எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, November 11, 2013

பஜ்ஜி ரெடி, சாப்பிட வாங்க!

நேத்திக்கு எழுதின பதிவு சொல்லாமல் கொள்ளாமல் பாதியிலேயே பப்ளிஷ் ஆயிடுச்சு.  இப்போ பஜ்ஜிக்கு வேணுங்கற பொருட்களைப் பார்ப்போம்.

கடலை மாவு ஒன்றரை கிண்ணம்

அரிசி மாவு அரைக்கிண்ணம்

மைதா மாவு 1/4 கிண்ணம்

உப்பு தேவைக்கு

பெருங்காயத் தூள் 1/4 டீ ஸ்பூன்

மிளகாய்த் தூள் 3 டீஸ்பூன் (தேவையானால் இன்னும் ஒரு டீஸ்பூன் சேர்க்கலாம்)

கரைக்க நீர்

பொரிக்க எண்ணெய்

காய்கள் விருப்பம் போல் இவை அனைத்தும் அல்லது இவற்றில் ஏதேனும் இரண்டு, மூன்று.

வாழைக்காய்,

உருளைக்கிழங்கு,

புடலங்காய்,

சேப்பங்கிழங்கு,

வெண்டைக்காய்,

கத்திரிக்காய்,

செளசெள,

பீர்க்கங்காய்(இது எண்ணெய் குடிக்கும்)

வெங்காயம்

காலிஃப்ளவர்,

பேபி கார்ன்,

ப்ரெட்(உப்பு ப்ரெட் தான் நல்லா இருக்கும், சான்ட்விச் ப்ரெட் என்று கேட்டு வாங்கணும்)

அப்பளம்.


முதலில் மேலே சொன்ன மூன்று மாவுகளையும் நன்கு சலித்துக் கொண்டு உப்பு, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.  பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நீரை விட்டுக் கரண்டியால் அல்லது துடுப்புப் போன்றதொரு கரண்டியால், இயன்றால் கையால் நன்கு கலக்கவும். மாவுக்கலவை இட்லி மாவு பதத்துக்கு வந்ததும் நீரை நிறுத்தவும்.  ஆனால் கலப்பதை  நிறுத்த வேண்டாம்.  நன்கு கலக்கவும்.  அப்போத் தான் பஜ்ஜி குண்டு குண்டாகஉப்பலாகவும், அதே சமயம் ஓரம் முறுகலாகவும் வரும்.

மாவை நன்கு கலந்ததும், கொஞ்ச நேரம் வைத்துவிட்டுக் காய்களைத் தயார் செய்து கொள்ளவும்.  காய்களை வெட்டும்போதே அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைக்கவும்.  வாழைக்காய் என்றால் நீளமாகவும், கத்தரி, உருளை, வெங்காயம் ஆகியவற்றை வட்டமாகவும், புடலை, செளசெள, பீர்க்கங்காய் ஆகியவற்றை நீள் சதுரமாகவும் நறுக்கிக் கொள்ளவும்.  பேபி கார்ன் வட்டமாக வெட்டலாம்.  ப்ரெட் என்றால் முக்கோண டிசைன், அல்லது உங்களுக்குப் பிடித்த டிசைனில் வெட்டிக் கொள்ளவும்.  ஸ்டஃப் செய்து தயாரித்த சான்ட்விச்சைக் கூட இந்த பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.  ஸ்டஃபிங் வெளியே வந்துவிடாமல் கவனமாகச் செய்ய வேண்டும்.

சேப்பங்கிழங்கை வேக வைத்துக் கொண்டு பஜ்ஜி மாவில் முக்கிப் போடலாம்.  வெண்டைக்காயை நன்கு கழுவி நீரை வடித்து ஒரு துணியால் காய்களைத் துடைத்துக் கொண்டு  ஒரு அங்குல நீளத்துக்கு நறுக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி கலந்து வைத்துவிட்டுப் பின்னர் அவற்றை பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கலாம்.

பஜ்ஜியைப் போடும் முன்னர் கொஞ்சம் மாவை எண்ணெயில் போட்டு அது மேலே மிதந்து வருகிறதா என்று பார்த்துவிட்டு பஜ்ஜிக்கான காயை பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.  இரு பக்கமும் ஒரே மாதிரியாக நிறம் வரும்படிப் பொரித்தெடுத்த பின்னர் வடிகட்டியில் போட்டு எண்ணெயை வடித்துவிட்டு, கொத்துமல்லிச் சட்னி அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

17 comments:

  1. செய்முறைக்கு நன்றி அம்மா... கணினி கோளாறு என்பதால் எந்த தளத்திற்கும் வரமுடியவில்லை... (இந்தக் கருத்துரை நண்பரின் மடிக்கணினியிலிருந்து)

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, கணினி விரைவில் சரியாகப் பிரார்த்தனைகள், வாழ்த்துகள். எல்லாரும் பின்னூட்டம் போட்டாலும் டிடியோட பின்னூட்டம் இல்லாமல் வெறிச்சுனு இருக்கு! :)

      Delete
  2. நேத்து வர முடியாமப் போயிட்டுது.. இன்னிக்கு வந்திட்டேன்!!!!. நீங்க சொன்ன மாதிரி, அரைத்து பஜ்ஜி சுடுவதை, எனக்கு கல்யாணமான புதிதில் மாமியார் செய்வார். இப்போ ஏனோ அவரும் ரெடிமிக்ஸூக்கு மாறிட்டார்.. எனக்கு அந்த செய்முறையும் சொல்லித்தாங்கம்மா..

