு, ப.மி. இரண்டு, உப்பு தேவைக்கு ஏற்பச் சேர்த்துட்டுப் பெருங்காயத் தூளும் சேர்த்து ஒரு அடி அடிங்க.
ஹையோ, என்னை அடிக்கச் சொல்லலை, மி.வத்தல் கலவையை மிக்சியிலே அடிக்கணும்! நறநறநறநற நானே அரைச்சுடலாம் இதுக்கு!
அப்பாடா! நிம்மதி! என்ன இருந்தாலும் உன் கையாலே செஞ்சு சாப்பிடற டேஸ்டே தனிதான்.
க்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன ஐஸா! நகருங்க இத்தனை நேரம் நான் அரைச்சு முடிச்சிருப்பேன்.
மி.வத்தல் கலவையை ஒரு அடி அடிச்சுட்டு அதிலேயே அரிசியைப் போடறியா?
ஆமாம், அரிசியையும் அரைக்கணும், கொஞ்சம் கொர கொரப்பாய்.
அப்புறம்?
அப்புறம் என்ன? பாசிப் பருப்பை மட்டும் களைஞ்சு வடிகட்டி வச்சுட்டு மற்ற து.பருப்பு, க. பருப்புக்களை அரைச்ச அரிசியோடு சேர்த்து அரைக்கணும். இதுவும் கொஞ்சம் கொர கொரப்பாகவே அரைக்கணும்'. உளுந்தை இதோடு சேர்க்கவேண்டாம்.
ம்ம்ம்ம் அப்புறமா??
இப்போ இதைத் தனியா வைச்சுடுங்க.
சரி, சரி கொண்டா, அடுத்து என்ன பண்ணப் போறே?
இப்போ உளுந்தை எடுத்து நல்லா அரைச்சுக் கொட கொடனு எடுக்கணும். வடை மாவு பதத்துக்கு இருக்கட்டும்.
சரி, சரி, அதெல்லாம் உனக்குத் தான் சரியா வரும். நீ தான் வடை தட்டறதிலே நிபுணி ஆச்சே!
பல்லைக் கடிக்கும் சப்தம் மட்டும் சிறிது நேரம்.
அங்கே என்ன சத்தம்??
ஒண்ணுமில்லை, என்னோட பல் அரை படுது!
ஹிஹிஹி, அதுக்குள்ளே மாவாவே திங்க ஆரம்பிச்சிட்டியே?
என்னது??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோபத்திலே பல் அரைபட்டதிலே அந்த சத்தம் வந்ததாக்கும்.
சரி சரி, உளுந்தை அரைச்சுட்டியா? என்ன பண்ணினே இப்போ?
நீங்களோ செய்யப் போறதில்லை, அப்புறம் எதுக்குச் சொல்லணுமாம்?
அதான் இத்தனை சொல்லிட்டியே? மிச்சமும் சொல்லிடேன் என்ன இப்போ? பேசிண்டே வேலை செஞ்சா உனக்கும் அலுப்புத் தட்டாது பாரு!
இதுக்குக் குறைச்சல் இல்லை. இப்போ அரிசி பருப்பு அரைச்ச கலவையிலே இந்த உளுந்து அரைச்சதைச் சேர்க்கணும். ஊற வைச்சு வடிகட்டி வச்சிருக்கிற பாசிப்பருப்பையும் சேர்க்கணும். ஒரு இரும்புக் கரண்டியிலே தே. எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊத்திக் கடுகு, உ.பருப்புப் போட்டுத் தாளிக்கணும். கருகப்பிலை, கொ,.மல்லி, இஞ்சி, சேர்க்கணும், ஒரு பச்சை மிளகாயை இரண்டாய் வகிர்ந்துட்டு விதைகளை எடுத்துட்டு இதிலே சேர்க்கணும். மாவை நல்லா எல்லாம் சேரும்படிக் கலக்கிக்கணும்.
பத்து நிமிஷம் அப்படியே வச்சுட்டு அடுப்பில் கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கணும். காய்ந்த எண்ணெயிலே ஒரு கரண்டியாலே இந்த மாவை எடுத்துப் போட்டால் குண்டு குண்டாக மேலே மொறு மொறுனும் உள்ளே மிருதுவாகவும் தவலை வடை ரெடி, ரெடி ரெட்டை ரெடி.
தொட்டுக்கத் தேங்காய்ச் சட்டினியோடு சூப்பர் தவலை வடை! என்ன இருந்தாலும் உன் கைவண்ணமே வண்ணம்!
டிஸ்கி: கூகிளாரைக் கேட்டதுக்கு இந்தத் தவலை வடையைக் கொடுத்தார். இன்னிக்கு எங்க வீட்டிலே தவலை வடை பண்ணிட்டுப் படம் எடுத்து நாளைக்கு அதைச் சேர்த்துடறேன். அது வரைக்கும் ஓசியிலே! :P அப்பாடா, தவலை வடை பண்ணி ஒரு மாசத்துக்கப்புறமா ஒரு வழியாப் படங்களைச் சேர்த்தேன். இப்போ எல்லாரும் வந்து பாருங்கப்பா!
Subscribe to:
Posts (Atom)