எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, October 29, 2013

தீபாவளி பக்ஷணங்கள், லாடு வகைகள்!

இந்த வருஷம் தீபாவளி கிடையாது என்றாலும் நமக்குக் கொடுக்கிறவங்களுக்குத் திருப்பிக் கொடுக்க, வீட்டுக்கு வரவங்களுக்குக் கொடுக்க என ஏதேனும் கொஞ்சம் செய்து வைச்சுக்கணும்.  இம்முறை கோதுமை+கடலைப்பருப்பு லாடு செய்ய எண்ணம்.  கோதுமையும் கடலைப்பருப்பும் வாங்கி வைச்சிருக்கேன்.  நாளைக்குத் தான் திரிக்கணும்/அரைக்கணும். :)

இது சுமார் முப்பது லாடுகள்  எலுமிச்சை அளவு வரும்படி செய்யத் தேவையான  பொருட்கள்:

கோதுமை கால் கிலோ

கடலைப்பருப்பு கால் கிலோ

சர்க்கரை  முக்கால் கிலோ

போதுமானது.  தித்திப்பு அதிகம் வேண்டும்னா ஒரு கிலோ போட்டுக்கலாம். ஆனால் அது ரொம்பவே ஜாஸ்தியாயிடும்.  நான் அரைகிலோ தான் போடப் போறேன்.  நம்ம ரங்க்ஸ் உடம்பிலேயே சர்க்கரைத் தொழிற்சாலை வைச்சிருக்கறதாலே அரைச் சர்க்கரை தான் எல்லாத்துக்கும்.

முந்திரிப்பருப்பு, ஐம்பது கிராம்,

திராட்சைப் பழம் (கிஸ்மிஸ்) ஐம்பது கிராம்

ஏலக்காய்த் தூள் ஒரு டீஸ்பூன்

நெய் கால் கிலோ


முதலில் கோதுமையையும், கடலைப்பருப்பையும் சுத்தம் செய்து கொண்டு, வெறும் வாணலியில் கோதுமை பொரியும் வரையும், கடலைப்பருப்பு சிவக்கும் வரையும் வறுக்கவும்.  மெஷினில் கொடுத்து மாவாக்கவும்.  சர்க்கரை அதிகம் போடுபவர்கள் மெஷினிலேயே சர்க்கரையையும் அரைக்கலாம். நான் கொஞ்சமாய்ப் போடுவதால் சர்க்கரையை மிக்சியில் அரைச்சுடுவேன்.  வறுத்து அரைத்த மாவில் சர்க்கரைத் தூளைக் கலக்கவும்.  முன்னெல்லாம் குழைவு ஜீனி எனப் பெயர் கொண்ட மாவு ஜீனி கிடைக்கும்.  லாடு வகைகளுக்கு அது தான் போடுவோம்.  இப்போ குழைவு ஜீனினு கேட்டாலே புரியறதில்லை. :(  நெய்யில் மு.பருப்பு, திராக்ஷைப்பழம் வறுத்துச் சேர்க்கவும். ஏலப்பொடியையும் கலக்கவும்.

வாணலியில் நெய்யை ஊற்றி நன்கு புகை வரும்வரை காய்ச்சவும். சர்க்கரையும், மாவும் கலந்த கலவையில் அந்த நெய்யை அப்படியே ஊற்றி நன்கு கரண்டியால் கலந்து விடவும்.  மொத்த மாவுக்கலவைக்கும் நெய் போய்ச் சேரும் வண்ணம் நன்றாகக் கலக்கவும். சற்று நேரம் வைத்து விட்டுப்பின்னர் உருண்டைகள் பிடிக்கலாம்.  ஒவ்வொருத்தர் நெய்யைக் காய்ச்சிக் கொண்டே மாவில் ஊற்றிச் சுடச் சுடப் பிடிப்பார்கள். அப்படியெல்லாம் கையை வேக வைத்துக்கொள்ள வேண்டாம்.  நான் மற்ற பக்ஷணங்கள் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் இப்படி லாடுக்கு நெய்யை ஊற்றி எடுத்து வைத்து விட்டுப் பின்னர் மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு மெதுவாக வந்து பிடித்து வைப்பேன்.  உருண்டை இறுகி உடையாமல் வரும்.  தைரியமாய்ச் செய்யலாம்.


ரவா உருண்டை:

ரவை அரை கிலோ, சர்க்கரை அரை கிலோ, மு.பருப்பு, திராக்ஷைப்பழம், ஏலப்பவுடர், நெய்.

முன் சொன்னாற்போலவே ரவையை நன்கு வறுத்து அரைத்து மாவாக்கவும். சர்க்கரைப்பவுடர், மு.பருப்பு, திராக்ஷைப்பழம் வறுத்துச் சேர்த்து, ஏலப்பொடி சேர்த்துக் கலக்கவும்.  நெய்யை முன் சொன்னது போலக் காய வைத்துக் கொண்டு மாவுக் கலவையில் ஊற்றிக் கொஞ்சம் ஆற வைத்து உருண்டைகள் பிடிக்கலாம்.

நாளைக்கு கோதுமை உருண்டை செய்துவிட்டால் படம் எடுத்துப் போடறேன்.


