
நவராத்திரிக் குருமா!
நவராத்திரியிலே எல்லாருமே சுண்டல் வசூலுக்குப்போயிருப்பீங்க. இல்லையா?? உங்க வீட்டிலே கொலு வைக்காட்டியும், எப்படியாவது சுண்டல் பொட்டலங்கள் சேர்ந்துவிடும். அதைச் சாப்பிடவும் மனசு வராது, பயமா இருக்கும். வாயுத் தொந்திரவு அல்லது காரம் ஒத்துக்காதேனு. அதோட நவராத்திரிச் சுண்டல் வசூல் செய்துட்டு வீட்டுக்கு வரவும் நேரம் ஆயிடும். வந்து ராத்திரிக்கு என்ன பண்ணறதுனு சிலர் யோசிப்பாங்க.
முன் கூட்டியே திட்டம் போட்டு சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு சப்பாத்தியைச் செய்து வச்சுட்டுப் போயிடுங்க வசூலுக்கு. போதுமான சுண்டல் வசூல் ஆனதும் நேரே வீட்டுக்கு வந்துடுங்க. கூட வரும் தோழி கூப்பிட்டாலும் நோ, இனிமேல் நாளைக்குத் தான்னு சொல்லிடலாம். இப்போ ஒவ்வொரு வீட்டிலேயும் ஒவ்வொரு சுண்டலாய் இருக்குமே. சிலர் வீட்டிலே இனிப்புச் சுண்டலாய்க் கூட இருக்கும். எல்லாச் சுண்டலும் இப்போல்லாம் சின்ன ப்ளாஸ்டிக் கிண்ணங்களில் தான் தந்திருப்பாங்க. எல்லாம் சேர்த்து ஒரு கப் வரும்.
நீங்க சுண்டல் வசூலுக்குப் போகும்போது ரங்கு வீட்டிலே சும்மாத் தானே ஈ ஓட்டிட்டு இருப்பார். அவரைத் தக்காளியும், வெங்காயமும் நறுக்கி வைக்கச் சொல்லிட்டுப் போங்க. நறுக்கி வச்சிருப்பார். வந்து ஏதோ புதுசாப் பண்ணித் தரப் போறீங்கனு ஆவலாவும் இருப்பார். அவர் கிட்டே ஒண்ணும் சொல்லிக்க வேண்டாம். ஃப்ரிஜைக் குடைஞ்சு பார்த்து முதல்நாள் இட்லிக்குத் தொட்டுக்க அரைச்ச தேங்காய்ச் சட்னி இருக்கா பாருங்க. இல்லாட்டியும் பரவாயில்லை. சுண்டலிலேயே தேங்காய் போட்டிருப்பாங்களே. வேறே என்ன சட்னி இருக்கு? தக்காளி, வெங்காயம், புதினா?? எதுவா இருந்தாலும் பரவாயில்லை. எதுவுமே இல்லையா? காலம்பர வச்ச குழம்பு? ரசம்? அது போதும்!
இப்போ நீங்க செய்ய வேண்டியது கொஞ்சமாவது பந்தா காட்டணும். அப்பா, ஒரே அலுப்பு, எல்லா வீட்டுக்கும் போயிட்டு வரதுக்குள்ளே முடியவே இல்லைனு சொல்லிக்கணும். நிஜமாவே முடியாதுதான். என்றாலும் அதைக் கொஞ்சம் ஜாஸ்தியாச் சொல்லிக்கணும். அப்புறம் மெதுவா ரங்குவையும், குழந்தைங்க இருந்தா அவங்களையும் பார்த்து ஏதாவது சாப்பிட்டீங்களானு அன்போட கேட்கணும். "இல்லை, உனக்காகத் தான் வெயிட்டீஸ்"னு பதில் வரும். அவங்க நினைப்பு உங்களை சந்தோஷப் படுத்தறதா. என்றாலும் அதைக் காட்டிக்காமல் அடுப்படிக்குப் போங்க. அடுப்பிலே வாணலியை வச்சு, எண்ணெயை ஊத்துங்க. ஜீரகம், சோம்பு(பிடிச்சா) தாளிங்க. சோம்பு பிடிக்கலைனா வேண்டாம். அப்புறம் மஞ்சள் பொடி சேர்த்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்குங்க. தக்காளியையும் சேர்த்து நல்லா வதக்கவும்.
இரண்டும் வதங்கியதும், மொத்தமாய் வசூலான சுண்டலை அதிலே கொட்டவும். இனிப்புச் சுண்டல் இருந்தாலும் கவலை இல்லை. இந்த மாதிரி மசாலா ஐடங்களுக்குக் கொஞ்சம் வெல்லம் சேர்த்தால் நல்லாவே இருக்கும் ருசியும், மணமும். காலம்பர வச்ச சாம்பாரோ, ரசமோ, அல்லது வத்தக் குழம்போ இருந்தால் அதையும் அதில் சேர்க்கலாம். இப்போ முக்கியமாய்க் கவனத்தில் கொள்ளவேண்டியது இதுக்கு மேலே உப்போ, காரமோ போட்டீங்க தொலைஞ்சீங்க நீங்க! அதனால் கவனமாய் அதைத் தவிர்க்கவும். காலைக் குழம்பு எதுவும் இல்லையா? பரவாயில்லை. மிச்சம் வச்சிருக்கும் சட்னியைத் தேவையான அளவு சேர்க்கவும். அதுவும் தேங்காய்ச் சட்னியும், தக்காளிச் சட்னியும் இருந்தால் சூப்பரா இருக்கும். அதுவும் இல்லையா? எதுவுமே வேண்டாம். அப்படியே நல்லாக் கொஞ்ச நேரம் வதக்கிட்டு, கரம் மசாலாப் பொடியைத் தூவிட்டுப் பச்சைக் கொத்துமல்லி, நறுக்கிய வெங்காயம் போன்றவைகளைப் போட்டு அலங்கரித்துப் பரிமாறலாம்.
புதுசா விருந்தினர் வந்தால் அவங்களுக்குச் செய்து போட்டு இது தான் நவரத்தினக் குருமா, சீச்சீ,நவராத்திரிக்குருமானு சொல்லிடலாம். கணவர் கிட்டே இன்னிக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மெனுனு சொல்லிடலாம். நவரத்தினக் குருமா ஒரு ப்ளேட் சுமாராக 75ரூக்கு மேல் என்று விசாரித்ததில் தெரிய வந்தது. அதனால் அதுக்கான பைசாவை முக்கியமாய் உங்க ரங்குவிடமிருந்து வசூலிக்கவும். சுண்டல் வசூலைவிட இந்த வசூல் முக்கியம். நினைவிருக்கட்டும்.