    ReplyDelete
    Replies
    1. பஜ்ஜிக்கு ரசிகர்கள் கம்மினு நினைக்கிறேன். இல்லாட்டிப் பெண்பார்க்கப் போறச்சே சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்திருக்குமோ? ஹிஹிஹி, போகட்டும் ரெடிமிக்ஸ் மாவெல்லாம் நான் வாங்கறதில்லை. வீட்டிலே இட்லி மாவு இருந்தால் அதிலே கடலை மாவைச் சேர்த்தும் பண்ணுவேன். அதுவும் அரைச்சுச் செய்வதும் நாளை வெளிவரும். :))))

      Delete
  3. கடையில் கிடைக்கும் ஆச்சி ரெடிமேட் பஜ்ஜி மாவில் பஜ்ஜி செய்தால் தூக்கலான பெருங்காய வாசனையுடன் நன்றாகவே இருக்கிறது. இவளவு மெனக்கெட வேண்டாம்! :)

    ReplyDelete
    Replies
    1. நாங்க இந்த ரெடிமிக்ஸ் சமாசாரங்களே வாங்கறதில்லை. :)))) என்ன இருந்தாலும் ஒரிஜினல் மாதிரி வருமா! :))))))

      Delete
  4. யாராவது செஞ்சு கொடுத்தா....

    ReplyDelete
    Replies
    1. வாங்க அப்பாதுரை, அதான் ரெடிமிக்ஸ் கிடைக்குதே, இந்தியன் ஸ்டோரில் வாங்குங்க. பஜ்ஜி போட்டுச் சாப்பிடுங்க. :)))))

      Delete
    2. இங்கே வந்தீங்கன்னா பத்தே நிமிஷத்தில் பஜ்ஜி கிடைக்கும். வந்தப்புறம் தான் பஜ்ஜி மாவே தயார் பண்ணுவேன். ஆகையால் வாங்க, பஜ்ஜி சாப்பிட, கொத்துமல்லிச் சட்னியோடு! :)))

      Delete
  5. மைதாமாவு புதுசு. படிக்கவே சூப்பரா இருக்கு.
    @துரை இந்தப் பக்கம் வரும்போது பஜ்ஜி நிச்சயம்.
    சரியா. உங்க ஊரிலேயெ குஜராத்தி பெண்கள் நிறைய இந்திய உணவுகளை வீட்டுக்கு வந்து செய்து கொடுக்கிறார்களே.ஒரு மணி நேர வேலைக்குப் பத்து டாலர். சுத்தமாகவும் இருக்கிறார்கள். நானும் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, இது உலர்ந்த மாவு கலப்பிலே மட்டும் சேர்ப்பது. எங்க வீட்டிலேஇது அவ்வளவாப் பிடிக்காது. நான் பஜ்ஜி செய்தால் இட்லி மாவில் கடலை மாவு சேர்த்துத் தான். பஜ்ஜின்னா அதான்! :)))

      Delete
  6. ஆகா! பஜ்ஜி. எங்கவீட்டில் சாதத்துடன் சாப்பிட பிடிக்கும். செய்துகொள்வேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, ஆமாம், ரசம் சாதத்தோடு பஜ்ஜியும், சுண்டலும் நல்லதொரு காம்பினேஷன். :))))

      Delete
  7. நாலே வித பஜ்ஜி தான் சாப்பிட்டு இருக்கேன் - வாழை, உருளை, வெங்காயம் மற்றும் அப்பளம் - மற்றதெல்லாம் சாப்பிட்டதில்லையே! :(

    அடுத்த பயணத்தின் போது சாப்பிட வேண்டியது தான்! :)

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, வாங்க வாங்க சாயந்திரமா ஒரு நாள் வாங்க. மற்ற பஜ்ஜிகளிலும் சாப்பிட்டுப்பார்க்கலாம்.

      Delete
  8. புடலங்காய், சேம்பு, வெண்டை, பீர்க்கங்காய் இதெல்லாம் எனக்கு புதுசாக உள்ளது மாமி...

    செய்து பார்க்க வேண்டும்.. எனக்கு அப்பளம் மிகவும் பிடிக்கும்...

    மைதா மாவு சேர்த்ததில்லை..

    ReplyDelete
    Replies
    1. மைதா பெரும்பாலானவர்கள் சேர்ப்பதில்லை தான். :) புடலை, பீர்க்கை போன்றவற்றை நீளவாட்டத்தில் நறுக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி பிசறி வைச்சுட்டுப் போட்டால் இன்னும் நன்றாக இருக்கும். சேப்பங்கிழங்கை வேக வைத்துத் தோலுரித்துப் போடுவாங்க. வெண்டைக்காயைக் காம்பில் துளி நறுக்கிக் கொண்டு, நுனியில் இரண்டாகப் பிளந்து உப்பு, மஞ்சள் பொடி தடவி வைக்கணும். அப்புறமா அப்படியே பஜ்ஜி மாவில் முக்கிப் போட்டுப் பொரித்து எடுக்கணும். எண்ணெய் குடிக்கும். :))) பிடிக்கிறவங்களுக்குப் பிடிக்கும்.

      Delete