பொட்டுக்கடலை லாடு அல்லது மாலாடு:

திருநெல்வேலி, மதுரைப்பக்கம் இந்த லாடு இல்லாத தீபாவளியோ, கல்யாணங்களோ கிடையாது.  முன்னெல்லாம் கொண்டைக்கடலை வாங்கி ஊற வைத்துப் பொரித்துத் தோல் நீக்கி அரைத்துனு கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்களாம்.  இப்போதெல்லாம் பொட்டுக்கடலையையே வறுத்துத் தோல் நீக்கி மாவாக்கி சுலபமாச் செய்துடறாங்க.

அரை கிலோ பொட்டுக்கடலை

முக்கால் கிலோ சர்க்கரை

மு.பருப்பு, திராக்ஷை வகைக்கு ஐம்பது கிராம்.

ஏலப் பொடி.

இதுக்குக் கொஞ்சம் நெய் இழுக்கும்.  அரைகிலோவுக்குக் குறையாமல் நெய் வேண்டும்.  அரைகிலோ முழுதும் செலவாகாது. என்றாலும் தட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொட்டுக்கடலையைத் தோல் நீக்கிக் கொண்டு வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மாவாக்கவும்.  சர்க்கரைப் பவுடரோடு வறுத்த மு.பருப்பு, திராக்ஷைப்பழம், ஏலத்தூள் சேர்க்கவும்.  நெய்யை நன்கு காய வைத்து மாவுக்கலவையில் கொட்டவும். கொஞ்சம் சேர்ந்தாற்போல் இருந்தாலும் பயப்பட வேண்டாம்.  ஆறியதும் உருண்டைகள் பிடிக்கவும்.  உருண்டை நன்கு கெட்டியாக உடையாமல் வரும்.

12 comments:

  1. ரொம்ப நன்றி அம்மா!!. கோதுமை லாடு இப்போ தான் தெரியும்.. இது மாதிரியே கார வகை பக்ஷணங்களும் ஒண்ணு ரெண்டு சொல்லிக் கொடுங்க ப்ளீஸ்..

    ReplyDelete
    Replies
    1. கோதுமை லாடு நான் சின்னப்போவா இருந்தப்போவே சாப்பிட்டிருக்கேன். இன்னொண்ணும் உண்டு மோகன் லாடுனு. அது பத்தி நாளைக்குள் எழுதறேன். :))))

      Delete
  2. கோதுமை லாடு பற்றி நானும் இப்போதுதான் அறிகிறேன். கிட்டத்தட்ட எல்லாம் ஒரே செய்முறைதான் இல்லை?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஶ்ரீராம், லாடு செய்முறை எல்லாமே ஒரே மாதிரி என்பதால் தான் லாடு வகைகள் என்றே தலைப்புக் கொடுத்தேன். :))) இதிலேயே தனிக் கடலைமாவு லாடு, பயத்தம் லாடு ,ஜவ்வரிசி லாடு என்றெல்லாம் செய்யலாம். :))))

      Delete
  3. என் வலைப்பக்கத்தில் சமையல் போட்டி கலந்து கொள்ளவும்....

    ReplyDelete
    Replies
    1. பொதுவாப் போட்டின்னா விலகிடுவேன். என்றாலும் வந்து பார்க்கிறேன். நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலை நீங்க! :)))))

      Delete
  4. கோதுமை+கடலைப்பருப்பு புதியது அம்மா... இந்த முறை அவர்களால் செய்ய முடியுமா தெரியவில்லை... இருந்தாலும் இணைப்பை bookmark செய்து கொண்டாயிற்று..a நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி. இனிப்பு வகைகளிலேயே லாடு செய்வது தான் சுலபம். என்றாலும் முடிஞ்சப்போ செய்யச் சொல்லுங்க. :))))

      Delete
  5. கோதுமை லாடு இப்போ தான் கேள்விப்படறேன் மாமி...மாலாடு செய்வது தான். ரவா உருண்டை சென்ற வருடம் செய்தேன். ஆனால் சுடச்சுட நெய் விட்டு பிடித்தேன். ஆறினாலும் பிடிக்க வருமா? தெரியாமல் போய் விட்டது.....:))

    ReplyDelete
    Replies
    1. நெய்யைப் பொங்கப் பொங்கக் காய்ச்சிப் புகை வந்தவுடன் உடனேயே கலவையில் ஊற்றி நன்கு கிளறிவிட்டு மாவு முழுதும் கலக்குமாறு கிளறியதும் தனியே வைத்துவிட்டுப் பின்னர் நிதானமாகப் பிடிக்கலாம். ஒண்ணும் ஆகாது. தைரியமா ஒரு கப் மாவில் முதலில் செய்து பாருங்கள். புரியும். :))))

      Delete
  6. வெறும் கோதுமை மாவை வறுத்து லாடு செய்வார்களே வட இந்தியாவில்... அது செய்திருக்கிறேன்.

    இது கடலைப்பருப்புடன் புதுசு.....

    ReplyDelete
    Replies
    1. அதுவும் செய்வோம். இதுவும் செய்வோம். இது இன்னும் கொஞ்சம் ருசி, கடலைப்பருப்பு சேர்ப்பதால். :)))

      Delete